கம்பன்,அரிக்கமேடு,பாண்டிச்சேரி

கம்பன் சிலை தேரழுந்தூர்
கம்பன் சிலை தேரழுந்தூர்

பாண்டிச்சேரி கம்பன் கழகம் 53 ஆண்டுகளாக தொடர்சியாகச் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தின் தொன்மையான கம்பன் கழகங்களில் ஒன்று. தனக்கென அரங்கும் அலுவலகமும் கொண்டது. மூன்று தலைமுறைகளாக நடந்துவரும் நிகழ்ச்சி என்பதனால் பாண்டிச்சேரியின் பெருமைமிக்க பண்பாட்டு நிகழ்வுகளில் ஒன்று இது. பெருந்திரளாக மக்கள் கலந்துகொள்ளும் ஒரு திருவிழா.

இதில் நான் கம்பனைப்பற்றிப் பேசவேண்டும் என்று நண்பர் அரிகிருஷ்ணன் கேட்டுக்கொண்டார். அமைப்பிலிருந்து அழைப்பு வந்தது. மெல்லிய உள உதறலுடன் அதை ஏற்றுக்கொண்டேன். ஆர்வம் ஒருபக்கம் இருந்தாலும் கம்பனைப்பற்றி நான் ஆற்றும் முதல் சொற்பொழிவு என்பதும், இமைக்கணம் எழுதிக்கொண்டிருப்பதன் உளச்சுமையும்  அச்சுறுத்தின. நடுவே மன்னார்குடி, மெலட்டூர், ஊட்டி என பயணங்கள். சினிமா வேலைகள். பேசிப்பார்ப்போம், எழும் சிக்கல்களை பின்னர் நோக்கிச் சீரமைத்துக்கொள்ளலாம் என எண்ணினேன்

பாண்டிச்சேரியோ கோவையோ மரபிலக்கியம், மதக்கொள்கைகள் சார்ந்த அரங்குகளில் உள்ள முதன்மைச்சிக்கல் அங்கே வந்து அமர்ந்திருப்பவர்கள் ஏற்கனவே இங்குள்ள நீண்ட மரபினால் பயிற்றுவிக்கப்பட்டவர்கள் என்பதுதான். பாடலை சொல்லுதல், பொருட்கோடல், கொள்கைகளை விளக்குதல் ஆகியவற்றில் மட்டுமல்லாது மேடையில் நிற்றல், மொழியை வெளிப்படுத்தல், சொல்லடுக்குமுறை என அனைத்திலும் சில முறைமைகள் இங்கே காலப்போக்கில் அமைந்துவிட்டிருக்கின்றன. அவற்றுக்கு அவர்கள் பழகி அதை எதிர்பார்த்து வந்திருப்பார்கள். அவர்களால் அதை மீறமுடியாது

Kambanadippodi_Colour[1]
காரைக்குடி சா கணேசன்

நவீன இலக்கியப் புலத்தில் இருந்து செல்லும் என்னைப்போன்ற ஒருவரிடம் அந்த இயல்புகள் எதுவுமே இருக்காது. நாங்கள் பேசும் மொழிநடை, மேடையில் வெளிப்படுத்தும் உடல்மொழி ஆகியவை முற்றிலும் வேறானவை. எங்கள் கலைச்சொற்களும் நாங்கள் குறிப்பிடும் நூல்களும் விளக்கும் கொள்கைகளும் அவர்கள் அறியாதவை. ஆகவே எங்கள் பேச்சு அவர்களுக்கு அயலானதாக, புரியாததாக இருக்கும். புரியாதவற்றை எதிர்கொண்டு முயன்றுநோக்கும் பொறுமையும் இருக்காது, தங்களுக்கு ஏற்கனவே நிறையத்தெரியும் என நினைப்பார்கள். ஆகவே எளிதில் புறக்கணித்துவிடுவார்கள்.

அனைத்தையும்விட மேடைகளில் பேசிப்பேசி தேர்ந்த பேச்சாளர்களுக்கு எங்கு குரல் எழவேண்டும், எங்கும் அமையவேண்டும், உச்சரிப்பு எப்படி தெளிவாக இருக்கவேண்டும், எங்கே இடைவெளி விடவேண்டும் , எங்கே வேடிக்கைகள் தேவை, எவ்வாறு விளக்கவேண்டும் என்றெல்லாம் நன்கு தெரியும். நான் மேடைக்கு இன்னமும்கூட பழகியவன் அல்ல. இப்போதும் கொஞ்சம் தடுமாற்றம் உண்டு. அது கடைசிவரை நீங்கவும்போவதில்லை. என் பேச்சை விரும்புபவர்கள் என் குரலுடனும் மொழியுடன் பழக்கம் கொண்டவர்கள். நான் சொல்வனவற்றிலும் முன் அறிதல் கொஞ்சம் உடையவர்கள்.ஆகவே பொதுவான கேள்வியாளர்களுக்கு என் பேச்சு ஒவ்வாது என்பதே என் எண்ணம். பொதுப்பேருரைகளுக்கு ஒப்புக்கொள்ளாமலிருப்பது இதனால்தான்.

