மறுபக்கத்தின் குரல்கள்

aziyal
ஆழியாள்

 

 

1992ல் ஒரு டெல்லி கருத்தரங்கில் யூ ஆர். அனந்தமூர்த்தி பேசும்போது சொன்னார் ‘வரவேற்பறைகளில் இருந்து அறிக்கைகள்தான் வரமுடியும், இலக்கியம் சமையலறைகளில் இருந்தும் கொல்லைப்பக்கங்களில் இருந்தும்தான் வரும். மொத்த ஐரோப்பாவே மெல்லமெல்ல அதன் சமையலறையையும் கொல்லைப்பக்கத்தையும் இழந்துகொண்டிருக்கிறது. இங்கிலாந்து அதன் கொல்லையை இழந்தபின் அயர்லாந்தின் கொல்லையைவைத்து நெடுநாள் சமாளித்தது. இப்போது அதுவுமில்லை. இந்தியவின் கதை அதுவல்ல. நமது கொல்லைப்பக்கத்தை நாம் எட்டித்தான் பார்த்திருக்கிறோம். இன்னமும் உள்ளே நுழைந்து பார்க்கவில்லை’

நெடுநாள் என்னைக் கவர்ந்த கருத்தாக இருந்து வந்தது இது. பின்பு ஒரு கட்டுரையில் சுந்தர ராமசாமியும் ஏறத்தாழ இதே கருத்தைச் சொல்லியிருந்ததை வாசித்தேன். ’கூடத்தில் நாம் விசிறிமடிப்பு அங்கவஸ்திரங்களையும் வாங்கோ வாங்கோக்களையும் உருவாக்கி வைத்திருக்கிறோம், அதில் கலைஞனுக்கு என்ன அக்கறை இருக்க முடியும்’ என்று அவர் எழுதியிருந்தார் [ஜி.நாகராஜன் கதைகளுக்கு எழுதிய முன்னுரை] நம்முடைய வரவேற்பறைக்கு இன்னும் ஒரு தனித்தன்மை உண்டு. இங்கே நம்முடைய பொருட்கள் மிகமிகக் குறைவு. மேல்நாட்டுத்தலைவர்களின் காலண்டர்கள் தொங்கும் சுவர்கள் மேலைநாடுகளைப் போலிசெய்த வீட்டுப்பொருட்கள் மேலைநாடுகளில் இருந்து வந்த தொழில்நுட்பப்பொருட்களால் ஆனது அது.

நம்முடைய அரசியல் என்பது ஒரு வரவேற்பறை விவாதமே. அங்கிருந்து கட்டுரைகளும் துண்டுப்பிரசுரங்களுமே வரமுடியும், இலக்கியம் அல்ல. இலக்கியமாகவேண்டுமென்றால் அது கொல்லைக்குச் சென்றுசேரவேண்டும். நம்முடைய அரசியல் கவிதைகள் பெரும்பாலும் சுருக்கப்பட்ட துண்டுபிரசுரங்களோ விரிக்கப்பட்ட கோஷங்களோ மட்டுமே. அவற்றை இலக்கியம் என்று என்னால் ஒருபோதும் ஒத்துக்கொள்ள முடிந்ததில்லை.

இலக்கியத்தில் சொல்லப்படும் அரசியலைப்பற்றி ஆழமான அவநம்பிக்கையை நான் உருவாக்கிக்கொண்டது சுந்தர ராமசாமியின் வழியாகவே. ’இலக்கியத்தில் அரசியல் கூடாதா என்ற கேள்விக்கே இடமில்லை, அரசியல் இருக்கலாம், இருக்கும். ஆனால் இலக்கியத்தில் மிகமுக்கியமான ஒன்றுண்டு, அங்கே பிரக்ஞைபூர்வமாகச் சொல்லப்படும் எதுவும் நம்பகத்தன்மை இல்லாததே’ என்றார் சுந்தர ராமசாமி.

