விஷ்ணுபுரம் வெளிவந்த நாட்களில் பட்டாபி திருவாரூரில் பணியாற்றிக்கொண்டிருந்தார். அருண்மொழியின் உறவினரான வீரபாண்டியன் பட்டுக்கோட்டையில். இருவரும் தொலைபேசித்துறை ஊழியர்கள். தீவிரமான தொழிற்சங்கவாதிகள். அவ்வாறுதான் அவர்களுடன் பழக்கம். நானும் அப்போது தொழிற்சங்கத்தில் இருந்தேன்
என்.எஃப்…டி.இ. இந்திய [வலது] கம்யூனிஸ்டுக் கட்சிச் சார்புடைய தொழிற்சங்கம். அன்று தொலைபேசித்துறையின் முதன்மைத் தொழிற்சங்கமாக இருந்தது. இந்தியாவின் மாபெரும் தொழிற்சங்கங்களில் ஒன்று. ஐம்பதாண்டுகள் தபால்-தந்தித்துறை இரண்டுக்கும் பொதுவானதாக இருந்தது. 1984ல் இருதுறைகளும் பிரிந்தபோது வலுவிழந்தது. இந்திய [இடது] கம்யூனிஸ்டுகள் தனியாக உடைத்துக்கொண்டபோது மேலும் வலுவிழந்தது. தொழிற்சங்கங்கள் பல்வேறு வட்டாரக் கட்சிகளால் கைப்பற்றப்பட்டபோது மேலும் மேலும் சிதறியது.இன்று பெயரளவில் நீடிக்கிறது.
இன்று ஒட்டுமொத்தமாக தொழிற்சங்க இயக்கமே சோர்ந்த நிலையில் உள்ளது. தேசிய அளவில் ஒர் ஒருங்கிணைப்பே சாத்தியமில்லை என்ற நிலை. அதற்கு அத்தனை வட்டார அரசியல்கட்சிகளும் ஒத்துழைக்கவேண்டும். ஆகவே வரலாற்றில் இன்றிருப்பதுபோல தொழிலாளர்களின் பேரம்பேசும் சக்தி குறைவாக இருந்ததே இல்லை.
என்.எஃப்.பி.டி.இ என்ற பேரியக்கத்தின் தலைவராக நாற்பதாண்டுக்காலம் நீடித்தவர் ஓ.பி.குப்தா. அவர் இல்லையேல் அந்தத் தொழிற்சங்கம் இல்லை. சென்றதலைமுறைக்காரர். கடுமையான பிடிவாதம், தீவிரமான அர்ப்பணிப்பு, சமரசமில்லாத நேர்மை கொண்டவர். கூடவே தன்னை மையமாக்கி நினைப்பது, பிறர் சொற்களை செவிகொள்ளாமலிருப்பது போன்ற இயல்புகளும் உண்டு. அக்கால அப்பாக்களைப்போல. தன் அனுபவத்தாலும் தியாகத்தாலும் கேள்விக்கு அப்பாற்பட்டவராகத் திகழ்ந்தார்.
என்னுடைய பின் தொடரும் நிழலின் குரலில் வரும் கே.கே.எம் போல என்று சொல்லலாம். அவர்கள் அனைவருக்கும் ஸ்டாலின் முன்னுதாரணம். நான் ஓ.பி.குப்தா அவர்களை ஒருமுறை சந்தித்திருக்கிறேன். உயரமான மனிதர். அவர் என் தோள்மேல் கையை வைத்தபோது நான் அடைந்த நெகிழ்ச்சியை நினைவுகூர்கிறேன்.
