ஆணவமும் எழுத்தும்

IMG_1545

அன்புள்ள ஜெ

எப்போதும் உங்கள் சீண்டலை நான் ரசித்தே வந்திருக்கிறேன். பொதுவான உங்கள் உரைத் தொடக்கங்களும் அவ்வாறே அமைகிறது. அப்படி காயப்படுத்திவர்களாகவே உங்களை உருவாக்கியவர்களை நீங்கள் தொடர்ந்து குறிப்பிட்டிருக்கிறீர்கள். அன்றைக்கு ஊட்டியில் நடந்த உரையாடலில் நான் சுனீல் கிருஷ்ணனிடம் கூறிபடி அப்படியான கவிதைகளை தேர்ந்தெடுத்ததை நன்று என்று தோன்றும்படியான இடத்தில் என்னை நிற்கவைத்தீர்கள். என் வாழ்வின் முக்கியமான தருணங்களில் ஒன்று. அதே சமயம் இன்னும் சிலருக்காவது என்னால் உண்டான உரையாடல் உதவியிருக்கும் என்கிற மகிழ்ச்சியும் உண்டாகிறது. இதனால் எனக்குள் எத்தனையோ கேள்விகள். அதில் ஒன்று எத்தனையோ வருடங்களாக இருக்கிற ஒன்று.

என்னோடு சசிகுமார் இருக்கவே அவரிடம் அதே கேள்வியை கேட்டேன். அவருக்கு கோபம் வந்துவிட்டது. ஏன் ஈகோ இல்லையென்றால் அவனுக்கு எத்தனையோ வேலைகள் இருக்கின்றன அவன் எதற்காக இலக்கியம் பக்கம் வரவேண்டும்? என்றார். என் மனதுக்குள் நினைத்துக் கொண்டேன். அப்படியானால் எனக்கு எதற்காக இலக்கியம் அல்லது எனக்கு ஈகோ இருக்கிறதா?

எனக்கு ஈகோ இல்லையோ என்கிற சந்தேகம் எப்போதும் இருந்து வந்திருக்கிறது. இருக்கிறது என்று தெளிவாகவே தெரிந்தாலும் என்னுடைய இயல்பு எப்போதும் எவருடனும் போட்டியிடுவதாக இருந்ததில்லை. என் பதினைந்து வயதிலிருந்தே பணியிடங்களில் எவருடனாவது சண்டைகள் உருவாகாமால் இருந்ததில்லை. தொடக்கத்தில் என்னிடம் பொறாமை காட்டுபவர்களை வம்புக்கு இழுப்பவனாக இருந்தேன். நீ வேறு நான் வேறு என்று குத்திக் காட்டுவேன். என்னை வேலை நேரம் தாண்டியும் இருக்க வைக்க முயலும் முதலாளிகளிடமும் சண்டையிட்டிருக்கிறேன். வேலையிலிருந்து வெளியேறியும் வெளியே அனுப்பப்பட்டும் இருக்கிறேன்.

அப்போதெல்லாம் அப்பாவிடமிருந்து அடி கிடைக்கும். அம்மா எதுவும் சொல்லியதில்லை. அவள் எப்போதும் என்னுடைய தோழி. என் நூலகப் புத்தகங்களுக்கான சக வாசகி. எங்கள் வாசிப்பு போட்டியிட்டு நடக்கும். சில சமயம் அவள் வாசிக்கிற புத்தகத்தை தெரியாமல் நூலகத்தில் கொடுத்துவிட்டு தெரியவந்ததும் திரும்பவும் தேடிப்பார்த்து வெறுங்கையோடு திரும்பிய நாட்களைப் பற்றிய குற்றவுணர்ச்சியை விட்டுச் சென்றவள். என்னாலும் தம்பியாலும் குடும்பம் நிலை மாறும் என்று நம்பியவள். இன்னும் பெரிய குற்றவுணர்ச்சி எப்போதும் என்னோடு இருக்கும். அவளுக்கு நான் இனி தனியே வாழ்ந்துவிடுவேன் என்று நம்பிக்கையளித்ததை விடவும் பெரிய குற்றம் என் வாழ்நாளில் இதுவரை செய்ததில்லை. என்னுடைய வாழ்கை பதினாறு வரைக்கும் வேதனையாக இருந்ததா என்று கேட்டால் அவ்வளவாக தெரிவிக்கவில்லை என்று சொல்வேன். ஆனால் அதன் பிறகான வாழ்கையை கேட்டால் ஒன்றுமே புரியவில்லை என்ன நடக்கிறது என் வாழ்வில் என்று மட்டுமே பதில்.

