கிளி சொன்ன கதை -கடிதம்

ramayanam

கிளி சொன்ன கதை – குறுநாவல் தொகுப்பு

அன்பிற்கினிய ஜெ அவர்களுக்கு

தங்கள் நலம் அறிய விழைகிறேன்.    கிளி சொன்ன கதை குறு நாவலை வாசித்து முடித்தேன்.

எனது குழந்தைப்பருவ நினைவுகளை இந்த அளவு தீவிரமாக மீண்டும் மீட்ட முடியும் என்று சொல்லியிருந்தால் நான் நம்பி இருக்க மாட்டேன்.

ராமாயண கிளி அனந்தன் வடிவிலேயே பேசிக்கொண்டிருக்கிறது. அத்தனை பெண்களுடைய கண்ணீரும் அவனுக்கு தெரிந்தே இருக்கிறது. ராமாயணக் கிளி உண்மையில் அனந்தனுக்கு உள்ளே தான் இருக்கிறது. அத்தனை பெண்களுடைய கண்ணீரையும் அது கவனித்து கொண்டே இருக்கிறது. தன் கனவுக்குள்ளேயே தொலைந்து போக முடிகிற ஒருவனுக்குத்தான் இதையெல்லாம் கவனிப்பது சாத்தியமோ என்னவோ?உண்மையில் அனந்தனுக்கு புற உலகே தேவை இல்லையோ என்றே எண்ணத் தோன்றுகிறது. கற்பனை செய்யத் தெரியாதவனுக்கு தான் அது தேவையோ?

அனந்தனுடைய அண்ணா கதாபாத்திரம் “கிடா” கதையில் வரும் அண்ணன் கதாபாத்திரத்தை நினைவுபடுத்தியது. அப்பாவிடம் தம்பியை என்றைக்கும் பார்த்துக் கொள்வதாக அவன் கூறும் தருணம் அவனுடைய ஆளுமையை வரையறை செய்கிறது. அவனுடைய நண்பன் ராசப்பனும் அவனைப் போலவே இருப்பது ஒன்றும் ஆச்சரியமாக இல்லை. உண்மையில் அப்படிப்பட்ட ஒருவனிடம் தான் அவன் நட்பு பாராட்ட முடியும். ராசப்பன் விசாலம்மையிடம் புத்தகம் படிப்பதற்காக தூக்கத்தை ஒழிக்க வேண்டாம் என்று சொல்வது அவனது ஆளுமையின் மறககப்பட்ட இன்னொரு பக்கத்தைக் காட்டுகிறது.

அனந்தன் அவனுடைய அம்மாவிடம் கவனிக்கக்கடிய அத்தனை விஷயங்களையும் நான் எனது அம்மாவிடம் கவனித்திருக்கிறேன் என்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அம்மாவின் மூன்று கல் மூக்குத்தி ஆகட்டும் அல்லது கழுத்தில் தொங்கும் சங்கிலி ஆகட்டும் அத்தனையும் மிகத்துல்லியமாக என் மனதில் பதிவாகி இருக்கிறது. அந்த வயதில் புரியாத விஷயங்களை தொடர்ந்து சிந்தித்து கொண்டே வேறு எதைப் பற்றியும் எந்த கவலையும் இல்லாமல் இருந்ததை இப்போது நினைவு கூர்ந்தால் ஏக்கம் வருவதை தவிர்க்க முடியவில்லை. மீண்டும் குழந்தை பருவத்திற்கு போக முடியாது என்பது எத்தனை பெரிய துயரம்?

அம்மா விசாலம், ஒரு லட்சிய அன்னையாகவே நாவல் முழுவதும் வலம் வருகிறார். கிட்டத்தட்ட என்னுடைய அன்னையை போலவே.. அவளுடைய கருணையும், இரக்கமும், பொறுமையும், காவியங்கள் கூறும் பேரன்னையின் நடைமுறை வடிவமாக எனக்குத் தெரிகிறது. அவளிடம் இல்லாத வேறு எந்தப் பெருங்குணத்தை எந்தப் பெண்ணும் பெற்றுவிட முடியும்? இத்தகைய பேரன்னையரின் பெரும் துயர் மட்டுமே காவியமாக முடியும்.

