வாசல்பூதம்

vish

அன்புள்ள ஜெ,

நண்பர் வே.நீ.சூர்யாவின் கடிதத்தை படித்தபோது அவரது உணர்வுகளோடு மிக அணுக்கமாக என்னை தொடர்பு படுத்திக் கொள்ள முடிந்தது. அவரை ஊட்டியில் பார்க்கையிலேயே தயக்கம் மற்றும் கூச்சத்தினால் அவரிடம் வெளிப்பட்ட உள்ளொடுங்கியத் தன்மை ஆச்சர்யமான பரிச்சயத்தை ஏற்படுத்தியதோடு பல்வேறு ஞாபகங்களை என்னில் வேகவேகமாக திறப்பதையும் நான் உணர்ந்தேன். அதை உறுதிசெய்யும்விதமாக தனது அரங்கில் மனித இருப்பின் இறுக்கத்தையும் விடுதலையற்ற அழுத்தத்தையுமே அவர் மையமாக வைத்து பேசினார். (அன்று நாம் மாலை நடை சென்ற சமயம் சூர்யாவின் பேச்சை உங்களிடம் குறிப்பிட்டு “இளம் வயதில் இலக்கியத்திற்குள் அறிமுகமாகும்போது எல்லோருக்குமே இருத்தலியத் துயரே உடனடி ஈர்ப்பாக இருக்கிறதே?” என்று கேட்டேன். நீங்கள் சின்ன புன்னகையோடு இருத்தலியல் மட்டும் அல்ல என்று சொல்லி காமம் மற்றும் புகைமூட்டமான மொழி என மேலும் இரண்டு பிரிவுகளை அதில் சேர்த்தீர்கள்.).

கல்லூரி நாட்களின்போது, மிக முக்கியமான ஏதோவொன்றை மறுகணம் இழக்கப் போவதான பதற்றமும் மன அழுத்தமும் என்னை வெகுவாக அலைக்கழித்துக் கொண்டிருந்தன –ஏறத்தாழ சூர்யா கூறுவதுப் போலவே. பெரிய கேள்விகளையும் பெரிய கனவுகளையும் முதல்முறையாக நெருக்கத்தில் காண்பதன் பிரமிப்பு என்றாலும் அது இன்னொருவிதத்தில் பெரும்பாலான பொறியியல் மாணவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல் என்றும் சொல்லத் தோன்றுகிறது. வேலைவாய்ப்புகள் குறித்து தொடர்ந்து பரவும் அச்சுறுத்தல். சிறைக்கூடம் மாதிரியான வகுப்பறைகள். நிர்வாகத்தின் தேவையற்ற கட்டுப்பாடுகள். கெடுபிடிகள். (ஒரு கட்டத்தில் எனக்கு கல்லூரிக்கு போவதென்பதே மன உளைச்சல் அளிக்கக்கூடியதாக மாறியிருந்தது. பொழுதுக்கும் ஆசிரியர்கள் காரணமேயில்லாமல் திட்டிக் கொண்டிருப்பார்கள். திறனில்லாத ஆசிரியர்கள் தங்களுடைய பாதுகாப்பின்மையை மறைக்க சிடுசிடுப்புமிக்க கடுமையான முகங்களை வரைந்துக் கொள்கின்றனர்). கூடவே இலக்கிய வாசிப்பும் எழுத்தும் இணைந்துவிடுவது தன்னங்காரத்தை பெருக்கி வெளியேறும் வழிகள் அனைத்தையும் அடைத்து சிக்கல்களை இன்னும் குழப்பமான முடிச்சுகளால் கட்டிவிடுகிறது.

