நாகர்கோயிலைப் பொறுத்தவரை புத்தாண்டு கிறிஸ்துமஸுடன் தொடங்கிவிடுகிறது. இருபத்துநான்காம்தேதி மாலையில் ஆரம்பமாகும் புத்தாண்டு மனநிலை அப்படியே ஜனவரி ஒன்றுவரை நீடிக்கும். நேற்று பெதஸ்தா காம்ப்ளெக்ஸ் அருகே சென்று ஆட்டோவுக்கு கைகாட்டியபோது எங்குமே வரமுடியாதென்று சொல்லிவிட்டார்கள். நாகர்கோயிலில் உள்ள அத்தனை கார்களும் சாலையில் ஓடமுயன்றன. மணிக்கு இருநூறு கிலோமீட்டர் வேகம் சாத்தியமான நவீன வண்டிகள், மணிக்கு இரண்டு கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்தாகவேண்டிய நிலமை.
வீட்டுக்குவந்தேன். அடுத்தவருடம் என்னென்ன செய்யலாமெனக் கணக்கிட்டேன். உடனடியாக படித்தேயாகவேண்டிய நூல்கள் மட்டும் நாற்பதுக்கும் மேல் எடுத்துவைத்திருக்கிறேன். சைதன்யா அவற்றை அள்ளிவந்து கம்ப்யூட்டரைச்சுற்றி அடுக்கி வைத்திருக்கிறாள். பீதியாக இருக்கிறது. அடுத்தவருடம் அசோகவனத்தை கண்டிப்பாக முடிப்பேன் என்று வசந்தகுமாரிடம் வாக்குறுதி கொடுத்திருக்கிறேன். அடுத்தவருடம் முக்கியமான பல பயணங்கள் திட்டமிட்டிருக்கிறோம்.
இத்தனையையும் செய்துவிட முடியும். அதற்கு இணையத்தின் நேரத்தை இன்னும் குறைத்தாகவேண்டும். என் இணையநேரத்தை ஒருநாளில் ஒரு மணிநேரத்துக்கு மேல் செல்லாதவாறு இப்போது வைத்திருக்கிறேன். கடந்த இரு வருடங்களாக என் இணையதளத்தில் தினமும் இரு வலையேர்றம். சிலசமயம் மூன்று. அவற்றை வாசிக்க ஒரு பெரிய சுற்றம் உலகமெங்கும் உள்ளது. அவர்களின் ஆர்வம் அளிக்கும் கட்டாயமே அதை எழுதச்செய்கிறது. இந்தத் தளம் வழியாகவே நான் என் எழுத்து வாழ்க்கையில் மிக அதிகமான வாசகர்களைப் பெற்றிருக்கிறேன்
ஆம், அதில் அதில் எனக்கு சில சலிப்புகளும் உண்டு. இணையதளத்தின் வருகையாளர் எண்ணிக்கை சட்டென்று உச்சத்துக்கு போனநாட்கள் [ உதாரணமாக நவம்பர் 2, நந்தலாலா கிக்குஜிரோ கட்டுரை] சினிமா சம்பந்தமான கட்டுரை வலையேற்றம் செய்யப்பட்டவையாக இருக்கும். இத்தனை தளங்களில் இத்தனை விஷயங்கள் வலையேற்றம் செய்யப்படும் இந்தத் தளத்துக்கு சினிமா சம்பந்தமான கட்டுரைகளை வாசிப்பதற்காக மட்டுமே வருபவர்களை இதற்குள் வரவே விடக்கூடாது என்றே நினைக்கிறேன். ஆகவேதான் தமிழ்சினிமா பற்றி எதையுமே எழுத தயங்குகிறேன்.
அதைப்போல இணைய வசைகள். அவற்றுக்கு பல நோக்கங்கள். அவற்றை நான் வாசிப்பதில்லை. தமிழில் நான் வாசிக்கும் இணையதளங்கள் ஒன்றிரண்டு மட்டுமே. வசைகளுக்காகவே வாசிக்கும் ஒரு பெரும் கும்பல் இணையத்தில் நிறைந்திருக்கிறது. அவர்களையும் தவிர்த்தாகவேண்டும்.
