பாலகுமாரன், சிற்றிதழ் -ஒரு விவாதம்

bala

அன்புள்ள ஜெ

மனுஷ்யபுத்திரனின் இந்த பேட்டியை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவருகிறேன். பாலகுமாரனின் மறைவை ஒட்டி உருவான ஒரு எதிர்ப்பை இப்படி பதிவுசெய்கிறார். சிற்றிதழ்சார்ந்தவர்களின் இந்த வன்மத்தை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா? உங்கள் குரல் இதில் என்ன?

அருண் மகாதேவன்

அன்புள்ள அருண்

முதலில் இந்தச்சிற்றிதழாளர்கள் யார்? என்ன சிற்றிதழ்கள் நடத்தியிருக்கிறார்கள்? சிற்றிதழிலக்கியம் வழியாக எவ்வளவுகாலம் வாழ்ந்திருக்கிறார்கள்? என்ன எழுதிச் சாதித்திருக்கிறார்கள்? கேரளத்தில் ‘எனது நக்சலைட் கால வாழ்க்கை’ என தன்வரலாறு எழுதாத இலக்கியவாதிகள் மிகச்சிலரே என ஒரு வேடிக்கை உண்டு. இன்றைக்கு சிற்றிதழ் வாங்கி புரட்டிப்பார்த்தவர்கள், வம்புகள் வழியாகவே வாழ்ந்தவர்கள் எல்லாம் ‘நாங்கள்லாம் சிற்றிதழ் உலகத்திலே அந்தக்காலத்திலே…’ என முகநூலில் உலவுகிறார்கள் என நினைக்கிறேன்.

மனுஷ்யபுத்திரன் போன்றவர்கள் இவர்களைச் சிற்றிதழாளர், சிற்றிதழ்சூழலின் வன்மம் என்றெல்லாம் சொல்லும்போது ஒரு பெருமைக்குரிய மரபை அந்தப்பக்கத்திலே உலாவிக்கொண்டிருந்த வழிப்போக்கர்களுக்குக் கையளிக்கிறார்கள். சிற்றிதழ்மரபுக்கு என ஒரு சாதனையும் அதற்குரிய மனநிலையும் உண்டு. அது இந்தவகையான வம்புகளும் வன்மங்களும் அல்ல. ஓரளவு அதெல்லாம் சிற்றிதழ் உலகில் இருந்தது. ஆனால் அதைமட்டுமே பெற்றுக்கொண்டு வந்து அடையாளம்தேட முயல்கிறார்கள். அவர்களிடம் கேட்கவேண்டிய கேள்வியே நீங்கள் யார், என்ன செய்திருக்கிறீர்கள் என்பதுதான்.

எழுபதுகளின் இலக்கியச்சூழலுக்குச் சில உணர்வுநிலைகள் இருந்தன. அன்று இலக்கியத்திற்கு வாசகர்களே இல்லை. ஆயிரம்பேர் ஒட்டுமொத்தமாக இலக்கியவாசகர்கள் இருந்தால் ஆச்சரியம். ஆனால் வணிக எழுத்தாளர்கள் உச்சகட்ட நட்சத்திரங்கள். ஆகவே அவர்களை கடுமையாக மறுக்கவேண்டியிருந்தது. அதற்கான தீவிர உளநிலைகளை உருவாக்கவேண்டியிருந்தது. இல்லையேல் அன்று நம்பிச் செயல்பட்டிருக்கவே முடியாது. சிற்றிதழில் இருந்த அந்த எதிர்மனநிலை என்னிடமும் இருந்தது – தொண்ணூறுகள் வரை.

ஆனால் சிற்றிதழ்மரபு வணிக இதழ்களை ஒரேயடியாக நிராகரிக்கவும் முடியாது. புதுமைப்பித்தன், கு.ப.ரா, பிச்சமூர்த்தி போன்றவர்கள் காலத்தில் சிற்றிதழ் என்னும் வரையறை இல்லை. அவர்களின் கணிசமான ஆக்கங்கள் அக்கால பேரிதழ்களில் வெளிவந்தவை.லா.ச.ராமாமிருதம் அனேகமாக எதையுமே சிற்றிதழ்களில் எழுதியதில்லை. தி.ஜானகிராமனின் பெரும்பாலான ஆக்கங்கள் விகடன் முதலிய வணிக இதழ்களில் வெளிவந்தவை. கு.அழகிரிசாமி, ஜெயகாந்தன் போன்றவர்கள் எழுதியதெல்லாம் வணிக இதழ்களில்தான். சுந்தர ராமசாமியின் கதைகளிலேயே கூட கணிசமானவை கல்கி போன்ற இதழ்களில் வெளிவந்தவை. ‘தூயசிற்றிதழ் இலக்கியம்’ என்பதெல்லாம் எழுபதுகளில் தொடங்கி இருபதாண்டுக்காலம் நீடித்த ஒரு ‘மாற்று’ மட்டுமே

