ஆடம்பர கைப்பைகளின் வாழ்க்கை

sun

ரத்னாபாய் அவள் இளமையில் நகரத்திலேயே மிக அழகான பெண்ணாக இருந்தாள். அவளுடைய நிறமும் உயரமும் உள்ளூர் இளைஞர்களைப் பித்தாக்கியது. அத்துடன் படிப்பில் மிகவும் கெட்டிக்காரி ஊரிலேயே நுனி நாக்கு ஆங்கிலம் பேசுவது அவள் மட்டும் தான். ஒவ்வொரு நாளும் அவள் அன்னை மீராபாய் தன் மகளை ‘எப்படி என் பொக்கிஷம்?” என்ற பாவனையுடன் நடக்கக் கூட்டிச்செல்வாள். அவளைப்பார்ப்பதற்காக இளைஞர்கள் சாலையோரங்களில் குவிந்து கிடப்பார்கள்

ரத்னாபாய்க்குக் காதல் கடிதங்கள் வந்து குவிந்துகொண்டே இருந்தன. அவள் அம்மா மீராபாய் அந்த காதல் கடிதங்களை ரகசியமாகப் பிரித்து பார்த்து மகிழ்ச்சி அடைந்தாள். தன்னுடைய மகளுக்கு உள்ளூர் தொழிலதிபர்களின் பிள்ளைகளும், நிலச்சுவான்தார்களின் பிள்ளைகளும், மருத்துவர்களின் பிள்ளைகளும் திருமண கோரிக்கை விடுத்திருப்பதாகவும் இதில் யாரைத் தேர்வு செய்வதென்று தெரியவில்லையென்றும் தன் தோழிகளிடம் அவள் பீற்றிக்கொண்டாள். உண்மையில் அவள் அதைப்பற்றித்தான் எண்ணி எண்ணி குழம்பிக்கொண்டிருந்தாள்

ஆனால் இவ்வாறு ரத்னாபாயிடம் தனது காதலை தெரிவித்த ஆண்கள் எல்லாம் சொந்தத்திலேயே நல்ல வரதட்சிணை வாங்கிக்கொண்டு திருமணம் செய்து கொண்டு போய்க்கொண்டே இருப்பதை அவளால் புரிந்துகொள்ளமுடியவில்லை. அவர்களி எவராவது வழியில் மனைவிபிள்ளையுடன் எதிர்ப்பட்டால் மகளுக்கு வசைதான். “இதை விட அவன் ஒரு கருங்குரங்கை கட்டிக்கொண்டிருக்கலாம்” என ஆரம்பித்து “உனக்குத்தான் சாமர்த்தியம் கிடையாது” என்பது வரை அந்த கோபம் செல்லும்

மகளிடம் யாராவது ஒருவனை தேர்ந்தெடுத்து சொல்லடி என்று சொன்னாள். ஆனால் ரத்னாபாய்க்கு எப்படியோ தெரிந்திருந்தது, இந்த இளைஞர்கள் எல்லோரும் அடுத்த கட்டத்திற்கு வரமாட்டார்கள் என்று. மெல்ல மெல்ல ரத்னாபாயின் திருமணம் உறவு வட்டாரத்தில் ஒரு கேலிக்குரிய பொருளாக மாறியது. அவளது அம்மாவிடம் ’எந்தத் தொழில் அதிபரிடம் மணம்பேசியிருக்கிறீர்கள்?’ என்று தோழிகள் கேலியாகக் கேட்கத்தொடங்கினார்கள். ”எனது திருமணத்தை நீ ஒரு சமூகப் பிரச்னையாக மாற்றிவிட்டாய் இது நீ எனக்குச் செய்த மாபெரும் துரோகம்” என்று ரத்னாபாய் தன் அம்மாவிடம் சொன்னாள். “வர வர நீ என்ன பேசுகிறாய் என்றே என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை” என்று அம்மா பரிதாபமாகச் சொல்கிறாள்

ரத்னாபாய் எம்.ஏ படிக்க ஆசைப்பட்டாள். ஆனால் கடன் பிரச்சினை. ஆகவே பிஎட் படித்து ஆசிரியை ஆகிறாள். அவளுக்கு வயதாகிக்கொண்டே செல்கிறது அவளுடன் படித்த சுமாரான அழகுள்ள, சுமாரான பணமுள்ள ,சுமாரான படிப்புள்ள பெண்கள் கூட திருமணமாகிச் சென்றார்கள். அவர்களுக்கு குழந்தைகள் பிறக்கின்றன. நாளுக்கு நாள் தாய்க்கும் மகளுக்குமான உறவே மோசமாகிக்கொண்டிருந்தது . ஒருகட்டத்தில் யாரையாவது ஒருவனை திருமண செய்தே ஆகவேண்டும் என்ற கட்டாயம் ரத்னாபாய்க்கு ஏற்படுகிறது.