ஆம், மிக அந்தரங்கமான, நுட்பமான, ஆழமான ஒன்றை நேரடியாகச் சொல்லிவிடமுடியாது என்ற மானுடநிலையில் இருந்தே இலக்கியம் என்ற மொழிவடிவம் பிறவிகொண்டது.இலக்கியத்தின் அத்தனை உத்திகளும் அழகியல்சாத்தியங்களும் இந்த சிக்கலில் இருந்தே உருவாகின்றன. காதல் முதல் பிரபஞ்சப்பேருணர்வு வரை மரணபீதி முதல் அரசியல் வரை இலக்கியம் அதற்கே உரிய மறைமுகவழிகளினூடாகவே சொல்லவேண்டியிருக்கிறது.

இலக்கியத்தின் வழி சொல்வதல்ல, உணர்த்துவதே. நேற்று டேவிட் அட்டன்பரோவின் இயற்கை பற்றிய நிகழ்ச்சி ஒன்றை பார்த்துக்கொண்டிருந்தேன். ஒரு குறிப்பிட்ட பூச்சுயிரி [ஃபங்கஸ்] எறும்புவகை ஒன்றை பாதிப்பதை காட்டினார்கள். பூச்சுயிரி நேராக எறும்பின் மூளைக்குச் சென்றுவிடுகிறது. அதன்பின்பு அந்த எறும்பை அது செயல்படச்செய்கிறது. பூச்சுயிரி இனப்பெருக்கம் செய்ய என்னென்ன செய்யவேண்டுமோ அதையெல்லாம் எறும்புசெய்கிறது. அதிகாலையில் மேயவரும் மாடுகளின் வயிற்றுக்குள் பூச்சுயிரியைச் செலுத்துவதற்காக எறும்பு புல்நுனியில் சென்று அமர்ந்திருப்பதைக் கண்டேன். இலக்கியத்தின் வழி அதுவே. அது வாசகனின் தர்க்க மனத்துடன் உரையாடுவதில்லை. அவனுடைய ஆழ்மனதுக்குள் சென்று அமர்ந்து வேலைசெய்கிறது அது.

ஈழக்கவிதைகள் மீதான என் அவநம்பிக்கையை மீண்டும் மீண்டும் பதிவுசெய்துகொண்டே இருக்கிறேன். காரணம் ஈழக்கவிதைகள் மிகப்பெரும்பாலும் வெற்று அரசியல்கூச்சல்கள்தான். அவை அவற்றை எழுதியவர் எவ்வாறாக தன்னைக் காட்டிக்கொள்ள விழைகிறார் என்பதற்கான சான்றுகள் மட்டுமே. அவை கூடத்தில் இருந்து வருபவைகூட அல்ல, தெருமேடைகளில் இருந்து எழுபவை. இந்த அவநம்பிக்கைக்கூற்று என் மீதான கசப்பை நண்பர்களிடம்கூட உருவாக்குகிறது. கவிதை எச்சில் தெறிக்க வெற்றுக் கோஷமிடுவதைக் காணும்போது ஓர் அருவருப்பே உருவாகிறது. அந்த கருவி அதற்கானது அல்ல என்றுதான் கூறவேண்டியிருக்கிறது.

ஆகவேதான் நான் ஈழப்பெண்கவிஞர்களை மேலும் கூர்ந்து கவனிக்கிறேன். அவர்களிடம் ஒரு கொல்லைப்பக்கம் சார்ந்த பார்வை இருக்கும் என்ற நம்பிக்கையில். பொதுவாக பெண்ணெழுத்து என்றாலே அது பெண்ணியம்தான் என ஆகிவிட்டிருக்கிறது. அந்த அரசியலுக்கான நிலைபாடுகளும் வாய்ப்பாடுகளும் இப்போது வகுக்கப்பட்டுவிட்டன. நிலைக்கட்டங்களில் சொற்களையும் படிமங்களையும் நிரப்பினால் போதும் என்ற நிலை வந்திருக்கிறது. அந்தப் பொறியில் சிக்காமல் தான் உணர்ந்தது எதுவோ அதை மட்டுமே உணர்த்த முயல்கிற, தன் அகத்துக்கு மட்டுமே கட்டுப்பட்ட குரல்களுக்காக எப்போதும் தேடிக்கொண்டிருக்கிறேன்