இருந்தும் ஒரு முயற்சி செய்துபார்க்கலாமென்று தோன்றியது. நாள்செல்லச் செல்ல உதறல். என் இயல்புக்கு எதையும் செவிகொள்ளாத திரளிடம் பேச முடியாது. கதைகேட்க வருபவர்கள், வேடிக்கைகேட்டு சிரிக்க வருபவர்கள், மரபான தமிழ்ச்சுவைஞர்கள் ஆகியோர் கலந்த அரங்கில் என்ன எதிர்வினை இருக்கும் என குழம்பினேன். என் அறிவிப்பிலேயே ஆர்வமில்லாதவர்களைத் தவிர்க்க விழைந்து அறிவிப்பு அளித்திருந்தேன். ஆனால் முந்தையநாளே கிருஷ்ணன் கூப்பிட்டு ஆயிரம்பேருக்குக் குறையாமல் அரங்கிலிருப்பார்கள் என்றார். கிலியுடன் தான் சென்றேன்.

kam

பாண்டிச்சேரிக்கு வழக்கம்போல ஈரோடு, சென்னை, கோவை,சேலம், மயிலாடுதுறை போன்ற ஊர்களிலிருந்து முப்பது நண்பர்கள் வரை வந்தனர். அனைவருக்கும் தங்க ஒரு பள்ளி வளாகம் ஏற்பாடு செய்திருந்தார்கள். குளிர்வசதி செய்யப்பட்ட ஒரு பெரிய கூடம். பயணத்துக்கு பள்ளியின் வேன். ஹோட்டலறைகள், கார்கள் எல்லாம் கட்டுப்படியாகாத நிலை வந்துவிட்டது. பகல் முழுக்க நண்பர்கள் வந்துகொண்டிருந்தார்கள். முடிந்தவரை பேசாமலிருந்து குரலை காத்துக்கொண்டேன்.

அரங்குக்குச் சென்றபோது அங்கே ஆயிரம்பேருக்கும் மேலெயே இருந்தனர். ஏராளமான முதியவர்கள். இளைஞர்களில் பலர் எனக்காக வந்தவர்கள் எனத் தெரிந்தது. நான் நகைச்சுவையாகவோ கதைகள்வழியாகவோ பேசப்போவதில்லை என்பதை முன்னரே அறிவித்துவிட்டு பேசினேன். விரிவான, பல படிகளாக அமைந்த ஆய்வுரை. கலவையான அரங்காக இருந்தாலும் முழு அரங்கும் பெரிய சிக்கல்கள் இல்லாமல் கூர்ந்து கேட்டது பெரிய ஆச்சரியம். கலைவு இருந்துகொண்டிருந்தது முன்வரிசையில்தான். அது ‘பெரிய மனிதர்களுக்கான’ இடம். பெரியமனிதர்களைக் கண்டு பரவசமடையும் சிறியமனிதர்கள் முட்டிமோதும் களம்.பெரியமனிதர்களுக்கு பெரியமனிதர்களாக அல்லாமல் சிலநிமிடங்கள்கூட இருக்கத்தெரிவதில்லை. சிறியமனிதர்களுக்குப் பெரிய மனிதர்கள் அன்றி எதுவும் ஒரு பொருட்டே அல்ல.

Tkc

பொதுவாக அனைவரும் கவனித்தார்கள்.பாதிப்பங்கினருக்கு என்ன ஏது என புரிந்திருக்காது. ஆனால் வழக்கமான அணுகுமுறைகளுக்கு அப்பால் இப்படியும் சில உள்ளன என்று தெரிந்திருக்கும். கைதட்டல்கள் சிரிப்புகள் இல்லாத ஓர் உரையை அவர்கள் பலர் முதல்முறையாகக் கேட்டிருக்கக்கூடும். இத்தகைய உரைகள் நிறைய நிகழ்ந்தால் கம்பன் கழகம் மக்கள் பங்கேற்பு இல்லாமலாகும். அதன் நோக்கமே மக்கள்பங்கேற்புதான். ஆனால் ஐந்திலொரு பங்கேனும் இத்தகைய உரைகள் நிகழவில்லை என்றால் தேக்கம் நிகழும், புதியன தேடுபவர்கள் விலகிச்சென்றுவிடுவார்கள்.

கம்பன் வடவர்கதையை எழுதியவன், கம்பராமாயணம் மலிவான காமச்சுவை கொண்டது என்ற கோணத்தில் ஈ.வே.ராமசாமி அவர்கள் பேசிவந்தார். 1938ல் அவர் கம்ப ராமாயணத்தை தீவைத்து எரிக்கும் போராட்டத்தை தொடங்கினார். அதை ஆதரித்து சி.என்.அண்ணாத்துரை மேடைகளில் பேசினார். 09.02.1943 ல் சென்னை சட்டக் கல்லூரி மண்டபத்தில் ரா.பி.சேதுப்பிள்ளைக்கும் அண்ணாத்துரைக்கும் ஒரு பொதுவிவாதம் நிகழ்ந்தது. அடுத்தகட்டமாக  14.03.48 அன்று  சேலம் செவ்வாய்ப்பேட்டை தேவாங்கப் பாடசாலை மண்டபத்தில்,  சி.என்.அண்ணாதுரைக்கும்  எஸ்.சோமசுந்தர பாரதியாருக்கும் விவாதம் நிகழ்ந்தது. இவ்விவாதம் தீபரவட்டும் என்றபெயரில் சிறு நூலாக வெளிவந்தது. தொடர்ந்து கம்பனில் உள்ள காமச்சுவை மலிவானது என வாதிடும் கம்பரசம் என்ற நூலை அண்ணாத்துரை எழுதினார்.அன்றைய திராவிட இயக்கத்தின் எளிய அரசியல், பழமைவாத ஒழுக்கநோக்கு, மலிவான ரசனை ஆகியவை கொண்டவை இந்நூல்கள்