ஆனால் இன்று அப்படி அல்ல. சிற்றிதழ்களிலிருந்து இலக்கியம் வெளியேறி பரவலான வாசிப்பை பெற்றுவருகிறது. வணிகஎழுத்து சோர்வுற்றுள்ளது. சிற்றிதழ்களில் உண்மையாகவே செயல்படுபவர்களுக்கு இதெல்லாம் தெரியும்.அவர்கள் இன்று வணிக எழுத்தை வசைபாடுவதில்லை, எதிர்ப்பதுமில்லை. ஆராய்கிறார்கள், அவற்றின் சமூகப் பண்பாட்டுப் பங்களிப்பை வகுத்துரைக்க முயல்கிறார்கள். தன் கருத்து அதுவரைச் சொல்லிவந்த மதிப்பீட்டின் நீட்சியாக, என்றும் நிலைகொள்வதாக இருக்கவேண்டும் என எண்ணுவார்கள்.   அந்தத்தளத்தில் நீங்கள் உணராத ஒரு கருத்தையேனும் சொன்னவர் மட்டுமே சிற்றிதழாளர். அடையாளம்தேடி வசைபாடும் அசடு அல்ல.

ஜெ

***

அன்பு ஜெ,

நட்சத்திரம் போல தான். செய்திதாள்களிலும், செய்திகளிலும் 2,3 தினங்களாக. ஆனால் வாசிப்பு, சிந்தனை மற்றும் ரசனை என வேறு படி நிலை கொண்ட உங்கள் வாசகர்கள் எவரும் கடிதங்கள் எழுதாதது ஒரு திகைப்பு தான். ஒரு வேளை அவர் 20-25 வருட முந்தைய எழுத்தாளர் அதிலும் பொழுது போக்கு மற்றும் பொது ரசனை என வணிக பரப்பில் தேங்கியதால் எவருக்கும் கண்ணில் படவில்லையா? அவரின்  ”ஒரு காலத்திய” வாசகர்கள் அனைவரும் இன்றைய 40-55 தலைமுறை வயதினர் மட்டும் தானா?  வாசிப்பின் ஆரம்ப கால படிகட்டுகளின் தேவை எப்பொதும் உள்ளன என நினைத்து கொன்டு இருந்தேன். அது தேவை அல்ல போல இருக்கிறது. அல்லது இந்த பாதை இப்பொது புலங்குவது இல்லையா?

இலக்கியம் பற்றிய உங்களின் தாரசில் அவர் வராவிட்டாலும் 1. நீங்கள் சொன்னது போல ஆண் பெண் உறவுகளின் சஞ்சல – தவிப்பு – ஊசல் – விழைவு

பற்றிய எழுத்து என்கிற கோணங்களில் 2. ஒரு ஆண் அல்லது பெண் தன்னை பற்றிய – தன் வாழ்வு, சிந்தனை, சுற்றி இருக்கும் மக்கள், இயங்கும் உலகம் பற்றிய ஆரம்ப புரிதல் இல்லாத குழம்பி தவிக்கும் பெருங்கும்பலுக்கு அவரின் எழுத்துகள் ஆசுவாசம் அல்லது திசை நம்பிக்கை என்கிற வகையில் ( கற்பூர வசந்தம் போன்றவை )3. உங்களின் வார்த்தையில் அவரின் ஆன்மீகம் முதிரா ஆன்மீகம் என்றாலும், பக்தி சார்ந்த கதைகள் ( அருனகிரி, அபிராமி பட்டர், தாயுமானவர் ) போன்றவை பக்தி வணிகத்தின் ஒரு புதிய பாதையாகி வந்தது என்கிற வகையிலும் 5. சில காலம் தாண்டி நிற்கிற சில சினிமாவில் வசன எழுத்து தந்த வகையில் இருப்பது.. ( சாப் ஜானின் கதையும் வேனுவின் ஒளிப்பதிவும், இவரின் வசனமும், கலந்து அடிக்க, கமலை மறைத்த ”குணா” போன்றவை ) …

