வேட்கை கொண்டபெண் -கடிதங்கள்

 

amm

வேட்கைகொண்ட பெண்

 

ஜெ

 

வேட்கை கொண்ட பெண்ணில்…

 

‘அதன்பின்னர் அது பக்தியாக, உருவகமாக ஆகி இலக்கியத்தில் பேசப்பட்டது- ஆண்டாள், ஜெயதேவர் போல.’

 

என வாசித்து முடிக்கும்போது கவிதா முரளிதரன் மொழிபெயர்த்த அக்க மகாதேவியின் இந்த கவிதை ஏனோ நினைவு வந்தது. நீங்களும் வாசித்திருக்கக்கூடும்.

 

 

அது லிங்கம் என்று நான் சொல்லவில்லை

அது லிங்கத்துடனான இணைதல் என்று நான் சொல்லவில்லை

அது ஒற்றுமை என்று சொல்லவில்லை

அது இசைவு என்று சொல்லவில்லை.

அது நிகழ்ந்துவிட்டது என்று நான் சொல்லவில்லை.

அது நிகழவில்லை என்றும் சொல்லவில்லை.

அது நீ என்று சொல்லவில்லை.

அது நான் என்றும் சொல்லவில்லை.

சென்ன மல்லிகார்ஜுனாவின்

லிங்கத்துடன் இணைந்த பிறகு

நான் எதுவும் சொல்லவில்லை.

 

மங்கை

 

அன்புள்ள ஜெ

 

வேட்கை கொண்ட பெண் முக்கியமான கட்டுரை. இது ஒரு தொடர் என எனக்கு இப்போதுதான் புரிந்தது. பாரதியில் தொடங்கி தமிழிலக்கியத்தில் பெண்களைப்பற்றி என்னென்ன சொல்லப்பட்டிருக்கிறது, எப்படியெல்லாம் அந்த உருவகம் மாறிக்கொண்டே வந்திருக்கிறது என்பதை பல படிகளாகச் சொல்லிக்கொண்டே வருகிறீர்கள். அந்த வரிசையில் வைத்துப்பார்த்தால்தான் இக்கட்டுரை முழுமையாகப் புரிகிறது. அம்மா வந்தாள் நாவலை அல்ல, அதில் பெண்ணின் வேட்கைக்கு கொடுக்கப்பட்டிருக்கும் இடத்தைத்தான் சுட்டிக்காட்டுகிறீர்கள்

 

அதோடு ஆய்வு என்ற பேரில் நூலை பிரித்து அக்கக்காக கழட்டி வீசாமல் சொல்லவேண்டிய அளவே சொல்லி வாசகர்களே மேலே யோசிக்கும்படி விட்டுவிட்டு விலகும் அந்த அடக்கமான விமர்சனப்பார்வை முக்கியமான விஷயம். இதைத்தான் விமர்சகர்கள் படைப்பாளிகள் எழுதும் விமர்சனங்களில் இருந்து கற்றுக்கொள்ளவேண்டும்

 

மகேஷ்

முந்தைய கட்டுரைகம்பன் உரை -கடிதங்கள்
அடுத்த கட்டுரைவனக்காட்சி – சுபஸ்ரீ