நீங்கள் பதிவு செய்திருப்பதுப் போன்றே இத்தகைய நெருக்கடியான சூழ்நிலைகளில் மனித மனம் தன்னை பத்திரப்படுத்தி சமாதானம் பெற்றுக் கொள்ள சுயஇரக்கத்திடம் போய் தஞ்சம் புகுவதும் சுயஇரக்கத்திற்கு சந்தேகமின்றி தன்னை ஒப்புக் கொடுப்பதுமே மாறாமல் நடக்கின்றன. ஆயிரம் முகங்களுடையது சுயஇரக்கத்தின் தெய்வம். ஆயிரம் குரல்களில் அது பொய் சொல்கிறது. ஆயிரம் கைகளில் பலி ஆயுதங்களை நீட்டுகிறது. கைவிடப்பட்டவன், புரிந்துகொள்ளப்படாதவன், தேர்ந்தெடுக்கப்பட்டவன், தோற்றுப்போனவன் என பல வேஷங்களை நாம் அணிந்துகொள்ளும்தோறும் இங்கு -இந்த கால இட வெளியில்- உடலோடும், ஆசைகளோடும், ஆற்றலோடும், பலவீனங்களோடும் இருக்கிற நம் உண்மையான சுயத்தில் இருந்து சிறிது சிறிதாக விலகிச் செல்கிறோம் என்பதையே பல நேரங்களில் நம்மால் புரிந்துகொள்ள முடிவதில்லை. திரும்பி செல்லும் பாதையே மறந்துவிடும் அளவுக்கு மிக நீண்ட தூரம் பயணப்பட்டப் பிறகு அங்கிருப்பதோ முற்றிலும் அன்னியமான ஒரு நகல் மனிதன். அதிகமும் கசப்பால் ஆனவன். எனவே நடித்துக் கொண்டேயிருப்பவன்.

நான் கவனித்த வரையில் இன்றைய இளைஞர்களிடம் பொருளாதார நெருக்கடிகள் அளவுக்கே கலாச்சார நெருக்கடிகளும் தீவிரமான எதிர்விளைவுகளை உண்டு பண்ணுகின்றன. கல்லூரி நாட்களில் முதல் தடவையாக சத்யம் திரையரங்கம் , எக்ப்ரெஸ் அவென்யூ, ஸ்கைவாக் போன்ற இடங்களுக்குச் சென்றது எனக்கு கலக்கம் ஏற்படுத்தும் அனுபவங்களாகவே அமைந்தது. சென்னை புறநகர் பகுதியை சேர்ந்த எங்களுக்கே அந்த வணிக வளாகங்களின் கண்ணாடி மினுமினுப்பும் அழகிய உடல்கள் மற்றும் செலவுமிக்க ஆடைகளின் பொலிவும் முகத்தில் அறைவதுப் போலிருந்தன எனும்போது கிராமப்புற மாணவர்களுக்கு அவை இன்னும் அதிகம் அதிர்ச்சியூட்டக்கூடும்.

vn

என் அனுபவத்தை பொருத்தமட்டில் சென்னை போன்ற பெருநகரங்களில் நம்மை பொருந்தாதவர்களாக உணரும்போது கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். ஏனெனில், உடனடியாக அது நமக்கு போராளி உடுப்பை மாட்டிவிட்டுவிடுகிறது.  ஒரு செமஸ்டர் விடுமுறையில் ஏதோ வணிக வளாகத்துக்கு சென்று திரும்பிய தினம் என் நண்பனிடம் ஆவேசமாக “இந்த பகட்டில் கலை முளைக்காது; கலை இதை எதிர்த்து செயல்படவேண்டும்” என்று பேசியதை நினைத்துக் கொள்கிறேன். பெருநகரங்களில் என்னால் வசிக்கவே முடியாது என்று அப்போது திடமாக நம்பியிருக்கிறேன். கல்லூரிக்குப் பிறகு, வேலைக்கான பயிற்சியின் நிமித்தம் மூன்று மாதங்கள் மும்பையில் இருந்தபோது அந்த எண்ணத்தை வலுபடுத்துவதைப் போலவே சம்பவங்கள் நிகழ்ந்தன. கார்ப்பரேட்டு கலாச்சாரத்துக்கு பழகுவதில் சில நடைமுறை இடையூறுகள் இருந்தன. மேலும் தனிப்பட்ட இயலாமைகளும். ஆனால் எல்லாம் சில காலம்தாம். பயிற்சி முடிந்து பணி நியமனம் பெற்று பெங்களூர் வந்து தற்போது மூன்று வருடங்கள் ஆகிவிட்டன. முன்னவை எவ்வளவு எளிய பிரச்சனைகள் என்றே இப்போது தோன்றுகிறது. சுயஇரக்கத்தின் இன்னொரு வேஷமாக கலையை குறுக்குவது –அது நம்மை மீறி நடப்பது என்றாலும்- மாபெரும் பிழை என்பதே என் இன்றைய புரிதல். அனுபவ போதாமைகள் உருவாக்கும் தோற்ற மயக்கங்கள் தவறாக வழி நடத்தக் கூடியவை என்பதை தகவலாகவேனும் அறிந்திருக்கிறேன். கலை வெறும் எதிர்ப்பு கோஷம் அல்ல; அது தன்னளவிலேயே பதில் என்பதும் புரிகிறது. (மேலே உள்ள பத்தியை வைத்து உடனே என்னை யாராவது ‘குட்டி பூர்ஷ்வா’ என்றோ ‘கார்ப்பரேட் அடிமை’ என்றோ சொல்லிவிடுவார்களோ?)