mumu

இவ்வியக்கம் பொதுவாகச் சூழலில் உருவாக்கிய எதிர்அலை கம்பனை அறியாத பெருவாரியான மக்கள் நடுவே கம்பனைப்பற்றிய எதிர்மறையான சித்திரத்தை உருவாக்கியது. இதனால் கம்பன் மேல் பற்றும் பயிற்சியும் கொண்டிருந்த அறிஞர்கள் உளம் வருந்தினர். காவியஇயலின் உலகளாவிய தனித்தன்மைகள், கவிதையை அணுகும் முறை ஆகியவற்றை பொதுமக்களிடையே முன்வைக்கவேண்டும் என்ற எண்ணம் அறிஞர்களுக்கு உருவானது. அதோடு கம்பராமாயணத்தை ஒரு மதநூலாக அன்றி இலக்கியமாக, பண்பாட்டுநூலாக வாசிக்கவேண்டும் என்ற செய்தியையும் கொண்டுசெல்ல விழைந்தனர்.

அந்த எண்ணத்தின் தொடக்கம் டி.கெ.சிதம்பரநாத முதலியார். தமிழ்ச்சூழலில் நவீன ரசனைமுறையில் கம்பனை மீட்டுக்கொண்டுவந்தவர் அவர். அவருடைய வழிகாட்டலுடன் காங்கிரஸ் களப்பணியாளராக இருந்து தீவிர அரசியலில் இருந்து விலகிய காரைக்குடி சா கணேசன் 1939 ஏப்ரல் 23 ஆகிய நாள்களில் இரசிகமணி டி. கே. சிதம்பரநாத முதலியார் தலைமையில் காரைக்குடியில் கம்பன் விழாவை நடத்தி, கம்பன் கழகத்தைத் தொடங்கினார். தமிழகமெங்கும் கிளைகள் விரித்துள்ள கம்பன்கழகம் இன்று ஒரு மிகப்பெரிய இலக்கிய இயக்கம். பிற்காலத்தில் திரு.மு.கருணாநிதி, அப்துல்ரகுமான் உட்பட திராவிட இயக்கத்தின் முதன்மை அறிஞர்கள் ஏறத்தாழ அனைவருமே கம்பன்கழகத்தில் கம்பனைப்போற்றி உரையாற்றியிருக்கிறார்கள். என் உரையில் டி,கெ.சி, சா.கணேசன், நீதிபதி மு மு இஸ்மாயீல்,நீதிபதி மகராஜன் உட்பட கம்பன் புகழ்பரப்பிய முன்னோடிகளுக்கு வணக்கம் தெரிவித்தேன்

ar

ஏறத்தாழ ஒருமணிநேரம் பேசினேன். கம்பனின் பின்னணி , அவன் காவிய இயல், அக்காவியத்தை வாசிக்கவேண்டிய இன்றைய கோணம் ஆகிய மூன்று தளங்களில் என் கருத்துக்களைச் சொன்னேன். என்பேச்சில் நான் கண்ட குறை முதன்மையாக பாடல்களை நினைவிலிருந்து சொல்லமுடியாதது. நோக்கி வாசித்தபோது ஒழுக்கு குறைபட்டது. உள்ளூர இருந்த பதற்றத்தால் நினைவிலிருந்து பாடல் உடனடியாக எழவில்லை. ஒரு வரி தடுக்கிவிட்டால் பதற்றத்தில் மொத்தப்பாடலுமே மறைந்துவிட்டது. இனி பேசுவதென்றால் சிலமாதங்களுக்கு முன்னரே பாடல்களை நினைவில் பதித்துக்கொள்ளவேண்டும். சில இடங்களைச் சுருக்கமாகத் தொட்டுச்சென்றேன், விளக்கியிருக்கலாம் என்பது இன்னொரு குறை.

அன்று உரைமுடிந்ததும் நேராக பாண்டிச்சேரி கடற்கரைக்குச் சென்றோம். அரங்கிலிருந்த ஐம்பது நண்பர்கள் உடன்வந்தனர். இரவு எட்டரை கடற்கரையில் மாங்காய் தின்றபடி மணிவரை பேசிக்க்ண்டிருந்தோம். பின்னர் அறைக்குவந்து இரவு 11 மணிவரை பேசிக்கொண்டிருந்தோம். இலக்கியம், ஆன்மிகம் என்று பேச்சு புதிய நண்பர்கள் அபி,  கிருஷ்ணா ஆகியோரின் கேள்விகளிலிருந்து விரிந்துசென்றது.