அப்போது கொஞ்சம் மாறத் தொடங்கினேன். ஏதாவது பணியிடத்தில் உரசல் உண்டானால் என்னுடைய இடத்தை வரையரை செய்துவிட்டு நான் நகர்ந்துவிடுவேன். தொடர்ந்தால் வேலையை விட்டு மாறுவேன். ஆனால் ஏதாவது செய் ஏதாவது செய் என்கிற குரல் எனக்குள் கேட்டுக் கொண்டேயிருக்கும். ஆனால் என்ன செய்வது என்கிற தெளிவே கிடையாது. எனவே கண்ணை மூடிக் கொண்டு ஓடத் தொடங்கினேன். என் பார்வைக்கு கிடைக்கும் ஏதாவது ஒன்றில் என்னுடைய ஈடுபாடு இருந்தால் கற்றுக் கொள்ள முயற்சி செய்வேன். ஏன் எதற்கு என்கிற கேள்வி கிடையாது.

இப்படித்தான் என்னுடைய பதினெட்டாவது வயதில் ஒரு சிறிய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் சேர்ந்தேன். எத்தனையோ ஏமாற்றங்கள் தாண்டியும் போலியான மனிதர்களை கடந்து வந்தும் ஒரு வேலை கிடைத்தது. என்னால் தலையும் புரியாமல் காலும் புரியாமல் கற்றுக் கொள்ளப்பட்ட பைத்தான் நிரலாக்கம் போன்றவையும் வேறு சில விஷயங்களும் பிபிஓ அனுபவமும் உதவி செய்தது. ஆனாலும் கற்றுக் கொண்டே இருக்கவேண்டும் என்கிற கட்டாயத்தையும் வேலை உருவாக்கியிருந்தது. எனக்காக நிறுவனர் கடைநிலை ஊழியரிலும் சற்றே அதிகமான சம்பளத்தை தந்தார். எப்படியோ காரணமாக இதுவே ஆக சில மாதங்களில் ஒரு உரசல். என்ன தமிழனுக்கு எர்ணாகுளம் போனாலும் தமிழனே வந்து முட்டுகிறான். எட்டாவதெங்கே பீடெக் எங்கே. ஆனால் நான் கவனமாக பெரிய பிரச்சனையை தவிர்க்க முயன்றேன். அதே குழுவுக்கு என்னை பொறுப்பாக்கவும் பிரச்சனை பெரியதாக மாறியது. ஆனால் எனக்கு பொறுப்பெல்லாம் வேண்டாம் அமைதியாக வேலை செய்ய விடுங்கள் என்று விலகினேன்.

ஆனால் இத்தனைக்கும் நடுவில் காலையில் அலுவலகம் சீக்கிரம் சென்றமர்ந்து அலுவல் ரீதியானவற்றை படிப்பேன். எதையாவது. இதைத்தான் படிக்க வேண்டும் என்கிற தெளிவு உருவாகாத காலம். ஆனால் எதை படிக்கவேண்டும் என்கிற தெளிவு விரைவில் வந்துவிட்டது. அதே நேரம் நான் இருந்த குழுவின் தேவையும் முடிந்தது. ஆனால் வீட்டுக்கு அனுப்பப்பட்டவர்களில் நான் கிடையாது. அங்கிருந்து உண்மையாக நிறுவனத்தின் குழுவுக்குள் வந்தேன். எனக்கு பயிற்சியில் எந்தவிதமான சலுகையும் காட்டப்படவில்லை. ஒருவேளை எது என்னை கடினமான பயிற்சிகளால் இரவெல்லாம் அலுவலகத்தில் கண்விழித்து முடிக்க முயலும்போது கருணை காட்டுங்கள் என்று கேட்க விடவில்லையோ அதே சமயம் ஓடவும் விடவில்லையோ அதை ஈகோ என்று சொல்லலாமா? ஆனால் அதே ஈகோ நான் போட்டியிட வேண்டியது என்னுடன் மட்டுமே என்று சொல்லி இப்போதெல்லாம் மற்றவர்களிடமிருந்து உரசாமல் விலகிச் செல்ல வைக்கிறதே? ஒருவேளை என்னை மீண்டும் மீண்டும் சிறுமை செய்யவும் என் மீது பொறாமையும் கொண்டவர்கள் அத்தனை பேரும் இத்தனை வருடங்களும் எப்படி இருக்கிறார்கள் என்று பார்ப்பதால் வரும் தெளிவா? இன்றைக்கு அதே நிறுவனத்தில் என் கனவிலும் நான் நினைத்திருக்காத தொகையை மாதம் தோறும் வாங்கத் தொடங்கியிருக்கிறேன். ஆனால் அவ்வப்போது வந்து உரசும் அதே ஆளிடமிருந்து சிரித்தபடி விலகுகிறேன்.