அவ்வகையில் என் கவனத்தைக் கவர்ந்த மூன்று பெண்கவிஞர்கள் ஆழியாள், அனார், பஹீமா ஜகான். மூவருக்குமான பொதுக்கூறுகள் என்றால் போர் மற்றும் இடம்பெயர்தலின் சூழலை அவர்கள் எதிர்கொள்கிறார்கள் என்பதே. மென்மையான நுட்பமான கவிமொழி அனுபவங்களுக்கு நேர்மையாக இருத்தல், வாசகனின் கற்பனையை நோக்கிப் பேசுதல் ஆகிய அம்சங்களில் இம்மூன்று கவிஞர்களும் எனக்கு முக்கியமானவர்களாகப் படுகிறார்கள்.

 

anaar
அனார்

 

நெடுங்காலம் படிமங்களில் கவிதைகள் எழுதப்பட்டும்கூட அனார் கவிதைகளின் படிமங்கள் ஈர்க்கின்றன. அவை படிமங்களை இன்னொரு மொழிக்கட்டுமானத்தில் வைப்பதுதான் காரணம் என்று படுகிறது. உதாரணமாக தியாகம், அர்ப்பணம் ஆகியவற்றுக்கான படிமமாக மெழுகுவத்திகள் நெடுங்காலமாகவே சொல்லபப்ட்டுவருகின்றன. ஆனால் அவற்றை மௌனமான எரிமலைகளாக காண்பது முற்றிலும் புதியது

கொதி நிலை விதிக்கப்பட்டிருக்கும்
எரிமலை நெருப்பு உங்கள் முன்
மெழுகுவர்த்திகளில் ஏற்றப்பட்டும்
ஊதுபத்தியில் புகையவிடப்பட்டும்
அவமானத்துக்குள்ளாவதன் சித்திரவதை நான்..

இந்த மொழியமைப்பு வழியாக வெளியாகும் மௌனஎரிமலையையே நான் பெண்ணியத்தின் அழகியல்பூர்வமான குரலாகக் கொள்வேன். இப்படிமம் வழியாக நான்செல்லக்கூடிய தூரம் மிக அதிகம் என்பதனால்.

அனாரின் இவ்வரிகளில் ஒலிப்பது தன்னை அடையாளப்படுத்திக்கொள்ள முன்வைக்க முயலும் ஒரு மனம். பொதுவாக இந்த அம்சத்தை இந்தியப்பெண்கவிஞர்களின் ஆக்கங்களில் முழுக்க காணமுடிகிறது. ‘நான்….’ என்று அவை கூற முனைகின்றன. ஒன்று தன்னைப்பற்றிய ஒரு வரையறையை மறுப்பதாக அல்லது புதிய ஒரு வரைமுறையை உருவாக்கி அளிப்பதாக அவை அமைந்துள்ளன. அனாரின் வரிகளில் ஒரு வரையறை உள்ளதென்றால் ஆழியாளின் கவிதை வரிகளில் அவ்வரையறையை அழிக்கும் விழைவு

“வெகு இயல்பாய்
என் தடமழியும்
வள்ளம்

பதித்த நீர்ச் சுவடு போல
காற்றுக்
காவும்
மீன் வாசம் போல
கடற்கரைக் காலடியாய்
வெகு இயல்பாய்
என் தடமழியும்
நாலு சுவருள்
ஒற்றப்படும்
மென் உதட்டு முத்தம் போலவும்
எட்டுக்கால் படும் ஒற்றைச் செருப்படி போலவும்.
வெகு இயல்பாய்
என் தடமழியும்
ஒளி விழுங்கின வானவில்லாய்.”

