«

»


Print this Post

மாற்றுவெளி


 

 

 

சென்னைப்பல்கலை முனைவர் பட்ட ஆய்வு மாணவர்களின் முயற்சியால் நவம்பர் 2008 ஒன்றாம் தேதி முதல் ஒரு ஆய்விதழ் தொடங்கப்பட்டிருக்கிறது. மாற்றுவெளி என்று பெயர். சிறப்பாசிரியராக சென்னைப்பல்கலை தமிழ்த் துறைத் தலைவர் முனைவர் வீ. அரசு பொறுப்பேற்றிருக்கிறார். இது ஒரு குறிப்பிடத்தக்க தொடக்கம் என்று படுகிறது.

தமிழில் சிற்றிதழ்கள் இலக்கிய-பண்பாட்டு ஆய்வுக்கான வெளியை நிரப்பிக்கொண்டிருந்தன. இருபது வருடம் முன்புவரைக்கூட விரிவான ஆய்வுக்கட்டுரைகளை ஏந்தி சிற்றிதழ்கள் வந்துகொண்டிருந்தன. சுபமங்களாவின் வெற்றியைத்தொடர்ந்து சிற்றிதழ்கள் மெல்லமெல்ல நடுவாந்தர இதழ்களாக உருமாற்றம் அடைந்தன. அது ஒரு வளர்ச்சிதான். பெருவாரியான வாசகர்கள் உள்ளே வந்தார்கள். சமூக அரசியல் பிரச்சினைகளைப்பற்றிய விவாதங்கள் இவ்விதழ்களில் இடம்பெறலாயின. ஆனால் விரிவான பண்பாட்டு ஆய்வுகளுக்கான இடம் இல்லாமல் ஆயிற்று.

எந்த ஒரு சமூகத்திலும் ஊடகங்கள் எத்தனை வளர்ச்சி அடைந்தாலும் சிற்றிதழ்கள் இருந்துகொண்டிருக்கவேண்டும் என்று சொல்லப்படுவது இதனால்தான். ஆர்வமும் பயிற்சியும் உடைய சிலருக்காக மிக விரிவான ஆய்வுக்கட்டுரைகளையும் விவாதங்களையும் வெளியிடும் இதழ்கள்தான் ஒரு பண்பாட்டின் மையத்தைத் தீர்மானிக்கின்றன. அத்தகைய இதழ்களே தமிழில் இல்லை என்ற நிலை இப்போது உள்ளது. மாற்றுவெளி அந்த இடைவெளியை நிரப்பச் சாத்தியமான இதழ்களில் ஒன்று.

இன்றைய சூழலில் வணிகவெற்றிக்குச் சாத்தியமில்லாத இம்முயற்சியை முன்புபோல தனிநபர்களோ அல்லது சிறு நண்பர் குழுக்களோ நடத்துவது சாத்தியம் அல்ல. பல்கலை கழகங்கள் சார்ந்துதான் அம்மாதிரியான முயற்சிகள் செய்யபப்டவேண்டும். அமைப்புகளுக்கு நிதிச்சுமைகள் பெரிதாக இருக்காது. ஆயினும் பொதுவாக நம் கல்விப்புலத்தில் எதுவுமே நிகழ்வதில்லை. வாசிக்கும் பழக்கம் கொண்ட பேராசிரியர்களே குறைவு. ஆய்வு என்றபேரில் கேலிக்கூத்துக்கள்தான் பெரும்பாலான கல்விநிறுவனங்களில் நடந்துகொண்டிருக்கின்றன. 

முனைவர். வீ.அரசு அவர்களின் தலைமையில் சென்னை பல்கலைக்கழகத் தமிழ்த்துறை விதிவிலக்காகச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது என்று கேள்விப்பட்டு வருகிறேன். அவரை எனக்குத் தெரியாதென்றாலும் அச்செயல்பாடுகளுடன் தொடர்புள்ள வேதசகாய குமார் மற்றும் சில இளம் நண்பர்களை நான் அறிவேன். நவீன உரையாடல்களுக்கான கருத்தரங்குகள் அங்கே நிகழ்கின்றன. அதன் ஒரு பகுதியாக இந்த ஆய்விதழ்.

