அன்புள்ள ஜெ,
ஊட்டி சந்திப்பு அளித்த உற்சாகத்தையும் உத்வேகத்தையும் விவரிக்கமுடியும் என்று தோன்றவில்லை. சோபியாவின் விளியை பின்தொடர்தல் என்று வேண்டுமென்றால் ஒற்றைவரியில் சொல்லலாம் :-)
குறிப்பாக கவிஞர் தேவதேவன் அவர்களை சந்தித்து ஒரு பேரனுபவம். அரங்கு ஆசிரியத்துவமும் நட்பும் அன்பும் அறிவுக்கூர்மையும் பொருந்தியதாயிருந்தது. மிகப்பெரிய ஒன்றுக்கு முன்னால் நின்றது போன்ற பிரமிப்பும் வினையமும் நன்றியுணர்வும் நினைவுகளாக மிஞ்சுகின்றன. ஆசிரியர்கள் அனைவருக்கும் வணக்கங்களும் நன்றிகளும்.
அரசியல் பேச்சுக்கள் இருக்குமோ என்ற ஐயம் இருந்தது. இல்லாதது மிகுந்த நிறைவளித்தது, வாசிப்பு மனநிலையிலேயே தொடர்ந்து இயங்கவும் வழிவகுத்தது. செறிவான, எதிர்மறை அம்சமில்லாத, வாசிப்பையும் ரசனையும் முன்னிலைப்படுத்தி, இத்தனைபேர் கூடும் இத்தகைய நிகழ்வுகள், சமூகத்தின் நுண்ணுணர்வை கூர்மைபடுத்தும் வல்லமை கொண்டவை. வரும் காலங்களில் இதன் தாக்கம் தெரியவரும் என்று நம்புகிறேன்.
சந்திப்பை இவ்வளவு சிறப்பாக ஒருங்கிணைத்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். பெரிய செயல்கள், போகிறபோக்கில் செய்யப்பட்டது போலத்தெரிவது எழுச்சியூட்டுகிறது. ஈடுகொடுத்து இயங்கவும் ஊக்கமளிக்கிறது.
நன்றி,
சுசித்ரா
(பி.கு – அடுத்தடுத்து நிகழப்போகும் சந்திப்புகளை இன்னும் செரிவாக்க, சிறப்பாக்க எனக்குத்தோன்றும் ஒன்றிரண்டு யோசனைகளை தனிப்பட்டமுறையில் பகிர்கிறேன் –
- ஒவ்வொரு அமர்வுக்கும் நேரத்தை கணக்கில் கொள்ள ஒரு மட்டுறுத்துனர் நியமிக்கப்படுவது நல்லது. பேச்சாளர் பேச 15 நிமிடங்கள் அளிக்கப்பட்டுள்ளது என்றால், 10 நிமிடம் நிறைவுறும் போது எச்சரிக்கையாக ஒரு சமிக்ஞையும், 15 நிமிட முடிவில் நிறுத்தச்சொல்லியும் அவர் கறாராக நேரம் காக்க வேண்டும். ஒவ்வொரு அமர்விலும் பேச்சாளர் பேசியது ஒரு வரையறையாகவே இருந்தது. அதிலிருந்து முன்னெடுத்த விவாதம் பற்பல இடங்களுக்கு சென்றது, அதில் தான் ஒவ்வொரு அமர்வின் magic நிகழ்ந்தது. பேச்சுக்கள் எவ்வளவு கூர்மையாக இருக்கன்றனவோ அதற்கேற்றார்ப்போல் விரிந்து பேச பொருளும் நேரமும் அமையும், ஆகவே மட்டுறுத்துனர் இருந்தால் நல்லது.
- துறைசார் சாதனையாளர்களை அழைக்கும் போது, அவர்களின் பங்களிப்புகளும் சாதனைகளும் எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு அவர்களுடைய மேடைபேச்சுத்திறனும், அவையை புரிந்துகொள்ளும் திறனும், வகுப்பெடுக்கும் திறனும் முக்கியம் என்பது என் தாழ்மையான கருத்து. இந்த அடிப்படைகளையும் கணக்கில் கொண்டு அழைக்கலாம் என்று கருதுகிறேன்.
