ஒளியை நிழல் பெயர்த்தல்

 

இலக்கியத்தில் எது மிகக் கடினமோ அதுதான் மிக எளிதாகத் தோன்றும் என்று படுகிறது. அதில் ஒன்று கவிதை மொழிபெயர்ப்பு. கவிதைகளை வாசித்ததுமே அதை மொழியாக்கம்செய்யவேண்டுமென்ற உற்சாகம் தோன்றிவிடுகிறது. முதற்காரணம், நல்ல கவிதை மிகமிக எளிமையானது என்பதே. நாம் அனைவரும் அறிந்த எளிமையான சொற்களை சேர்த்து வைத்து அது தன் வெளிப்பாட்டை நிகழ்த்தியிருக்கிறது. அச்சொற்களுக்கான இன்னொரு மொழியின் சொற்களும் நமக்குத்தெரியும். மொழிபெயர்க்கவேண்டியதுதானே? வரிகளும் மிகக்குறைவு. சிறுகதைபோல பக்கக்கணக்கில் இல்லையே.

அதைவிடப்பெரிய அபாயம் என்னவென்றால் கவிதையை மொழியாக்கம் செய்யச் செய்ய நாம் ஒரு பரவசத்தில் திளைக்கிறோம். அபாரமான மன எழுச்சியில் நின்று அச்சொற்களை மீளமீள வாசிக்கிறோம். அந்தக் கவிதையை நாமே எழுதியதுபோல எண்ணிக்கொள்கிறோம்.அக்கவிதை சரியாக மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறதா என. அப்போது நமக்கு ஐயமே இருப்பதில்லை.

உண்மையில் அந்தப்பரவசம் மூலக்கவிதையை நாம் மிகக்கூர்ந்து வாசிப்பதனால், சொல் சொல்லாக உள்வாங்கிக்கொள்வதனால் உருவாவது என நாம் அறிவதில்லை. அது படைப்பின் பரவசம் அல்ல, வாசிப்பின் பரவசம்தான். முந்தையதன் ஆடிப்பிம்பம்தானே பிந்தையது. வித்தியாசம் கண்டுபிடிப்பதே கடினம். ஒரு கவிதையை நாம் மொழியாக்கம் செய்யும்போது அக்கவிதையின் ஒவ்வொரு சொல்லுக்கும் இன்னொரு மொழியில் உள்ள பல சொற்களை வைத்துப்பார்க்கிறோம். ஆகவே அக்கவிதையின் ஒவ்வொரு சொல்லுக்கும் பற்பல சாத்தியக்கூறுகளை கண்டடைகிறோம். ஆம், ஒரு கவிதையை வாசிக்க சிறந்த வழி அதை மொழியாக்கம் செய்வதுதான்.

ஆனால் அந்தமொழியாக்கத்தை நாம் கொஞ்ச நாள் கழித்துப் பார்த்தால் திடுக்கிடுகிறோம். பெட்டிக்குள் போட்ட போலிச்சரிகை கறுத்துக்கிடப்பது போலிருக்கிறது அது. மூலக்கவிதை அளித்த ஒளி அதிலிருந்து இல்லாமலாக ஜோடிக்கப்பட்ட சொற்களுடன் ஒரு பயனற்ற மின்னணுக்கருவி போல கிடக்கிறது. தூக்கிக் கடாசுகிறோம். நம்மையே சலித்துக்கொள்கிறோம்.

மொழிபெயர்ப்பே ஆனாலும்கூட அதுவும் கவிதையே. கவிதைக்கணம் நிகழாமல் அது நிகழமுடியாது. அது பிரதிபலிப்பாக மறுஎழுத்தாக நிகழ முடியாது. மூலக்கவிதைக்கு கவிஞனில் நிகழும் ஒரு மன எழுச்சி காரணமாக அமைகிறது. மொழிபெயர்ப்புக் கவிதைக்கான மனஎழுச்சியை அந்த மூலக்கவிதை அளிக்கிறது, அவ்வளவே வேறுபாடு. மொழிபெயர்ப்பாளனும் கவிஞனே, இரண்டாம்கட்ட கவிஞன். தனக்குள் ஒரு கவிஞன் இல்லாதவன் ஒருபோதும் கவிதையை மொழியாக்கம் செய்ய முடியாது.

