பாண்டிச்சேரி,காவிய இயல் -கடிதங்கள்

கம்பன் சிலை தேரழுந்தூர்
கம்பன் சிலை தேரழுந்தூர்

கம்பன்,அரிக்கமேடு,பாண்டிச்சேரி

புதுவை கம்பன் உரை

திரு. ஜெயமோகன் அவர்களுக்கு அன்புடன்,

பாண்டிச்சேரி கம்பன் கழகத்தில் நீங்கள் ஆற்றிய உரை பற்றிய பதிவை எதிர்பார்த்திருந்தேன். ‘குறளினிது” போன்ற செறிவான ஒன்றாக இருந்திருக்குமென்பதில் ஐயமேதுமில்லை. எனக்கு அதை சிலமுறைகள் தொடர்ந்து கேட்டபின் தான் அதைத் தொகுத்து புரிந்துகொள்ள முடிந்தது. எதையும் விட்டுவிடக்கூடாதென்பதும் என் நோக்கமாக இருந்தது. ஆகவே அந்த காணொளி வரிசையை ஒலி உரைகளாக மாற்றிக்கொண்டு அலுவலகம் போகும்போதும் வரும்போதும் கேட்டுக்கொண்டிருந்தேன். பேச்சாளர்களின் பொதுவான பாணியிலிருந்து வெகு விலகி இப்படி ஒரு அடர்த்தியான உரையை நேரில் கேட்கும் எத்தனைபேர் எப்படிப் புரிந்துகொண்டிருப்பார்கள் என்று அப்போதே எனக்குத் தோன்றியது. எனினும் அதன் வழியே பயணப்படும்போது திறக்கும் கோணங்கள் மிகவும் புதிதாக இருந்தது. அந்த உரை என்னைப்பொறுத்தமட்டில் ‘நவில்தோறும் உரை நயம்போலும்’ .

உங்கள் இந்த அறிவிப்பு வந்த உடனேயே மனதில் எதிர்பார்ப்பு தோன்றிவிட்டது. இன்று தளத்தில் அதைப்பற்றிய பதிவிருந்தாலும் தயவுசெய்து முழு உரையின் காணொளி இணைப்பைப் பகிர்ந்தால் என் போன்றோருக்கு உபயோகமாக இருக்கும்.

மிகுந்த எதிர்பார்ப்புடனும் ஆர்வத்துடனும்

நா. சந்திரசேகரன்

அன்புள்ள சந்திரசேகரன் அவர்களுக்கு,

அந்த உரை ஒளிப்பதிவுசெய்யப்பட்டது. ஆனால் அதன் இணைப்பு என்னிடமில்லை. அது நிகழ்ச்சி அமைப்பாளர்களிடம் இருக்கலாம். கிடைத்தால் போடலாம்.

பொதுவாக நான் உரையாற்றும்போது நினைப்பது இது. பெரும்பாலான பேச்சுக்களைக் கேட்டுவிட்டு கிளம்பிச்செல்லும்போது சுருக்கித் தொகுக்க ஆரம்பிப்போம். ஒரு மணிநேர உரை பத்து நிமிடமாக நம் உள்ளத்தில் எஞ்சியிருக்கும்

நான் பேசினால் ஒருமணிநேர உரை எழுந்துசெல்வோர் உள்ளங்களில் மூன்றுமணிநேர உரையாக விரியவேண்டும் என நினைப்பேன். ஒரு தலைப்பை கூடுமானவரை முழுமையாகச் சொல்லிவிடவேண்டும் என்றும். ஆகவே உரைகள் பல செறிவாக உள்ளன

ஆனால் உண்மையில் மேடைப்பேச்சுக்கள் இப்படி இருக்கக்கூடாது. மேடையுரை அனைத்து மக்களும் வந்தமர்ந்து கேட்டறிவதற்கான ஊடகம். தெளிவாகவும் ஈர்ப்பாகவும் அமையவேண்டும். எழுத்தாளன் என்ற உரிமையில் ஓரு விதிவிலக்காக இந்தவகை உரைகளை அனுமதிக்கலாம்

ஜெ

 

kam

அன்பிற்குரிய திரு ஜெயமோகன் அண்ணாவுக்கு,

அதீத கற்பனாவாதமும், அரசர் வாழ்க்கையும், குழந்தைகள் விரும்பும் மிகுந்த புனைவு நிகழ்வுகளும் பல்லாயிரக் கணக்கான புதுச்சொற்களும், மிக அதிகளவிலான பாடல்களும் நிறைந்த காவியங்களை படிக்கவாரம்பித்தவுடன் உற்சாகமாகவும் பின்னர் தேய்ந்து தொடரமுடியாததாகவும் ஆகிவிடுகின்றது.

