அன்புள்ள ஜெ நலம்தானே…
எண்ணற்ற தருணங்களில் எழுத எண்ணியும் எழுதவில்லை. இன்று உங்கள் 25 ஆண்டு கால நண்பர் மரு.கோவிந்தராஜூ அவர்கனள சந்தித்தது ஊக்கம் தந்தது.
5 ம் வகுப்பு வரை மட்டுமே படித்த போதும் தன் குன்றா ஊக்கத்தால் CBSE boardல் 7ஆண்டுகள் போராடி +2 முடித்துள்ளார். முன்பு இவருக்கு physics என்ற வார்த்தையை கூட எழுத தெரியாது. +2 physics புத்தகம் 1200 பக்கங்கள். தானாகவே படித்து வென்றிருக்கிறார். பின்னர் தன் ஒரே சொத்தான வீட்டினை விற்று கல்லூரியில் இணைந்து பட்டம் பெற்று 47 வது வயதில் ஓமியோ மருத்துவராய் மலர்ந்துள்ளார்.
உங்கள் தர்மபுரி நாட்கள் மற்றும் குரு நித்யா உடனான சந்திப்பு அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.நீங்கள் எத்தனையோ முறை எழுத்தில் பதிவு செய்ததுதான்எனினும் உடனிருந்தவர் வாயால் கேட்டது இந்நாளை இனிமையாக்கியது.
ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இயற்கை அங்காடி துறையில் ஈடுபட உள்ளேன்.உங்கள் வாழ்த்துக்களை வேண்டுகிறேன்.
எங்கள் மகன் போதி ஓராண்டு ஒன்பது மாதங்கள் .பேருந்து பயணத்தில் ஜன்னலோரம் அமர்ந்திருந்தோம் நிறுத்தம் வந்து இறங்கிய போது பேருந்து நோக்கி கை நீட்டி கத்தி எங்களை அடித்து அழுதான் மீண்டும் ஏறவேண்டுமென்று… நீங்கள் அடிக்கடி குறிப்பிடும் முகுந்த் நாகராஜனின் கவிதை கண் முன் தரிசனமாகியது.
மு.கதிர் முருகன்
அன்புள்ள கதிர்
நண்பர் கோவிந்தராஜ் விஷ்ணுபுரம் விழாவுக்கு வந்திருந்தார், அப்போது சந்தித்தேன். 1992 முதல் பழக்கம். அன்று மகஇக தொண்டர். பின்னர் மன ஓசையில் நிறைய எழுதினார். பசலை என்ற தொகுதி வெளிவந்தது. அதிலிருந்தும் வெளிவந்து அலைந்துகொண்டிருந்த நாளில் பழக்கம். எம்.கோபாலகிருஷ்ணன் வழியாகத்தான் நெருக்கமானோம். தொடர்ந்த நட்பும் அணுக்கமும் இருந்தது
சென்ற விஷ்ணுபுர விழாவில் நான் சந்தித்தபோது ஓமியோவில் பட்டம்பெறவிருப்பதாகச் சொன்னார். அவருடைய தீவிரம் ஏதேனும் துறையில் எப்போதும் வெளிப்பட்டபடியே இருப்பது. நண்பரின் வெற்றி மகிழ்ச்சி அளிக்கிறது மேலே உள்ள படம் 1992ல் எடுக்கப்பட்டது. நித்யாவின் மாணவரான சுவாமி பிரபுதத்தர் அப்போது கல்லட்டி என்னும் இடத்தில் அடர்காட்டுக்குள் ஒரு பங்களாவில் தனியாகத் தங்கியிருந்தார். நாங்கள் அங்கே சென்று தங்குவதுண்டு. அப்போது எடுத்தபடம்.சுவாமி பிரபுதத்தா கோவிந்தராஜ், நான், எம்.கோபாலகிருஷ்ணன், பாவண்ணன், க.மோகனரங்கன் ஆகியோர்.
இயற்கைப்பொருள் அங்காடி வெற்றிகரமாக நிகழட்டும், வாழ்த்துக்கள்
ஜெ