இந்த அலுவல் வருடத்தில் சம்பளம் உயர்ந்ததும் பயம். அதற்கு முன்னரே என்னை அழைத்து நிறுவனர் கேட்டார். ஆனால் வேண்டாம் என்றேன். ஏதாவது சாக்கு சொல்ல வேண்டுமே? எனக்கு படிப்பதற்கான நேரத்தை இழப்பேனோ என்று பயம் என்றேன். இப்போதே இளங்கலை சேர்ந்திருப்பதையும் சொன்னேன். உனக்கு இளங்களை படிப்பு தரப்போவது என்ன என்று கேட்டார். தெரியவில்லை என்று சொன்னேன். நீ எட்டு மணிநேரம் வேலை செய், போதும். உனக்கு உதவிக்கு ஆட்கள் தருகிறேன். ஆனால் பொறுப்பு மொத்தமும் உன்னுடையதாக இருக்க வேண்டும் என்றார். எனவே சரி என்றேன். போகப்போக தெரிந்தது ஒரு மேம்படுத்துவோனாக இருப்பதைக் காட்டிலும் மேலே பொறுப்பில் இருந்தால் பணிச்சுமை குறைவு என்பது. மேலும் என் குழுவில் பொறாக்குடுக்கை எதுவும் இல்லை.

இதையெல்லாம் ஏன் எழுதுகிறேன்? என் வாழ்கை இதுவா என்று கேட்டால் இல்லவேயில்லை. எப்போதும் இவை இல்லை என் வாழ்கை என்று தெளிவாக இருக்கிறேன். நான் சந்தோஷ் எலக்ட்ரிகல்ஸில் வேலை செய்யும்போதும் சரி இன்று பத்துக்கும் மேற்பட்ட பணிகள் தாண்டிவந்து இங்கிருக்கும்போதும் சரி. எப்போதும் மணியடித்ததும் வீட்டுக்கு ஓடும் பள்ளி மாணவனைப் போலவே இருக்கிறேன். வேலையிலிருந்து சொல்லாமலும்கூட விடுப்புகள் எடுத்து நூலகங்களில் உட்கார்ந்திருக்கிறேன். ஏனெனில் இலக்கியம் படிக்கவும் மொத்தமாக படிக்கவுமான நேரத்திற்காகவே நான் வேலை செய்கிறேன். ஆனால் வேலை செய்யாதபோது அந்த நிலை உண்டாக்கும் சிக்கல்களில் என்னால் எதையுமே செய்ய முடியாது போகும் என்று தெரிந்தே இருக்கிறேன். இப்போது வரைக்கும் பாட்டியும் மாமாவும் இருக்கிறார்கள். ஆனால் பாட்டி இல்லாமல் போகும்போது நான் தனியன் என்கிற உண்மையும் இருக்கிறது. இப்போதே என்னை தனிமை விரட்டாத நாள் கிடையாது. ஆனால் யாரிடமும் சொல்லியழவும் முடியவில்லை. என் அம்மாவின் வைராக்கியத்தின் ஒரு பங்கு கூடவே என்னுடைய ஈகோ. எவரிடமாவது நான் உதவிக்கு போய் நின்றே பல வருடங்கள் ஆகிறது. அழுதும். என் தம்பிக்கு எப்படியாவது ஒரு நல்ல வாழ்கை அமைத்துத் தரவேண்டும் என்கிற பொறுப்பில் இருக்கிறேன். எந்தக் கடனும் இல்லாவிட்டாலும் அப்பாவையும் பார்த்துக் கொள்கிறேன், ஏனெனில் அவர் உண்மையில், பிரமநாயகம் பிள்ளை. மேலும் பாட்டி இருக்கிறார்.

