மொழியாக்கம்- கடிதங்கள்

 

kuri
குறிஞ்சிவேலன்

 

இலக்கியமும் மொழியும்

 

அன்புள்ள ஜெயமோகன்,

தங்களின் இலக்கியமும் மொழியும் கட்டுரையில், “நாம் வாசித்திருக்கும் தல்ஸ்தோயும் தஸ்தயேவ்ஸ்கியும் அவ்வகையில் பாதிக்குமேல் நம் உருவாக்கங்கள். மூலமொழி அறிந்தவர் உள்ளத்தில் இருக்கும் சித்திரத்தை நம்மால் அடையமுடியாது” என்ற வரிகள் மொழியாக்க நூலைக்குறித்த சிறந்த அவதானிப்பு. இவ்வரிகள் என்னுள் பல்வேறு மனப்பாய்ச்சல்களை ஏற்படுத்தியது.

தன்னுடைய தெலைவிலிருக்கும் கவிதைகள் நூலில், “எவ்வளவு தேர்ச்சி கொண்ட மொழிபெயர்ப்பாளனாலும் நெருங்கவே முடியாத கவிதைகள் இருக்கின்றன. கடினமான கவிதைகள் மட்டுமல்ல, சில எளிமையான கவிதைகள் கூட. அர்த்தத்தைப் பிடித்த நிலையிலும் சில கவிதை வரிகளில், மொழிக்கு வசப்படாமல் நிற்கும் சூட்சுமங்களையும் அழகுகளையும் மொழிபெயர்க்க முடியாமல் போய்விடுகிறது. சமாளிக்கலாம்; ஆனால் சமாளிப்பது நல்ல மொழிபெயர்ப்பாகாது” என்று குறிப்பிடுகிறார் சுந்தர ராமசாமி.

 

சமாளிப்புகள் இல்லாத மொழியாக்க நூல்கள் தமிழில் அதிகம் வரவேண்டும்.

 

http://kesavamanitp.blogspot. in/2016/05/blog-post_28.html

 

அன்புடன்,

கேசவமணி

 

அன்புள்ள ஜெ

 

மொழியாக்கம் பற்றிய எந்த தேடலும் உங்கள் பக்கங்களுக்கு வருவதைக் கவனித்தேன். மொழியாக்கம் ஒரு நன்றிகெட்ட உழைப்பு. மூலநூல் பேசப்படும் அளவுக்கு மொழியாக்கம் பேசப்படுவதில்லை. என் நண்பர் சௌரி அக்னி நதி முதலிய நாவல்களை மொழிபெயர்த்தவர். அவரைப்பற்றி எவரேனும் ஏதாவது எழுதியிருக்கிறார்களா என்று தேடியபோது உங்கள் பக்கம்தான் வந்தது. மொழியாக்கமும் ஒரு பெரிய அர்ப்பணிப்புள்ள வேலை. அது மொழியை புதுமையாக்குகிறது. மொழியாக்கம் இல்லாவிட்டால் காலப்போக்கில் மொழி தேங்கி அழிந்துவிடும். மொழியாக்கத்தால் ஒரு வகையான டைனமிக் தன்மை மொழிக்கு உருவாகிறது. மலையாள மொழிபெயர்ப்பாளர்களின் பெயர்களையும் முகங்களையும் உங்கள் தளத்தில் கண்டது மகிழ்ச்சி அளித்தது

 

சுவாமிநாதன்

முந்தைய கட்டுரைபினாங்கு போர்க்காட்சியகம்
அடுத்த கட்டுரைஅமைதிப் பிரதேசத்தின் முயல்  :    ஹஸ்ஸான் ப்ளாஸிம்