கம்பன்,அரிக்கமேடு,பாண்டிச்சேரி
அன்புள்ள ஆசிரியருக்கு,
கம்பன் கழகத்தில் ஆற்றப்பட்டது ஒரு அற்புதமான உரை.கம்பனை அறிய சில புதிய சாளரங்களைத் திறந்தது.உரையை ஆர்வத்துடனும்,கவனத்துடனும் கேட்க வைக்கவும் உரை முடிந்ததும் நீண்ட காலம் நினைவில் சுழல வைக்கவும் உரையின் தொடக்கத்திலும் முடிவிலும் நீங்கள் போடும் முத்திரைகள் இந்த உரையிலும் சிறப்பாக அமைந்தன.பழக்கம் என்ற போதையின் அடிமைகளுக்கு சற்று சிரமமாக இருந்தாலும்
இப்படியெல்லாம் கூட புதிய கோணங்களில் கம்பனை ரசிக்க முடியும் என்பது அவர்களுக்கும் திறப்பாக இருந்திருக்கும்.ஆலமர,பனைமர வேர்கள்,இலக்கணம் சுமக்காத வாசிப்பு, flow of water through proper channel ,காவியப் பண்புகள் எல்லாமே
முப்பது மணி நேரப் பேச்சாக விரிக்கத் தக்கவை.நன்றி.
சாந்தமூர்த்தி,
மன்னார்குடி.
ஜெ
கம்பன் கழக உரை சிறப்பாக இருந்தது. சிறப்பாக இருக்கும் என்றே எதிர்பர்த்தும் இருந்தேன். கம்பனின் காவிய இயல் பற்றிய அறிமுகம் கம்பனின் சுவைமீதான அறிமுகம் என இரண்டு பகுதிகளாக சரிசமமாகப் பகுக்கப்பட்டிருந்தது. கம்பனை வாசிக்கும் இன்றைய வாசகர்களுக்குரிய பெரிய பிரச்சினையே கம்பனின் மிகையை எப்படி அணுகுவது என்பதுதான். மிகையை சுவைப்பதற்கான மனநிலையை எப்படி உருவாக்கிக்கொள்வது என்ற கேள்விதான் முக்கியமானது. அந்த மிகையை வரலாற்றிலும் கலைவரலாற்றிலும் நம்மூர் இயற்கையிலும் வைத்து விளக்கிய விதம் ஆழமானது.
கம்பநாடகம் கம்பசித்திரம் என கம்பனைப்பிரித்து கம்பசித்திரங்களை அணுகி சுவைக்கவேண்டிய விதத்தையும் அருமையாக விளக்கியிருந்தீர்கள். வழக்கமான உரைகளுக்குரிய குரலும் தோரணையும் இல்லைதான். ஆனால் ஆத்மார்த்தமான உணர்ச்சிகள் தெரிந்தன. ஆகவே உரை மிக அணுக்கமானதாக இருந்தது
எஸ். மாதவன்
அன்புள்ள ஜெ
கம்பன் உரை சிறப்பு. நினைத்ததுபோலவே கேட்டு முடிக்கையில் நாலைந்து மணிநேர வகுப்பு கேட்ட உணர்வு. கொஞ்சம் கொஞ்சமாக விரித்துத்தான் பொருள்கொள்ளவேண்டும்
காவியங்களை தொடக்கநிலை காவியங்கள் வளர்ச்சிநிலை காவியங்கள் என்று பிரிப்பது மேற்கிலும் வழக்கம்தான். டி.எஸ்.எலியட், கூல்ரிட்ஜ் இருவரும் அதைச் சொல்லியிருக்கிறார்கள் என நினைக்கிறேன். ஹோமர் நீண்ட பாடல்தான் எழுதியிருக்கிறார். அது காவியத்தின் தொடக்கம். மேற்கத்திய காவிய இயல் முழுவளர்ச்சி அடைவது விர்ஜிலுக்குப்பின்புதான் என எலியட் சொல்கிறார். இரண்டும் இரண்டு வளர்ச்சிப்படிநிலைகளைச் சார்ந்தவை என்கிறார். விர்ஜிலைத்தான் உண்மையான காவிய ஆசிரியன் என்கிறார்
தட்சிணாமூர்த்தி
கம்பன்,அரிக்கமேடு,பாண்டிச்சேரி