இரு கடிதங்கள்

writing

ஜெயமோகன் அவர்களுக்கு,

 

நான் தங்களது புதிய வாசகி. நான் முதலில் படித்தது நான் இந்துவா கட்டுரை. பின்னர் தங்களுடைய அனைத்து எழுத்துக்களையும் படித்த கொண்டிருக்கிறேன் முக்கியமாக ஆன்மீகம் சார்ந்தவையை. மிக்க நன்றி என்னுள்ளே இருந்த பல கேள்விகளுக்கான விடை கிடைத்துள்ளது. பல நூல்களின் அறிமுகம் கிடைத்துள்ளது. வட இந்தியா வட மொழி மேல் இருந்த அல்லது இப்போதுள்ள ஊடகங்களினால் ஏற்படுத்தப்பட்ட வெறுப்பு நீங்கியுள்ளது.

 

 

ஆனால் தங்களின் கருத்துக்களை என்னுடைய நண்பர்கள் வட்டத்தில் ஒன்றை கூட பேச முடிய வில்லை. வலதுசாரி என்று எளிதாக புறந்தள்ளப்படுகிறேன். பரவாயில்லை.

சுமாராகத்தான் எழுத வரும். எழுதி விட்டேன். மிக்க நன்றி.

 

சுபத்ரா

 

 

அன்புள்ள சுபத்ரா

 

எவராயினும் அவர்களின் நட்புவட்டம் என்பது அவர்கள் அப்போதிருக்கும் அறிவாந்த, உணர்வுசார்ந்த உளநிலைகளால் வடிவமைக்கப்பட்டதாக இருக்கும். அவர்கள் அறிவால், ஆன்மிகத்தால் ஒரு படி முன்னகர்ந்தாலும் முன்னரே இருக்கும் நட்புவட்டத்தை பெரும்பாலும் இழக்கவேண்டியிருக்கும் ஒன்றும் செய்யமுடியாது

 

அதோடு, நம் சூழலில் இடதுசாரிகள் மிகமிகக்குறைவு.  அவ்வாறு நிறைய இடதுசாரியினர் இருந்திருந்தால் நாடு இப்படியா இருந்திருக்கும்? இடதுசாரித்தனம் என்பது ஒரு வகையான பாவனை. வலதுசாரி பொருளியலில் உழன்று அதன் அனைத்து நலன்களையும் அடைந்து, அதில் முன்னகர முண்டியடித்து, அதுசார்ந்த கனவுகளை வளர்த்துக்கொண்டு, நாலுபேர் கூடும்போதும் முகநூலிலும் மட்டும் இடதுசாரித்தனம் பேசுவது. அது ஒருவகை செயற்கையான தீவிரத்தையும் மேலோட்டமான அறிவுஜீவித்தனத்தையும் அளிக்கிறது. மெய்யான அறிவுஜீவிகளுக்கு அந்தப்பாவனை தேவையில்லை

 

ஜெ

 

 

 

அன்புள்ள ஜெயமோகன் ஐயாவிற்கு,

வணக்கம். என்னை உங்கள் புத்தகங்களுக்கு நண்பர் சாம்ராஜ் 6 வருடத்திற்கு முன் அறிமுகம் செய்து வைத்தார். 2 வாரத்தில் வேலைக்கு நடுவே உங்களுடைய காடு, அறம், சிறுகதை தொகுப்பு படித்து முடித்து மிரண்டு போனேன். நான்  8 முதல் 12 மணி நேரம் வெளிநாட்டில் மருத்துவராக வேலை செய்யும் single Mom.

எனக்கு எழுதப்பிடிக்கும். ஆனால் உங்கள் புத்தகங்கள் என்னை மிரளச் செய்ததில் இருந்து வெளிவர, மீண்டும் எழுத சில மாதங்கள் பிடித்தது. நான் 9 வருடமாக எழுதிய அற்றவைகளால் நிரம்பியவள் சமீபத்தில் ஒரு புத்தகமாக வெளிவந்து நண்பர் பால் உங்களிடம் கொடுத்திருக்கிறார்.

7 மாதம் முன்பு பரிச்சயமான அன்பு தோழி விக்னேஷ்வரி புத்தகப்பிரியை. அதுவும் உங்கள் எழுத்துக்களை கொண்டாடுவார். மிகவும் ரசித்து பகிர்வார். 1 மாதமாக உங்கள் இணையத்தளம் முழுக்க மேய்ந்து, பறந்து, ஊர்ந்து வேறூன்றி வருகிறேன். மீண்டும் மனதுக்குள் அதே மருட்சி. நீங்கள் சொல்லியதை தாண்டி என்ன மிச்சம் சொல்லவிருக்கிறது?

