ஆயிரமாண்டுப் பிரார்த்தனைகள்- யியூன் லீ
ஜெ
யியுன் லீயின் ஆயிரம் ஆண்டுப்பிரார்த்தனைகள் நான் சமீபத்தில் வாசித்த மிக முக்கியமான கதை. ஒரு கதைக்குள் எத்தனை உட்கதைகள் என எண்ணி எண்ணி வியந்தேன். பிரச்சினை மொழி என முதலில் தோன்றுகிறது. அப்பா அவருடைய நாவை அடக்கவேண்டிய வேலை காரணமாக பேசமுடியாதவர் ஆகிறார். பேசாமலேயே அவர் மனைவி அன்பை அறியாமல் அழிகிறார். பேச நேர்ந்தமையால் அவரும் அழிகிறார். பேசமுடியாத அவரால் பேசுபவளாக மகளை வளர்க்கமுடியவில்லை. ஆகவே அவள் அமெரிக்காவில் தன் கணவனைப்பிரிகிறாள். பேச்சை கண்டுபிடித்ததும் தன் துணையையும் கண்டுகொள்கிறாள். அவருக்கு தான் இழந்தது என்ன என்று தெரியவில்லை. அது பேச்சுதான்.
ஓர் உறவு என்பது ஆயிரம் ஆண்டுக்கால பிரார்த்தனையால் உருவாவது என சீன மனம் நம்புகிறது. ஆயிரமல்ல ஐம்பதாயிரம் ஆண்டு பிரார்த்தனை இருந்தாலும் பேச்சு வழியாகவே உறவு உருவாகிறது என்றும் பேசாவிட்டால் உறவே இல்லை என்றும் அமெரிக்காவில் அவர்களின் வாழ்க்கை அவர்களுக்குக் காட்டுகிறது. விதி – பேச்சு என்று இக்கதை ஒரு பைனரியை உருவாக்குகிறது. உறவுகள் விதியால் அல்ல பேச்சால் உருவாகின்றவை என்பது ஒரு பெரிய தரிசனமாக உருவாகி வருகிறது இந்நாவலில். இதேபோன்ற மென்மையான பல கதைகள் தமிழில் உள்ளன. ஆனால் இப்படி ஒரு ஆழத்தை அவை அடைவதில்லை. அவை வெறும் உறவுப்பிரச்சினையாகவே நின்றுவிடுகின்றன. எந்த இலக்கியமானாலும் அது இப்படி ஒரு விரிந்துசெல்லும் விஷனை அடைந்தால்தான் அது இலக்கியம் என நினைக்கிறேன்
சித்ரா
ஜெ
ஆயிரம் ஆண்டுப் பிரார்த்தனைகள் ஓர் அற்புதமான கதை. மிகச்சிறப்பாக நரேன் மொழியாக்கம் செய்திருக்கிறார். அவருடைய குறிப்பும் மிக சிறப்பாக இருந்தது. அந்தக்கதையில் உள்ள சிறப்பு என்பது அதன் சூழல் மனநிலை இரண்டுமே நம் இந்திய சூழல் மாதிரியெ இருந்தன என்பதுதான். இன்றைய இந்தியர்கள் அமெரிக்காவில் சந்திப்பது இதே பிரச்சினையைத்தான். நாங்கள் இங்கே அடையும் உறவு பிரிவு ரெண்டையுமே மூத்தவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை.
அதற்கான காரணம் அக்கதையில் அழகாகச் சொல்லப்பட்டுள்ளது. அவர்கள் உறவுகளை ஆயிரங்கால பயிர் என்று நினைக்கிறார்கள். ஆயிரமாண்டுகால பிரார்த்தனை போல. சொர்க்கத்தில் தீர்மானிக்க்கப்பட்டது என சொல்கிறார்கள். இல்லை எல்லாம் இங்கே நிகழ்வதுதான் என்றும் இங்கேயே அதை சிறப்பாக நிகழ்த்திக்கொள்ள முடியும் என்றும் இந்தக்கதை சொல்வதாக நான் வாசித்தேன். அவர்கள் மனம்திறந்து பேசிப்பழக பயிற்சி அற்றவர்களாக இருக்கிறார்கள். நம் குடும்பங்களில் இப்படித்தானே? இங்கே மகனோ மகளோ அப்பாவிடம் மனம்திறந்து பேசமுடியுமா என்ன? அப்படி பேசாததனால்தான் பெரும்பாலான பிரச்சினைகள் உருவாகின்றன. அந்தப்பேச்சைத்தான் இங்கே மண்ணில் உள்ள வாழ்க்கையின் முக்கியமான அம்சமாக கதை சொல்கிறது
முக்கியமனா கதை. அதோடு ஆசிரியை பற்றிய குறிப்பில் அவருடைய மன அழுத்தம், தற்கொலைமுயற்சி பற்றி வரும் வரிகள் இன்னும் ஆழமாக கதையை வாசிக்கவைத்தன
எஸ்
ஊட்டி இருகதைகளின் முன்னுரை -நரேன்