சிக்ஸ் பேக் வைத்த நடிகர்களின் படங்களை பார்த்தவுடன், ஜிம்மிற்கு முன்தொகை காட்டில் சேர்த்துவிட்டு, பின்னர் அடுத்த ஏதாவதொரு சிக்ஸ் பேக் நடிகரின் படத்திற்கு பின் இன்னொரு ஜிம்மில் முன்தொகை கட்டுவது போன்று. நடுவில் நான்கு நாள் சென்றிருந்தால் பெரிய விஷயம். நான் புதுச்சேரியில் முன்தொகை கட்டாத ஜிம் களே இல்லையெனலாம்.

நான்கு வருடங்கள் முன்பு திரு. நாஞ்சில் ஐயாவுடன் உரையாடியபின், ஒரு உந்துதலில் ஆரம்பித்த கம்பராமாயணம் அயோத்திப் படலத்தில் பாதி வந்தவுடன் ஆயாசத்தில் முடிந்து விட்டது. நகரின் செல்வச் செழிப்பை விவரிக்க மட்டுமே பல பாடல்கள். என் போதாமையை எண்ணி நானே நொந்து கொண்டேன்.

புதுச்சேரி கம்பன் விழாவிற்கு உங்கள் உரையை மட்டுமே கேட்டுவிட்டு வெளியேறி விட்ட பலரில் நானும் ஒருவன். உங்கள் உரை, கம்பராமாயணம் எழுதப்பட்ட காலத்தில் இருந்த அரச முறையையும், புரவலர்களின் பாதுகாப்பில் கவிஞர்கள் பேணப்பட்டதையும் மிக விரிவாக எடுத்தியம்பியது.செவ்வியல் படைப்புகள் பற்றிய அளவுகோல்களை மிகத்தெளிவாகக் கூறினீர்கள். டி.எஸ்.எலியட்டின் செவ்வியல் பற்றிய முறைமைகளை கம்பராமாயணத்தோடு ஒப்பிட்ட விளக்கங்கள் அச்சபை இதுவரையிலும் கேட்டதாகவே இருக்காது என்றே நினைக்கிறேன்.

மரபிலக்கிய காவியங்களை அணுகுவதற்கு இத்தலைமுறை வாசகரான எங்களுக்கு அறிவுரை வழங்குங்கள்

அன்புடன்,
சங்கர் கிருஷ்ணன்

அன்புள்ள சங்கர் கிருஷ்ணன்

காவியங்களின் இயல்பு அது, அவற்றை ‘விரித்துரைப்பதன் கலை’ என வரையறைசெய்யலாம். உலகக் காவியங்கள் முழுக்க அப்படித்தான் உள்ளன. அவற்றை நாவல்போல அந்தரங்க வாசிப்பாகக் கொள்வது கடினம். கூட்டுவாசிப்பு பயனுள்ளது. அதேபோல ஒரே அனுபவமாக வாசித்துச்செல்வதும் இயலாதது. பல்வேறு காலகட்டங்களாக வாழ்நாள் முழுக்கவே வாசிக்கவேண்டியவை அவை. அதோடு முழுமையாக ஒவ்வொரு வரியையும் வாசித்திருக்கவேண்டுமென்பதுமில்லை. நான் என் உரையில் சொன்னதுபோல தமிழகத்தின் மாபெரும் கலைக்கோயில்கள் எதையும் முழுமையாக நோக்கிய எவரும் இருக்கவியலாது

ஜெ

முந்தைய கட்டுரைஉள அழுத்தம் -கடிதங்கள்
அடுத்த கட்டுரைவாசல்பூதம்