பேராசிரியர் ரவிச்சந்திரன்

மறுநாள் காலையில் ஒரு சிறிய நடை. அதன்பின் அரிக்கமேடு தொல்லியல் அகழ்நிலத்திற்குச் சென்றோம். அங்கே ‘பார்ப்பதற்கு’ ஏதும் இல்லை. அரிக்கமேடு பற்றி அறிந்தவர்கள் அந்த இடத்தை பார்க்கலாம், ஓர் அனுபவத்துக்காக. தாகூர் கலைக்கல்லூரியில் வரலாற்றுதுறை பேராசிரியரும் அகழ்வாய்வாளருமான ரவிச்சந்திரன் உடன் வந்து அரிக்கமேட்டின் வரலாற்றை மிக விரிவாக எடுத்துரைத்தார். அரிக்கமேட்டில் இரண்டாம்கட்டமாக நடந்த விமலா பேக்லே குழுவின் அகழ்வாய்வில் பங்கெடுத்தவர். ஆரோவில்லில் விரிவான அகழ்வாய்வுகளை நடத்தி இப்போதுதான் நிறைவுசெய்திருக்கிறார்.

அரிக்கமேடு ஏறத்தாழ இரண்டாயிரத்து இருநூறு ஆண்டு தொன்மைகொண்ட ஒரு கடலோர ரோமானிய வணிகக்குடியிருப்புப் பகுதி. அதாவது கீழடிக்குச் சமானமான காலம். இது சங்க இலக்கியங்கள் சொல்லும் மருவூர்ப்பாக்கம். யவனர்களின் கப்பல்களில் வந்திறங்கும் வணிகப்பொருட்களை கரையில் கொண்டுவந்து சேமிக்கும் பண்டகசாலைகள் இங்கிருந்தன. அவர்கள் இங்கிருந்து கொள்முதல் செய்த பொருட்களில் முக்கியமானது கல்மணிகள். சிவப்புக்கல், வெண்கல், கண்ணாடிக்கல் மணிகள் இங்கிருந்து சென்று ஐரோப்பா முழுக்க மிக விரும்பப்பட்டுள்ளன. கற்களை கைகளால் உருட்டி உருட்டி மணிகளாக ஆக்கும் தொழில் அரிக்கமேட்டில் தழைத்தது. ஒரு கட்டத்தில் அரிக்கமேட்டைச் சுற்றி கல்மணிகளின் தொழிற்சாலைகள் செறிந்து அது ஒரு நகரமாகவே ஆகியது.

ஐந்தாம் நூற்றாண்டுவரை அரிக்கமேட்டில் அயல்வணிகம் நீடித்தது.பின்னர் அது மெல்ல தேய்வுறத் தொடங்கி ஏழாம்நூற்றாண்டில் கைவிடப்பட்டது. மக்கள் கிளம்பிச்செல்ல அது சிற்றூராகி, மண்மேடாகி மறைந்தது . எவர் நினைவிலும் அது நிலைகொள்ளவில்லை. தமிழிலக்கியங்களில் அரிக்கமேடு பற்றிய குறிப்புகள் இல்லை. நம் வரலாற்றின் தெளிவான பதிவுகள் ஏழாம் நூற்றாண்டில் பல்லவர் காலத்திற்குப் பின்னர்தான் . அப்போது அரிக்கமேடு முழுமையாகவே மறக்கப்பட்டிருந்தது. இவ்வூரின் அன்றைய பெயர் என்ன என்பதுகூடத் தெரியவில்லை. அரிக்கமேடு பெரும்பாலும் களப்பிரர் ஆட்சிக்காலத்தில்தான் உச்சத்தில் இருந்திருக்கிறது. நமக்கு களப்பிரர் ஆட்சிக்காலம் பற்றி இன்று சொல்லும்படி எதுவுமே தெரியாது.

அரியாங்குப்பம் ஆற்றின் கரையில் இந்த இடம் அமைந்துள்ளது, ஆறு கடலைச் சந்திக்கும் இடத்தில் காயல்நீர் தேங்கி கலங்கள் உள்ளே வரும்படி ஆழமாக அமைந்திருக்கிறது. இப்போது, சுனாமிக்குப்பின்னர் அங்கே அலையாத்திக்காடுகளை அமைத்துள்ளது அரசு.அருகர் குப்பம் என்ற சொல்லின் மரூஉ தான் அரியாங்குப்பம் என்கிறார்கள். இங்கே சமண, பௌத்த சமயச்சின்னங்கள் கிடைத்துள்ளன. கிபி ஒன்றாம்நூற்றாண்டுவாக்கில் பெரிப்ளூஸ், தாலமி போன்ற மாலுமிக்குறிப்புகளில் பொதுக்கை என சொல்லப்பட்டது இந்தத் துறைமுகம்தான் என அடையாளம் காணப்பாட்டுள்ளது.

