விஷ்ணுபுரம் இலக்கிய விருது கடிதங்கள்

அன்புள்ள ஜெமோ,

//’ரொம்ப நிறைவா இருக்கு. இவ்ளவு கூட்டம் இவ்ளவு அருமையாக் கவனிக்கிற கூட்டம் பாத்து ரொம்ப நாளாச்சு’ என்றார். ‘விருது எல்லாத்தையும் விட இலக்கியம் வாசிக்க இவ்வளவு இளைஞர்கள் வந்து உக்காந்து நாளெல்லாம் பேசிட்டிருக்கிறதப் பாக்கப் பாக்க மகிழ்ச்சியா இருந்தது… அந்தக் காலத்திலே கல்யாணக் கச்சேரின்னு சொல்லுவாங்க. கல்யாணத்துக்கு வந்தவங்க அம்பதுபேரு நூறுபேரு ஹாலிலே உக்காந்து அரட்டை அடிப்பாங்க. ஒரே சிரிப்பும் கும்மாளமுமா இருக்கும். இப்ப அப்டி கல்யாணம் இல்லை… ஒரு கல்யாணக் கச்சேரியிலே இலக்கியவாதிகள் ஒண்ணு சேர்ந்தது மாதிரி இருந்தது…போறும் மனநிறைவா இருக்கு…’ என்றார்.//

ஐயா திரு. ஆ. மாதவன் வார்த்தைகளை வாசிக்கும்போது கன்ன எலும்புகள் இருக, கண்களில் ’விம்’ என அழுத்தமாகி நீர் கசியச்செய்த வரிகள்…. உங்களால் மட்டுமே இப்படி ஒரு படைப்பாளியை கவுரவப்படுத்த இயலும்.
நுரைத்துக்கொப்பளிக்கும் உற்சாகம். மேம்பட்ட இலக்கிய வாசகர்களின் கூடல். இலக்கியம், இலக்கிய கோட்பாடுகள், இலக்கிய விமரிசனம், இந்து ஞான தத்துவ யோக மரபுகள், வரலாறு, சமூக அரசியல், வாழ்வியல், உளவியல், உடல் மருத்துவம், திரைப்படம், நுட்பமான துல்லியமான மொழியியல் என்ற பரந்த தளத்தில் இயங்கும் ஆளுமையான உங்களிடமிருந்து ஐயாவைப்பற்றி ஒரு நூல்…. நவரத்தினங்கள் போன்ற இச்சிறப்பு அம்சங்கள் பொதித்து விஷ்ணுபுரம் விருதைத் தனித்துவமிக்க விருதாக்கியிருக்கிறீர்கள். மற்ற விருதுகளில் இந்த அம்சங்கள் சாத்தியமில்லை.

//’மாதவனின் கதைகளைச் சமீபத்தில் வாசித்தபின் நேற்றுமுன்தினம் திருவனந்தபுரம் திரைவிழாவுக்குச் சென்றபோது மாதவனின் சாலைத்தெருவுக்குச் சென்றேன். அந்த தெருவில் இருவர் படத்தின் சில காட்சிகளை பதிவுசெய்தது ஞாபகம் வந்தது. இப்போது அந்தத் தெருவின் வாழ்க்கையே தெரிய ஆரம்பித்தது’ என்றார் மணிரத்னம்.//

பொதுவாக பேசி முடித்தவுடன் எழுந்துசெல்லும் சில சிறப்பு விருந்தினர்களுக்கு மத்தியில், திரு. மணிரத்தினம் விருது பெருபவரின் படைப்பை முழுவதுமாக வாசித்து படைப்புகளமான சாலைத்தெருவுக்குச் சென்றது மட்டுமில்லாமல் கிட்டத்தட்ட பனிரெண்டு மணிநேரம் விருதுநிகழ்ச்சிகளில் உற்சாகமாகப்பங்கெடுப்பது என்பது விருதுபெறுபவருக்கு அளிக்கப்பட்ட மிகப்பெரிய கவுரம். அதுவும் திரு. மணிரத்தினம் இந்தியாவின் தலைசிறந்த படைப்பாளி. பேரும்புகழும் பெற்ற எளிய கண்ணியமான மனிதர். தமிழ்திரைப்படத்துறைக்கு இந்தியா மற்றும் உலக அளவில் கவுரவத்தை மதிப்பை ஏற்படுத்திக்கொடுத்தவர். மேலும் இசை, ஒளிப்பதிவு, கலை மற்றும் பல திரைப்படத்துறைகளில் தலைசிறந்த படைப்பாளிகளை இந்திய சினிமாவிற்கு உருவாக்கியவர்.