அப்போதுதான் அவள் பல்டாக்டரான ஜான்சனைச் சந்திக்கிறாள். அவன் உள்ளூர் சிறுவர்களை தனது பழைய காரில் ஏற்றிக்கொண்டு அவன் ஓட்டிப்போவதை காண்கிறாள். அந்தக்காட்சி அவளுக்கு அவன் மேல் ஒரு நல்ல மதிப்பை உருவாக்கியது. உற்சாகமான எதார்த்தமான இளைஞன் என்று அவள் அவனைப்பற்றி எண்ணுகிறாள். அவனை திருமணம் செய்துகொள்கிறாள். ‘உங்கள் எளிமையை விரும்பினேன்” என்று அவள் சொல்ல “எனக்கு உன்னிடம் பிடித்ததே இந்த ஆங்கிலம்தான்” என்கிறான் ஜான்சன்.

அது எவ்வளவு பெரிய பிழை என்று திருமணத்துக்குப்பிறகு விரைவிலேயே தெரிந்தது. அவனுக்குத் தொழிலில் எந்த ஈடுபாடும் இல்லை. முரட்டுக்குடிகாரன். வேட்டையில்தான் முதன்மை ஈடுபாடு. வெறும் குறடைக்கொண்டு மயக்க மருந்துகூட கொடுக்காமல் பல்லைப்பிடுங்குமளவுக்கு மூர்க்கன். அவளுக்கு குழந்தைகள் பிறக்கின்றன. அவையும் அதே மூர்க்கமும் பொறுப்பின்மையும் கொண்டவை. மில்டன் பதினாறுவயதில் புகைபிடிக்கிறான். பெண்கள் இருவரும் படிப்பில் தோற்றுக்கொண்டே இருக்கிறார்கள்

ரத்னாபாய் அவளது இளமையில் கண்ட மொத்த கனவுகளும் காணாமலாயின. அவள் வாழ்ந்த வாழ்க்கை ஒரு இரும்பு தொழிற்சாலைக்குள் பூவைக்கொண்டு போவது போல. தன்னுள் மிக மென்மையான பகுதியை அவள் நலுங்காமல் வைத்திருந்தாள் அது ஆங்கிலம். அவளுடன் படித்த தோழிகள் பெரிய பதவிகளில் டெல்லியிலும் மும்பையிலும் இருந்தனர். அவர்களுக்கு உயர்தர ஆங்கிலத்தில் ரத்னாபாய் கடிதங்கள் போடுவாள். ஷேக்ஸ்பியரிலிருந்தும் மில்டனிலிருந்தும் மேற்கோள் காட்டுவாள். மிக அழகான சொற்றொடர்களை யோசித்து யோசித்து எழுதுவாள். உயர்தரமான காகிதங்களை வாங்கி வந்து அவற்றில் நுட்பமான படங்களுடன் அந்தக் கடிதங்களை எழுதி அவர்களுக்கு அனுப்புவாள். அவளிடமிருந்து வரும் கடிதங்களுக்காக தோழிகள் காத்திருக்கிறார்கள். அந்தக்கடிதங்களுக்கு அவர்கள் பதில் போடுகிறார்கள்.

“ரத்னா, உனது ஆங்கிலம்! எத்தனை தடவை அதை வியந்தாயிற்று! வியந்தததைச் சொல்லத் தெரியாமல் விழித்தாயிற்று! ஒன்றாய்த்தானே படித்தோம்? எங்கிருந்து கிடைத்தது உனக்கு மட்டும் இப்படி ஒரு பாஷை? கடிதங்கள் மனப்பாடம் செய்யபடுவதுண்டோ? செய்கிறேன். சில சமயம் மறு  பாதியை அவர் திருப்பிச் சொல்லுகிறார். பரதநாட்டியம் மனக்கண்ணில் வருகிகிறது. உன் பாஷையின் நளினத்தை உணரும்போது. நானும் கல்லூரி ஆசிரியை, அதுவும் ஆங்கிலத்தில். நினைக்கவே வெட்கமாக இருக்கிறது… ” என தோழி எழுதுகிறாள்

ரத்னாபாய்க்கு வாழ்க்கையில் எஞ்சியிருக்கும் ஒரே பெருமிதம் அதுதான். அன்று அவள் ஒரு கடிதம் எழுதினாள் தான் கடைவீதியில் பார்த்த பட்டுப்புடவைகளைப்பற்றி. அவற்றின் அழகை மிக அழகிய கவிதை வரிகளில் வர்ணித்தாள். ”ராதையின் அழகையும் கண்ணனின் வேணுகானத்தையும் குழைத்து இதைப் படைத்திருப்பவனைக் கலைஞன் என்று நான் கூசாமல் அழைப்பேன். வண்ணக் கலவைகளில் இத்தனை கனவுகளைச் சிதறத் தெரிந்தவன் கலைஞன்தான்” என அதை முடித்திருந்தாள். உண்மையில் அவள் எந்தப்புடவையையும் பார்க்கவில்லை.

