ஊமைச்செந்நாய்- ஒரு கடிதம்

oomai

ஊமைச்செந்நாய்– 1

ஊமைச்செந்நாய் -2

ஊமைச்செந்நாய் -3

கடலுக்கு மீன் பிடிக்கச் செல்பவனுக்குக் கூட ,  முடியாத நாள் என்று புயலடிக்கும்  நாள் என்று ஒன்று உண்டு.  எனக்கோ எந்த மருந்துக்கும்  கேட்காத ஆஸ்டின் அலர்ஜியின் பாதிப்பில்  தும்மிக்கொண்டே இருக்கும்  நாட்களிலும்,  ஜெயமோகன்   எழுத்துக்களைப் படிக்காமல்  இருக்கமுடிவதில்லை. ஏதோ  ஒருகாரணத்தினால்,  ஊமைச்செந்நாய்  எனும்  கதை மட்டும் படிப்பதிலிருந்து  நழுவிக்கொண்டே இருந்தது.  கடந்த வியாழன் மாலை,  உடற்பயிற்சி செய்யும்பொழுது,   பவா செல்லத்துரை யூடியூபில் (ஸ்ருதி டிவி)  இந்தக் கதையை சொல்வதைக் கேட்போம்  என்று கேட்டேன்.  கேட்டு முடித்தபிறகு,  கதைசொல்லும் ஆரம்பத்தில்  பவா சார் சொல்வதுபோல்  என்னை  அந்தக் கதை   உள்ளுக்குள் சென்று  குடைய ஆரம்பித்துவிட்டது . பவா சொன்னதற்குமேலும்,  கதையில் இருக்கும்  சித்தரிப்புக்களை,   நுணுக்கங்களை நானே நேரடியாக  வாசித்து அனுபவிக்காமல்  என்னால்  தூங்கமுடியாது.  உறங்குவதற்கு முன்இருக்கும்  வேலைகளை ஒதுக்கிவிட்டு,  ஊமைச்செந்நாய் கதை படித்தேன்.

 

வேட்டையாடும் வில்சன் துரை,  அவனிடம் சொற்கள் சொற்களாகப் பேசும்  ஊமைச்செந்நாய் என்னும்  வேட்டைத்துணைவன்.   அவர்கள் இருவரும்வேட்டைக்கு சென்று , கொம்பன்  என்னும்  யானையைக்  கொன்றார்களா ,  உயிருடன் திரும்பி வந்தார்களா என்ற எதிர்பார்ப்புடன் படபடக்க  கதையைப் படிக்கவில்லை. வெள்ளைக்காரத்  துரைகள்  எப்படி இருந்திருப்பார்கள்? அவர்களிடம் வேலை பார்ப்பவர்களை  அவர்கள் எப்படி நடத்தியிருப்பார்கள்?  பெண்களையம்உண்ணும் உணவையும் வேறு மாதிரி பார்த்தார்களா இல்லை  ஒரே மாதிரிதான் பார்த்தார்களா?  காட்டில் இருக்கும் யானை  எப்படி ஆகிருதியுடன்இருந்திருக்கும? பெரிய யானையின் பிண்டம் எப்படி இருந்திருக்கும்?  காட்டில் வேட்டைக்கு  ஓடுபவனின் உடம்பை நெடுநெடுவென வளர்ந்த புற்கள்கிழிக்காதா? வேட்டைக்கு  செல்பவர்களை  கண்ணாடிவிரியன்  பாம்பு கடித்துவிட்டால் என்ன இலை கொண்டு வைத்தியம்  பார்த்திருப்பார்கள்?  வேட்டையாடிய  மானை  எப்படி சுட்டுத் தின்பார்கள்?  என்பதை உயர்வரை காணொளியில்  எடுக்கப்பட்ட  படத்தைக் காண்பதுபோல், ஜெயமோகனின் எழுத்துக்கள் வாசிப்பவனின் கண்ணுக்கு ள் கொண்டுவரும்  அனுபவத்தை   உணர்வதற்காகப் படித்தேன்.

 

 

சமையலறையின் வராந்தாவில் அமர்ந்திருக்கும் ஊமைச்செந்நாய்  பார்க்கும் பழ உண்ணிக்கும்,  வெள்ளைக்காரத் துரைக்கும்  ஒரு வித்தியாசமும் இல்லை. சமையல்காரன் கொண்டு வந்து  வைத்த வான்கோழிகளை  பூனைக்கால்  கரண்டியால் குத்தி தின்பதை போலத்தான், சேவப்பெண்ணின் மூச்சுத்திணற, அவளை தனது இச்சைக்கு ஆளாக்குகிறான்.  அவள் ‘என்ற தேவே என்ற தேவே’  என்று கரைந்தது, என் காதில் ஏற்கனவே  இரைந்துகொண்டிருக்கும் கந்தர்வனின்  கதையில் படித்த அந்த நடுநிசி பஸ்ஸில், ‘நான் பத்தினிடா’ என்று அலறும்  பெண்ணின்  கதறலோடு  இணைந்து கொண்டது.   உறக்கத்தில்எனது செவிப்பறை கிழியாமல் இருந்தால் நல்லது.