சென்னையை சேர்ந்தவனாக இருந்தும் நான் இவ்வளவு அமைதியாக பேசுவதை தன்னால் நம்ப முடியவில்லை என்றும் சென்னை நகரம் தன்னை பதட்டமுற வைக்கிறது என்றும் ஊட்டியில் வைத்து என்னிடம் கூறினார். மேலே எழுதியிருப்பவற்றையே அங்கே அவரிடம் கூற முற்பட்டேன். ஆனால் விரிவாகவும் தெளிவாகவும் சொல்ல இயலவில்லை. எனவே அதை இக்கடிதத்தில் முயற்சி செய்திருக்கிறேன்.

sura

சாரமாக,

  1. மனஅழுத்தமும் பதற்றமும் தீவிரமான அகத்தேடலால் மட்டுமின்றி புறச்சூழலாலும் உருவாகக்கூடியவை. அதிலும் தமிழ்நாட்டில் பொறியியல் கல்லூரிகள் மனநோய் உற்பத்தி மையங்களாகவே இருப்பதால் மாணவர்கள் மிகுந்த கவனத்தோடு –அகத்துக்கும் புறத்துக்கும் இடையிலான கோட்டை அறிந்து- இருக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. புற நெருக்கடிகள் தன்னிரக்கத்திலும் தாழ்வுணர்ச்சியிலும் தள்ளிவிடாமல் நம்மை காப்பந்து பண்ணிக் கொள்ள வேண்டும்.
  1. அரசியல் சரி நிலைகள் காரணமாகவும், நகர்மயமாதலும் அன்னியமாதலும் அளிக்கும் உடனடி அதிர்ச்சி காரணமாகவும் பெருநகரங்கள் குறித்தோ பெருநிறுவன கலாச்சாரம் குறித்தோ தவறான அபிப்ராயங்களை வளர்த்துக் கொள்ள வேண்டியதில்லை. குறிப்பாக, சூழல் உருவாக்கி வைத்திருக்கும் முன்முடிவுகளை அப்படியே நம்பிவிட வேண்டாம். அவை கலை பற்றியும் சில குறுக்கல்வாதங்களை உருவாக்கக்கூடும்.

தற்காப்பாக ஓர் எச்சரிக்கை குறிப்பு : சூர்யா முன்வைக்கும் சிக்கல்களை என் வாழ்க்கையில் நானும் உணர்ந்திருப்பதனாலும் (அல்லது அப்படி நினைப்பதனாலும்), மேலும் அவை சமகாலத்து இளைஞர்கள் பலரின் சிக்கல்களாக இருப்பதனாலும் (மிகச் சமீபத்தில்தான் நானும் அணோஜனும் இதுக்குறித்து உரையாடினோம்) மட்டுமே இக்கடிதத்தை எழுதியிருக்கிறேன். மற்றபடி இதற்கு எந்த உள் நோக்கமும் இல்லை. ஏனெனில் இப்போதெல்லாம் என்ன சொன்னாலும் “நீ யார் இதை சொல்ல?” “உனக்கு யார் இதற்கு அதிகாரம் கொடுத்தது?” “உனக்கு என்ன தெரியும்?” “நீ ஜெயமோகன் கூட்டத்தை சேர்ந்தவன்” என்று கழுத்துப் பட்டையை பிடித்து மிரட்ட ஆரம்பித்துவிடுகிறார்கள். எனவே இது யார் மனதையும் புண்படுத்தும் நோக்கில் எழுதப்பட்டது அல்ல என்பதையும் ஒற்றுமைகள் தற்செயலே என்பதையும் கம்பனி சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.

