சிற்பக்கலை அறிய…

ganapathi

சிற்பச் செந்நூல் 

இந்துக் கலைகொள்கைகள் 

iwthu

இந்தியக்கலையும் ரசனையும் 

iwthiya

சிற்பக்கலை புகைப்படக் கலைஞர் மது ஜெகதீஷ்

இனிய ஜெயம்
இத்துடன் நான்கு சுட்டிகளை இணைத்துள்ளேன் . மூன்று நூல்கள் .ஒரு முகநூல் தளம் இவற்றுக்கான சுட்டிகள் . மூன்று நூல்களும் மக்கள் பயன்பாட்டுக்கு என அரசு அளித்தது .ஆகவே இலவசமாக தரவிறக்கிக் கொள்ளலாம் .

முதல் நூல் கணபதி ஸ்தபதி அவர்கள் எழுதிய சிற்பச் செந்நூல் . முன்னாள் முதலமைச்சர் எம் ஜி ஆர் மேற்பார்வையில்  வெளியான நூல் எனத் தெரிகிறது .  மூல நூல் ,வழி  நூல் என்ற அடிப்படையான இரு வகைமைகளில் இந்த நூல் வழி நூல் வகைமையில் அமைந்த நூல் . நாவல் கோட்பாடு எனும் கோட்பாட்டு நூல் , ஒரு புனைவு வாசகனுக்கு எதை அளிக்குமோ ,அதை ஒரு சிற்ப ரசிகனுக்கு அளிக்க கூடிய ,சிற்பங்கள் சார்ந்த கோட்பாட்டு நூல் .  சிற்பக்கலை பயில்வோர் துவங்கி சிற்பங்களை ரசிக்க  புகுவோர் வரை அனைவருக்கும் தேவையான [நூற்றுக்கும் மேலான விளக்கப் படங்கள் கொண்ட ] அடிப்படையான நூல் இது .   இலக்கியம் பயில அது நிகழும் மீ மொழி மீது எவ்வாறு பரிச்சயம் தேவையோ ,அப்படி சிற்பக்கலையை அறிய தேவையான அடிப்படைகளை கற்ப்பிக்கும் நூல் இது . ஆய்வாளர்கள் விரும்பினால் இந்த நூல் எடுத்தாண்ட மூல சிற்ப சாஸ்திர நூல்களான ,மயமதம் ,  சகளாதிகாரம்  போன்ற சம்ஸ்கிருத நூல்கள் அதன் தமிழ் மொழியாக்கத்துடன் இந்த நூலகத்திலேயே கோப்பு வடிவில் கிடைக்கிறது .

இரண்டாவது நூல் இலங்கை ஆய்வாளரான கிருஷ்ண ராஜா எழுதிய இந்துக் கலைகொள்கைகள் நூல் , இந்த சிற்பக்கலை நிற்கும் புருஷன் பிரகிருதி தத்துவம் துவங்கி ,கேசாதி பாதம் ஒரு சிற்பம் எவ்வாறு அமைகிறது என்பதன் அடிப்படைகளை அறிமுகம் செய்கிறது .இந்த சிற்பக்கலை எழுந்து வந்த ,சாக்தம் எனும் பண்பாட்டின் அடிப்படைகளையும் அறிமுகம் செய்கிறது .
மூன்றாவது நூல் மற்றொரு இலங்கை ஆய்வாளரான இன்பமோகன் வடிவேல் அவர்கள் எழுதிய இந்தியக் கலையும் ரசனையும் நூல் சிற்பி எனும் கலைஞன்  இந்த சிற்பக்கோட்பாடுகளுக்கு எவ்வாறு தனது மனோதர்மத்தை வெளிப்படுத்துகிறான் என்பதையும் , ஒரு சிற்ப ரசிகன் இந்த சிற்பங்களின் எந்த அலகுகளில் தனித்தன்மைகளில் கவனம் குவிக்க வேண்டும் என்பதையும் , சிற்பி எனும் கலைஞன் ,சிற்ப ரசிகன் இருவரது முரண் இயக்கத்தில் உருவாகி வரும் ரசனை சென்று தொடும் சாரம் இந்த மூன்று தளங்களை குறித்தும் இந்த நூல் பேசுகிறது .
முதலில் வருவது கோட்பாட்டு நூல் ,அடுத்த இரண்டும் இலங்கை ஆய்வாளர்கள் எழுதிய நூல் ,ஆகவே இதன் மொழியை சற்று  உழைத்தே அணுக உள்வாங்க  இயலும் . ரசனையை மேம்படுத்திக்கொள்ள ,கூர் தீட்டிக்கொள்ள விரும்புவோர் உழைக்கத் தயங்குவத்தில்லை .
மது ஜெகதீஷ்  சிற்பங்கள் மீது காதலுடன் , அதை தேடித்தேடி புகைப்படம் எடுத்து வருபவர் .இது அவரது முகநூல் தளம் . சிற்பங்களை புகைப்படம் எடுப்பது தனி கலை . முப்பரிமாணம் கொண்டு நம்முன் நிற்கும் சிற்பங்கள் ,புகைப்பட சட்டகத்தில் அதன் பரிமாணங்களை இழக்கும்போது ஒரு சிற்பம் அடிப்படையில் எதை அளிக்கறதோ ,அது தவறிய ஒரு வெளிறிய அடையாளமாவே பல சிற்பம் சார்ந்த புகைப்படங்கள் அமையும் .இந்த புகைப்பட கலைஞர் ,தனது கருவி மீது ஆளுமை கொண்டவர் ,சிற்ப ரசிகர் என்பதை இவர் எடுத்த புகைப்படங்கள் வழியே அறியலாம் . இவர் தளம் வழியே சிற்பக் காதலர்கள் களி உவகை கொள்ளும் பல சித்திரங்களை அடையலாம் . அவரை தொடர்பு கொள்ள தொலைபேசி எண்ணையும் அதில் இணைத்திருக்கிறார் .
 சிற்பக்கலை நோக்கி செல்லும் ஒரு ரசிகனுக்கு தேவையான அடிப்படைகள் அனைத்தும் கிட்டத்தட்ட முழுமையாக இந்த நான்கு சுட்டிகளும் அளிக்கிறது . உங்களது தளம் இந்தியக் கலை ,பண்பாடு சார்ந்த ஒரு பொக்கிஷம் , இந்தப் பதிவு வலையேறினால்  அந்த பொக்கிஷத்தில் மேலும் ஒரு ஒளிர் மணி என இந்த சுட்டிகள் அமையக் கூடும் .
கடலூர் சீனு
முந்தைய கட்டுரைரகசியப்பேய் -கடிதங்கள்
அடுத்த கட்டுரைமொழிபெயரியல்