உள அழுத்தம் பற்றி

GIOVANNI BOLDINI # 14130 STUDY OF YOUNG WOMAN WRITING
GIOVANNI BOLDINI # 14130
STUDY OF YOUNG WOMAN WRITING

செய்திதுறத்தல்

உள அழுத்தம் -கடிதங்கள்

அன்புள்ள திரு ஜெயமோகன் அவர்களுக்கு

உங்களுடைய “செய்தி துறத்தல்” மற்றும் ஸ்ரீகலா தற்கொலை பற்றி படித்த உடன் எனக்கு “உள அழுத்தம்” பற்றி பகிர்ந்து கொள்ள தோன்றியது. உண்மையில் “உள  அழுத்தம்” என்ற வார்த்தை உங்களுடைய பதிவை படித்தவுடன் தான்  எனக்கு தோன்றியது. சமீப காலமாக “ஸ்ட்ரெஸ்” பற்றித்தான் நான் எழுத நினைத்தேன்.

நேற்றைய தலைமுறையை விட இன்றைய தலைமுறை மிகுந்த உள அழுத்தத்தில் உள்ளது. இன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தெரிந்ததோ தெரியாமலோ உள அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு  உள்ளார்கள். அதற்கான முதல் காரணமாக நான் நினைப்பது சமுதாயத்தாலோ அல்லது தனிப்பட்ட முறையிலோ, நேரடியாகவோ அல்லது  மறைமுகமாகவோ “செயல்படுதல்” அதாவது “performance” என்பது கட்டாயமாகியுள்ளதுதான். “perform” பண்ணவில்லை என்றால் நாளை  என்ன ஆகும் என்ற கவலை அனைவரையும் ஆட்கொள்ள தொடங்கி உள்ளது. ஒருவித பாதுகாப்பற்ற தன்மையை மனித மனம் எதிர் கொள்ள தொடங்கியள்ளது.

இந்த கவலை முந்தைய தலைமுறையில் அவ்வளவாக கிடையாது. குறிப்பாக ஒவ்வொரு  ஜாதிக்கும் அல்லது குழுவுக்கும் தலைமுறையாக வந்த தொழில்கள் அல்லது வேலைகள் ஒருவித பாதுகாப்பு உணர்வை சமுதாயத்தில் அளித்தன. நூற்றாண்டுகளாக அவர்கள் அந்த தொழிலில் நிபுணத்துவம் பெற்று இருந்தார்கள். இந்த திறனை (“skill”) அவர்கள் வேண்டியோ  வேண்டாமலோ தலைமுறைகளாக தொடர்ந்து பெற்று வந்தார்கள். அந்த பாதுகாப்பு உணர்வு இந்த தலைமுறையில் உடைக்கப்பட்டு உள்ளது.

குழுவாக கற்று வந்த அல்லது செய்து வந்த தொழில்களில் இருந்து நவீன (?) கல்வி கற்று அதன் மூலம் புதிய வேலை வாய்ப்புகளை பெற்ற சமூகம் இது. இந்த நவீன சமூகத்தில் எந்த வேலைக்கும் பள்ளிக்கல்வியும் அதில் ஒருவர் வாங்கும் மதிப்பெண்களும் மட்டுமே அவசியம். அதனால் ஒரு தலைமுறைக்குள்ளேயே கூட செய்யும் வேலைகள் தலைகீழ் மாற்றம் அடைகின்றன அல்லது அதற்கான சாத்தியம் உருவாகிறது. நூற்றாண்டுகளாக ஆசாரியாக இருந்து தலைமுறைகளாக பெற்று வந்த திறன் அவர்கள் குடும்பத்தில் இருந்து வரும் ஒரு முதல் மருத்துவர் மூலம் இல்லாமலாகிறது. அந்த ஆசாரி குடும்பத்து மருத்துவர், அவரின் வாரிசு மருத்துவராக வர மட்டுமே விரும்புவார். ஆனால் அவரின் வாரிசு நல்ல மதிப்பெண்கள் வாங்காமல் போனால் அவரால் இன்றைய சூழ்நிலையில் ஒரு மருத்துவராக வர முடியாமல் போகலாம். அப்போது அந்த வாரிசின் நிலை இந்த சமுதாயத்தில் கேள்விக்குறியாகிவிடும். அந்த வாரிசு திரும்ப ஆசாரி வேலைக்கும் போக முடியாது.

இந்த நிலையற்ற தன்மை மனிதனின் மனதில் பாதுகாப்பற்ற உணர்வை உருவாக்குகிறது. இந்த பாதுகாப்பின்மை ஒருவரை தொடர்ந்து செயல் பாட்டுக்குள்ளேயே இருக்க தூண்டுகிறது. அவரும் ஓய்வின்றி தனக்காகவும் அடுத்த தலைமுறைக்காகவும் சொத்து, பணம் சேர்ப்பதற்காக தொடர்ந்து செயல் பட்டுக்கொண்டே இருக்கிறார். ஆனால் இந்த தொடர் செயல்பாடு மூலம் சமுதாயத்தில் வெற்றி அடையும் சாத்தியம் எல்லோருக்கும் வாய்ப்பது இல்லை. தான் தோல்வி அடைவதையோ அல்லது தன் வாரிசு தோல்வி அடைவதையோ தாங்கி கொள்ளும் மனநிலை இல்லாது மன அழுத்தம் அதிகமாகிறது.