 

ஊமைச்செந்நாய் அமைதியாக இருக்கக் கற்றுக்கொண்ட வேட்டைத்துணைவன். கேட்டதை வைத்து  ஆங்கிலம்  கற்றுக்கொண்டவன்.  சேவப்பெண் சோதிஇனக்குமுடன் இவனுக்குத் தன்னைக் கொடுக்கிறாள்.  ஊமைச்செந்நாயை  தெரிந்துகொள்ள  இது போதுமானது. ரணப்படுத்துவது என்னவோ  அவனதுபிறப்பு ரகசியம்.  நம்மை ஆண்ட  வெள்ளைக்காரன்  ஒரு குழந்தையைக் கூடவா அனாதையாக விடாமல்  விட்டுச் சென்றிருப்பான்?  வெள்ளைக்காரன் கண்களைக் கொண்டிருக்கும்  ஊமைச்செந்நாய் பற்றி துரை  அந்தக் கேள்வியை எழுப்பி ஒரு தீராத ரணத்தை  ஏற்படுத்திவிட்டான்.

 

தேவதேவன் கவிதை ஒன்றில், சிறகுகளை இழந்த  பறவை நீரில் மீனாகும். இங்கே புல்  அலையாமல்  செல்லும்  சிறுத்தை ,  மீன் நீருக்குள் செல்வதுபோல்இருக்கும் என்கிறார் ஜெயமோகன்.  அப்படி புற்கள் அலையாமல்  செல்லும்  ஊமைச்செந்நாய் , மானை ஈட்டி எறிந்து கொன்று, காட்டில் இருப்பதை வைத்துசமைத்து சாப்பிடுவது அலாதியானது. ஊமைச்செந்நாய்  மான் கறியை தீயில் நேரடியாக வாட்டவில்லை.  இவன் சரித்திரத்தில் அடுத்தகட்ட  நாகரிகமனிதன்  என்பதை  கையாளும்  பொருள்கள் , செயல்கள் மூலம் கதையின் காலத்தை,  ஜெயமோகன்  எப்பொழுதும் போல்  திறம்பட  கையாள்கிறார்.  கறிநன்றாக சூடுபட்டு  வேக களிமண்ணுக்குள்  வைக்கிறான். களிமண் கறிக்குள்  போகாமல்  இருக்க இடையில் தேக்கிலை வைக்கிறான்.

 

 

இதுவரை எனக்குள் ஒரு நிழல் வடிவமாக இருக்கும் வெள்ளைக்காரத் துரை கள், வீரபாண்டிய  கட்டபொம்மன்  படத்தில் ,  கைகளில் வெள்ளை உரைபோட்டுக்கொண்டு  பெரிய கிருதாவுடன் வரும்  ஜாக்சன் துரை,  சரித்திர  புத்தகத்தில்   கடவுச்சீட்டு புகைப்படத்தின் அளவு உள்ள ராபர்ட் கிளைவ்போன்றவர்கள்தான்.  இனிமேல் அழியாத  துன்புறுத்தும் சித்திரமாக எனக்குள் இருக்கப்போவது, குண்டடிபட்ட காலுடன் பாறை பிளக்கும் ஒலியுடன் பிளறியபடி  துரத்திய  கொம்பனின் முன் ஓடி ஓடி அவனைக் காப்பாற்றிய  ஊமைச்செந்நாயை, “நீ என்  நாய்,  நீ என்  நாய் “,   ” நீ ஒரு  மிருகம்  ” எனத்  திட்டிஅவனைத் துன்புறுத்திய,  உதடே இல்லாத, வயதான  கழுகின் அலகு போன்ற  மூக்குடைய,  சப்பிய முகம் கொண்ட, தேங்காய் நார் முடியுடன் கூடிய வில்சன்துரைதான்.

 

அடுத்தமுறை  காட்டுக்குச் சென்றால், யானை எதிரில் வந்தால், பயந்து ஓடாமல், அதன்  ஆகிருதியை  ரசித்துக் கொண்டே,  “ஜெயமோகனின் ஊமைச்செந்நாய் படித்தேன்.  அதில் கொம்பனைப் பற்றி,  பொறுமை  விளையாட்டில்   மிருகங்களை வெல்ல  எந்த மனிதனாலும் முடியாது என்றுசொல்வதோடு,  நீ வாழும்  காட்டைப் பற்றி  அழகாக  எழுதியிருப்பார்.   அதை விவரிக்கிறேன். பொறுமையுடன் கேள்”  என்று ஒரு விண்ணப்பம் வைப்பேன்.  யானை  பொறுமையாக நான் சொல்வதைக் கேட்டுவிட்டு, “தன்மானம் கொண்ட ஊமைச்செந்நாய்  கடைசியில்  என்ன செய்தான் என்று   ஜெயமோகன்உனக்கு சொன்னார்.     அந்த வில்ஸனுக்கு அப்புறம்  என்ன ஆனது என்று  என் முப்பாட்டன்  சொன்னதை,  நீ கேள்”, என்று எனக்கு  சொல்லலாம்.

– வ.சௌந்தரராஜன்

 ஊமைச்செந்நாய் –  தொகுப்பு -அமேசானில்

“ஊமைச்செந்நாய்”: தமிழில் ஒரு பின்-காலனியக் குரல்

ஊமைச்செந்நாய் -வாசகர் கடிதம்

ஊமைச்செந்நாய் – அ.முத்துலிங்கம் உரையாடல்

ஊமைச்செந்நாய்- ஒருகடிதம்

ஊமைச்செந்நாய் ஓர் எதிர்விமரிசனம்

மத்தகம்,ஊமைச்செந்நாய், கடிதங்கள்

ஊமைச்செந்நாய், கடிதங்கள் மீண்டும்

ஊமைச்செந்நாய், கடிதங்கள் இன்னும்

ஊமைச்செந்நாய்:மேலும் கடிதங்கள்

ஊமைச்செந்நாய்:கடிதங்கள்

 

முந்தைய கட்டுரைஆணவமும் எழுத்தும்
அடுத்த கட்டுரைஆடம்பர கைப்பைகளின் வாழ்க்கை