ஜெண்டே
ஜெண்டே

பொதுக்கை என்றால் அன்று இப்பகுதியை ஆண்ட வேளிர் அரசர்களின் பொதுக்கூட்டிடம் என்ற சொல்லில் இருந்து வந்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இப்பகுதியின் பெயர் வீராம்குப்பம் என்றிருப்பதைக் கொண்டு இது வீரைவெளி என்று முன்பு அழைக்கப்பட்டது என்றும் வீரைவெளியனார் போன்ற சங்ககாலக் கவிஞர்கள் இந்த இடத்தைச் சேர்ந்தவர்களே என்றும் சிலர் எழுதியிருக்கிறார்கள். இவை எல்லாமே மேலோட்டமான ஊகங்கள், மொழியியல் ஆய்வுமுறைமையை கொண்டவை அல்ல.

அரிக்கமேட்டுடன் தொடர்புடைய முக்கியமான பெயர் லா ஜெண்டே [Guillaume Le Gentil ] . ஜெண்டில் என்று சொல்லிக்கொண்டிருந்தோம். ரவிச்சந்திரன் ஜெண்டே என்றார். அவர் சொன்ன உச்சரிப்பை தமிழில் சரியாக எழுதமுடியாது. இன்று ஒரு இதிகாசகதாபாத்திரத்திற்கு நிகரான தொன்மமாக கருதப்படும் ஜெண்டே ஒரு வானியலாளர். 1761 ல் ருஷ்ய வானியலாளர் மிகையில் லோமென்ஸோவ் [Mikhail Lomonosov] பூமியின் பல முனைகளிலிருந்து வெள்ளி கோளின் சுழற்சிவட்டத்தை அளவிடுவதனூடாக சூரியனின் விட்டத்தை கணக்கிட்டுவிடலாம் என மதிப்பிட்டு  ஓர் உலகளாவிய திட்டமுன்வரைவை உருவாக்கினார். ஜெண்டே அத்திட்டத்தின்படி பாண்டிச்சேரிக்கு வந்தார். ஆப்ரிக்கா வழியாக, மொரிஷியஸ் சென்று பாண்டிச்சேரிக்கு அவர் வந்த அப்பயணம் பலவகையான சாகசங்கள் கொண்டது. பாண்டிச்சேரிக்கு வந்து அவர் காத்திருந்தார், ஆனால் குறிப்பிட்டநேரத்தில் வெள்ளியை பார்க்கமுடியவில்லை. அவருடைய அப்பயணத்தைப்பற்றி நிறைய எழுதப்பட்டுள்ளது. அவரை வானியலின் மாபெரும் துன்பியல்நாயகன் என்பார்கள். வானியலிலும் பயணத்திலும் ஆர்வம் கொண்ட கிருஷ்ணனின் மானசீக கதாநாயகன் ஜெண்டே. ஆனால் அவரும் ஜெண்டில் என்றுதான் சொல்லிக்கொண்டிருந்தார்

.

ஜெண்டே பாண்டிச்சேரியில் இருக்கும்போது அரிக்கமேட்டு பகுதியில் உலவும் வழக்கம் கொண்டிருந்தார். அப்போது இந்த இடம் விராம்பட்டினம் என்று சொல்லப்பட்டது. இங்கே தரமான தொன்மையான செங்கற்கள் இருப்பதாகவும் ஊர்க்காரர்கள் அகழ்ந்தெடுப்பதாகவும் முன்னரே பதிவுசெய்யப்பட்டிருந்தது. அச்செங்கற்களை அகழ்ந்து பயன்படுத்தி இங்கே Missions Etrangers என்ற கிறித்த அமைப்பால் ஒரு மடாலயம் கட்டப்பட்டது. பிஞ்ஞோ தெ பெகெய்ன் என்னும் கிறித்தவ மதகுரு இங்கே தங்கியிருந்தார் என்று சொல்லப்படுகிறது. அந்த இல்லத்தின் முகப்பு மட்டும் இப்போது உள்ளது. செங்கல்லால் கரைகட்டப்பட்ட கிணறும் காணப்படுகிறது. அந்த மடாலய வளாகத்தில் உலவுகையில் அங்கே கண்டெடுத்த பொருட்கலை கடற்கரைச் சிறுவர் விற்பதைக்கண்டு வாங்கிய ஜெண்டே அகஸ்டஸ் சீசரின் தலைகொண்ட ஒரு நாணயத்தைக் கண்டடைந்தார். உலகமெங்கும் ரோமன் நாணயங்களுக்கான தேடல் அன்று நடந்துகொண்டிருந்தமையால் ஜெண்டே ஆச்சரியமடைந்து அதைப்பற்றிய ஒரு குறிப்பை எழுதினார். ஆனால் அந்த நாணயம் பின்னர் எங்கும் தென்படவில்லை என்று ரவிச்சந்திரன் சொன்னார். ஜெண்டே தொல்லியலாளர் அல்ல என்பதனால், இந்திய தொல்லாய்வுக்களங்கள் அன்று தெளிவுறவில்லை என்பதனால் , அக்குறிப்பு கவனிக்கப்படவில்லை

