முயலின் அமைதி – கடிதங்கள்

hasan

 

அமைதிப் பிரதேசத்தின் முயல்  :    ஹஸ்ஸான் ப்ளாஸிம்

அன்புள்ள ஜெ

 

நலம்தானே?

 

 

நானும் நலம். ஹசன் பிளாஸிமின் கதை முக்கியமான ஒரு படைப்பு. அதை மொழியாக்கம் செய்த நரேன் அது தன் நண்பர்களுக்குப் பிடிக்கவில்லை என்று சொல்லியிருந்தார். ஏன் என்று நான் குழப்பம் அடைந்தேன். ஆகவே சில நண்பர்களிடம் அக்கதையைக் கொடுத்தேன். வழக்கமான சிற்றிதழ் வாசகர்கள் அதை நல்ல கதை அல்ல என்று சொன்னார்கள்.ஏனென்றால் இலக்கியக்கதையில் இந்தவகையான கொலை, அரசியல்கொலை போன்றவை வராது என்றும் அது அன்றாட வாழ்க்கையின் சின்ன விஷயத்தைத்தான் எடுத்துக்கொண்டு பேசும் என்றும் அவர்கள் நினைத்திருந்தார்காள். ‘ஒரு சின்ன விஷயத்தை எடுத்துக்கொண்டு அற்புதமாகச் சொல்லியிருக்கிறார்’ ‘நம்ம எல்லாருடைய வாழ்க்கையிலேயும் நடக்கிற விஷயம்தான்’ என்ற இராண்டு வரிகளை நாம் எல்லா இலக்கியவிவாதங்களிலும் சாதாரணமாகக் கேட்கமுடியும்.

 

பெரிய விஷயங்கள்தான் இலக்கியம் என்பதற்கு எதிராக சின்ன விஷயங்களையும் எழுதமுடியும் என்பதனால் அதை எழுத ஆரம்பித்தார்கள். அதோடு நம் இந்தியச்சூழலில் பெரிய விஷயங்கள் அன்றாட வாழ்க்கையில் கம்மி. ஆகவே பெரிய விஷயங்கள் இலக்கியமே இல்லை என்பதுபோன்ற மனநிலைக்கு இன்றைக்கு வந்துசேர்ந்துவிட்டார்கள். மிக மிக தப்பான மனநிலை இது. இந்தக்கதையில் சொல்லியிருப்பது மத்திய ஆசிய நாடுகளின் அன்றாட யதார்த்தம். ஆகவே இது மிக முக்கியமானது. இங்கே இருந்துகொண்டு அதெல்லாம் துப்பறியும் கதைக்கும் சாகசக்கதைக்கும் உரியவை என்று சொல்வது முட்டாள்தனம்.

 

இன்னொன்று கதையிலே கடைசியில் வருவது ஏதோ ஒருவகை துரோகம் அல்லது காட்டிக்கொடுப்பு என்று ஊகித்து இதெல்லாம் ஹாலிவுட் கதையில் வர்ரதுதானே என்ற வாசிப்பு. அதுவும் மேலோட்டமான வாசிப்புதான்.  இந்தக்கதை அப்படி ஒரு டிவிஸ்ட் வைத்து அதை நம்பி இருக்கும் கதை இல்லை. முதல் விஷயம் அந்த டிவிஸ்ட் இந்தக்கதையில் இல்லை. அங்கே என்ன நடந்தது என்பதே புகைமூட்டம்தான். அவனே தற்கொலை செய்திருக்கலாம். அல்லது எவராலோ கொல்லப்பட்டிருக்கலாம். அல்லது வேறு ஏதாவது மிகப்பெரிய அரசியல் நாடகத்தின் ஒரு சின்ன அம்சமாக இருக்கலாம். எதுவானாலும் அது  அவர்களுக்கு அப்பாற்பட்டது. அவர்கள் வெறும் முயல்கள்.  முயலுக்கு என்ன நடக்கிறதென்று அறிந்துகொள்ளவே முடியாது. முயல்முட்டை இடுவதுபோல அவர்கள் ‘எங்கிருந்தோ’ சில கனவுகளையும் கருத்துக்களையும் பெற்றுக்கொள்கிறார்கள். இதிலுள்ள அர்த்தமில்லாத தன்மையைத்தான் நாம் இக்கதையின் மையக்கரு என நினைக்கவேண்டும்.

 

அவர்கள் போருக்கு முன்னால் எவ்வளவு வளர்ந்த பண்பாடாக இருந்தனர், எவ்வளவு இலக்கிய ஆர்வம் கொண்டிருந்தனர் என்பதெல்லாம் இக்கதையின் இந்த அம்சத்தை வலியுறுத்தவே. இந்தக்கோணத்தில் அந்நாட்டுச்சூழலின் அரசியலின் முழு அபத்தத்தையும் சொல்லிவிடுகிறது இக்கதை

 

மகேஷ்

 

 

அன்புள்ள ஜெ

 

அமைதிப்பிரதேசத்தின்முயல் ஒரு அற்புதமான கதை. அதில் புதையல் போல கிடைக்கும் பாழடைந்த நூல் தொகுப்பு மனதைப்பிசையும் ஒரு குறியீடு. இன்று அதையே போரும் அமைதியும் டால்ஸ்டாய் என்றெல்லாம் ஃபேஸ்புக்கில் வெறுப்பைக் கக்குவதற்குப் பயன்படுத்திக்கொள்வது மேலும் ஆழமான ஒரு சித்திரம். நிஜப்போர் ஃபேஸ்புக்கில் வேறுவகையில் நடக்கிறது. நிஜபோர் என்ன ஏது என்று புரியாது. யார் யாரை எதனால் கொல்கிறார்கள் என்று தெரியாது. நாம் வெறும் முயல்கள்தான். ஆகவே ஃபேஸ்புக்கில் உட்கார்ந்து முட்டையிடுகிறோம். இங்கே ஈழப்போரிலும் இதுதானே நடந்தது. இந்தத்தரத்தில் ஒரு சில ஈழக்கதைகள்தான் இருக்கின்றன

 

நடேசன் சுப்ரமணியம்

IMG_1626

ஊட்டி இருகதைகளின் முன்னுரை -நரேன்

 

ஆயிரமாண்டுப் பிரார்த்தனைகள்-     யியூன் லீ

பேச்சும் பிரார்த்தனையும்- கடிதங்கள்

முந்தைய கட்டுரைஆடம்பர கைப்பைகளின் வாழ்க்கை
அடுத்த கட்டுரைசெவிநுகர் கனிகள்