என இத்தனை சொல்லி கொண்டாலும் நீங்கள் 2010 ஒரு கேள்விக்கு பதில் சொன்னது போல பாலகுமாரன்  அவரது  சமகாலத்தில்  வாசித்த  சிலரது  நினைவில்  மட்டும்  கொஞ்சநாள்  நீடிப்பார் பின்பு  ஆர்வியும்  எல்லார்வியும்  பிவிஆரும்  சென்று  சேர்ந்த  இடத்தைச்  சென்று  சேர்வார்வணிக எழுத்தின் பெரிய  அலமாரியில்  ஒரு இடம்

  (//www.jeyamohan.in/7822#.Wv22_u6FPIU )

காலம்  தாண்டி நிற்பதற்கு தான் எல்லா எழுத்தாளர்களும் நினைக்கின்றனர். அவர்களில் பலர் தானே ஏற்றி கொண்ட பல காரணங்களை தொங்கிய படி, உள்ளே வரும் போது இருந்த லட்சிய இடத்தை மறந்து அல்லது தொலைத்து காலம் கொண்டு வைக்கும் வேறு இடத்தில் சென்று சேருகின்றனர் – அந்த இடங்களில் அதற்குரிய அலைகளை கிளப்பி விட்ட பின்பின்னால் உதிர்ந்து விலகி விட்டாலும், வாசிப்பின் ஒரு காலத்தை நிறைத்த கொண்ட பாலகுமரானுக்கு நன்றிகளும் அஞ்சலிகளும்.

எழுத்தாளர் அல்லது இலக்கியவாதி என்றும் அந்த காலத்தின் ஒரு அலையை எழுப்பி தள்ள, அவை எவ்வளவு தூரம் நிற்கும் என்பது காலத்தின் கையில் மட்டுமே.

லிங்கராஜ்

***

அன்புள்ள லிங்கராஜ்,

காலம்கடந்து நிற்பது இலக்கியம் மட்டும் அல்ல, வணிக எழுத்தும்தான். பிராம் ஸ்டாக்கரின் டிராக்குலா அன்றைய பேரிலக்கியங்களுக்கு நிகராகவே இன்றும் நிற்கிறது. ஆனால் வணிக எழுத்து அது உருவான காலகட்டத்தில் செலுத்திய தீவிரமான பங்களிப்பைச் செலுத்தாமல் பின்னகரும். அவற்றில் சில ஒருவகை பண்பாட்டுக்குறியீடுகளாக ஆகி நீடிக்கவும் செய்யும். பொன்னியின்செல்வன்போல. காலம் கடந்து நிற்பவை இலக்கியம் என்பது எளிமையான வரையறை

இலக்கியம் எது என்பதை காலம் முடிவுசெய்யட்டும் என்றெல்லாம் இலக்கியவாசகன் சொல்லமாட்டான். அது ஒரு முடிவிலா விவாதமாக சூழலில் நிகழ்துகொண்டிருக்கும். அதன் வழியாகவே சில படைப்புகள் மேலே செல்லும், சில கீழிறங்கும். அதுதான் இலக்கியவாசிப்புக்கான பயிற்சியை அளிக்கிறது. அதன் வழியாகவே இலக்கிய மதிப்பீடுகள் உருவாகின்றன. மதிப்பீடில்லையேல் வாசிப்பே இல்லை. ஆகவே தொடர்விவாதம் நிகழ்ந்துகொண்டே இருக்கவேண்டும்

அந்த விவாதத்தின் தரமே இலக்கிய ஆக்கங்களை நிலைநிறுத்தி பிறவற்றைத் தள்ளுகிறது. வாசிப்புக்கு விமர்சனம் வழியாக அளிக்கப்படும் பயிற்சியினால்தான் அந்த தெரிவு நிகழ்கிறது. ஒரு முதிராச் சூழலில் மிக எளிதாக அந்த விவாதம் கீழிறங்கி தரமில்லா படைப்பை நெடுங்காலம் தூக்கி நிறுத்திவிடக்கூடும்.

இலக்கியவிமர்சகன் தன் பார்வையை, மதிப்பீட்டை சலிக்காமல் முன்வைத்து ஒரு மதிப்பீட்டை சூழலில் உருவாக்க தொடர்ந்து முயன்றபடியே இருந்தாகவேண்டும், அது அவன் கடமை

ஜெ

முந்தைய கட்டுரைமெலட்டூர் -கடிதங்கள்
அடுத்த கட்டுரைதழலெழுகை