தமிழில் மிகச்சிறந்த உதாரணம் எஸ்.வி.ராஜதுரை, ரவிக்குமார்,யமுனா ராஜேந்திரன்  போன்றவர்கள் மொழியாக்கம் செய்துள்ள கவிதைகள். அவர்கள் சிறந்த அரசியல் உரைநடை கொண்டவர்கள். மொழியை அறிந்தவர்கள். பல்வேறுவகையான மொழியாக்கங்களைச் செய்தவர்கள். ஆனால் கவிதையை அவர்கள் மொழியாக்கம்செய்யும்போது ஒரு சடலம்தான் நமக்குக் கிடைக்கிறது. அள்ளியதற்கும் அளித்ததற்கும் நடுவே கைரேகையிலேயே நதிநீர் வற்றி மறைந்துவிடுகிறது.

ஏனென்றால் கவிதை அதன் கருத்து அல்ல என்பதே. கவிதை சொல்லும் விஷயமல்ல கவிதை. ’அப்பா உன்னைய சாப்புடக்கூப்புடறாங்க’ என்ற செய்தியுடன் என் செல்லமகள் வந்து நிற்கிறாள். அவளது இளமழலையும் சுருள்குழலும் மென்சிரிப்பும் வட்டமுகத்தில் விரிந்த விழிகளும்தான் கவிதை, அவள் சொல்லும் செய்தியல்ல அப்போது அவள். கருத்து கண்டு கவிதையை மொழியாக்கம் செய்பவர்களுக்கு பானம் சிக்குவதில்லை பாத்திரமே எஞ்சுகிறது.

தமிழில் பல கை அளாவிய கூழாக புளித்துக்கிடப்பது பாரதி கவிதை. பாரதியின் கவிதைகளின் மலையாள மொழியாக்கத்தைப் பார்த்துவிட்டு மூத்த விமர்சகரான எஸ்.குப்தன் நாயர் ‘இவர் எழுதியது பாட்டா கவிதையா?’ என்று கேட்டார். ‘மிட்டாய் சப்புவதுபோல ஒரு மெல்லிய தித்திப்புக்கு அப்பால் அவற்றில் ஏதுமில்லை’ என வரையறைசெய்தார். பாரதியில் இருப்பது ஓர் ஆவேசம். அது கருத்தில் இல்லை, எங்கும் சிக்கும் சீர்திருத்தக் கருத்துக்கள்தான் அவை. அந்த ஆவேசம் சொற்களில் குடிகொள்ளும் விதமே அவரது கவிதையின் அழகு

’ஒளிபடைத்த கண்ணினாய் வா வா வா’ என்ற வரியை ’One who has bright eyes, Come! Come! Come!’ என்று மொழியாக்கம் செய்து தடிமனாக புத்தகம் போட்டிருக்கிறார்கள். வா வா வா என்ற பாரதியின் சொல்லில் உள்ள அலையை விட்டுவிட்டால் இதிலென்ன கவிதை இருக்கிறது? நல்ல கவிதை மொழியாக்கத்தில் முழுமையாக தொலைந்தும் போகாது முழுமையாக வரவும் செய்யாது என்பார்கள். ஆனால் மூலக்கவிதை ஒரு கவித்துவக் கணமாக ஆகி மொழிபெயர்ப்பாளனைக் கவிஞனாக ஆக்காவிட்டால் எந்தக் கவிதையும் சொற்குவியலாகவே இன்னொரு மொழிக்குச் சென்று சேரும்.