இன்றைய பாகிஸ்தானில் லாகூர் அருகே கர்நாலில் ராம்லால் குப்தாவுக்கும் சோனாதேவிக்கும் மகனாக 08-04-1922 ல் பிறந்த ஓம்பிரகாஷ் குப்தா கர்நாலிலும் லாகூரிலும் கல்விகற்றார். பாதுகாப்புத்துறை ஊழியரானார். கம்யூனிஸ்டுக் கட்சிச் செயல்பாடுகளுக்காக 1942ல் நிரந்தரப் பணிநீக்கம் செய்யப்பட்டார். இந்திய கம்யூனிஸ்டுக் கட்சி பிரிட்டிஷ் அரசால் வேட்டையாடப்பட்ட காலம் அது. அதில் இணைந்து முழுநேரக் களப்பணியாளராக செயல்பட்டார் குப்தா
அக்காலத்தில்தான் தபால்- தந்தித் துறை ஊழியர்களுக்கான தொழிற்சங்கங்கள் அமைக்கப்பட்டன. இந்திய தந்தித் துறை ஊழியர் சங்கம் ஹென்றி பார்ட்டனால் அமைக்கப்பட்டது. தாராபாத முகர்ஜியால் தபால்துறை ஊழியர் சங்கம் உருவாக்கப்பட்டது. தபால்த்துறையின் கடைநிலை ஊழியர் சங்கம் வி.ஜி.தல்வியால் அமைக்கப்பட்டது. 1946ல் நடந்த முதல் தபால் தந்தித்துறை வேலைநிறுத்தம் அனைத்துச் சங்கங்களையும் ஒன்றாக்கியது. இந்தியத் தொழிற்சங்க வரலாற்றில் அது ஒரு பெருநிகழ்வு.
இக்காலகட்டத்தில்தான் ஓ.பி.குப்தா தொழிற்சங்க அரசியலுக்கு இந்திய கம்யூனிஸ்டுக் கட்சியால் அனுப்பப் பட்டார். அவர் பி.என்.கோஷ், கே.ஜி.போஸ் ஆகியோருடன் இணைந்து தொழிற்சங்கங்களை இணைக்கும்பொருட்டு பணியாற்றினார். கம்யூனிஸ்டுக் கட்சி தடைசெய்யப்பட்டபோது 14 மாதகாலம் சிறையில் இருந்தார். தொழிற்சங்க ஒருங்கிணைப்பை தன் வாழ்நாள் பணியாக ஏற்றுக்கொண்டார் குப்தா.அவ்வாறுதான் 1954 நவம்பர் 24 ஆம் தேதி NFPTE [National Federation of Postal and Telegraph Employes ] உருவானது.
இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சி இரண்டாகப்பிரிந்தபோது குப்தா வலது கம்யூனிஸ்டுக் கட்சியிலேயே நீடித்தார். அப்போதே தொழிற்சங்கத்திற்குள் இரு பிரிவுகள் உருவாயின. மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் குழு கேஜி.போஸ் அணி என அழைக்கப்பட்டது. ஆனால் குப்தாவின் ஆளுமை தொழிற்சங்கத்தை அவர் கையிலேயே வைத்திருந்தது. அதற்கு முக்கியமான காரணம் அடித்தள தபால் ஊழியர்கள் அவரை பெருந்தலைவராக எண்ணியது. தபால்துறையும் தொலைதொடர்புத்துறையும் பிரிக்கப்பட்டபோதே குப்தாவின் கை தாழத் தொடங்கியது . இடது கம்யூனிஸ்டுக் கட்சியின் தலைமையில் பிஎஸ்என்எல்யூ என்னும் அமைப்பு பிரிந்து உருவானது. என்.எஃப்.டிஈ சிறுத்தது. காலப்போக்கில் குப்தா கிட்டத்தட்ட முக்கியத்துவமிழந்து ஒதுக்கப்பட்டவராக ஆனார். 2013 ஜனவரி ஆறாம்தேதி குப்தா தன் 90 ஆவது வயதில் மறைந்தார். அது ஒரு மாபெரும் காலகட்டத்தின் முடிவு.
