ஊட்டி- வி என் சூர்யா

vn

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

ஊட்டி காவிய முகாம் மூன்று நாட்களும் உற்சாகத்தோடு கலந்துகொண்டேன், வீட்டுக்கு திரும்பிய போது பலவாறாக எண்ணங்கள் ஓடிக்கொண்டிருந்தன. இன்னும் உருப்படியாக எதையாவது செய்தாக வேண்டும். செளகர்யமான பிரதேசங்களை விட்டு வெளியேறியாக வேண்டும். இப்படியாக பல வேண்டும்கள். வெறுமையிலிருந்து ஒரு சிறிய விடுதலை அல்லது தேடியது கிட்டிய பின்னும் தேடல் தேடலாகவே எஞ்சியிருப்பதாக ஒரு சுவாரசியமான உணர்வு.

நடைபெற்ற அரங்குகள் பயனுள்ளதாக இருந்தன. கம்பராமாயணத்தை வாசித்துப் பார்க்க வேண்டும் என நினைத்துக்கொண்டேன். Muse / Context / Meaning என்ற வேறுபாடு, கவிதைக்கு தலைப்பிடுவதன் முக்கியத்துவம் போன்ற சில புரிதல்களை உருவாக்கிக்கொள்ள முடிந்தது. விவாத அரங்கிற்குள் மாட்டப்பட்டிருந்த நீட்ஷே, சார்த்தர், காந்தி, ஜார்ஜ் பெர்க்லி போன்றோரின் சித்திரங்கள் ஒரு வினோதமான மனநிலையை கிளர்த்திக் கொண்டேயிருந்தது. இந்திய அறிதல் முறை பற்றிய அரங்கும், கரமசோவ் சகோதரர்கள் பற்றிய அரங்கும் இன்னும் விரிவாக இருந்திருக்கலாம் எனத் தோன்றியது. அரங்கிற்கு வெளியே சுனில் கிருஷ்ணன், விஷால் ராஜா போன்றோருடன் சிறிது நேரம் என்றாலும் காந்தி, அனார்கிசம், அலன் போ, சென்னை நகர் உருவாக்கும் பதட்டம், இந்திய கவிதை என பயனுள்ள வகையில் கொஞ்சம் பேசிக்கொள்ள முடிந்தது. .

பெரும்பாலும் வீட்டில் உள்ள ஒரு அறை, அதைவிட்டால் நாட்கணக்கில் வீட்டை பதற்றமுறச்செய்யும் ஒரு பயணம். கல்லூரியிலும் இதற்கு ஒத்த நிலைதான், தனிமை என்னை பின்தொடர்ந்து வரும் பின்பு நான் அதை பின்தொடர்ந்து போவேன். அவ்வளவு எளிதாக யாருடனும் பழக முடிந்ததில்லை. ஒரு காரணமில்லாத பதற்றம்.  எவ்வளவு முன்தயாரிப்புகளோடு இருந்தாலும் ராக்கெட்டிலிருந்து ஒவ்வொரு பாகமாக கழன்று கீழே விழுவதைப் போலாகிவிடுகிறது. இவையெல்லாம் எங்கிருந்து என்னை நோக்கி வருகின்றன?  ஒருவேளை கூச்சமா ? இல்லை தயக்கமா ? இல்லை  பயமா? . முதலில் இம்மூன்றும் வேறுவேறல்ல என்பதை அங்கு வைத்தே கண்டறிந்துகொண்டேன். செயலின்மைக்கு அழைத்துச்செல்லும் வழிகாட்டிகளாக, செயலின்மையின் வெவ்வேறு உருவங்களாக அவை இருந்திருக்கின்றன, இருந்து வருகின்றன. இனிவரும் காலங்களில் இவற்றை எதிர்கொண்டாக வேண்டும், அதற்கு முன்னோட்டமாக தெளிவாக இல்லையென்றாலும் அங்கு பேசியது என்னளவில் எனக்கு மிகவும் முக்கியமானது. என்னை துல்லியமாக பார்த்துக்கொள்ள எனக்கு ஒரு வாயப்பு. வாய்ப்பளித்த உங்களுக்கு நன்றி.

வே.நி.சூரியா

***

அன்புள்ள சூரியா

அது நான் ஐந்து ஆண்டுக்காலம் இருந்த நிலை. காசர்கோட்டில் கடலோரம் அமைந்த அந்தச் சிறிய தனிவீட்டை இப்போதும் இருட்டும் தூசுமணமுமாக என்னால் அணுவணுவாக மீட்டுக்கொள்ளமுடியும். படைப்பியக்கத்தின் காலகட்டங்கள் மூன்று. நிறைய நுண்மைகள் உள்ளே நுழையும் காலகட்டம் முதலில். அப்போது செயலின்மை, அலைக்கழிதல், எதிலும் நிலைகொள்ளாமை இருக்கும். ஆர்வமிருக்கும் அளவுக்கு ஆக்கம் இருக்காது. ஆனால் அதை வெறியுடன் உடைத்தே ஆகவேண்டும். நெஞ்சுக்கும் கைக்குமான ஒர் ஒத்திசைவை அடைவது என அதை நான் குறிப்பிடுவேன். நினைத்ததை எழுதுமளவுக்கு மொழி பழகுதல். இங்கே எழுதிக்கொண்டிருக்கும் கணிசமானவர்களுக்கு மொழி கைவசப்படவில்லை. ஆகவேதான் தடுமாறுகிறார்கள். காலப்போக்கில் தாழ்வுணர்ச்சிகொண்டு அதை கசப்பும் காழ்ப்பும் போலி மேட்டிமைவாதமுமாக வெளிப்படுத்துகிறார்கள். மொழியைத் தேர்க, மொழியைப்பற்றிக்கொள்க. அதுவே இப்பருவத்தில் செய்யவேண்டியது. ஆகவே எழுதிக்கொண்டே இருங்கள். பேசமுடியும் தருணங்களிலெல்லாம் பேசுங்கள். உங்கள் பங்களிப்பு முகாமில் இருக்கவேண்டும் என நினைத்ததே நிங்கள் அங்கே பேசவேண்டும் என்பதற்காகத்தான்

ஜெ

முந்தைய கட்டுரைகண்ணகியும் மாதவியும்
அடுத்த கட்டுரைஉள அழுத்தம் பற்றி