சமுதாய அமைப்பு ஒரு பிரமிட் போன்றது. அது மனிதர்களை பிரமிடுக்குள் அடைத்து வைத்து கட்டமைப்பு செய்து தன்னை இயங்க செய்கிறது. இதில் கீழ் நிலையில் அதிக மக்களும் மேல் நிலையில் குறைவான மக்களும் இருக்க வேண்டும். அதை அந்த மனிதர்களும் மனம் உவந்து ஏற்றுக்கொண்டு தங்களின் பங்களிப்பை செய்தால் தான் சமுதாயமும் தனி மனிதனும் மகிழ்ச்சியாக இயங்க முடியும். அந்த பிரமிடுக்குள் கீழ் இருந்து மேல் வருவதும் மேல் இருந்து கீழ் வருவதும் இயல்பாக தலைமுறைகளின் இடைவெளியில் போதிய முன் தயாரிப்புடன் நடந்தால் மனிதன் புதிய சூழலுக்கு ஒத்துப்போக முடியும். இல்லை என்றால் மன மகிழ்ச்சியோடு அவனால் அந்த புதிய சூழலில் இருக்க முடியாது. ஒரு மருத்துவரின் வாரிசு ஷேர் ஆட்டோ ஓட்ட வேண்டி வந்தால் அந்த வாரிசு அந்த தோல்வி மன நிலையை எவ்வாறு எதிர் கொள்ளும்.

இந்த தலைமுறை இதை எதிர் கொள்ள தொழில் நுட்ப வளர்ச்சி ஒரு மிக முக்கிய காரணம். சென்ற காலத்து வேலைகள் பல அர்த்தம் இழந்து விட்டன மற்றும் பல புதிய வேலைகள் உருவாகி உள்ளன. கீழ் நிலையில் மற்றும் மத்திய நிலையில் உள்ளவர்கள் அந்த புதிய வேலை வாய்ப்புகளை பெற்று சமுதாயத்தில் மேலே வருவது நடக்கிறது. ஆனால் அவர்களின் அடுத்த தலைமுறை தோல்விகளை சந்திக்கும்போது அடையும் மன அழுத்தம் மிகப்பெரியதாக இருக்கும். குழுவாக ஒரு மனிதர் கூட்டம் அடையும் வளர்ச்சி அல்லது தாழ்வு அவர்களின் மன நிலையை பாதிப்பதை விட தனி மனித வளர்ச்சி அல்லது தாழ்வு மிக அதிகமாக பாதிக்கும்.

பெரும்பாலோர் மனதில் ஒருவித தாழ்வு மனப்பான்மை உள்ளது. எல்லோரும் நன்றாக படித்து வேலை செய்து பெரிய நிலையை அடைய வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்படுகிறார்கள். அனைவருமே மருத்துவர் ஆக வேண்டும், I A S, I P S அல்லது எந்த துறையிலும்  மிக உயர்ந்த தளத்தை அடைய வேண்டி செயல் படுகிறார்கள். அத்துடன் அவர்கள் அல்லது அவர்களின் பெற்றோர்  மனதளவில் தற்போது செய்து வரும் செயலை இழிவாக நினைத்து உயர்ந்த  தளத்தை அடைய நினைக்கிறார்கள். இந்த எண்ணம் அவர்களுடைய தற்போதைய செயலை எந்த ஒரு படைப்பூக்கத்துடனும் செய்ய தடையாக உள்ளது. சமுதாயம் இயங்க தேவையான கீழ் நிலையில் உள்ள வேலைகளை எவருமே விரும்பி செய்ய முன் வருவதில்லை. ஒரு கட்டாயத்தால் மட்டுமே அவர்கள் அந்த வேலையை செய்கிறார்கள். அந்த வேலையில் யாருமே அவர்களை குறை சொல்ல முடியாது. சொன்னால் சொன்னவர்  மீது அவர்கள் பாய்ந்து வருவார்கள். அனைவருமே மேல் நிலையில் உள்ள வேலை மட்டுமே செய்ய விரும்புகிறார்கள். நான் சிறியவனாக இருந்த போது தெருவில் ஒரு மாடு அல்லது நாய் செத்து கிடந்தால் அதை உடனடியாக சிலர் (தாழ்ந்த வேலை செய்ய நேர்ந்தவர்கள்) கவனித்து என்ன செய்ய வேண்டுமோ அதை செய்வார்கள். ஆனால் இன்று பெரும் சாலைகளில் பல நாட்கள் ஆனாலும் அந்த விலங்கின் சடலம் அப்படியே அழுகி கிடப்பதை பார்க்கிறோம். முந்தைய காலத்தில் என்ன தான் அது தாழ்ந்த வேலையாக இருந்தாலும் அதை செய்பவர்கள் ஒருவித மன திருப்தியுடன் செய்வார்கள். இப்போது அது  கிடையாது.  ஒரு நல்ல எலெக்ட்ரிசின் அல்லது பிளம்பர் கிடைப்பது கடினம். ஏன் ஒரு நல்ல நர்ஸ் அல்லது மருத்துவர் கூட அமைவது கடினம். உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் தற்செயலாக அமையலாம்.

