அன்புள்ள ஜெ,
அலுவலகம் செல்லும்போதும், கிடைக்கும் உணவு இடைவேளையில் Kindle mobile app மூலமாக படித்து வருகிறேன்.விசும்பு கதைத்தொகுதியின் முன்னுரை என் கேள்விக்கான பதிலை தருகிறது என்றாலும், படித்த நான்கு கதைகளுமே முடியும்போது புதிய கதைக்கான தொடக்கம் போல நிற்கின்றன..இது சுவாரஸ்யத்துக்கானதா, வாசகன் யோசிக்க வேண்டுமென்பதற்காகவா?
ஒரு கதைக்குள்ளேயே சொல்லப்படும் குறிப்புகள் நிறைய படிக்காமல் நம்பும்படி எழுத சாத்தியமில்லை எனக் காட்டுகின்றன. பூர்ணம் – கதை உரையாடலில் நிறைய அறிவியல், தத்துவக் குறிப்புகள் தொடர்புபடுத்தி இருந்தீர்கள், முதல் மூன்று கதைகளைவிட இது சுவாரஸ்யமாக இருந்தது.
ஒவ்வொரு கதையுமே ஒரு cognitive enhancer தான்.இன்னும் நிறைய படிக்க வேண்டும் என்ற ஆவல் அதிகரித்துவிட்டது.
நன்றி
அன்புடன்
பகவதி
***
அன்புள்ள பகவதி
ஒரு நல்ல கதையின் இலக்கணமே அது முடிந்தபின்னரும் தொடரவேண்டும், வளரவேண்டும் என்பதுதான். அறிவியல்புனைகதை என்பது அறிவியலின் ஒரு பகுதி அல்ல. அது இலக்கியத்தின் ஒரு பகுதி மட்டுமே. அறிவியலை அல்ல வாழ்க்கையையே அது விளக்குகிறது. அதற்கு அறிவியலை அது ஒரு களமாக எடுத்துக்கொள்கிறது. வரலாறு, அரசியல் ஆகியவற்றை எடுத்துக்கொள்வதுபோல
ஜெ
***
அன்புள்ள ஜெ
அறிவியல்புனைகதை தொகுதியான விசும்பு வாசித்தேன். அந்தக்கதைகளின் வெவ்வேறுவகையான அமைப்பு என்னை மிகவும் கவர்ந்தது. அதில் கச்சிதமான கதை பித்தம். எனக்கென்னமோ புதுமைப்பித்தன் ஞாபகமாக வந்துகொண்டிருந்தது அந்தக்கதையை வாசிக்கும்போது. எல்லா கதைகளுமே அரிய வாசிப்பனுபவத்தை அளித்தன. கடைசிக்கதை இலக்கியவடிவங்கள் அன்று இன்று மட்டும் கொஞ்சம் கடினமான வாசிப்புத்தன்மை கொண்டிருந்தது
குமார் ஆறுமுகம்
***
விசும்பு வாங்க -கிழக்கு பதிப்பகம்
விசும்பு அமேசான் மின்னூல் வாங்க