செய்திதுறத்தல்
திரு. ஜெயமோகன் அவர்களுக்கு அன்புடன்,
‘செய்தி துறத்தல்” படித்தேன். முன்பொருமுறையும் ஒரு பதிவில் ஊடகமும் செய்தித்தாள்களும் அதீத உணர்ச்சிக் கொந்தளிப்புக்கு ஒரு சராசரி மனிதனை தினமும் உட்படுத்துவதைக் கூறியிருந்தீர்கள். அதன் மூலம் ‘பொங்காமல்’ செய்தி படிப்பது எப்படி என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்துவருகிறேன். தொலைக்காட்சி செய்திகளையும் கூக்குரல் சண்டைகளையும் பார்ப்பதை நிறுத்தி ஒரு வருடங்களுக்கு மேலாகிறது. அந்த நேரம் வீணாவதைத் தடுத்து மனதை ஆற்றுப்படுத்தியதற்கு நன்றி. இப்போதெல்லாம் செய்தித் தாளும் காலையில் ஒரு டம்ளர் காஃபி குடிக்கும் நேரமே கையிலிருக்கிறது. பல நாட்களில் அதுவும் இல்லை. ஒன்றும் ஆகிவிடவில்லை எனக்கு என்றுதான் தோன்றுகிறது.
முன்பெல்லாம் செய்திகளை உணர்ச்சிகளின் உச்சத்தில் நிறுத்தும்போது அதைத் தொடர்ந்து எழும் எண்ண ஓட்டங்களின் அழுத்தம் மிக அதிகமாக இருந்தது. சில நாட்கள் பலமணி நேரங்கள் என்னுள் அவை வளர்ந்தபடியே இருந்தன. அடுத்த உச்ச செய்தி வரும்வரை. எப்போதும் அந்த உணர்ச்சிக் கொந்தளிப்பைத்தாண்டி எதுவும் செய்ய இயலாதெனும் நிஜம் முகத்திலறைந்தபடியேதான் இருந்தது. பழையதான அந்த செய்திக்கான அறமென்று நான் நினைத்தது நிகழ்ந்ததா என்பது கேள்வியாகவே எப்போதும் தங்கிவிடுகிறது. உங்கள் கடைசி பாராவைப் படித்தபிறகு மெலிதான சந்தோஷமே அடைந்தேன். ஆனாலும் செய்திகளாகும் நிகழ்வுகளின் ஒருபக்கம் வலிகளும் அறம் பிழைத்தலுமாகவே இருக்கிறது. சமூகம் ஒரு பெரும் சீரமைப்பை நிகழ்த்திக்கொள்ளும்போதுதான் இது நிலைகொள்ளும்போலிருக்கிறது. அதுவரை செய்திகளை விட்டு பாரிஜாதத்தையும் முல்லையையும் சேகரிக்கும் மனதுக்கு உகந்த காலைநேரத்தில் பயணிப்பது உத்தமமென்று தோன்றுகிறது.
மீண்டும் நன்றியுடன்.
நா. சந்திரசேகரன்
***
அன்புள்ள ஜெ
செய்தி துறத்தலை வாசிக்கும்போது நீங்கள் ஏதோ ஒரு துறவு மனநிலையில் இருப்பதனால் வெண்முரசு எழுதுவதற்காக அப்படிச் சொல்கிறீர்கள் என நினைத்தேன். ஆனால் சென்ற சிலநாட்களாக எனக்கே அதெல்லாம் தேவை என்று ஆகிவிட்டது. இரண்டுபக்கமும் தெரிந்துகொள்ளவேண்டும் என நினைக்கும் என்னைப்போன்றவர்களுக்கு இதேபோன்ற சூழல் என்பது மிகப்பெரிய ஒரு வதை. எங்குமே மிகையுணர்ச்சிகள்தான். எதிலுமே தெளிவு இல்லை. ஆழமனசுக்கு இது நேர்மையான கருத்து என்று தோன்றுமே அது தோன்றவே இல்லை. ஒவ்வொருவரும் அவரவர் சாதி மதம் இனம் சார்ந்துதான் அரசியல்நிலைபாடுகளை எடுக்கிறார்கள். உணர்ச்சிவசப்படுகிறார்கள். ஒரு சாதாரணநியாயத்தைக் கேட்டால்கூட எதிர்ப்பக்கம் தள்ளிவிடுகிறார்கள். செய்திதுறந்து கொஞ்சமாகத்தெரிந்துகொள்வதே உண்மையைத் தெரிந்துகொள்ள ஒரே வாய்ப்பு என நினைக்கிறேன்
ராகவன் சபாரத்தினம்
***
செய்தி -கடிதங்கள் 2
செய்தி -கடிதங்கள்