அய்யோ நிச்சயமாக இவற்றையெல்லாம் புலம்பச் சொல்லவில்லை. இதுவே என் மனதுக்குள் இருக்கிற குழப்பங்களை கொட்டும் முயற்சியாக எழுதப்பட்டு எங்கெங்கோ போகிறது. ஆனால் நான் இத்தனைக்குப் பிறகும் என்னால் முழுமையாக இலக்கியத்தில் மட்டும் செயல்பட முடியவில்லையே என்கிற குற்றவுணர்வுடன் இருக்கிறேன் என்கிற காரணமும் கடிதத்தை இழுத்துக் கொண்டு போகிறது. தேவையில்லாமல் மூன்று குதிரைகள் ஓட்டத் தலைப்பட்டேனோ என்று தோன்றுகிறது. இன்னும் சில நாட்களில் முதலாமாண்டுத் தேர்வுகள் தொடங்கும் இளங்களை பொது நிர்வாகம், இலக்கியம் வாசிப்பதும் எழுதுவதும்,  ஏற்கெனவே அலுவல் ரீதியாக படிக்க வேண்டியவை. இதே வரிசையில் இப்போது செயல்படுகிறேன். இந்த நொடியிலும் இளங்கலைப் படிப்பை விட்டுவிடலாமா என்று யோசிக்கிறேன். ஆனால் எத்தனையோ வருடங்களுக்கு முன்னர் படிக்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தேன். இத்தனை தூரம் கடந்தும் வந்திருக்கிறேன்.  சொல்லப்போனால் அலுவல் ரீதியான படிப்பை நிறுத்தியே வைத்திருக்கிறேன். இங்கே ஒப்புக் கொள்வதில் என்ன, தகவல் அறிவியலையும் பொது நிர்வாகத்தையும் இணைக்கிற வேலைகளுக்கு வருங்காலத்தில் நகரும் திட்டத்தோடே இதையெல்லாம் செய்கிறேன். இப்போது இருக்கிற நிறுவனமும் பணியும் என்னை அதற்கானவற்றை படிக்க உதவும்படியானது. எல்லாம் விதியால் விபத்தாக நடப்பவையே தவிர நான் ஆசைப்படுவதும் தொடர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக படிப்பதும் தவிர ஒன்றும் செய்யவில்லை. ஆனால் எனக்கு பணிபுரியவும் மேலே வரவும் தகுதியிருந்தாலும் இன்னும் அல்ஜீப்ராவும் கற்றுத் தெளியவில்லை. இலக்கியத்திலும் தான் என்பது தெளிவு.

எனக்கு என்னை வேதனையில் உழல்பவனாக கற்பனை செய்துகொள்வதிலும் அப்படி உழல்வதிலும் சந்தோஷமடைகிறேனா என்று கேட்டுக் கொள்கிறேன். சில நேரம் இந்த மொத்த சமூகத்துக்கும் எதிராகச் செல்லும் மனதை கவனமாக கட்டுப்படுத்திக் கொண்டிருக்கிறேன். எனக்கு எழுதவேண்டும். என்னுடைய கடைசி காலம் வரைக்கும். அதற்காக வாழவும் வேண்டும். ஆனால். இந்த முழுநேர எழுத்துப்பணி எனக்கு வாய்க்குமா தெரியாது அப்படியே வாய்த்தாலும் எனக்கு உழைக்கவும் வேண்டும். என்னுடைய சகோதரர்களுக்காக. அதற்காக இன்னும் நிறைய தூரம் பயணிக்கவும் முன்னதாக கற்கவும் வேண்டியிருக்கிறது. ஒருவேளை நான் முட்டாள்தனமாக முட்டி மோதிக் கொண்டிருக்கிறேனா என்று கேட்டால் இல்லை என்று நம்புகிறேன். ஒவ்வொரு நாளும் என்னோடுதான் மோதிக் கொண்டிருக்கிறேன். சிறந்தவற்றை அடையாளம் கண்டு ஆக்கப்பூர்வமாக போட்டியிடலாமோ என்னவோ? ஆனால் இப்போது நான் வெறுங்கையோடு போருக்குப் போவதைப் போலத்தான். என்னுடைய ஆயுதங்கள் தயாராக இன்னும் சற்று அவகாசம் வேண்டும்? ஆகவே முதல் தேர்வுக்கு நன்றி.

பேரன்புடன்,

நாகப்பிரகாஷ்

***

அன்புள்ள நாகப்பிரகாஷ்,

சரியானதைத்தான் கற்றுக்கொண்டிருக்கிறீர்கள். தேவையற்ற இடத்தில் ஆணவம் காட்டமலிருப்பதும், தேவையற்ற நபர்களுடன் உரசாமலிருப்பதும்தான் நம்மை காத்துக்கொள்வதற்கு அவசியமானது. எங்கும் எப்போதும் ஆணவத்துடன் இருப்பது ஆணவமே அல்ல, வெறும் சண்டைக்கோழித்தனம். அது பாதுகாப்பின்மை, தாழ்வுணர்ச்சியிலிருந்து எழுவது

என் அலுவலகத்தில் மிகத்தணிந்தவனாக, எவராலும் கவனிக்கப்படாதவனாகவே நான் நெடுங்காலம் இருந்தேன். பின்னரும்கூட நான் காட்டவிரும்பிய அளவுக்கே என்னைக் காட்டினேன். நான் வெளிப்படவேண்டிய களம் ஒன்றைக் கண்டுகொண்டேன். அங்கு மட்டுமே ஆணவத்துடன் இருந்தேன், அது எழுத்தாளனின் ஆணவம் மட்டுமே.

ஜெ

முந்தைய கட்டுரைபேச்சும் பிரார்த்தனையும்- கடிதங்கள்
அடுத்த கட்டுரைஊமைச்செந்நாய்- ஒரு கடிதம்