அப்பாவாக வரும் தங்கப்பன், விசாலம் தவிர வேறு எந்த ஒரு பெண்ணுக்கும் தகுதியானவராக இருப்பார். வேலைக்காரிக்கு தங்கம்மை என்று பெயரிட்டது இந்த முரண்பாட்டை குறிக்கத்தானோ? ஒரு மன நிமிர்வுடைய பெண்ணை சந்திக்க, எதிர்கொள்ள இயலாத ஒரு ஆணின் வெளிப்பாடாக இந்த வன்முறை இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. அடிப்படையில் அவருடைய கடந்த காலம் அவர் மீது விதித்திருக்கிற இறக்கமுடியாத சுமையின் விளைவு அந்த வன்முறை மனோபாவம். அடிபடும் போது குரல் எழுப்பாமலும் அடியைத் தடுக்காமலும் இருக்கும் விசாலத்தின் கூரிய கண்களைப் பார்க்கும் போது தங்கப்பன் சட்டென்று நிறுத்தி விடுகிறார். அவரது இயலாமையும் அநீதியும் வெளிப்படும் தருணம் அது.

தங்கப்பனுக்கு சட்ட நுணுக்கங்களை சொல்லித்தரும் வக்கீல் மஹாத்மா காந்தி சொல்லக்கூடிய அந்த இலட்சிய வக்கீலாக காட்சியளக்கிறார். காந்தியின் ஹிந்து சுவராஜ் நூலில் இந்தியா எதிர் கொள்ள வேண்டிய மிக முக்கியமான, இந்திய பண்பாட்டை அழிக்கும் வல்லமை கொண்டதாக காந்தி குறிப்பிடுவன மூன்று பிரச்சனைகள். ரயில்வே, மருத்துவர்கள் மற்றும் வழக்கறிஞர்கள். காந்தி வழக்கறிஞர்களை ஏன் அவ்வாறு குறிப்பிட்டார் என்று புரிந்துகொள்ள இந்த வக்கீல் கதாபாத்திரம் மிகவும் உதவிகரமாக இருக்கும்.

சுமார் ஒன்றரை வருடங்களுக்கு முன்பு உங்களுடைய புறப்பாடு கட்டுரைத் தொகுப்பை தளத்தில் வாசித்த போது அது நிறைய விடுபடல்களை கொண்டதாக எனக்கு தோன்றியது. இந்த இரு குறுநாவல்கள் கிளி சொன்ன கதை மற்றும் தீ அறியும் இரண்டும் அந்த விடுபடல்களை நிரப்பியதாக தோன்றியது. புறப்பாடு நூலைப் புரிந்து கொள்வதற்கு எனக்கு இந்த இரு குறுநாவல்களும் மிக முக்கியமானவையாக தோன்றுகின்றன.

எல்லாவற்றுக்கும் மேலாக நாம் மிக அந்தரங்கமாக உணரும் தாய் பாசத்தை மீண்டும் ஒரு முறை குழந்தைப் பருவத்துக்கே சென்று நினைவு கூறும் ஒரு மகத்தான வாய்ப்புக்கு என்னுடைய நெஞ்சார்ந்த நன்றிகள்.

தங்களை மீண்டும் சந்திக்க காத்திருக்கும்

இ. மாரிராஜ்

கிளி சொன்ன கதை புதிய கடிதங்கள்

கிளி சொன்ன கதை: கடிதங்கள் மேலும்

கிளி சொன்ன கதை :கடிதங்கள்

கிளி சொன்ன கதை: கடிதங்கள் மீண்டும்

கிளிசொன்ன கதை:கடிதங்கள்

கிளிசொன்ன கதை:மேலும் கடிதங்கள்

கிளி சொன்னகதை:கடிதங்கள்

முந்தைய கட்டுரைகண்டராதித்தன் விருது விழா -முத்து
அடுத்த கட்டுரைவெண்முரசு மின்நூல்கள்