அந்தக் கடிதம் சென்றவுடன் தோழியிடமிருந்து கடிதம் வருகிறது. ”நான் உனது வார்த்தைகளில் மயங்கிவிட்டேன். அந்த வார்த்தைகள் வழியாக நான் பார்த்த அந்தப்புடவை மிக அற்புதமாக இருந்தது. அதில் எனக்கும் என் தோழிகளுக்கும் ஐந்து புடவைகள் வாங்கி அனுப்பு” என்று. ரத்னாபாய் பொறி மிகப்பெரிய பொறி என்று ஆங்கிலத்தில் சொல்லிக்கொண்டு தலையில் தட்டுகிறாள். பணத்திற்கு எங்கே போவது என்று தெரியவில்லை. அவளுடைய வருமானத்தை நம்பி நடக்கிறது அவள் குடும்பம்.

ரத்னா பாய் கணவனிடம் பணம் கேட்கிறாள். அவனிடம் குடிப்பதற்கே பணமில்லை. இறுதியில் தன்னிடம் எஞ்சிய இரு வளையல்களை கழற்றி விற்று அந்த கடைக்குச் சென்று மலிவான ஐந்து புடவைகளை தோழிகளுக்கு அனுப்புகிறாள். புடவைகளைப்பார்த்துவிட்டு அவர்கள் என்ன சொல்வார்கள் என்று ஊகிக்கிறாள். ’உன் சிநேகிதி ஆங்கிலத்தில் ஒரு மேதை; ஒப்புக்கொள்கிறோம். ஆனால் புடவை தேர்ந்தெடுப்பதில் அவள் ஒரு அசடு” .மீண்டும் அழகிய ஆங்கிலத்தில் கடிதங்கள் எழுத ஆரம்பிக்கிறாள். ”பாஷை ஒரு அற்புதம். கடவுளே உனக்கு நன்றி. இல்லாவிட்டால் எனக்கு வேறு எதுவுமில்லை” என்று அவள் சொல்லிக்கொள்கிறாள்.

சுந்தர ராமசாமி எழுதிய ‘ரத்னாபாயின் ஆங்கிலம்” என்ற இந்தக்கதை பல்வேறு காரணங்களால் தமிழில் மிக முக்கியமான படைப்பாகப் புகழ் பெற்றது. அந்த எளிமையான அமைப்புக்குள் வெளிப்படும் சமகால வாழ்க்கையின் பல்வேறு களங்கள் ஆச்சரியமூட்டுபவை. ரத்னாபாய் நவீனப்பெண், தன் வாழ்க்கையை தானே முடிவெடுக்கும் அளவுக்குச் சுதந்திரமானவள். சென்றகாலத்துப் பெண்களுக்கு இருந்த எந்த சிக்கலும் அவளுக்கு இல்லை. படிப்பு இருக்கிறது, வேலை இருக்கிறது.

ஆனால் அவள் அடைந்த சுதந்திரம் பெரும் பொறுப்பும்கூட. சூழ்ந்திருக்கும் அனைவரின் சுதந்திரமும் அவர்களுடைய குடும்பத்தால் மரபால் வரையறுக்கப்பட்டிருக்கையில் ஒருவர் மட்டும் சுதந்திரமாக இருப்பதைப்போல அர்த்தமில்லாத விஷயம் வேறொன்றுமில்லை. ரத்னாவுக்கு அவள் விரும்பிய, அவளுக்குத் தகுதியான ஒரு வாழ்க்கையை தேர்ந்தெடுக்கும் எந்த வாய்ப்பும் இல்லை. அவளால் எதைவேண்டுமென்றாலும் தேர்ந்தெடுக்க முடியும், ஆனால் நாலாந்தரமே கிடைக்கும். ஆகவே அவள் தேர்ந்தெடுப்பது பிழையாக அமைகிறது.

