சிறுகதைகள் – கடிதங்கள்.

31050

அன்புடன் ஆசிரியருக்கு

 

இக்கதையை வாசிக்கத் தொடங்கிய சற்று நேரத்துக்குள்ளாகவே அங்கு நிகழவிருப்பதை மனம் ஊகித்து விடுகிறது .தாய்மை என்ற உணர்வு போற்றப்படுகிறது. வழிபடவும் படுகிறது. ஆனால் அவ்வுணர்வின் ஆதார இச்சை என்ன? தன்னில் எழுந்த உயிரை எந்த எல்லைக்கும் சென்று வாழவைக்க விழையும் துடிப்பு அது. அத்துடிப்பின் வளர்ச்சியாக மொத்த சமூக உருவாக்கத்தையும் பார்க்கிறவர்கள் உண்டு. எஸ்.ராமகிருஷ்ணனின் காந்தியோடு பேசுவேன் சிறுகதை சற்று செயற்கையாக இருந்தாலும் காந்தியின் தாய்மை உணர்வைத்தான் பேசுகிறது. அதை மனம் ஆமோதிக்கவும் செய்கிறது.  திருமதி டென் இங்கு முரண்படுகிறாள்.

 

தாய்மை தன் குழந்தையை உன்னதம் என எண்ணுகிறது. உன்னதம் என்ற ஒன்று மனதில் தோன்றிய உடனேயே சாதாரணம் என்ற உருவகம் மனதில் வரவே செய்யும். கற்பனாவாத நோக்கில் பெருங்காதல் கொண்டவர்கள் அவ்வுணர்வுன்னதத்தால் தங்கள் குடும்பத்தை சமூகத்தை என அனைத்தையும் சர்வசாதாரணமாக கடந்து செல்கிறார்கள். நீலத்தின் ராதை ஒரு மகத்தான உதாரணம். ஆனால் இங்கு திருமதி டென் பொருட்படுத்த தேவையற்றவையாக எதை எண்ணுகிறாள். ஒரு ஏழு வயது குழந்தையின் உயிரை. அங்கிருந்து தொடங்கும் அதிகார உணர்வு அன்புணர்வென பாவித்துக் கொண்டு சுந்தரம் அய்யரின் வழியே மதர் சுப்பீரியரிடம் போய் நிற்கிறது.  அரை நூற்றாண்டுக்கு முன்பு வரை தங்களுக்கு அடிமை ஊழியம் புரிந்த ஒரு நாட்டின் உயிரை குறைந்தபட்சம் உயிரென்று கூட டென்னால் எண்ண முடியவில்லை. இறுதி வரி தான் மனதை உலுக்கிவிட்டது. உலகில் உருவாக்கப்பட்டதிலேயே விளக்கிவிட முடியாத மாபெரும் புனைவு. நிறம். அதைத்தான் எண்ணிக் கொள்கிறாள் டென். ஒரு மன நடுக்கத்தை உணர்ந்தேன். அவளால் எப்படி ஒரு கருப்பு குழந்தை இறப்பதை எண்ணி குற்றவுணர்வு கொள்ள முடியும்? அதற்கான நியாயங்களே அவள் குருதியில் இல்லை. இன்னும் நூற்றாண்டுகள் தாண்ட வேண்டும் பல்லாயிரம் குரல்கள் பேச வேண்டும் பல கோடி மனங்கள் கேட்க வேண்டும் காரி டேவிஸ் போன்றவர்கள் எண்ணியதெல்லாம் ஈடேற.

 

அன்புடன்

 

சுரேஷ் பிரதீப்

 

 

 

அன்புள்ள ஜெ

 

ஜெயமோகன் சிறுகதைகள் தொகுதியை மிகவும் தாமதித்தே வாங்கினேன். உங்களுடைய எல்லா கதைகளையும் இணையத்திலேயே வாசித்துவிட்டேன் என்ற எண்ணம்தான் காரணம். ஆனால் அந்தத்தொகுதிகளில் உள்ள பெரும்பாலான கதைகள் நான் வாசிக்காதவை. இணையத்தில் இல்லாதவை. பல கதைகளை மிக ஆரம்பகாலத்தில், இருபத்தைந்தாண்டுகளுக்கு முன்னரே, எழுதியிருக்கிறீர்கள். சிக்கலான பல கதைகள் அதில் உள்ளன. அவை முக்கியமான கதைகள்தான்

 

ஆனால் எனக்கு பிடித்த கதைகளில் சில கதைகள் மிக எளிமையானவை. உதாரணமாக ஒன்றுமில்லை. என்னை பயப்படுத்திவிட்டது அந்தக்கதை. வாழ்க்கையையும் மரணத்தையும் எப்படி எளிமையாக எடுத்துக்கொள்கிறோம் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது. எல்லாம் நம் கையில்தான் உள்ளன என்று எண்ணிக்கொள்கிறோம். சாதாரணமாகச் செல்லும்கதை எதிர்ப்பார்த்த முடிவையே அளித்து பதற்றம் அடையச்செய்துவிடுகிறது

 

சரஸ்வதி

 

அமேசானில் சிறுகதைகள் நூல் வாங்க 

ஜெயமோகன் சிறுகதைகள் மின்னூல்

சிறுகதைகள் – கடிதங்கள்

சிறுகதைகள் -கடிதங்கள்

சிறுகதைகள் கடிதங்கள்

ஜெயமோகன் சிறுகதைகள் – கடைசி பெஞ்ச்

 

 

முந்தைய கட்டுரைசிந்தாமணி
அடுத்த கட்டுரைஎழுத்தும் எழுதுபவனும்