(ஜெயமோகன், சுகுமாரன், தேவிபாரதி, மனுஷ்யபுத்திரன், லஷ்மி மணிவண்ணன் என இன்று முக்கிய எழுத்தாளர்களாக, எங்கள் உடனடி முன்னோடிகளாக இருக்கும் பலரும் தங்கள் முன்னோடியான சுந்தர ராமசாமியிடம் தொடர்பில் இருந்திருக்கிறார்கள். அவரை ஆதர்சமாக ஏற்றிருந்திருக்கிறார்கள். பின்னர் அவரிடம் முரணும் பட்டிருக்கிறார்கள். ஆனால் நாங்கள் ஒரு முன்னோடியை நெருங்கினால் மட்டும் உடனே மடம், பஜனை என்று முத்திரை குத்திவிடுகிறார்கள். )

பி.கு :

“உங்கள் வாழ்க்கையில் அடுத்தது என்ன? – இளைஞர் வழிகாட்டி நூல்” என்கிற தலைப்பில் புத்தகமே போடுகிற அளவுக்கு இளைஞர்களுக்கான பல அறிவுரை கட்டுரைகளை உங்கள் தளத்தில் எழுதியிருக்கிறீர்கள், ஜெ. அமெரிக்கக் கனவை, அமெரிக்க பிரஜைகளின் பொது லட்சியத்தை கட்டமைத்ததில் பொருளியல் வெற்றியை மட்டுமே முதன்மைபடுத்துகிற மலினமான சுயமுன்னேற்ற நூல்களுக்கும் பங்கிருப்பதாக சொல்லப்படுகிறது. இப்போது இந்தியாவிலும் அவை பெருகிக் கொண்டிருக்கும் நிலையில் அதற்கு நேர் எதிராக தன்னறத்தை கண்டடைவது குறித்தும் அதில் ஆற்றலை செலவிடுவது குறித்தும் நீங்கள் எழுதியிருக்கும் கட்டுரைகள் சிறந்த வழிகாட்டிகள். பெரும் திறப்புகள்.   “செயலின்மையின் இனிய மது” கட்டுரையை முதல்முறை படித்தபோது அடைந்த உத்வேகமும் அகங்காரச் சிதைவும் என்வரையில் மிக முக்கியமான வாழ்க்கை அனுபவங்கள். மனித இருப்பை துயர் என்று எதிர்மறையாக வகுப்பதும் செயலின்மையை உன்னதப்படுத்துவதும் மோஸ்தராக இருக்கும் சூழலில் மனித இருப்பின் மகத்துவம் குறித்து தொடர்ந்து பேசுவதோடு செயலை முன்னிலைப்படுத்தியும் நீங்கள் எழுதியிருப்பவை நீண்ட கால நோக்கில் எண்ண முடியாத திசைகளில் நலம் பயக்கக்கூடும். உடனே “நீ அதை அப்படியே பின்பற்றி செயலாற்றிவிடுவாயா?” என்று என் உளக்குரலேக்கூட  கெக்கலிப்புடன் கேட்கிறது. “அது பற்றி தெரியாது. ஆனால் செயலாற்றத் தவறினால் என் குறைப்பாட்டை மழுப்பவோ அல்லது அதை இன்னொருவர் மேல் ஏற்றவோ மாட்டேன். எனக்கு நானே பொய் சொல்லிக் கொள்ளவேண்டிய துரதிருஷ்டத்தில் இருந்து தப்பித்துவிடுவேன்” என்று மட்டும் பதில் சொல்கிறேன்.

அன்புடன்,

விஷால் ராஜா

pramil

அன்புள்ள விஷால்,

அவருடைய கடிதம் காட்டும் தனிமையும் அலைக்கழிப்பும் ’இளைஞனின்’ பிரச்சினைகள் அல்ல ‘கலைஞனின்’ பிரச்சினைகள். எள் காய்ந்தால் நல்லதுதான், எண்ணைக்காகும். காயாமல் எண்ணையும் இல்லை. ஆகவே அதை ‘தவிர்ப்பதை’ பற்றி அவருக்கோ உங்களுக்கோ சொல்லமாட்டேன். அதை பயன்படுத்திக்கொள்வதைப்பற்றித்தான் சொல்கிறேன். சிற்றிதழ்சார்ந்த இலக்கியச்சூழலில் என் வாழ்க்கை முப்பதாண்டுகளைக் கடக்கப்போகிறது. இந்த அலைகடலை நீந்திக் கடக்காமையால் காணாமல் போன கலைஞர்கள் என ஒரு பட்டியல் நினைவிலெழுகிறது. அவர்களை எண்ணும்போது இந்த வயதில் தந்தைக்குரிய பதற்றமும் ஏற்படுகிறது. நான் திரும்பத்திரும்ப இதைப்பற்றி இளைஞர்களிடம் பேசுவது இந்தப் பதற்றத்தால்தான்.