பேஸ்புக் , ஆர்க்குட், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் நான் உள்ளே ஒருமுறைகூட நுழைந்ததில்லை. என் கணிப்பொறி அவற்றை அனுமதிப்பதில்லை. சேவையளிப்பவர் ஏதோ தடை போட்டிருக்கிறார்.
சிலர் எனக்கு டிவிட்டரில் பங்கெடுக்கும்படி கோரி மின்னஞ்சல்கள் அனுப்புவதுண்டு. என் பெயரில் ஒரு டிவிட்டர் கணக்கு ஒரு நண்பரால் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் அதில் நான் உள்ளே செல்லமுடியாது. டிவிட்டருக்குள் செல்வதற்கு தேவையான நவீன செல்பேசி என்னிடம் இல்லை. நான், கீழே விழுந்தாலும் பரவாயில்லை என்ற ரக சாதாரண நோக்கியா வைத்திருப்பவன். மேலும் செல்பேசிக்குப் பணம்செலவிடக்கூடிய மனநிலை கொண்டவன் அல்ல.
பல நண்பர்கள் அவர்களின் பலவகையான நட்புக்கோரல் அழைப்புகளை எனக்கனுப்புகிறார்கள். அவற்றை அப்படியே நான் அழித்துவிடுகிறேன். மேலும் அப்படி ஒரு அழைப்பை அனுப்பிய நண்பரின் எண்ணும் என்னுடைய மின்னஞ்சல் சல்லடையால் தடுக்கப்பட்டுவிடும். பின்னர் அவர் எனக்கு எந்த மின்னஞ்சலும் அனுப்ப முடியாது. கிட்டத்த எழுநூறு மின்முகவரிகளையும் நாற்பத்தெட்டு சொற்களையும் முழுமையாகவே தடுத்திருக்கிறேன்.
இத்தனைக்கும்பின் நேரத்தை இழுத்துக்கொண்டிருப்பது இணையப்பதிவுகளே. தினம் ஒரு பதிவு என்பது பெரிய விஷயமல்ல. ஆனால் அவற்றுக்கு கவனம் தேவைப்படுகிறது. என்னால் போகிற போக்கில் எழுதித்தள்ள முடியாது. அதற்காக வாசிக்கவேண்டும், தகவல் சரிபார்க்கவேண்டும். நாவல் எழுதுவதென்றால் சில மாதங்களுக்காவது அதிலேயே ஆழ்ந்திருக்க வேண்டியிருக்கிறது. ஒருமாதம் நான் சுதந்திரமாக இருக்க முப்பது கட்டுரைகளை எழுதவேண்டும் என்ற நிலை.
ஆகவே இனிமேல் வாரம் இரு கட்டுரை என்ற முடிவுக்கு வந்திருக்கிறேன். திங்கள் கிழமையும் வியாழக்கிழமையும். மற்றநாட்களில் அறிவிப்புகளோ, சுட்டிகளோ, கடிதங்களோ இருந்தால் அளிக்கப்படும். எட்டு கட்டுரை என்னை ஒருமாதம் விடுதலையாக வைத்திருக்கும். இந்தவருடம் அசோகவனம் வெளிவர வேறு வழியே இல்லை.
நான் இரண்டு மாதம் எழுதாமலிருந்தபோது ஒன்றைக் கவனித்தேன். வாசக எண்ணிக்கை குறையவேயில்லை. பலர் பல கட்டுரைகளைத் தவறவிட்டு வாசித்துச் செல்கிறார்கள். இந்த இடைவெளிக்காலம் பலர் அவர்கள் வாசிக்காது விட்ட கட்டுரைகளை வாசிக்க உதவட்டும்.
தொடர்ந்து உரையாடலில் இருப்போம். இப்போது எனக்கும் அது இல்லாமல் முடியாதென ஆகிவிட்டிருக்கிறது.