புவிஈர்ப்பு விசையை முறித்து செங்குத்தாக மேலெழும் உந்துகலம் செயற்கைகோளை விண்ணில் செலுத்துவது போல முதல் விஷ்ணுபுரம் விருது செலுத்தப்பட்டிருக்கிறது….ஜெமோ என்ற உந்துகலன் மூலம்.

கதிரேசன், ஒமன்.

அன்புள்ள கதிர்

நன்றி.

உண்மையில் மனநிறைவளிக்கும் ஒரு நிகழ்வு. செய்யவேண்டியதைச் செய்திருக்கிறோம் என்ற எண்ணம் அளிக்கும் நிறைவு அது

நன்றி, உங்கள் பங்களிப்புக்கும்

ஜெ

அன்புள்ள ஜெயமோகன் சார்

விஷ்ணுபுரம் விருது விழா கட்டுரை பார்த்தபோது மிகவும் ஏக்கமாக இருந்தது. பணிச் சுமையும் சமூகச் சுழலும் வாழ்க்கையில் நல்ல சந்தர்ப்பங்களை அனுபவிக்க விடாமல் செய்து விடுகின்றன. தாயிடம் இருந்து பிரிக்கப்  படும் குட்டியானையின் மனநிலை என்னுடைய மனநிலை போல்தான் இருக்குமோ? விருது பற்றிய கட்டுரைகளும் மாதவன் ஐயா பற்றிய கட்டுரைகளும் மிகபெரிய மனகிளர்சியை அளித்தது (ஏக்கத்தையும் தான்).

அன்புடன்
பார்த்திபன்

அன்புள்ள பார்த்திபன்

பரவாயில்லை.வரும் மூன்றாம் தேதி நாஞ்சில்நாடனுக்கு சென்னையில் விழா. அங்கே சந்திப்போம்

நமக்குத்தான் கௌரவிக்க எத்தனை முன்னோடிகள்!

ஜெ

மதிப்பிற்குரிய ஜெ அவர்களுக்கு,

வணக்கம். நான் ஆனந்தராஜா. முன்பு ஒருமுறை “கொட்டாரம்” (என் சொந்த ஊர்) என இணையத்தில் தேடிய போது உங்கள் “அறிமுகம்” பக்கம் பார்க்க நேர்ந்ததிலிருந்து அடிக்கடி உங்கள் பதிவுகள் பார்ப்பதுண்டு. உங்கள் எழுத்தை புத்தகம் மூலம் அறிய வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் தொடர்ந்து உங்கள் பதிவுகளில் ருசிக்க முடிந்தது. இவ்வளவு பெரிய எழுத்தாளர், இணையத்திலும் இவ்வளவு active ஆக தொடர்ந்து எழுத முடிவது நினைத்தும் ஆச்சர்யமடைந்ததுமுண்டு. சமீபத்திய ஸ்பெக்ட்ரம் பற்றிய செய்திகளைப் பார்த்தபோது கூட பழைய “வசைமொழி” விஷயங்களை நினைக்கத் தோன்றியது.