முதல் ஆய்விதழ் கால்டுவெல் சிறப்பிதழாக வெளிவந்திருக்கிறது. கால்டுவெல் பற்றிய இன்றைய தனிக்கவனத்தை உருவாக்கியவர் எம்.வேதசகாயகுமார். அவர் அந்த தொடக்க கட்ட அவதானிப்புகளை நடத்திய நாளில் இருந்தே தொடர்ச்சியாக மாதக்கணக்கில் அவரிடம் கால்டுவெல்லைப்பற்றி நான் உரையாடிக்கொண்டிருக்கிறேன். [என் லாப்ரடர் நாய்க்கு உடம்புசரியில்லாமல் சோர்ந்து கிடந்தபோது ஒரு நண்பர் சொன்னார், ”ரொம்பநேரம் உக்காந்து கால்டுவெல் சர்ச்சையை கவனிச்சிருக்கும், பாவம்”]

கால்டுவெல்லின் ‘திராவிடமொழிகளின் ஒப்பிலக்கணம்’ என்ற நூலின் முதல் பதிப்பை தற்செயலாக பார்வையிட நேர்ந்த வேதசகாய குமார் அதில் இருந்த சில பகுதிகள், குறிப்பாக பின்னிணைப்புகள், பிற்காலபதிப்புகளில் திட்டமிட்டு தவிர்க்கப்பட்டிருப்பதாகக் கண்டடைந்தார். அதைப்பற்றி என்னிடம் அவர் ஆவேசமாகச் சொன்ன நாட்களில் அது குறித்து விரிவாக எழுதும்படிச் சொன்னேன். எழுதுவதில் சோம்பல் மிக்க வேதசகாய குமார் சொல்புதிது நின்று ஒருவருடம் கழிந்த பின்னரே அக்கட்டுரையை எழுதினார்.

கால்டுவெல்லைப்பற்றிய இருவாசிப்புகள்  உள்ளன, ஒன்று ஆதிக்கச்சாதிகளின் கோணத்தில் நிகழ்த்தப்பட்ட் திராவிட இயக்கப் பார்வை என்றும் இன்னொன்று அடித்தள மக்களின் விடுதலைக்கு உதவியவர் என்ற கோணத்திலான பார்வை என்றும் இரண்டாம் பார்வையில் கால்டுவெல்லையும் அவர் சார்ந்த பிற ஆய்வுகளையும் மறுவாசிப்பு செய்ய வேண்டும் என்பதையும் வேதசகாயகுமாரின் தரப்பு என்று சுருக்கமாகச் சொல்லலாம். அதையொட்டியே இன்றைய விவாதங்கள் வளர்கின்றன. இப்போது இதே நோக்கில் வேதசகாயகுமார் இரேனியஸ் அய்யரைப்பற்றியும் விரிவாக ஆய்வுசெய்து வருகிறார்.

கால்டுவெல்லின் முக்கியத்துவம், பல தளங்களில் பிற்பாடு உருவாகி வளர்ந்த அடிப்படை கருத்துருவங்களை அவர்தான் உருவாக்கினார் என்பதுதான். ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ என்ற நூலின் மூலம் இந்திய மொழிகளில் திராவிட மொழிக்குடும்ப்ம் தனித்து இயங்கும் ஓர் அமைப்பு என்ற கருத்தை ஆய்வுலகில் நிறுவியவர் என நாம் அறிவோம். திருநெல்வேலி சரித்திரம் மூலம் நம்முடைய பிராந்திய வரலற்றாய்வுக்கான முன்வடிவை உருவாக்கியவரும் அவரே. தன் கல்வி நிறுவனங்கள் மூலம்  இந்தியத்தேவையையும் மேலைநாட்டு ஞானத்தையும் இணைத்து தேசியக்கல்விக்கான வரைபடச்சித்திரத்தை உருவாக்கியவரும் அவர்தான். ‘திருநெல்வேலி சாணார்கள்’ பற்றிய தன் நூல் வழியாக நம்முடைய இனவரைவியல் ஆய்வுகளுக்கான முன்வடிவத்தை உருவாக்கியவரும் அவர்தான்.

முன்னோடிகளைப்பற்றி ஒட்டியும் வெட்டியும் விரிவன விவாதங்கள் நிகழ்ந்தாகவேண்டும் என்பது ஒரு பண்பாட்டுச்சூழலின் கட்டாயம்.  ஆனால் அவ்வாறு தமிழில் நிகழவில்லை. ஒரு வரலாற்று அடையாளமாக அவரை வழிபட்டு நிலைநாட்டுவது மட்டுமே நிகழ்ந்தது. விதிவிலக்கு என்று குப்பம் திராவிடப்பல்கலையால் நிகழ்த்தப்பட்ட விரிவான ஆய்வுகளைச் சொல்லலாம். ஆனால் அவை பெரும்பாலும் ஆங்கிலத்தில் நிகழ்ந்து தமிழ்ச்சூழலுக்குச் சம்பந்தமே இல்லாமல் போய்விட்டன.