தன்னை முன்வைக்கும் அதேகுரலில் தன் இன்மையை முன்வைப்பதாகவும் பெண் கவிதைகள் ஒலிப்பதன் முரண்பாட்டைப் புரிந்துகொள்வது எளிதல்ல போலும். அனாரின் வரிகளில்

என்னுடைய வரிகளில்
என்னைத் தந்து முடிவதும் இல்லை
எடுக்கவும் முடிவதில்லை

என்று அந்த இயலாமை பதிவாகிறது.

ஒரு புரிதலுக்காக இவ்வாறு சொல்லிப்பார்க்கலாம். பெண்ணின் அடையாளம் என்பது இங்கே நேர்நிலைச் செயல்பாடுகள் வழியாக இயல்பாக உருவாகி வந்ததாக இல்லை. அது அவள்மேல் பல்லாயிரம் வருடத்துப் பண்பாட்டால் ஏற்றப்பட்டதாக உள்ளது. அவளுடைய உடலாக அல்ல உடையாகவே அவளுடைய சுயம் உள்ளது. ஆகவேதான் இது நானல்ல நானல்ல என்ற உணர்வு நமது பெண்கவிஞர்களின் குரலாக மீளமீள ஒலிக்கிறதுபோலும். தன் அடையாளத்தை மறுக்கும் பிறிதொன்றை நிறுவும் அடையளங்களுக்கு அப்பாற்பட்ட இன்மையை உணர்ந்து துணுக்குறும் மனநிலைகள் மாறி மாறி ஒரே கவிக்குரலில் ஒலிக்கின்றன.

bahima
பஹீமா ஜகான்

 

இப்பெண்கவிகளுக்குள் உலவுகையில் மீண்டும் மீண்டும் என்னை உவகை கொள்ளச்செய்யும் அம்சம் இவை முழுக்கமுழுக்க கவிமொழியில் எழுதப்பட்டிருக்கின்றன என்பதே. கவிதையாக அக எழுச்சி பெறாத வெற்று வரிகள் நிகழ்வதே இல்லை. உண்மையான கவிஞரின் அகம் என்பது எந்தவிதமான செயற்கைக் கட்டுமானமும் இல்லாத காட்டுவெளி போன்றதென்று தோன்றுவதுண்டு

தூறலாய் சாரலாய்
பெரும் துளிகளாய் மாறித்
தன்னை நிகழ்த்திக் காட்டிக் கொண்டிருந்தது
அந்தி மழை

என்று பஹீமா ஜகானின் வரிகளை வாசிக்கும்போது அது உருவாக்கும் அர்த்தத்தின் தூண்டுதல் நிகழ்வதற்குள்ளேயே அச்சொல்லமைப்பு உருவாக்கும் ஒரு அக எழுச்சி நிகழ்ந்துவிடுகிறது. கவிதை நிகழ்வது அங்குதான், கருத்துப்பதிவு என்பது அதிலிருந்து விளையும் ஒரு இரண்டாம்கட்ட செயல்பாடுதான்

அதனாலென்ன
அவன் வாளுறைக்குள்
கனவை நிரப்புவது எப்படியென்று
எனக்குத் தெரியும்

என்று அனாரின் வரிகளில் அந்த கனவுத்தொழில்நுட்பத்தைக் காணமுடிகிறது. மிக எளிமையானது அந்த தொழில்நுட்பம். கவிஞனாகும் தருணம் அமையுமென்றால் கவிதை மிகமிக எளியது என்று ஒரு கட்டுரையில் தேவதேவன் சொல்கிறார். ஒரு குழந்தையின் மலர்ந்த விழிகளுடன் வாழ்க்கையை நோக்க முடிந்தால் கவிதை சொற்களில் இயல்பாக வந்தமைகிறது. பஹீமா ஜகானின் கவிதையில்

அசைந்து வரும் கரிய யானைகளைப்
பார்த்தவாறு
கைவிடப்பட்ட தனது கூட்டை எண்ணிக்
கண்ணீர் உகுத்திடலாயிற்று

என்று ஒரு குருவியின் தினத்தில் அந்தியின் வருகை யானைகளின் அசைவாகச் சொல்லபப்ட்டிருக்கிறது. அந்த எளிய குழந்தைநிலையே கவிதைகளின் பிறப்பிடம். கொள்கைகள் கோட்பாடுகள் அல்ல. அரசியலும் தத்துவமும் அல்ல.