ரத்னாபாயை ஏன் அவளுக்கு ஆங்கிலத்தில் காதல்கடிதங்கள் எழுதிய எந்தப் பையனும் திருமணம்செய்துகொள்ளவில்லை? ஏனென்றால் அவள் சுதந்திரமான படித்த நவீனப்பெண். அவளை காதலிக்கலாம், கல்யாணம் செய்துகொள்ளமுடியாது. காதல் கற்பனையில் நிகழ்கிறது. கல்யாணம் என்பது அன்றாட வாழ்க்கை, யதார்த்தம். பாரதிகண்ட புதுமைப்பெண்ணே வந்தாலும் நம் இளைஞர்கள் காதலிக்க மட்டுமே செய்வார்கள். திருமணம் செய்துகொள்ள கிராமத்துப்பெண்ணை தேடிச்செல்வார்கள்

ஏறத்தாழ இதே காட்சி ருத்ரய்யாவின் அவள் அப்படித்தான் படத்தில் வரும். சிந்திக்கும் பெண்ணை தோழியாக காதலியாகக் காணும் ஆண் திருமணம் என்னும்போது ஊருக்குச் சென்று ஒன்றும்தெரியாத பட்டிக்காட்டுப்பெண்ணை கூட்டிவருகிறான். அவள் ‘தூய்மையானவளாகவும்’ எந்நிலையிலும் அவன் அகங்காரத்தைச் சீண்டாதபடி ‘அடக்கமானவளாகவும்’ இருப்பாள் என நினைக்கிறான். இந்த நிலைதான் இன்றும் நீடிக்கிறது

ரத்னாபாய் நுண்ணுணர்வுமிக்கவள். ஆனால் ஒவ்வொன்றும் அவளைச் சுற்றி இடிந்து சரிந்து கிடக்கிறது. அதிலிருந்து அவள் மீட்டு வைத்துக்கொள்ளும் ஒரு பகுதிதான் அந்த ஆங்கிலம். அது அவளுடைய பகற்கனவு போல . ஓர் இளமைநினைவு போல .வேறெவருக்கும் தெரியாமல் தன் அந்தரங்க அறைக்குள் பேணிக்கொள்ளும் ஒரு அரிய நகை போல அதை வைத்து விளையாடி விளையாடி தான் தன் வாழ்க்கையை அவள் அவ்வளவு தூரம் கொண்டு வந்திருக்கிறாள்.

அந்த ஆங்கிலம் பொய்யானதென்று அவளுக்கும் தெரியும். அதைப் படிப்பவர்களுக்கும் தெரியும். அது ஒரு போலி நகை. உண்மையான நகையின் அத்தனை செதுக்கு வேலைகளும் நுட்பங்களும் இருந்தாலும் கூட அலுமினிய நகைக்கு எந்த மதிப்பும் கிடையாது. ஒருவகையில் அது ஒரு கேலிப்பொருள் .ரத்னாபாயின் ஆங்கிலமும் அப்படித்தான். சாதாரணமாக நாம் டம்பம் என்றும் படாடோபம் என்றும் சொல்லும் ஒன்றின் வடிவமாகத்தான் இதில் ஆங்கிலம் உள்ளது. நம்மைச்சுற்றி இந்த யுகத்துப்பெண்கள் தங்கள் வாழ்க்கையின் பெரும்பாலான தோல்விகளை இதைப்போன்ற டம்பங்கள் ஆடம்பரங்கள் வழியாகக் கடந்து செல்கிறார்கள். அவர்களுடைய பாவனைகளும் அதற்கு அடியிலிருக்கும் துயரமும் வெளிப்படும் கதை இது.

நமது பெண்கள் வைத்துக்கொள்ளும் அலங்காரக் கைப்பை போல. அதை டம்ப பை [ vanity bag] என்கிறார்கள். அவற்றில்தான் எத்தனை வகை. பளபளவென்று கண்ணைப்பறிப்பவை முதல் சணலால் செய்யப்பட்ட அறிவுஜீவிப்பைகள் வரை. ரத்னாபாய் வைத்திருப்பது அந்த அறிவுஜீவிப்பை. நமது பெண்கள் சென்ற ஐம்பதாண்டுகளில் அடைந்தது என்ன என்றால் இப்படி கையில் வைத்திருக்கும் அலங்காரப்பையை மட்டும்தான் என்று சொல்வேன். அவர்களின் அம்மாக்கள் வைத்திருந்த சுருக்குப்பையின் அதே பயன்பாடுதான். ஆனால் வெளிக்காட்சிக்கு ஆடம்பரமானது

முந்தைய கட்டுரைஊமைச்செந்நாய்- ஒரு கடிதம்
அடுத்த கட்டுரைமுயலின் அமைதி – கடிதங்கள்