இன்று தொடகியிருக்கும் இவ்விவாதம் அவரைப்பற்றி அறிவதற்கான ஒரு தொடக்கம். இதில் ‘கால்டுவெல் என்னும் சிக்கல்’ [எம் வேதசகாயகுமார்] ‘கால்டுவெல்லின் திராவிடம்-ஒரு வாசிப்பு’ [வ கீதா] ‘கால்டுவெல் பின்காலனிய வாசிப்பு’ [ அ.மங்கை] ‘திராவிடஇயல் சிலகுறிப்புகள்’ [வீ அரசு] ‘கால்டுவெல் என்ற மனிதர்’ [தொ.பரமசிவன்]  போன்ற குறிப்பிடத்தக்க கட்டுரைகள் உள்ளன. பெரும்பாலும் கட்டுரைகள் ஒன்றையொன்று நிரப்பும் ஒரே குரலைக் கொண்டிருக்கின்றன என்பதனாலேயே விவாதச்சாத்தியங்கள் மிகக்குறைவாக உள்ளன என்பதை குறிப்பாகச் சொல்ல வேண்டும்.

செந்தில்பாபு,அ.சதீஷ்,பா.இளமாறன்,கா.அய்யப்பன்,ஜைனாப் பஷீர்,தே.சிவகணேஷ், ஐ.சிவகுமார், மு.நஜ்மா,க.செந்தில்ராஜா ஆகிய இளம் ஆய்வாளர்களின் குழு இதன் ஆசிரியர்ப்பொறுப்பில் இருக்கிறது. எதிர்காலத்தில் இவர்கள் தொடர்ச்சியான பங்களிப்பின் மூலம் தமிழில் புதிய ஆய்வுகளுக்கான களம் அமைப்பார்கள் என எதிர்பார்க்கலாம்.

[தொடர்பு [email protected]]

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: https://www.jeyamohan.in/1093

2 pings

  1. jeyamohan.in » Blog Archive » கடிதங்கள்

    […] கால்ட்வெல்லுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பது ஆச்ச்ரியமாக உள்ளது. கால்ட்வெல் துதி தமிழ் நாட்டில் அளவற்றது. நவீன தமிழக சமூக, கலாசார சூழலுக்கு அவர்தான் வித்திட்டார் போல பலர் பேசுகிறனர். மொழியியல் மொழிகளை சில பொது குணங்கள் வழியாக பாகுபாடு செய்து , மொழி “குடும்பங்களை” அமைக்கிறது. இதற்கு முன்னோடி விலங்கியல். எலும்பு, சதை, வால், மற்றும் இதற குணங்கள் வழியாக விலங்கு “குடும்பங்களை” விலங்கியலாளர் அமைக்கிறனர். ஆனால் புலியும், பூனையும் ஒரே ‘குடும்பம்’ என்ற விஞ்ஞான தீர்ப்பினால் பூனைக்கொ, புலிக்கோ ஒரு உதவியும் கிடைக்கப் போவதில்லை, ஒரு உபயோகமும், ஆதாயமும் இல்லை. அதைப் போல் தமிழ், பிராகுவி, குவி போன்றவை ஒரு ‘குடும்பம்’ என்ற துணிபு தமிழிக்கோ, தமிழ் க்லாசாரத்திற்க்கோ, தமிழ் சமுதாயத்திற்க்கோ ஒரு ஆதாயமும் இல்லை. பிராகுவிக்கும் ஒரு உபயோகமும் இல்லை. கால்ட்வெல் தன் மொ ழி ஆராய்ச்சிக்கு எல்ளிஸ் போன்ற மற்ற ஆராய்சியாளர்களை நம்பியிருந்தார். ஒரு அமெச்சூர் மொழியியலாளர், ஆங்கிலத்தில் எழுதிய புத்தகத்தை இவ்வ்ளவு மேடை மேல் ஏற்றி பூசிப்பது, 20ம் நூற்றாண்டின் தமிழ் கலாசாரத்தின் வரட்சியைத்தான் காட்டுகிறது. வ.கொ.விஜயராகவன் மாற்றுவெளி […]

  2. தமிழ் சிறுபத்திரிகைகள் « Snap Judgment

    […] Jeyamohan.com » மாற்றுவெளி: “சென்னைப்பல்கலை முனைவர் பட்ட […]

Comments have been disabled.