அரிக்கமேடு மேலும் இருநூறாண்டுக்காலம் உள்ளூர்காரர்களால் சூறையாடப்பட்டது . மீண்டும் அதே வரலாறு. 1937 ஆம் ஆண்டு புதுசேரி பிரெஞ்சுக்கல்லூரி பேராசிரியரான ஜோ துப்ரோய் [ Jouveau Dubreuil ] என்ற ஆய்வாளர் அரிக்கமேட்டில் மீனவச்சிறுவர்கள் விற்றுக்கொண்டிருந்த அரும்பொருட்கள் சிலவற்றை வாங்கினார். அவற்றை ஆராய்ந்து அவை ரோமாபுரிக் காலகட்டத்தைச் சேர்ந்தவை என பிரெஞ்சு அரசுக்கு ஒரு குறிப்பை எழுதினார். அரிக்கமேடு மீண்டும் கண்டடையப்பட்டது. அக்குறிப்பின் அடிப்படையில் பிரெஞ்சு அரசின் ஆணைப்படி அரிக்கமேட்டில் முதல் தொல்லியலாய்வு நிகழ்த்தப்பட்டது. அது அதிகாரிகளால் நடத்தப்பட்ட பொதுவான அகழ்வு. திருதந்தை ஃபாஞ்சே [Father Fancheux] ரேமண்ட் சுர்லே [Raymand Surleau ] ஆகிய இருவர் தலைமையில் ஓர் அகழ்வாய்வு நிகழ்த்தப்பட்டது. அவர்கள் பயிற்சிபெற்ற தொல்லியலாளர்கள் அல்ல.

ஆனால் அவர்களின் ஆய்வுமுடிவுகள் இந்திய தொல்லியல் ஆய்வுத்துறை தலைவராக இருந்த பிரிட்டிஷ் தொல்லியலாளர் மார்ட்டிமர் வீலரை கவர்ந்தன.1945ல் மார்டிமர் வீலர் பிரெஞ்சு தொல்லியலாலர் ஜேன் மாரி காஸல் உதவியுடன் நிகழ்த்திய தொல்லியல் ஆய்வில் இங்கே ஏராளமான கல்மணிகள், பானை உடைசல்கள், நாணயங்கள் கிடைத்தன. மார்ட்டிமர் வீலர்தான் அரிக்கமேட்டின் காலகட்டத்தை நான்கு படிநிலைகளாக வகுத்து நிர்ணயம் செய்தவர். தென்னகத்திலிருந்த ரோமாபுரித் தொடர்பை நிறுவும் தொல்லியல் சான்றுகள் அவை என வரையறைசெய்தவர்.

மார்ட்டிமர் வீலர்
மார்ட்டிமர் வீலர்

பொதுவாக அன்றைய காலனியாதிக்கவாதிகளில் பிரிட்டிஷாருக்குத்தான் தொல்லியல் ஆர்வமும், தொல்கலைச் செல்வங்களைப் பேணவேண்டும் என்ற பொறுப்பும் இருந்தது. பிரெஞ்சுக்காரர்கள், டச்சுக்காரர்கள், போர்ச்சுக்கீசியர் உட்பட பிறர் அதில் பெரிய ஆர்வம் காட்டவில்லை.போர்ச்சுக்கீசியர்கள் ஆண்ட கோவாவில் பண்டைய ஆலயங்கள் அரசாணைப்படி இடிக்கப்பட்டன. பிரெஞ்சுக்காரர்கள் பாண்டிச்சேரியில் வேதபுரீஸ்வரர் ஆலயத்தை இடித்தனர். மாறாக பிரிட்டிஷ்காரர்கள் தஞ்சைபெருவுடையார் ஆலயம் முதல் கொனார்க் சூரியர் கோயில் வரை இந்தியாவின் தொன்மையான கலைநிலைகளை பேணினர், மீட்டமைத்தனர். சிந்துசமவெளி பண்பாடு உட்பட நம் தொல்வரலாற்றை அகழ்ந்தாய்ந்து அடிப்படைகளை வரையறைசெய்தளித்தனர்.

அதோடு பிற ஐரோப்பியர் ஆண்ட நிலங்களிலுள்ள தொல்லியல்நிலைகளை பேணுவதற்கு அவர்களுக்கு அழுத்தமளித்தனர் பிரிட்டிஷார்.இந்தோனேசியாவின் பரம்பனான் ஆலயம், போராபுதூர் பௌத்த தூபி போன்றவை எரிமலைச் சாம்பல்மூடி பாழடைந்து கிடந்தபோது பிரிட்டிஷார் அளித்த நெருக்கடியினாலேயே டச்சுக்காரர்கள் அதை மீட்டெடுக்க ஒப்புக்கொண்டனர். பெரும்பாலும் பிரிட்டிஷாரின் நிதியுடனும் துணையுடனும்தான் அந்த உலகக் கலைச்செல்வங்கள் மீண்டு வந்தன. அரிக்கமேடும் அவ்வாறு பிரிட்டிஷ் தலையீட்டால்தான் முறையான தொல்லியலாய்வுக்குள் வந்தது. குறிப்பாக இந்திய வரலாறு மார்ட்டிமர் வீலருக்கு பட்ட கடன் சிறிதல்ல [ஆனால் மார்ட்டிமர் வீலர் பற்றி ஒரு விக்கிப்பீடியா குறிப்புகூட தமிழில் இல்லை என்பது தேடியபோது தெரிந்தது.]