இன்று மிக விலகி வந்தபின் யோசிக்கையில் 1986 முதல் என்.எஃப்.பி.டியை கைப்பற்ற முயன்ற இடது கம்யூனிஸ்டுகளின் அணி [கேஜிபோஸ் அணி] குப்தா மேல் நிகழ்த்திய கடும் தாக்குதல்கள் உண்மையில் தொழிற்சங்கம் என்ற அமைப்பின் மீதான நம்பிக்கையையைத்தான் நிலைகுலையச் செய்தன என தெரிகிறது. அவதூறுகள், வசைகள், அவநம்பிக்கை பரப்புதல்கள் என பத்தாண்டுக்காலம் அந்த உட்போர் நிகழ்ந்தது யானையை வீழ்த்த பீரங்கிதான் தேவை என அதற்கு காரணம் சொல்லப்பட்டது.ஊழியர்நலன் என்பதைவிட இரு கம்யூனிஸ்டுக் கட்சிகளுக்கு இடையேயான பூசலே அதற்கு முக்கியமான காரணமாக இருந்தது. மெல்ல குப்தா அடுத்த தலைமுறையினரின் பார்வையில் அவருடைய மாபெரும் வரலாற்றுப் பாத்திரத்தை இழந்து சிறியவராகிக்கொண்டே சென்றார். ஆனால் வேறு எவரும் அவர் அளவுக்கு பேருருக் கொள்ளவுமில்லை. முப்பதாண்டுகளுக்குப்பின் அமர்ந்து சென்றகாலங்களை யோசிக்கையில் ஏக்கமும் ஒருவகையான வெறுமையும் உருவாகிறது. அரசியல்செயல்பாடுகள் அங்கே கொண்டு சென்று சேர்க்கும்போலும்.
பட்டாபியும் வீரபாண்டியனும் ஓ.பி. குப்தா அணியில் முக்கியமானவர்கள். குப்தாவின் தமிழக முகமாக இருந்த ஜெகன் அவர்களுக்கு அணுக்கமானவர்கள். பட்டாபி ஒரு சிறந்த மேடைப்பேச்சாளர் அதைவிட சிறந்த ஒருங்கிணைப்பாளர், அதைவிடச் சிறந்த பேச்சுவார்த்தை நிபுணர். திருவாரூரில் ஒருகாலகட்டத்தில் அவர்தான் தொலைதொடர்பு தொழிற்சங்கத்தின் முகம்.
பட்டாபி இருபதாண்டுகளுக்கு முன்பு எனக்கு நெருக்கமான நண்பராக இருந்தார். சொல்லப்போனால் மானசீகமான தலைவராக. ஊட்டி சந்திப்பு ஒன்றில் கலந்துகொண்டிருக்கிறார். அவருடைய ஒருங்கிணைப்பில்தான் பின் தொடரும் நிழலின் குரல் தோழர் ஜெகன் அவர்களால் சென்னையில் வெளியிடப்பட்டது. கம்யூனிஸ்டுக் கட்சிமேல் விமர்சனங்களை முன்வைத்த அந்நூலை அவர்கள் இருவருமே மேடையில் கடுமையாக விமர்சனம் செய்து பின் வெளியிட்டனர். பட்டாபி ஒரு விமர்சனக் கட்டுரையும் எழுதியிருந்தார்.
இப்போது ஓய்வுபெற்றபின் பட்டாபி சென்னையில் இருக்கிறார். ஒரு வலைப்பூ எழுதுகிறார். கட்டுரைகள் அவருடைய அரசியலார்வத்தை காட்டுவன. அவர் செய்யக்கூடிய பெரும்பணி ஒன்று உண்டு. தபால் தந்தித்துறை தொழிற்சங்கத்தின் வரலாற்றை உரிய தகவல்களுடன் சொந்த அனுபவங்கள் மற்றும் குப்தா, ஜெகன் போன்ற ஆளுமைகளின் சித்திரங்களுடன் சுவாரசியமான ஒரு நூலாக எழுதலாம். அதை தன் வலைப்பூவிலேயேகூட ஆரம்பிக்கலாம்
பட்டாபியின் வலைப்பூ
தோழர் ஜெகன் ஓர் ஆவணப்படம்