 

MTE5NDg0MDU1MjkxOTIxOTM1

ஆகவேதான் நான் கவிதை மொழிபெயர்ப்பை ஒரு பணியாக இப்போது செய்வதில்லை. எப்போதாவது ஒரு கவிதை என்னை பெரிதும் தூண்டி எழுதச்செய்யுமென்றால் மட்டுமே மொழியாக்கம் செய்கிறேன். முன்னர் நான் ஒட்டுமொத்தமாக ஒரு தொகுப்புக்கான கவிதைகளை மொழிபெயர்த்திருக்கிறேன். அவை ‘தற்கால மலையாளக் கவிதைகள்’ என்ற பேரில் நூலாக வெளிவந்தன. அப்போது கிட்டத்தட்ட ஒரு வருடம் எடுத்துக்கொண்டு கவிதைகளை மொழியாக்கம் செய்தேன்.

அதன்பின்னர் நான் நடத்திய ஊட்டி தமிழ்-மலையாளக் கவிதை அரங்குகளுக்காக தமிழ் மலையாளக் கவிதைகளை இருமொழிகளுக்கும் மொழியாக்கம் செய்தேன். இந்த அரங்குகளில் நான் கவிதைகளை பலவாரங்கள் முன்னரே மொழியாக்கம் செய்வது வழக்கம். பல கவிதைகளை எடுத்துக்கொண்டு எந்தக்கவிதை என்னை தூண்டுகிறதோ அதை மட்டுமே மொழியாக்கம் செய்வேன். அப்போது ஒன்றைக் கண்டுபிடித்தேன். ஒருநல்ல கவிதை நம்மை தூண்டி நல்ல மொழியாக்கத்தைச் செய்ய வைத்தது என்றால் அந்த வேகம்– அது ஒரு போதை – நம்மை மேலும் மேலும் மொழியாக்கம் செய்யச்செய்கிறது. கடைசியாகச் செய்யும் கவிதைகள்தான் கவிதைகளாக அமைந்து வருகின்றன.

ஆனாலும் கவிதை மொழியாக்கம் என்பது ஒரு குலுக்கல்தான். நாலிலே ஒன்றிரண்டு பலித்தால் உண்டு. தமிழ் மலையாள மொழிபெயர்ப்புகளை நிகழ்த்தும்போது சந்திக்க நேரும் சிக்கல்கள் பல. முதன்மையான சிக்கல் இருமொழிகளுக்கும் உள்ள கட்டமைப்பு வேறுபாடு. தமிழ் பாரதி போன்றவர்களால் பலகாலம் முன்னரே நவீனப்படுத்தப்பட்ட மொழி. அதன் சொற்றொடர் அமைப்புச்சாத்தியங்கள் பற்பல. மலையாளம் அந்த சாத்தியங்களை அளிப்பதில்லை. ஆகவே நான்கு சொற்களால் சொல்லப்பட்ட ஒன்று மலையாளத்தில் ஆறு சொற்களைக் கோருகிறது. இது கவிதையின் இசையையும் அடர்த்தியையும் தவறவிட வழிவகுக்கிறது.

இதே சிக்கல் ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழியாக்கம் செய்யும்போது நிகழும். ஆங்கிலம் இன்னமும் கச்சிதமான மொழி. தமிழில் சொற்றொடர்களை ஆங்கிலமளவுக்கு ஒடித்து இணைக்க முடியாது. நீட்டுச் சொற்றொடர்களில் ஆங்கிலக் கவிதையை அமைக்கையில் அதிலிருந்து கவிதை பறந்து எழுந்து வான்வெளிக்குச் செல்ல சொற்றொடர் மட்டும் அசைந்துகொண்டிருக்கிறது

The way a crow
Shook down on me
The dust of snow
From a hemlock tree
Has given my heart
A change of mood
And saved some part
Of a day I had rued.

என்ற ராபர்ட் ஃப்ராஸ்டின் கவிதையை மொழியாக்கம் செய்து பார்த்தால் அந்தச் சிக்கலை எவரும் உணர முடியும்.

ஹெம்லோக் மரத்தில்
அமர்ந்த காகம்
பனித்துகளை என்மீது
உதிர்த்து
மனநிலையை மாற்றி
காப்பாற்றியது
நான் ஏற்கனவே
வீணடித்திருந்த
நாளின் மிச்சத்தை.

