எழுத்தும் எழுதுபவனும்

writing1

அன்புள்ள ஜெ.,

தூத்துக்குடி பற்றிய தங்கள் பதிவு படித்தேன். அதற்கு சற்று முன்னால் “அம்மா வந்தாள்” பற்றிய பதிவையும். முதலில் அது தாங்கள் எழுதியது என்று நினைக்கவில்லை. தூத்துக்குடி போன்ற கனமான சம்பவங்களுக்கு மத்தியில் இந்த பதிவை எதிர்பார்க்கவில்லை. புறவுலக நடவடிக்கைகள் எந்த அளவுக்கு ஒரு எழுத்தாளனை, அதாவது அவனது தினசரிச் செயல் பாடுகளை பாதிக்கும். பாதிக்கவேண்டுமா?

அன்புள்ள,

கிருஷ்ணன்

***

அன்புள்ள சங்கரன்,

இந்தத்தளத்தில் வெளியாகும் பெரும்பாலான கட்டுரைகள், கடிதங்கள் பல நாட்களுக்கு முன்னரே ஒழுங்குசெய்யப்பட்டு வரிசையில் இருப்பவை. குறித்த நேரத்தில் அவை தானாகவே பிரசுரமாகின்றன. பலசமயம் பதினைந்து நாட்களுக்குரிய கட்டுரைகள் முன்னரே வலையேற்றம் செய்யப்பட்டிருக்கும். மிக அரிதாகவே உடனடியாக வலையேற்றம் செய்யப்படும்.

மேலும் அந்தக்கட்டுரை நான் ஜன்னல் இதழில் ஓராண்டு முன்பு எழுதிய கட்டுரைத் தொடரின் வலையேற்றம். அப்போது அதை வலையேற்றம் செய்யவேண்டாம் என அவர்கள் கேட்டுக்கொண்டிருந்தார்கள்

இன்று இங்கே நிகழும் அனைத்திலும் ஓரளவேனும் நான் ஈடுபட்டுக் கொண்டுதான் இருக்கிறேன். அவற்றுக்கு அப்பால்தான் என் அகவுலகம் உள்ளது. அது வெண்முரசு என்றும் என் தனிப்பட்ட மெய்த்தேடல் என்றும் என் கனவுகள் என்றும் ஒன்றுடன் ஒன்று பிரிந்தே உள்ளது. எல்லா நெருக்கடிகளிலும் எழுதியிருக்கிறேன். நெருக்கடி ஒரு தளத்தில். நான் இன்னொன்றுக்கும் மாறிக்கொள்வேன்.

உதாரணமாக நான் ஈராண்டுகளுக்குமுன்பு சிங்கப்பூர் செல்லும்போது அச்சுநகல் எடுக்கப்பட்ட விசா ஆவணம் பாதுகாப்புச் சோதனைக்குச் செல்லும் வழியில் தொலைந்துவிட்டது. அச்சுநகல் இல்லையேல் விமானத்திற்குள் விடமாட்டார்கள் .பெட்டி உள்ளே சென்றுவிட்டமையால் வெளியேயும் விடமறுத்தனர்.

அச்சுநகல் எடுக்கவேண்டும் என அதிகாரிகளிடம் சொன்னேன். ஒரு மேலதிகாரி வந்து எழுத்துப்பூர்வ அனுமதி கொடுக்கவேண்டும் என்று சொன்னார்கள். அரைமணிநேரம் ஆகும் என்றனர். விமானம் மேலும் ஒருமணிநேரத்தில் கிளம்பும், அவசரம் என்று பாதுகாப்புச் சோதனையில் சொல்லியிருந்தார்கள். அந்த அரைமணிநேரத்தில் நான் கணினியை திறந்து வெண்முரசின் எஞ்சிய பகுதியை எழுதினேன். ஒரு கணத்தில் இங்கிருந்து அங்கே என்னை மாற்றிக்கொண்டேன்

இது ஓர் அரிய திறன் அல்ல. நாம் அனைவருமே செய்வதுதான். இதைச் செய்ய பழகிக்கொள்ளவேண்டும், அவ்வளவே. எண்ணிப்பாருங்கள் எந்தப் பெருஞ்சோகத்திலும் மனிதர்கள் உண்கிறார்கள், நீர் அருந்துகிறார்கள், தெரிந்தவரை வரவேற்கிறார்கள். அன்றாடம் என ஒன்றை அந்தரங்கத்திலிருந்து தனியாக பகுத்துக்கொண்டுதான் அனைவரும் வாழ்கிறார்கள். இரண்டுக்கும் அப்பாலிருப்பதையும் அவ்வாறே பகுத்துக்கொள்ள முடியும்.

ஜெ

முந்தைய கட்டுரைசிறுகதைகள் – கடிதங்கள்.
அடுத்த கட்டுரைகீதையைச் சுருக்குதல்