- அதிக விண்ணப்பங்கள் வருமாயின், சாத்தியப்படுமென்றால், வருடத்தில்இரண்டு சந்திப்புகளாகக்கூட நிகழ்த்தலாம். எண்பது, நூறு நபர்கள் இருக்கையில் முகங்களும் கருத்துக்களும் கூட்டத்தில் தொலைந்துபோய்விடக்கூடும். நாற்பது ஐம்பது நபர்கள் என்றால் இன்னும் அணுக்கமான சந்திப்பாக அமையலாம்.)
அன்புள்ள சுசித்ரா
இரண்டு சந்திப்புகள் நடத்தலாம், ஆனால் அது நிர்மால்யாவுக்குச் சிக்கல். அதோடு இரண்டிலுமே கலந்துகொள்ள ஒரு கும்பல் துடிக்கும். நீங்கள் சொல்வதுபோல இந்த அமர்வில் இடம்கிடைக்காதவர்களுக்காக ஒன்றை ஆகஸ்ட் அல்லது செப்டெம்பரில் நடத்தலாமென நினைக்கிறேன். பிற ஆலோசனைகளைக் கருத்தில்கொள்ளலாம்
ஜெ
மதிப்பிற்குரிய ஆசிரியர்க்கு வணக்கம்.
முதலில் என் மனமார்ந்த நன்றியை உங்களுக்கும்,அன்பு நண்பர்களுக்கும் தெரிவித்துக்கொள்கிறேன். நீ கற்க தயார் என்றால் உன் ஆசிரியர் உனக்கு தெரிவார் என்பது எனது புரிதல். மாதா, பிதா,குரு,தெய்வம் என்று சொல்வதில் என் கருத்து மாதா தான் பெற்றதால் தன் மகவுக்கு அறிவூட்டுகிறார், தந்தை தன் மூலம் என்பதால் தனக்கு தெரிந்ததை சொல்லித்தருகிறார், ஆனால் குருதான் என்னை பொருத்தவரையில் மிகவும் உயர்ந்தவர் ஆம், அந்த காலத்தில் தன்னிடம் சேர்ந்தவர்க்கு மட்டும் பயிற்றுவித்தார்கள்,ஆனால் நீங்களோ அனைவர்க்கும் செய்கிறீர்கள். (உஙகள் blog) நாங்கள் தெய்வதை கண்டதில்லை ஆனால் அவரை எங்கள் குரு உங்கள் மூலமாக காண்கிறோம். நீங்கள் வாழும் காலத்தில் நான் இருப்பது எனது அதிர்ஷ்டம். நன்றி. நன்றி.
.
பொதுவாக என் தொழில் சார்ந்து நான் மட்டுமே பேசி பழக்கபட்ட எனது ஐம்புலன்களும் , கேட்க மட்டுமே செய்ய வேண்டும் என்பதால் மற்றவற்றில் ஏற்பட்ட தகறாருகளை கட்டுபடுத்தி கவனிக்க ஆரம்பிக்கும்போது சபை வெகு தூரம் சென்று கொண்டிருந்தது. ஆம் ஆயுர்வேதத்தில் செய்வது போல் முதலில் என் தவறான புரிதல்கள் வெளியேற்ற படவேண்டும், பின்பு சரியானவைகளை உள்ளே செலுத்தவேண்டும். ஆம் நரம்பு மூலமாக மருந்து செலுத்துவது போல் எனக்கு ஊட்டி முகாம்.
உங்களின் பங்களிப்பின்றி முகாம்.தளபதி இல்லாத படை வெற்றி கொண்டதாக வரலாறு இல்லை. இந்த முகாம் தொடர்ந்து செல்வது உங்களின் இலக்கிய ஆளுமையுடன் கூடிய ஒழுக்கம்தான். ஆம் இந்த சுய கட்டுபாட்டுட்டன் ஒரு தலைவன் உருவாக ஒரு யுகமாகும். அதனால் உங்களின் இருப்பின்றி நடத்துவது என்பதற்கு பதிலாக நீங்கள் நிறுத்திவிடுவது சால சிறந்தது. மன்னிக்கவும். கருத்தில் தவறிந்தால்.
மரியாதை மற்றும் அன்புடன்
ராமசாமி அழகுவேல்
திருப்பூர்.