முன்னது கவிதை. பின்னது தமிழில் அதன் பொருள். அதாவது வெறும் நிழல். முதல்வடிவம் அளிக்கும் நிறைவுக்கான முதல்காரணம் முதல் வரியில் காகம், பிறகு அதன் செயல், பிறகு பனி, அதன்பிறகு மரம், அதன்பின் மனம் கடைசியாக நாள் என வரும் வரிசையா? தெரியவில்லை. அப்படி அமைத்தால் தமிழ்சொற்றொடர் முடிச்சுபோட்டுக்கொள்கிறது.

 

இரண்டாவதாக ஒலி அளிக்கும் கவித்துவ அழுத்தம் ஒரு சிக்கல். மிக எளிதாகவே அது மூலத்தில் நிகழ்வதாகப் படும். தமிழில் நழுவிக்கொண்டே இருக்கும்.

நீதன்னே மரணமும் சந்த்யே
நீதன்னே ஜனனமும் சந்த்யே
நீதன்னே நீதன்னே சந்த்யே

என்ற அய்யப்ப பணிக்கரின் கவிதையை

நீயே மரணமும் அந்தி
நீயே பிறவியும் அந்தி
நீயே நீயே அந்தி!

என மொழியாக்கம் செய்கையில் நீதன்னே என்ற சொல்லில் இருக்கும் அழுத்தமும் சந்த்யே என்ற அழைப்பில் உள்ள ஆவேசமும் இழக்கப்படுகிறது.

சொற்களின் சிக்கல் எப்போதுமே கவிதை மொழியாக்கத்தை துரத்துகிறது. ஒரு மொழி அளிக்கும் சொல்லில் உள்ள ஒலியும் சேர்ந்தே அந்தக் கவிதையை அமைக்கிறது. ஆனால் ஒலி அல்லது சொற்பொருள் இரண்டில் ஒன்றையே நாம் தேர்வு செய்யும்படி பலசமயம் நம்மை மொழியாக்கவேலை கோருகிறது

அமைதி என்பது
மரணத்தறுவாயோ
வந்தமரும் பறவையினால் அசையும் கிளையோ? [தேவதேவன்]


சாந்தத எந்நது
மரண முஹூர்த்தமோ
வந்நிரிக்கும் பக்‌ஷியால் ஆடுந்ந கொம்போ ?

என்ற மலையாள மொழியாக்கம் சம்பந்தமாக நானும் ஆற்றூர் ரவிவர்மாவும் பேசிக்கொண்டோம். இருவருமே அக்கவிதையை மொழியாக்கம் செய்திருந்தோம். அசையும் என்ற சொல்லை ஆற்றூர் சலிக்குந்ந என்று மொழியாக்கம் செய்தார். அது சொற்பொருள். ஆனால் அசைவு என்பதும் சலனம் என்பதும் வேறு வேறு. ஒலியும் வேறு. ஆடுதல் என்பதில் ஒலி இருக்கிறது. ஆனால் மூலப்பொருள் குறைகிறது. அவர் அதையும் நான் இதையும் வைத்துக்கொண்டோம்.

ஆனாலும் கவிதையை மொழிபெயர்ப்பது ஆர்வமூட்டுகிறது. எந்த புராணிகனுக்கும் ஒன்று தெரியும், அலகிலா பரம்பொருளை அவனுடைய கதைகளாலும் வர்ணனைகளாலும் அவன் சொல்லிவிடமுடியாது. ஆனால் அந்த எத்தனம் இல்லையேல் புராணங்கள் உருவாக முடியாதே

 

மலையாளக்கவிதைகளை மொழிபெயர்த்தல்

 

அய்யப்பப் பணிக்கருக்கு அஞ்சலி

 

ஆத்மராகம்

 

 

மறுபிரசுரம். முதற்பிரசுரம். Dec 24, 2010

முந்தைய கட்டுரைசென்றகாலங்கள்- கடிதம்-2
அடுத்த கட்டுரைஒரு வரலாற்று நாயகன்