ஆ.மாதவன் பற்றி முன்பெல்லாம் கூறியிருந்தும் உங்களுக்குள் இவ்வளவு நெருக்கம் உண்டு எனத் தெரிந்ததில்லை. நான்கு நாட்களுக்கு முன் நான் இருக்கும் கத்தாரிலிருந்து (Qatar), வீட்டிற்கு பேசியபோது தான் மாதவ மாமா ஏதோ விருது விழாவிற்காக கோவை போயிருப்பதாய் அறிந்தேன். (ஆம், ஆ.மாதவன் எனக்கு தாய்மாமா.) உடனே இணையத்தில் தேடினால் What a surprise, I landed to your page! விஷ்ணுபுரம் விருது விழா செய்தி, முகப்பிலேயே இருந்தது. அதைத் தொடர்ந்து ஆ.மாதவன் விருது அழைப்பிதழ், ஆ.மாதவன் பேட்டி, ஆ.மாதவன் கட்டுரை எல்லாவற்றையும் பார்க்க முடிந்தது. மூன்று நாட்களாக தொடர்ந்து பார்த்ததில் விழா முடிந்த எல்லா செய்திகளுடன் சிரில் அலெக்ஸ்-ன் பிக்காசா link வரை எல்லாம் பார்க்கக் கிடைத்ததில் ரொம்ப personalized –ஆக படித்து / பார்த்து மகிழ்ந்தேன். மாமா ஊர் போய் சேரும்முன் photos பார்த்த செய்தியை ஊருக்கு பகிர முடிந்தது. எல்லாவற்றிற்கும் நன்றி சொல்லவே இந்த கடிதம்.

“தமிழ்ச்சிறுகதை வரலாற்றில் ஆ.மாதவனுக்கு முக்கியமான இடம் உண்டு என்பது எல்லா திறனாய்வாளர்களாலும் ஏற்கப்பட்ட ஒன்று. இன்றுவரை ஆ.மாதவனுக்கு எந்த குறிப்பிடத்தக்க விருதும் அங்கீகாரமும் கிடைத்ததில்லை. விஷ்ணுபுரம் இலக்கிய விருது அவர் பெறப்போகும் அங்கீகாரங்களுக்கு தொடக்கமாக அமையட்டும்.” நீங்கள் சொல்லியிருப்பது போல் இந்த விருது நல்ல உற்சாகப்படுத்துவதாய் மாமாவிற்கு அமையும் என நம்புகிறேன். உங்களின் “கடைத்தெருவின் கலைஞன்” படிக்க ஆர்வமாயிருக்கிறேன்.

நல்ல படைப்பாளிகளை மீண்டும் மீண்டும் உங்கள் வழிகாட்டுதலில் அடையாளம் காட்டும் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் பணி மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள். இதற்கு உழைக்கும் எல்லோரிடமும் வாழ்த்துக்களைத் தெரிவியுங்கள்.

என்றும் அன்புடன்,

ஆனந்தராஜா.

அன்புள்ள ஆனந்தராஜா

ஆ.மாதவனின் மருமகனிடம் பேசுவதில் மகிழ்ச்சி. நேற்றும் மாதவனிடம் பேசினேன். உற்சாகமாக இருக்கிறார். யோசித்து காலம் தாழ்த்தாமல் இந்த விருதை அளிக்க நேர்ந்ததை பற்றி அபாரமான மகிழ்ச்சி ஏற்பட்டது அவரிடம் பேசியபோது.

ஜெ

அன்புள்ள ஜெயமோகன்,

ஆ. மாதவன் விழா பற்றிய பதிவைப் படிக்கும்போது நெகிழ்வாக இருந்தது. நல்ல எழுத்தாளனுக்கு அங்கீகாரம் கிடைப்பதில் இத்தனை தாமதமா என்று கோபமும் வருகிறது. இதை ஏற்பாடு செய்த உங்களுக்கும், விஷ்ணுபுரம் வாசகர் குழுவுக்கும் வாழ்த்துக்கள்!

அன்புடன் ஆர்வி

பின்குறிப்பு: லா.ச.ரா.வின் குழம்பு கதையைப் பற்றி எழுதி இருந்தீர்கள்.
தவசத்துக்கு செய்த குழம்பை சுண்ட வைத்து சுண்ட வைத்து அது கெட்டுப்போகும் வரை சாப்பிட்டு இறந்துபோனது லா.ச.ரா.வின் அப்பா சப்தரிஷியின் அத்தை ஸ்ரீமதி என்று நினைவு. (பாற்கடல் என்ற புத்தகத்தில் படித்தது)

ஆர்வி

முந்தைய கட்டுரைராஜராஜசோழன் ஆவணப்படம்
அடுத்த கட்டுரைஈசன், ஒரு குத்துப்பாட்டு