அஞ்சலி பாலகுமாரன்

IMG_20180515_154809

சென்னையில் விடுதியில் தங்கியிருந்தபோது சௌந்தரின் செய்தி வந்தது, பாலகுமாரன் மறைந்தார். சென்ற சில மாதங்களாகவே உடல்நலம் குன்றியிருந்தார். சாரு நிவேதிதா மகன் திருமணத்தில் சந்தித்தபின் நேரில் வீட்டுக்குச் சென்று சந்திக்கவேண்டும், நலம் விசாரிக்கவேண்டும் என நினைத்திருந்தேன். சௌந்தரும் குங்குமம் உதவி ஆசிரியர் கிருஷ்ணாவும் சொல்லிக்கொண்டிருந்தனர். நான் செல்லவிருந்தபோது ஒருமுறை அவர் ஆஸ்பத்திரியில் இருந்தார். சிலமுறை தட்டிப்போயிற்று. நாம் மனிதர்கள் என்றுமிருப்பார்கள் என்றே நம்ப விரும்புகிறோம். மாறாக எண்ணம உளம் ஒப்புவதில்லை.

 

பாலகுமாரனின் இல்லத்திற்கு நானும் சில்லென்று ஒருகாதல், நெடுஞ்சாலை போன்ற படங்களின் இயக்குநரான கிருஷ்ணாவும் சென்றோம். சௌந்தர், சுரேஷ்பிரபு, செந்தில்குமார் தேவன் ஆகியோர் அங்கே இருந்தனர். குங்குமம் கிருஷ்ணா அங்கிருந்தார். அஞ்சலி செலுத்திவிட்டு திரும்பி வந்தேன்.

 

பாலகுமாரனின் முதல்நாவலான மெர்க்குரிப்பூக்களை 1986 ல் நான் வாசித்தேன். இலக்கியவாசகரும், பிரமிளின் புரவலரும், காகித வணிகருமான பெங்களூர் ராமச்சந்திரன் அந்நாவலை எனக்கு அளித்தார். அது தொடர்கதை அல்ல, நாவல். தொடர்கதையாக வந்தது. பின்னர் இரும்புக்குதிரைகள், கரையோர முதலைகள் என புகழ்மிக்க தொடர்கதைகள் வழியாக தமிழின் நட்சத்திரங்களில் ஒருவராக ஆனார்.  கு.ப.ராஜகோபாலனிடமிருந்து தொடங்கிய இரு சரடுகளில் ஒன்று ஜானகிராமன் மரபு. இன்னொன்று ஆர்வி, எல்லார்வி, பி.வி.ஆர் வழியாக பரப்பிலக்கியத்தில். பாலகுமாரன் ஜானகிராமன் மரபுக்கும் ஆர்வி மரபுக்குமான இணைப்பு.

 

ஜானகிராமனைப்போலவே உரையாடலினூடாக கதைசொல்வதில் நிபுணர். கதைசொல்லும் நடையும் உரையாடல்தன்மைகொண்டது. வணிக எழுத்தின் வரையறைக்குள் அமைந்த அவருடைய படைப்புகளில் ஆண்பெண் உறவு குறித்த எழுபது எண்பதுகளின் தயக்கங்களும் சஞ்சலங்களும் நுட்பமாகப் பதிவாகியிருக்கின்றன. பிற்கால படைப்புகளில் அப்பம்வடைதயிர்சாதம் ஒரு சமூகவரலாற்று சித்திரத்தை அளிக்கும் குறிப்பிடத்தக்க ஆக்கம். உடையார் சோழர்வரலாற்றுப்பின்னணியில் ஒரு மிகப்பெரிய சித்திரம்.

 

பாலகுமாரனுக்கு அஞ்சலி.

 

முந்தைய கட்டுரைஇலக்கியமும் மொழியும்
அடுத்த கட்டுரைவெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-53