ஆடம்பரக் கைப்பை -கடிதம்

sun

 

ஆடம்பர கைப்பைகளின் வாழ்க்கை

அன்புள்ள ஜெமோ,

 

‘ஆடம்பரக் கைப்பைகளின் வாழ்க்கை’ பதிவை வாசித்துவிட்டு இதை எழுதுகிறேன்.

ஒருவகையில் என்னை இதை எழுத வைக்கத்தான் நீங்கள் அந்தப் பதிவையே எழுதுனீர்கள் என சும்மாவேனும் நினைத்துக்கொள்வது அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது.

நான் கடைசியாக உங்களுக்கெழுதிய கடிதத்தில் ரத்னாபாயின் ஆங்கிலம் பற்றிய எனது புரிதல்களை எழுதிக்கொண்டிருப்பதாகச் சொல்லி இருந்தேன். அதை அன்றே முடித்து எனது வலைத்தளத்தில் பதிவேற்றி இருந்தேன். உங்களது பதிவை வாசித்ததும், நான் எழுதியதையும் ஒருமுறை வாசித்துப் பார்த்துக்கொண்டேன். நான் கதையின் மையத்தை நோக்கி ஒருகோணத்திலும், அதையே நீங்கள் மூன்று கோணங்களிலும் பயணித்து எழுதி இருப்பதைப் போல இருந்தது. ஆசிரியர்கள் எப்போதும் மாணவர்களுக்கு ஏதோ ஒன்றை உணர்த்திக்கொண்டிருப்பவர்களாகவே இருக்கிறார்கள்.

 

நினைவில் இருந்தும் அந்தக் கதையை எடுத்தாழ்ந்துதான் இந்தப் பதிவை எழுதி இருப்பீர்கள் என எனக்கொரு எண்ணம் உண்டு. அப்படி இல்லை எனில், விரைவான மேலோட்டமான ஒரு வாசிப்பு நிகழ்ந்திருக்கலாம். ஏனெனில், உங்களது பதிவில் கதையில் வருவதாகச் சொல்லப்பட்டிருக்கும் சில இடங்கள், கதையில் வேறு வார்த்தைகளில் அல்லது அர்த்தத்தில் சொல்லப்படுவதாக இருக்கிறது. பெரிய விலகல்கள் இல்லைதான் என்றாலும், எனக்கென்னவோ பவா கதை சொல்வது ஞாபகத்திற்கு வந்து போனது.

 

உங்களது பதிவை வாசித்ததற்குப் பிறகு கதையை வேகமாக ஒருமுறை வாசித்த போது இன்னொன்றும் எனக்குத் தோன்றுகிறது. ரத்னாபாய் கணவனிடம் பணம் கேட்கவரும் இடத்தில் சுரா இப்படி ஒரு இடத்தை எழுதி இருக்கிறார்;

 

வெளியே கிழவர் தன் இருப்பிடத்தை விட்டு எழுந்திருந்து கதவுக்குப் பின்னால் வந்து நிற்பதாக ரத்னாபாய்க்குத் தோன்றிற்று. ‘சாத்தியிருக்கும் கதவுக்குப் பின்னால் ஏன் இவ்வாறு நிகழ்ந்திருப்பதாக எனக்குத் தோன்ற வேண்டும். அதிக உணர்வுகள் வேலை செய்வதாலா? கற்பனையின் திமிரினாலா? என்னுடைய நுட்பமும், நகாஸும், பதவிசும், லளிதமும் முரட்டுத்தனத்தால் சூறையாடப்பட்டு விட்டதா?’ கதவைத் திறந்து பார்க்கிறபோது கிழவர் அங்கு நின்று கொண்டிருந்தால், தனது காரியங்கள் சுமாரான வெற்றிக்குத் திரும்பும் என்றும், அப்படியில்லாத வரையிலும் இப்போது இருப்பதுபோலவே இருக்கும் எனவும் கற்பனை செய்து கொண்டு கதவைத் திறந்தாள். கிழவர் இருந்த இடத்திலேயே உட்கார்ந்து கொண்டிருந்தார்.’

 

‘கற்பனையின் திமிர்’ என்கிற இடத்தில் இருந்து இந்தக் கதைக்கு நீங்களும் நானும் குறிப்பிட்டிராத இன்னொரு மாதாரியான வாசிப்பு நிகழ சாத்தியங்கள் இருப்பதாகத் தோன்றுகிறது. அல்லது இது இந்தக் கதை மீதான என்னுடைய அதீத பற்றின் வெளிப்பாடாகக் கூட இருக்கலாம்! எப்படியோ, திறம்பட்ட ஓர் கதை பல கோணங்களிலும் வாசிப்புச் சாத்தியங்களை உருவாக்கிக்கொண்டே இருக்கிறது. காலமும் வெளியும் அக்கதையில் விழுந்து உழன்று உழன்று அந்தக் கதைக்கான புரிதல்களின் சாத்தியங்களை நகர்த்திக்கொண்டே இருக்கிறது. கைப்பையும் அப்படியான சாத்தியங்களின் மீ-எழுச்சிதான் என இந்நிமிடம் எண்ணிக்கொள்கிறேன்.

 

அன்புடன்

உமையாழ்

00

 

ரத்னாபாயின் ஆங்கிலம் பற்றி நான் எழுதியது, கீழுள்ள சுட்டியில் வாசிக்க கிடைக்கும்.

 

https://umayaal.wordpress.com/2018/05/13/சுந்தர-ராமசாமியின்-ரத்ன/

 

அன்புள்ள உமையாழ்

 

வாசிப்பின் எல்லா சாத்தியங்களையும் திறப்பது அல்ல விமர்சனத்தின் நோக்கம். வாசிப்பை தொடங்கி வைப்பது, தடம் காட்டுவது மட்டுமே. நீங்கள் அளித்துள்ள மேலதிக வாசிப்பும் நன்றே.

 

நான் சென்ற ஆண்டு ஜன்னல் இதழில் ஒரு தொடர் எழுதினேன். நவீனத் தமிழிலக்கியத்தில் பெண்ணைப் பற்றிச் சொல்லப்பட்டிருப்பவற்றை ஒட்டுமொத்தமாக ஆராய்ந்து பார்ப்பதே நோக்கம். ஆனால் அது ஒரு பிரபல வணிக இதழ். அதன் வாசகர்கள் கதையை வாசித்திருக்க வாய்ப்பில்லை. ஆகவே கதையைச் சொல்லி வாசிப்பின் சில சாத்தியங்களைச் சுட்டுவதாக அந்த கட்டுரைத்தொடர் அமைந்தது

 

அந்தக்கட்டுரைத்தொடரிலுள்ள கட்டுரைகளைத்தான் இப்போது தொடர்ச்சியாக பாரதி , அ.மாதவையா, ராஜம் அய்யர் என பதிவிட்டு வருகிறேன்

 

ஜெ

முந்தைய கட்டுரைகுமரகுருபரன் விஷ்ணுபுரம் விருது 2018
அடுத்த கட்டுரைமு.தளையசிங்கம் பற்றி…