என் புத்தகத்தை நீங்கள் புரட்டுவதை போன்ற புகைப்படம் பால் அனுப்பினார். என்னை தூங்கவிடாது அச்சுறுத்துகிறது அந்த படம். அந்த புத்தகத்தை உங்கள் முன்கூட வைக்க தகுதியானதா என்று தெரியவில்லை. மனது நடுங்குகிறது. மனதும் எண்ணவோட்டமும் நீங்கள் எழுதியவைகளை தினமும் வாசிக்க வாசிக்க விம்முகிறது

சந்தனமும் நெய்வேத்தியமும் வாங்கிக்கொண்ட ஈசன் கண்ணபரின் வாயில் இருந்து உமிழப்பட்ட நீரையும், அழுகும் மாமிசத்தையும் அதே அன்போடு வாங்கியதாக படித்திருக்கிறேன். அதனால் இந்த புத்தகத்தை நீங்கள் எளிதில் கடந்துவிடலாம். ஆனால் நான் உங்கள் எழுத்தை மீண்டும் வாசிக்கத் தொடங்கியப்பின் நான் புதிதாக எழுதத்தொடங்கிதை அழுந்தச்சாத்தி, பேனாவை மூடிவைத்துவிட்டேன். திரும்ப எழுதவேண்டும் என்ற எண்ணம் அறவே போய்விட்டது.

Kafka எழுதிவற்றை திரும்ப பார்த்து பெரும் பகுதி படைப்புகளை தீயில் போட்டதாகவும், Monet வரைந்த ஓவியங்களை கத்தியால் கிழித்துப் போட்டதும் படித்திருக்கிறேன். எந்த தைரியத்தில் நீ        எழுதியதை வெளியே கொண்டு வந்தாய் என்று உள்ளிருந்து பெரும் குரல் கர்ஜித்துக்கேட்கிறது. இது self doubtஆ, அல்லது என் எழுத்தின் அளவு தெரிந்த நிதர்சனமா புரியவில்லை. எதுவாயினும் மூடிய புத்தகம் பேனாவை தூரம் வைத்துவிட்டு உங்கள் எழுத்தின் முன் நெடுஞ்சான்கிடையாக கிடக்கிறேன்.

இப்படி நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா? அதிலிருந்து வெளிவர வேண்டுமா? முடியுமா?

எது எப்படியோ காடு போல மூளைக்குள் இறங்கி என்னை போல் கோடிக்கணக்கான உயிர்களையும் தழுதழுக்க வைக்கும் உங்கள் அன்புக்கும் அறத்திற்கும் பல்லாயிரம் முத்தங்கள்

அன்புடன்

பிரியா விஜயராகவன்

 

அன்புள்ள பிரியா

 

உங்கள் நாவலை வாசிக்கவில்லை. எடுத்து வைத்திருக்கிறேன். சாம்ராஜின் முன்னுரையுடன் இருந்தமையால் ஆர்வம் வந்தது. வாசித்துவிட்டு எழுதுகிறேன்

 

எவராயினும், எதைப்பற்றியாயினும் எழுதுவது நல்லது. எழுத்தே தன்னளவில் உயர்ந்த விஷயம்தான். தமிழ்ச்சமூகத்தில் பல்லாயிரத்தில் ஒருவரே ஏதேனும் வாசிக்கிறர். அதில் ஆயிரத்தில் ஒருவரே எழுதுகிறார். ஆகவே எழுத்தைப்பற்றி தாழ்வுணர்வு கொள்ளவேண்டியதில்லை. அதை எவ்வகையிலும் குறைத்து மதிப்பிடவும் வேண்டியதில்லை

 

எழுத்தை வணிக நோக்குடன் கையாளாமல் இருந்தால், கூடுமானவரை ஆத்மார்த்தமாக அதை எழுதினால் மட்டும்போதும். நம் உணர்வுகளையும் எண்ணங்களையும் உண்மையாக பதிவுசெய்திருந்தால் அது நாமேதான். எழுதுவதனூடாக நாம் வளர்கிறோம். நாம் ஒருங்கிணைவுகொள்கிறோம். வாழ்க்கையின் பல தருணங்களில் உருவாகும் அலைக்கழிவுக்கும் வெறுமைக்கும் எழுத்துபோல சிறந்த மருந்து பிறிதில்லை

 

தொடர்ந்து படித்து நாமிருக்கும் இடத்தை மதிப்பிட்டுக்கொண்டும், தொடர்ந்து முன்னகர்ந்துகொண்டும் இருந்தால் நாம் எழுதுவதற்கும் மானுட சிந்தனையில் ஓர் இடம் உருவாகும். நம் பங்களிப்பென்று ஒரு துளியேனும் இருக்கும்

 

வாசித்து எழுதுகிறேன்

 

வாழ்த்துக்கள்

 

ஜெ

முந்தைய கட்டுரைஅவர் ஒருவர்தான்!
அடுத்த கட்டுரைஅந்தரப்பந்துகளின் உலகு- பிரபு மயிலாடுதுறை