பொதுவாக, இந்தியப்பெண்கவிஞர்களின் கவிதைகளில் காணும் ஒரு சிறப்பம்சத்தையும் இவர்களில் காண்கிறேன். என் அழகியல் நோக்கில் அதை ஓர் எதிர்மறை அம்சமாகவே எண்ணுவேன். ஆனால் கிட்டத்தட்ட அத்தனை கவிஞர்களிலும் இக்கூறு உள்ளது என்னும்போது அதன் வேர்களைப்பற்றியே யோசிக்கவேண்டியிருக்கிறது. அதை கவியுருவகம் [மெட்டஃபர்] எனலாம்.

கவிதையில் கவியுருவகங்களை பயன்படுத்துவது சற்று காலாவதியான விஷயம். எப்படி அணிகளும் உவமைகளும் ஒரு காலகட்டத்து அழகியலுடன் தொடர்புள்ளனவோ அதைப்போல. கவியுருவகங்கள் வாசகனுக்கு கற்பனைக்கான சாத்தியங்களைக் கொடுக்காமல் தங்களை அழுத்தமாக நிறுவிக்கொள்ளக்கூடியவை. ஆகவே அவற்றை,  கவிதை சென்ற கால்நூற்றாண்டுக்கும் மேலாக தவிர்த்தே வருகிறது. அவற்றுக்குப் பதிலாகத்தான் படிமங்கள் கவிமொழியாக ஆயின. கவியுருவகங்கள் நாவலுக்குரியவை என்றாயிற்று. நாவலில் தரிசனங்களை பல கோணங்களில் வளர்த்து பல தளங்களுடன் தொடர்புபடுத்தி முன்னெடுத்துச்செல்ல அவை உதவக்கூடியவை.

அள்ளிடும் தருணமெலாம்
மண்ணையும்
குறுணிக்கற்களையும்
அவள் கரங்களில்
எஞ்சவைத்து விட்டு
நெல் மணிகளோடு
நிலத்தில் ஒழுகிக் கொண்டிருந்தது காலம்

என்று பஹீமா ஜகானும்

ஓடிச் சுழித்து ஒன்றிணைந்தாடுகின்றன
தசையணிந்த நீர்ச் சுனைகள்

என்று அனாரும் இயல்பாகவே கவியுருவகங்களைப் பயன்படுத்துவதைக் காணலாம். சொல்லவந்ததை அழுத்த அடிக்கோடிட பெரிதாக்கிக் காட்ட இந்த கவியுருவகங்கள் அவர்களுக்குத் தேவையாகின்றன போலும்.

சமகால ஈழக்கவிதையின் முக்கியமான குரல்களாக இவர்களை நான் காண்கிறேன். இச்சொற்களின் கவித்துவம் அளிக்கும் புத்துணர்ச்சியும் ஒளிவிடும் துயரமும் கவிதை என்ற வடிவத்தின் சாத்தியங்களை என்னுள் மீண்டும் புதுப்பித்தன. அரசியல் கூச்சல்கள் ஒலிக்கும் ஈழத்தின் திண்ணைகளுக்கு அப்பாலிருந்து மௌனம் கனத்த விம்மல்கள் போல, வீணையதிர்வுகள் போல இவை ஒலிக்கின்றன.

 

மறுபிரசுரம்- முதற்பிரசுரம் Mar 24, 2011 

முந்தைய கட்டுரைஇரவைத் தொடுதல் -சந்தோஷ்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-27