தழலெழுகை

muni

எழுதழல் வெண்முரசு நாவல் வரிசையின் பதினைந்தாவது படைப்பு. மகாபாரதப்போருக்கு முந்தைய காலகட்டமே இதன் களம். பாண்டவர்கள் கானேகலும் மறைவுவாழ்க்கையையும் முடித்து திரும்பிவந்து தங்களுக்கு சொல்லளிக்கப்பட்ட நாட்டைக் கேட்கிறார்கள். அதற்கு துரியோதனன் ஒப்பவில்லை. ஆகவே போர் சூழ்கிறது. அத்தருணத்தில் நிகழும் அணிமாற்றங்கள், அணிசேரல்கள், வஞ்சங்கள் ஆகியவையே இந்நாவலின் பேசுபொருள்

ஆனால் இந்த வஞ்சங்கள் பாண்டவர்களின் மைந்தர்கள் வழியாகச் சொல்லப்படுகின்றன. கௌரவர்களின் மைந்தர்களும் கர்ணனின் மைந்தர்களும் கிருஷ்ணனின் மைந்தர்களும் இந்நாவலில் கதைமாந்தர்களாக வளர்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவரின் ஆளுமையும் துலங்கி வருகிறது. இவர்களில் அபிமன்யூ அல்லாத பிறர் மகாபாரதத்தில் வெறும் பெயர்களாக வருபவர்கள். அவர்களின் ஆளுமையின் சித்தரிப்பினூடாக மகாபாரதத்தின் போர் சூழ்ந்தெழும் நிகழ்வுகள் சொல்லப்படுகின்றன.

ஏனென்றால் எல்லா போரும் அடுத்த தலைமுறையினரையே பெரிதும் பாதிக்கின்றன. மகாபாரதப்போரின் பலிகள் இம்மைந்தர்கள்தான். அவர்கள் தங்களுக்குரியதல்லாத போருக்குள் ஊழால் கொண்டுசெல்லப் படுகிறார்கள்.இந்நாவல் தொடரில் பீஷ்மர் இளைஞராக நகர்நுழைந்த காட்சி வந்தது. இவர்கள் நான்காவது தலைமுறையினர். காலம் இவ்வாறு ஓடி வந்து இவர்களை அடைந்திருக்கிறது. காலப்பெருந்தோற்றம் மகாபாரதத்தின் மெய்மைகளில் முதன்மையானது. வெண்முரசு மேலும் விரிவாக அதைச் சொல்கிறது.

இந்நாவலில் இளைய யாதவர் தன் யோக இருளில் இருந்து எழுகிறார். பாரதவர்ஷத்தின் புதிய யுகம் அங்கிருந்தே தொடங்குகிறது. பாணாசுரருடனான போர் ஒருவரை ஒருவர் ஏற்பதில் முடிவதே அந்த புதிய யுகத்தின் முதற்பெருநிகழ்வு.

இந்நாவலை ஒவ்வொருநாளும் சரிபார்த்து உதவிய சீனிவாசனுக்கும் சுதா சீனிவாசனுக்கும் நன்றி. மெய்ப்பு நோக்கும் ஜெயஸ்ரீ கோவிந்தராஜன் , செம்மைசெய்து உதவிய ஹரன் பிரசன்னா ஆகியோருக்கும் நன்றி.

இந்நாவலை நாராயண குருகுலத்தின் தலைவரும் என் பெருமதிப்பிற்குரிய ஆசிரியருமான முனி நாராயணப் பிரசாத் அவர்களுக்குச் சமர்ப்பணம் செய்கிறேன்

ஜெயமோகன்

வெண்முரசு விவாதங்கள்

http://venmurasudiscussions.blogspot.in

முந்தைய கட்டுரைபாலகுமாரன், சிற்றிதழ் -ஒரு விவாதம்
அடுத்த கட்டுரைபாவண்ணனைக் கொண்டாடுவோம்!