மெலட்டூர் பாகவதமேளா
அன்புள்ள ஜெ,
உங்கள் மெலட்டூர் பாகவத மேளா அனுபவம் இனியதாகுக.
நான் அருகிலிருந்த சாலியமங்கலம் பாகவத மேளா செல்வது வழக்கம். இந்த முறை இயலவில்லை. இரு பாகவத மேளாக்களும் பரஸ்பர மதிப்பும் மரியாதையும் கொண்டவர்கள்.
இரவு முழுவதும் நடக்கும் நாடகம், ஊரில் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு கதாபாத்திரம் – சிறு விநாயகர் மிக பிரபலம் – சில சமயம் ஆறு அல்லது ஏழு விநாயகர்கள் வருவார்கள் – நல்ல தரமான கர்நாடக இசை, தெலுங்கு பாடல்கள், தமிழ் வசனம் எனும் இனிமை, ஒரு நான்கு மணியளவில் பிரகலாதன் தூணைக் காட்ட ஒரு இடை வேளை. அனைவரும் குளித்து வர, தெருவே நாடக அரங்கமாக – நரசிம்மரும் ஹிரண்யனும் உலாவிக்கொண்டு.. ஒரு நவீனத்துவம் இதற்கு உண்டு. அவ்வப்போது மென் தின்பண்டங்களும் உண்டு. அதுவே ஊரின் சுவை.
ஊரை விட்டு வெளி வரும் போது மனது பாகவத கதையில் நனைந்து இருக்கும்
இவை எல்லாம் உங்களுக்கு ஏற்கனவே தெரிந்து இருக்கலாம். நீங்கள் மெலட்டூர் என்றவுடன் மனதில் ஒரு துள்ளல்.
பகிர்ந்து கொண்டேன்
அன்புடன்
முரளி
அன்புள்ள ஜெ
மெலட்டூர் பாகவத மேளா பற்றிய உங்கள் குறிப்பைக் கண்டேன். நான் நாடகத்தில் ஆர்வம்கொண்டவன். நாடகத்தின் எதிர்காலம் பற்றிய சந்தேகம் எனக்கு வந்தது. காட்சிக்கலையில் இனிமேல் நாடகம் இருக்குமா என்றே சந்தேகப்பட்டேன். அமெரிக்கா வந்தபின்னர்தான் நாடகம் வாழும் என்ற எண்ணம் எழுந்தது. நாடகம் உருமாறிக்கொண்டே இருக்கும். புதிய சாத்தியங்களை நாடகம் கண்டடையும்
ஆனால் இந்தவகையான ஓப்பரா கலைவடிவங்கள் ஒரு அரும்பொருள் என்ற அளவில்தான் நீடிக்கும் என்றும் மெய்யான கலையின்பம் இவற்றில் அமையாது என்றும் நினைக்கிறேன். நீங்கள் ஆண்டுதோறும் மெலட்டூருக்குச் சென்றால் நாலைந்தாண்டுகளில் சலிப்பு ஏற்பட்டுவிடும். அந்தச்சலிப்பினால்தான் அந்த ஊர்க்காரர்கள் பெரிதாக அதைப்பொருட்படுத்துவதில்லை
கலை என்பது நாவல்டியால்தான் நிலைநிற்க முடியும் என நினைக்கிறேன். மெலட்டூரில் இருந்து மேலும் புதிய ஓப்பரா வடிவங்கள் உருவாகி வந்திருக்கவேண்டும்
முத்து நாராயணன்
***
மெலட்டூர் -கடிதங்கள்
மெலட்டூர் அனுபவம் -ராஜகோபாலன்