இது ரோமானிய குடியிருப்பு என்பதை நிறுவுவது அவர்கள் உணவுண்ணும் அரிய கலங்களின் உடைசல்கள் கிடைத்திருப்பதுதான். மிக அரிய நீலக்கல் ஜாடியின் துண்டுகள் கிடைத்துள்ளன. ரோமிலிருந்து ஒயின், பதப்படுத்தப்பட்ட மீன் போன்றவை இங்கே கொண்டுவரப்பட்டது அவையிருந்த ஜாடிகளின் உடைசல்களில் உள்ள முத்திரைகள் வழியாக நிறுவப்பட்டுள்ளது. வெவ்வேறு காலகட்டங்களைச் சார்ந்த ஏராளமான ரோமானியப் பொன் நாணயங்கள் கிடைத்துள்ளன. தமிழகத்திற்கும் ரோமுக்குமான வணிகத்தை நிறுவும் ஆதாரங்கள் இவை. அதோடு அரிக்கமேடு வணிகநகராக உருவாவதற்கு முன்பத்தைய காலத்தைச் சேர்ந்த முதுமக்கள் தாழிகளும் கிடைத்துள்ளன.

1989 முதல் 1992 வரை விமலா பேக்லே இங்கு அடுத்தகட்ட ஆய்வுகளை செய்தார். அரிக்கமேடு ஏறத்தாழ எழுநூறாண்டுக்காலம் சிறப்புடன் இருந்தது நிறுவப்பட்டது. இங்கு கிடைத்துள்ள சிறு பானை உடைசல்கள், நாணயங்களைக் கொண்டு வரலாற்றை எழுதும்பணி அறிஞர்கள் நடுவே விவாதமாக தொடர்ச்சியாக நிகழ்ந்து வருகிறது. ரவிச்சந்திரனும் சில ஆய்வுக்கட்டுரைகளை எழுதியிருக்கிறார்.

இன்று அரிக்கமேட்டு அகழ்வுக்களம் மீண்டும் மண்போட்டு மூடப்பட்டு பாதுகாக்கப்படுகிறது. முப்பது ஏக்கர் நிலம் தொல்லியல்துறையால் வளைக்கப்பட்டு பாதுகாக்கப்படுகிறது. சூழ்ந்திருக்கும் நிலத்தில் மேலும் முப்பது ஏக்கர் பகுதி அவ்வாறு கைப்பற்றப்படு பாதுகாக்கப்படவேண்டும் என்று ரவிச்சந்திரன் சொன்னார். அரிக்கமேடு தொடர்ந்து அப்பகுதியில் வேளாண்மை செய்பவர்களால் அழிக்கப்பட்டுள்ளது. முறையற்ற அகழ்வாய்வு, விவசாயிகள் இயந்திரங்களைக்கொண்டு மண்ணை நிரவியமை காரணமாக மண் அடுக்கு குலைந்து காலம் கணிப்பதில் மிகப்பெரிய இடர் உள்ளது. சமீபத்தில்கூட ஒரு வேளாண்நிலத்தில் கரையோர மண் பல அடி ஆழத்திற்கு அள்ளி ஆற்றுக்குள் சரிக்கப்பட்டு தொல்லியல்சான்றுகள் அழிந்தன என்று ரவிச்சந்திரன் சொன்னார்.

தமிழகத்தில் தொல்லியல் என்பது மக்களுக்கு ஆர்வமே அற்ற ஒரு ரகசிய உலகம். மக்கள் அதைப் பொருட்படுத்துவதே இல்லை. எந்த அரிய இடமும், எந்த கலைப்பொருளும் மக்களால் நுகர்வின்பொருட்டு ஈவிரக்கமில்லாமல் அழிக்கப்படும். தமிழகம் முழுக்க அப்படி கைவிடப்பட்டும் சூறையாடப்பட்டும் அழியும் இடங்கள் ஏராளம். இன்னொருபக்கம் எந்த ஒரு தொல்லியல்சான்றும் ‘தமிழர்பெருமை’ க்கானதாகவும் அதை எவரோ மறைப்பதாகவும் ஒரு மனப்பிராந்தி இங்கே அரசியல்வாதிகளான பேச்சாளர்களுக்கு உள்ளது. அரிக்கமேடு குறித்து இணையத்தில் அப்படி பலகுறிப்புகள் கண்ணில்பட்டன – மறைக்கப்படும் அரிக்கமேட்டு உண்மைகள், என்றெல்லாம். ஆனால் அரிக்கமேடு பற்றி ஒரு நல்ல விக்கிபீடியா பதிவுகூட இல்லை. எங்கிருந்தோ சம்பந்தமில்லாமல் வெட்டி ஒட்டப்பட்ட ஒர் அரைகுறைக் குறிப்புதான் உள்ளது. விக்கியில் உள்ள ஓரளவுநேர்த்தியான ஆங்கிலப்பதிவை தமிழாக்கம் செய்து போடக்கூட இங்கே ஆளில்லை. இதுவே இங்குள்ள நிலைமை