கலைஞனுக்கு நான் சொல்லும் வழி என்பது மொழியைப்பற்றிக்கொள்க என்பது மட்டுமே. இந்த காலகட்டம் அதற்கானது. கூடவே கலைஞன் என்னும் ஆணவத்தையும் கொண்டிருங்கள். அது சூழ்ந்திருக்கும் அற்பத்தனம் உலகியல் இரண்டிலிருந்தும் நம்மைக் காக்கும். மற்றபடி அவரவர் அவரவர் பாதையைத் தெரிவுசெய்யவேண்டியதுதான்.

laks

முன்னோடிகளுடன் உரையாடுவது குறித்து. தமிழில் மட்டுமல்ல உலக இலக்கியத்திலேயே கூட உடனடியான முன்னோடிகளும் அவர்களுடனான தொடர்ந்த உறவும் இல்லாத கலைஞர்கள் இல்லை. மேலைநாடுகளில் அந்த உறவுகள், அக்குழுக்கள் குறித்தெல்லாம் மிகவிரிவாக எழுதப்பட்டுள்ளது. இலக்கிய வரலாற்றுநூல்களிலேயே அவற்றைப்பற்றிய பதிவுகள் தொடர்ச்சியாக வருவதைக் காணலாம். அது அவர்களின் உருவாக்கத்தின் ஒருபகுதி. சுந்தர ராமசாமி, பிரமிள், வெங்கட் சாமிநாதன், அசோகமித்திரன், தேவதச்சன், வல்லிக்கண்ணன், கோவை ஞானி, ஞானக்கூத்தன் என சென்ற தலைமுறையில் அடுத்த தலைமுறையினருக்கு மையமாக அமைந்த முன்னோடிகள் பலர் உண்டு. எப்போதுமே அது அப்படித்தான். அதை கிண்டல்செய்பவர்கள் யார்? எந்த இலக்கிய அடிப்படையும் அறியாத வம்புக்கூட்டம். நேற்றும் அதைத்தான் சொன்னார்கள், டீக்கடைகளில். இன்று முகநூலில் சொல்கிறார்கள், உங்கள் காதுக்கு வருகிறது. அவ்வளவுதான்.

லக்ஷ்மி மணிவண்ணனும் நானும் ஒருமுறை பேசிக்கொண்டிருந்தபோது நான் சொன்னேன். ‘எண்பதுகளின் சூழலில் இருந்து மயிரிழையில் தப்பித்திருக்கிறோம். இரண்டு பெரிய வலைகள் அன்றிருந்தன. ஒன்று எளிய கட்சிசார் இடதுசாரி அரசியலின் வலை. அதில் விழுந்திருந்தால் சிந்தனையே இரண்டாகப்பிரிந்து ஒரே வட்டத்தில் சுற்றிக்கொண்டிருந்திருக்கும். தொண்ணூறுகளுக்குப்பின் கசப்பும் சலிப்பும் எஞ்சியிருக்கும். இன்னொன்று, வணிக எழுத்தின் வலை. அதில் சிக்கியிருந்தால் நாம் எண்ணியதை எழுதியிருக்கமுடியாது. சுந்தர ராமசாமி அவை இரண்டிலிருந்தும் நம்மை மீட்காவிடில் என்ன ஆகியிருந்திருப்போம்!” மணிவண்ணன் நெகிழ்ந்துவிட்டார்.

சுந்தர ராமசாமியிடமிருந்து வந்தவர்களில் முதல்தலைமுறை என்பது திலீப்குமார், கோபிகிருஷ்ணன், சுகுமாரன், வேதசகாயகுமார், அ.கா.பெருமாள்தான். எல்லாருக்கும் அறுபதுகடந்துவிட்டது. அதன்பின் மூன்றுதலைமுறை. அவர்கள் அனைவருக்கும் அவருடன் ஏற்பும் மறுப்பும் உண்டு. மறுப்பு என்பது வெறும் ஆணவத்தால், அடையாளம் பற்றிய அச்சத்தால் நிகழ்ந்தால் அது வீண். உண்மையான முரண்பாடு மிகச்சிறியதாகவே தென்படும். அந்த சின்னப்புள்ளிதான் நம் தனித்தன்மையாகப் பெருகும். அதை நாமே அவதானித்துக்கொள்ளவேண்டும். நம் வாதங்கள் வழியாக அல்ல, படைப்புகள் வழியாகவே கண்டடையவேண்டும். நான் கண்டடைந்தது படுகை என்ற கதை வழியாக

ஜெ

முந்தைய கட்டுரைபாண்டிச்சேரி,காவிய இயல் -கடிதங்கள்
அடுத்த கட்டுரைரகசியப்பேய் -கடிதங்கள்