மெலட்டூர் -கடிதங்கள்

melatur

மெலட்டூர் பாகவதமேளா

மெலட்டூர் அனுபவம் -ராஜகோபாலன்

 

அன்புமிக்க ஜெயமோகன்.

 

மெலட்டூருக்கு நீங்கள் வருவதாக தகவல் கிடைத்த நேரம் இரவு 12 தொடங்கிவிட்டது. அந்தச் செய்தியே எங்களுக்கு புதிய அதிகாலையைத் தொடங்கிவைத்துவிட்டது. உங்களைச் சந்திக்கப் போகிறோமென்ற தகவலை நானும் நண்பர் ஆடலரசனும் பகிர்ந்துகொண்டபோது பேசிய விஷயங்களை தங்களை சந்தித்ததுபோலாகிவிட்டது. ஏறக்குறைய முப்பதுவருடத்திற்கு முந்தைய உங்கள் கடிதங்களை கண்முன் நிறுத்திப்பார்த்தேன். அந்தக்காலத்தில் உங்கள் மீதான பிரமிப்பு உங்கள் அருகிலிருந்து பேசும்போதும்கூட அகலவில்லை இப்போதும். உங்களுக்கு திருமணம் ஆகிவிட்டது குழந்தைகள் வளர்ந்துவிட்டார்கள் என்பதையெல்லாம் அவ்வப்போது நான் அறிந்துவந்தாலும் அவர்கள் இவ்வளவு எளிமையாகவும் அன்பாகவும் இருப்பதை இப்போதுதான் நேரில் கண்டேன். அவசர அவசரமாக புறப்பட்டதில் எங்கள் வீட்டுப்பெண் அருண்மொழிநங்கையிடம் ஒருவார்த்தை பேசாமல் வந்துவிட்டோமே  என்ற வருத்தம்தவிர ஒருசேர எல்லா நண்பர்களையும் தங்களையும் நான் வாழும் தஞ்சையிலேயே சந்திதத்தில் மிகுந்த மகிழ்ச்சி. அடுத்தமுறை தஞ்சைவரும்போது கும்பகோணத்தில் எங்களோடு மட்டுமல்ல ஒரு இலக்கிய கூட்டத்திலும் பேசவேண்டும் என்ற வேண்டுகோளோடு நன்றியினையும் அன்பையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

 

அன்புடன்.

 

ஜி.பி.இளங்கோவன்.

ஜெ.ஆடலரசன்

 

அன்புள்ள இளங்கோவன், ஆடலரசன்,

 

உங்களைச் சந்தித்தது மிகுந்த மனநிறைவூட்டும் அனுபவமாக இருந்தாலும் இருவருமே என்னைப்போல வயதானவர்களாக ஆகிவிட்டிருந்தது அவ்வளவாக பிடிக்கவில்லை. ஆனால் என்ன செய்ய? காலம்! கும்பகோணம் கோயில்களும் குளங்களும் மட்டுமே அப்படியே இருக்கின்றன. மீண்டும் கண்டிப்பாகச் சந்திப்போம்

 

ஜெ

 

பெருமதிப்பிற்குரிய ஜெமோ.அவர்களுக்கு,

 

வணக்கம்.

 

மெலட்டூர் பாகவத மேளா பற்றிய தங்களின் கட்டுரையும், திரு.ராஜகோபாலனின் கட்டுரையும் மிக நன்றாக இருந்தது.குறிப்பாக அவரின் எழுத்தில்   “ஹ்ம்ம் …. இரணியனுக்கும், இராவணனுக்கும்தான் இப்படி மனைவிகள்  அமைகிறார்கள் எனும் கொடுமையை என்னவென்று சொல்ல  ? “ என்ற  அவதானிப்பை(!?) நான் வெகுவாக ரசித்ததேன்.நீங்கள் ஏற்கனவே நல்லிடையன்  நகர் கட்டுரையில் கூறியபடி தமிழகத்தின் முக்கியமான கோவில் திருவிழாக்களில்  நேரடியாக கலந்துகொண்டு தங்களின் அனுபவங்களை

எழுத்தில்  வடித்தால்,காலகாலங்களுக்கு போற்றும் பெரும் பொக்கிஷமாக அமையும் என்பது என் எண்ணம்.

 

அன்புடன்,

 

அ.சேஷகிரி   

 

 

அன்புள்ள சேஷகிரி

 

அது ஒரு ஆண்மைய நகைச்சுவை. பெண்களும் அப்படி எழுத ஆரம்பித்தால் நாம் நிறுத்திக்கொள்வோம்.

 

ஆனால் ஒர் உண்மையை குற்றங்களுடன் சம்பந்தப்பட்ட அனைவரும் சொல்வதுண்டு. பெருங்குற்றவாளிகளுக்கு அவர்கள்மேல் பற்றும்காதலும் கொண்ட மனைவியர் அமைவது சாதாரணம். அவர்களுக்காக வழக்குகள் நடத்துவதும் அவர்களே

 

அதன் உளவியல் எளிது. குற்றம் என்பது வீரமும்கூட. வீரம் ஆண்மைப்பண்பு என பொதுவாகக் கொள்ளப்படுகிறது. இரணியன் நாம் மரபாக பௌருஷம் என சொல்வன அனைத்தும் திரண்டவன் அல்லவா?

 

ஜெ

முந்தைய கட்டுரைகாடு -கடிதம்
அடுத்த கட்டுரைபாலகுமாரன், சிற்றிதழ் -ஒரு விவாதம்