காடு -கடிதம்

kadu2

 

அன்புள்ள ஜெ ,

 

காடு மீது எப்போதுமே காதலுண்டு எனக்கு . அதனாலோ என்னவோ என் குழந்தைக்கு  “ஆரண்யா” என்று பெயரிட்டேன் . என் தந்தையின் சொந்தகிராமம் வனங்களால் சூழ்ந்தது .என் சிறு பிராயத்தின் அழகான பிரயாணங்கள் காட்டு வழிப்பாதையிலே கடந்ததுண்டு .

 

உண்மையில் ஒரு தவம் போலவே “காடு “நாவலை படிக்கத்தொடங்கினேன். என் அப்பம்மா தன் சின்ன வயதில் ஏதேனும் புத்தகங்களை படிக்க ஆரம்பிக்கையில் பூஜை செய்து அக்கம்பக்கம் உள்ளோருக்கு நைவேத்தியம் கொடுத்து தான் படிக்கத்தொடங்குவார்களாம் . கிட்டத்தட்ட எனக்கும் அதே மனநிலை தான் . பார்க்கும் மனிதரிடமெல்லாம் “காடு “பற்றியே பேசினேன் .

 

5 நாட்கள்  புத்தகத்தை எடுத்தால் வைப்பது பெரும் கஷடமாக்கிற்று. அடுத்து என்ன அதிசயம் காட்டுக்குள்ளே என்பதை பற்றியே எண்ணம். காடு மற்ற நாவல்களைப்போல என்னால் எல்லா நேரத்திலும்  எல்லா இடத்திலும்  வாசிக்கப் பிடிக்கவில்லை.

 

எனக்கு தனிமை தேவைப்பட்டது, அகத்திலும் புறத்திலும் அமைதி தேவைப்பட்டது ,ஒவ்வொரு வரியும்  சொல்லும் எனக்குள் ஒரு கிளர்ச்சியை ஏற்படுத்திக்கொண்டு இருந்தது, மிக மிக நிதானமாக வாசித்தேன் ,அவசரமாக வாசித்தால் ஏதேனும் ஒரு சுவையை சுவைக்கத் தவறிவிடுவேனோ என நிதானித்தேன்  , ஒரு பெரிய சாக்லேட்டை தனியறையில் ஒழித்து வைத்து கொஞ்சம் கொஞ்சமாய் பிட்டு உண்ணும் குழந்தையை போல , ஒரு நாளில் இந்த நாவலுக்கான நேரத்தை எப்படியும் திருடிக்கொண்டேன். இந்த நாவலின் காதற்பக்கங்களை கடக்கையில் நானும் காதல் கொண்டு நாணினேன். காமம் கடக்கையில்  நானும் கலந்திருந்தேன் .

 

அந்த கசக்கும் காஞ்சிர மரத்தின் நீலியை பற்றி வாசிக்கையில் மனதில் ஓர் மருட்சி கலந்த ஈர்ப்பு .மலையத்தி நீலியும் அப்படியே மனதுக்குள் ஒரு சட்டமிட்ட படம் போல மாட்டிக்கொண்டாள் .உங்கள் கதைகளில் பொதுவாக அவதானித்ததில் ஒரு கதைசொல்லி இருப்பார் . அவர் சொல்லும் கதைகளை வாசிக்கையில் என் தாத்தாவின் பக்கத்திலமர்ந்து அவர் கதை சொல்ல கேட்டுக்கொண்டிருப்பது போலிருக்கும்.தேவதைகள், யட்சிகள் , பூதங்கள் என்று ஒரு கற்பனை உலகிற்குள் அழைத்துச்செல்லும் .

 

உங்கள் நாவல்களில் எப்போதுமே என்னை ஈர்க்கும் புதுப்புது சொற்களை கற்கிறேன் .மிளா, யட்சி,நீலி, இன்னும் நிறைய.நீலி நள்ளிரவின் இருள் போல உள்ளமுழுக்க அப்பிக்கொண்டாள் .பொதுவாக பெண்ணின் குரலை குயிலுக்குத்தானே ஒப்பிடுவார்கள்.நீங்கள் மயிலின் அகவலுக்கு ஒப்பிட்டது ஆச்சரியம் தான்.

 

குட்டப்பன் ஒரு வன ஞானியாகவும், நல்ல நண்பனாகவும்   ரெசாலம் அன்பிற்காக  ஏங்கும் ஒரு முரட்டு ஜீவனாகவும், குரிசு ஓர் வெள்ளந்தியாகவும் சினேகம்மை மீதும் ஒரு சிநேகம் தோன்றாமலில்லை. அய்யரை ஓர் ரசனைக்கராகவும்  மனதுக்குள் பதிந்து விடுகின்றனர்.

 

ராபியினதும் ஆபேலினதும் உருவங்களைக்கூட சிலநேரங்களில் இரட்டை எருமை என்கிறீர்கள். ஆனால் அவர்களது உறவை மிக ஆத்மார்தமானதாகவும், ஆழமானதாகவும், இதுவும் இயற்கையே எனவும்  சொல்லியிருக்கிறீர்கள் . நெகிழ்ச்சி

 

சின்னச்சின்னதாய் நிறைய இருக்கு , கடிதம் நீண்டு விடும் .  கடைசி பக்கம் மட்டும் எத்தனை உணர்ச்சிகளை அள்ளித்தெளித்திருக்கிறது.இனி இந்தக்காட்டிலிருந்து மீள்வதென்பது கஷ்டம் தான்..

 

மனது நிறைந்த வாசிப்பு . மிக்க நன்றி

 

 

பேரன்பும் வாழ்த்துக்களும் ,

 

நிரோஜினி ரொபர்ட்

 

 

காடு அமேசானில் வாங்க

காடு வாங்க

முந்தைய கட்டுரைஅமைதிப் பிரதேசத்தின் முயல்  :    ஹஸ்ஸான் ப்ளாஸிம்
அடுத்த கட்டுரைமெலட்டூர் -கடிதங்கள்