வா மணிகண்டன் -கடிதங்கள்

aa

வா.மணிகண்டன் – களப்பணியாளருடன் ஒரு பேட்டி

 

அன்பு ஜெயமோகன்,

 

 

வணக்கம். தங்களுக்குக் கடிதம் எழுதி நெடுநாட்களாகின்றன. வீட்டில் அனைவரின் நலத்தையும்(அருண்மொழி அக்கா, அஜிதன் மற்றும் சைதன்யா) விசாரித்ததாகக் கூறவும்.

 

 

வா.மணிகண்டனுடன் கிருஷ்ணன் உள்ளிட்ட நண்பர்கள் கலந்துரையாடியதை மிக அவசியமான ஒன்றாகவே நான் பார்க்கிறேன். தனிமனிதனாக வா.மணிகண்டன் மேற்கொள்ளும் பணிகளை அருகிலிருந்து பார்த்தவன்(பார்த்துக் கொண்டும் இருப்பவன்) எனும் வகையில், அவரை வியப்பவன் நான். கடந்த பத்தாண்டுகளில், தனி ஒரு மனிதனாக அவர் முன்னெடுத்த சமூகச் செயல்பாடுகள் மிகச்சிறப்பானவை; போற்றுதலுக்குரியவை.

 

 

கோபிசெட்டிபாளையம் வைரவிழா மேல்நிலைப்பள்ளியில் படித்த காலத்தில் என்னுடைய இளவல் அவர். அன்றிலிருந்து இன்றுவரை, அதிகம் நான் அவருடன் உரையாடியது இல்லை. நிசப்தம் வழியாக மட்டுமே அவரை நான் அறிவேன். கடந்த வருடம், ஒரு அரிசனக் காலனிக்கு அவருடன் சென்றிருந்தேன். ஞாயிற்றுக்கிழமை ஒன்றின் காலை நேரம் அது. கோபிபாளையம் பள்ளித்தலைமையாசிரியர் தாமஸ் என்பவரும், மணியும் அழைத்ததன் பேரில் நானும் நண்பரும் சென்றிருந்தோம். அக்காலனியில் ஒருவரைப் போன்றே மணியை அம்மக்கள் பார்த்தனர். பல சிறுவர்கள் அவரைச் சூழ்ந்து கொண்டு தங்கள் செயல்பாடுகளை உற்சாகமாகப் பகிர்ந்து கொண்டனர். ஒரு மணிநேரத்துக்கு மேல் அங்கிருந்தோம். அப்பகுதி மாணவர்களின் ஆதர்சமாகவே மணி இருப்பதாக எனக்குத் தோன்றியது; களச்செயல்பாட்டில் நான் கண்ட மணியே எனக்கு மிக நெருக்கமாகப் படுகிறார்.

 

 

எங்கள் ஊர்க்காரர் ஒருவர் தன் மகனைப் படிக்க வைக்கச் சிரமப்பட்டபோது, மணியைப் பற்றி அவரிடம் சொன்னேன்; மணியின் தொடர்பு எண்ணையும் கொடுத்தேன். ”நேரடியாக அவரைத் தொடர்பு கொண்டு தகவலைச் சொல்லுங்கள். கூடவே, உங்கள் மகனை அழைத்துக் கொண்டு அவரைச் சந்தியுங்கள்” எனச் சொன்னேன். அவரும் தன் மகனுடன் மணியைச் சந்தித்தார்; மகனிடம் அரைமணி நேரத்துக்கும் மேலாக உரையாடிக் கொண்டிருந்து விட்டு அவர் மேற்படிப்புக்கான செலவில் ஒரு பகுதியைக் கொடுத்திருக்கிறார். ஊர்க்காரரைப் போல பலருக்கு மணியைப் பரிந்துரைத்திருக்கிறேன் என்றாலும், சிலருக்கே மணியின் நிசப்தம் உதவுகிறது. பயனாளிகள் தகுதிக்குரியவராக இருக்க வேண்டும் என்பதில் மெனக்கெடுகிறார் மணி. கூடவே, பரிந்துரைகளையோ மிரட்டல்களையோ மணி பொருட்படுத்துவதே இல்லை.

 

 

தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து கொண்டிருக்கும் மணி, பெரும்பாலான இரவு நேரங்களை வாசிப்புக்கும், நிசப்தம் தளக் கட்டுரைகளுக்கு ஒதுக்குவதாகச் சொல்கிறார்; விடுமுறை நாட்களை முழுக்க சமூகச் செயல்பாடுகளுக்காகவே பயன்படுத்திக் கொள்கிறார். குடும்பத்துக்காக எப்படி நேரம் ஒதுக்குகிறாரா என்பதை அவர்தான் சொல்ல வேண்டும். கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள் மற்றும் நாவல்கள் எழுதி இருப்பினும், அவை என்னை ஈர்த்ததில்லை. என்றாலும், அவற்றில் இருக்கும் எளிமையும் உண்மையும் நான் மிகவும் மதிக்கிறேன்.

 

 

மணி அகலக்கால் வைக்காமல், தன்னால் எது முடியுமோ, அதில் மட்டுமே கவனம் செலுத்துகிறார். அவரின் செயல்பாடுகளில் போலித்தன்மையையோ பாசாங்குகளையோ நான் இதுகாறும் கண்டதில்லை. சந்திக்கும் மனிதர்களிடம் எல்லாம் நிசப்தம் அறக்கட்டளைக்கான ஆலோசனைகளைத் தயங்காமல் கேட்பார்; பொருத்தமானதாக இருந்தால், உடனே அவற்றை நடைமுறைப்படுத்தியும் விடுவார்.

 

மணியை ஒருபோதும் இறுக்கமாக நான் கண்டதில்லை; நிசப்தமும் அப்படித்தான் என்பது என் தீர்மானம். மணியும், நிசப்தமும் நீடூழி வாழ உயிர் நிறைந்து வாழ்த்துகிறேன்.

உயிர் நலத்தை விரும்பும்,

சத்திவேல் ஆறுமுகம்,

கோபிசெட்டிபாளையம்

 

 

அன்புள்ள ஜெயமோகன்

 

வா மணிகண்டன் பற்றி முன்னரே எழுதியிருந்தீர்கள். இப்போது உங்கள் நண்பர்கள் எடுத்த இந்தப்பேட்டி அவரை முழுமையாக அடையாளம் காட்டுகிறது. முகநூலில் சொற்போர் செய்துகொண்டிருக்கும் இளைய தலைமுறையினர் நடுவே இப்படி களத்தில் பணியாற்றும் ஒருவர் போற்றுதலுக்குரியவர். சமூகத்தைப்பற்றி இவர் என்ன சொல்கிறார் என்பது மட்டுமே கவனத்திற்குரியது.

 

குன்றாத ஊக்கத்துடன் மணிகண்டன் தொடர்ந்து பணியாற்றவேண்டும் என வாழ்த்துகிறேன்

 

ஜெயராமன்

முந்தைய கட்டுரைவெண்முரசு சென்னை கலந்துரையாடல்
அடுத்த கட்டுரைகோவிந்தராஜ்