இந்த வகையிலான என்னுடைய கருத்து பழங்காலத்து ஜாதி முறையை அப்படியே சப்போர்ட் செய்வது போல தோன்றுகிறது. எனக்கு குழப்பமாகவும் உள்ளது. ஒரு வளர்ந்த சமூகத்தில் அனைவருமே உயர்ந்த வேலையை செய்ய ஆசைப்படுவது எந்த விதத்தில் சாத்தியம். தாழ்ந்த வேலையை செய்ய தொழில் நுட்பம் மூலம் ரோபோட் வந்தால் தான் அது நடக்கும். அல்லது தாழ்ந்த வேலைக்கு மிக அதிக சம்பளமோ மற்றும் ரொட்டேஷன் மூலம் அனைவருமே தாழ்ந்த உயர்ந்த வேலைகளை மாறி மாறி  செய்தலோ வேண்டும். அல்லது எல்லோரும் ஆன்மீகத்தளத்தில் நுழைந்து ஆசையை துறந்து விதிக்கப்பட்டதை மன மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்ள வேண்டும்.

நன்றாக படித்தால் நாம் முன்னேறி விடலாம் என்று எல்லோரும் பேசி வருகிறார்கள். நன்றாக படித்தால் வேலை கிடைக்கும் என்பது  பள்ளிக்கூட கல்வி ஆரம்பித்த முற் காலத்தில்  உண்மையாக இருந்தது. அதை பயன்படுத்தி பெரும் பணம் ஈட்ட முடியாத குல தொழில் கொண்டவர்கள் (பிராமணர்கள்) முன்னேற்றம்  அடைந்தார்கள். இப்போது அந்த எண்ணம் கிட்ட தட்ட எல்லோருக்குமே வந்து பெரும்பாலோர் ஓரளவு நன்றாக படிக்கிறார்கள். அதனால் போட்டி அதிகமாகி இப்போது நன்றாக படித்தால் கூட வேலை கிடைக்காது. இருக்கின்ற வேலை வாய்ப்புகளை விட வேலை தேவைப்படுபவர்கள் மற்றும் நன்றாக படிப்பவர்கள் அதிகம்.

என்னுடைய இந்த கருத்துகள் தவறானவையாகவோ பிற்போக்கானவையாகவோ முதிற்சியின்றியோ இருந்தால் மன்னிக்கவும். ஏன் எல்லோரும் செயல்பட்டு கொண்டே இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். செயல் படாமல் இருப்பதும் செயல் படுவதற்கு சரியாக முக்கியமானது தானே என்ற எண்ணத்தில் தான் எனக்கு இவ்வாறு தோன்றுகிறது.  மன அழுத்தம் குறைய செயல் படாமல் இருப்பதும் ஒரு தீர்வு தானே.

கடைசியாக மருத்துவ ரீதியாக மன அழுத்தம் பற்றி. பெரும்பாலானவர்கள் அவர்கள் வாழ்க்கையில் மன அழுத்தத்தை சந்தித்து இருப்பார்கள். அதை அவர்களே தாண்டியும் வந்து இருப்பார்கள். அதற்கு அவர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் தெரிந்தோ தெரியாமலோ உதவி இருப்பார்கள். நிறைய மன ரீதியான பிரச்சனைகளுக்கு உறவினர்கள் மற்றும் நண்பர்கள் தான் மருந்து. சில சமயங்களில் பெதோலாஜிக்கல் மன அழுத்தம் (severe depression) ஏற்படுவது உண்டு. அதற்கு மூளைக்குள் நடக்கும் உயிர் வேதியியல் மாற்றங்களும் மற்றும் பிறவும் காரணமாக இருக்கலாம். அதற்கு மருந்துகள் மற்றும் பிற வகையான மருத்துவ முறைகள் தேவைப்படும். உலகில் மிகவும் அதிகமாக விற்பனை ஆகும் மருந்துகள் மன அழுத்தத்திற்கானவை தான், ஏனென்றால் மேற்கத்திய நாடுகளில் அதிகமான மக்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு உள்ளர்கள். இந்தியாவில் மக்கள் பாதிக்கப்பட்டு இருந்தாலும் இத்தகைய மருந்துகளை உடனடியாக எல்லா மருத்துவர்களும் (மன நல மருத்துவர்கள் தவிர) எழுதுவது இல்லை. இதனால் இந்தியாவில் கண்டுபிடிக்கப்படாத மன அழுத்தம் அதிகமாக கூட இருக்கலாம்.

நன்றி.

டாக்டர். இரா. அருண் குமார்

முந்தைய கட்டுரைஊட்டி- வி என் சூர்யா
அடுத்த கட்டுரைதேவதேவனின் கவிமொழி