ar
அரிக்கமேட்டில் கிடைத்த சிறுவன் சிலை

அரிக்கமேடு எழுப்பும் வினாக்கள் அரைவேக்காட்டு அரசியலால் அல்லாது மெய்யான தொல்லியல், பண்பாட்டு ஆய்வாளர்களால் எதிர்கொள்ளப்படவேண்டியவை. தொல்தமிழகம் முழுக்க யவனர்களின் வணிகத்தொடர்பு இருந்துள்ளது. ஆனால் ஏன் ரோமானியர்களின் பண்பாடுடன் தமிழகம் உரையாடியமைக்கான தெளிவான சான்றுகள் ஏதுமில்லை? ஏன் ரோமானிய அரசர்கள், தெய்வங்கள், சிந்தனையாளர்கள், ஊர்கள் தமிழிலக்கியங்களில் குறிப்பிடப்படவே இல்லை? யவனரும் சோனகரும் நம்முடன் கடல்வணிகம் செய்திருந்தனர், ஆனால் நாம் கடல்வணிகத்தில் எங்கிருந்தோம்? நம் கப்பற்கலை, கடற்பயணம் குறித்த நூல்கள் ஏன் ஒன்றுகூட இல்லை? ரோமானியர் உலகமெங்கும் சென்று வணிகம் செய்தனர். அவர்களின் ஒரு முகாம் மட்டுமே அரிக்கமேடு. அவர்கள் பிற ஊர்களிலிருந்து இங்கு கொண்டுவந்தது என்ன?

14 ஆம் தேதி மதியமே சென்னை நண்பர்களுடன் சென்னைக்குச் சென்று கிரீன்பார்க் ஓட்டலில் வழக்கமான அறையில் தங்கினேன். பகல் முழுக்க வெயிலில் அலைந்ததை அறைக்குள் சென்றபின்னரே உணர்ந்தேன். உடல் எரிந்துகொண்டே இருந்தது. நான்குமுறைக்குமேல் நீராடி உடலெல்லாம் தண்பசை பூசியும் தூங்க முடியவில்லை. ஜெண்டே பற்றி இணையத்தில் வாசித்துக்கொண்டிருந்தேன். திடீரென ஓர் எண்ணம். கரியதோல் கொண்ட நமக்கே பாண்டிச்சேரியின் வெப்பம் இப்படி அனலென இருக்கிறது. பிரெஞ்சுக்காரர்கள் எப்படித்தான் வாழ்ந்தார்கள்? அதற்கு முன் ரோமானியர் எப்படி அங்கே தங்கினர்? கடற்பயணநெறிகளின்படி அவர்கள் அங்கே கோடைகாலத்தில் தங்கியிருப்பார்கள். காற்றுக்கள் எழும் ஜூன் மாதத்தில் மேலும் கிழக்குநோக்கி கிளம்பியிருப்பார்கள். அவர்கள் எப்படி சமாளித்தார்கள்?

arika

அந்த பெரும் வதையை தாங்கச் செய்த விசை எது? அதை உலகைவெல்லும் விழைவு என்று சொல்லலாம். உலகமே தனது என்னும் ஆணவம் என்றும் சொல்லலாம். அதையே  செயல் இயல்பு, வெல்லும் விசை [ரஜோகுணம்] என்கிறது நம் மரபு. ஐரோப்ப்பாவை வரலாற்றில் முன்னிலையில் நிறுத்தும் ஆற்றல் அது. நமக்கும் அவர்களுக்குமான வேறுபாட்டை உருவாக்குவது அந்த அகவிசைதான். விவேகானந்தர் இந்தியா அதையே அவர்களிடம் பெற்றுக்கொள்ளவேண்டும் என அறைகூவினார்.

தமிழ்ப்பண்பாட்டில் சோழர்காலகட்டத்தில் மட்டும்தான் நம்மிடம் ரஜோகுணம் ஓங்கியிருந்தது.நாம் நம் எல்லைகளைக் கடந்தோம். கலை ,இலக்கியம் ,தத்துவம் அனைத்திலும் சாதனைகள் செய்தோம். இன்று நாம் நம்முடையவை என கொள்வன அனைத்தும் அந்த முந்நூறாண்டுக்காலத்தில் உருவானவைதான். இன்று நாம் உண்ணும் உணவு அன்று சோழர்கள் வெட்டிய  பாசனக்கால்வாய்கள் மற்றும்ஏரிகளிலிருந்து விளைவதே . அந்த காலகட்டத்தின் புதையல் என்பதனால்தான் கம்பராமாயணத்திற்கு மீண்டும் மீண்டும் செல்கிறோம். நான் என் உரையில் முக்கியமாகச் சொன்னது அதையே.

முந்தைய கட்டுரைதேவதேவனின் கவிமொழி
அடுத்த கட்டுரைஊட்டி கடிதங்கள்