ஊட்டி கடிதங்கள்

IMG_1512

அன்புள்ள ஜெ.

வணக்கம். ஊட்டி காவியமுகாம்’18 சிறப்பாக இருந்தது. இதற்கு நீங்கள் செலுத்தும் அர்பணிப்பும், சிரத்தையும் சாதாரணமானதல்ல. நேர்மையும், தொடர் உழைப்பால் மட்டுமே சாத்தியம் ஆகும் நிகழ்வு இது. மற்றவர்கள் நினைத்து பார்த்திராத, படைப்பை தாண்டி ஒரு எழுத்தாளனுக்கு தன் வாழ்நாளில் பெரிய சாதனையாக நினைக்குமளவிற்கு மகிழ்வை அளிக்ககூடியாதாக நிச்சயம் இருக்கும்.

என்னை கவர்ந்த விஷயமாக இந்த நிகழ்வில் இளம் படைப்பாளிகளுக்கு நீங்கள் அளிந்திருக்கும் இடம். அவர்கள் இலக்கிய வாழ்வில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்த கூடியதாக அமைந்துவிடும் என்பதில் சந்தேகமில்லை. கூடவே நதிக்கரை வட்டத்தை குறிப்பிட்டதைபோல் தனியாகவும் இளம் படைப்பாளிகளையும் கவனப்படுத்துகிறீர்கள். நிர்மால்யா, குவிஸ் செந்தில், மீனாம்பிகை போன்றவர்களின் உழைப்பும் ஈடில்லாதது. நிகழ்வில் நானும் கலந்துக் கொண்டேன் என்பது பெருமையாக இருக்கிறது.

அனைத்திற்கும் நன்றி.
கே.ஜே.அசோக்குமார்.

IMG_1542

அன்புள்ள அசோக்

 

இம்முறை இளம்படைப்பாளிகள் மிகுதியாகப் பங்கேற்கட்டும் என எண்ணினேன். அதோடு அவர்களின் ரசனை எவ்வகையில் செல்கிறதென அறியலாம் என்றும். நாம் அறிந்ததை அவர்களிடம் அழுத்துவதாக அமையவேண்டாம் என்று தோன்றியது. இளைய எழுத்தாளர்களின் ஊக்கம் மகிழ்ச்சிஊட்டியது

 

ஜெ

 

IMG_1545

வணக்கம்.

 

ஊட்டி கூடுகை குறித்து தாங்கள் எழுதியிருக்கும் கருத்துகள் அனைத்தும் உண்மையே. தமிழ் சூழலின் இலக்கியக்கூடுகைகளின் “காத்திரத்தன்மை“ குறித்து அறம் பேசுபவர்கள் உணர்வார்கள். வாசிப்பேயின்றி வருவதும், கூடிக்கலைவதும் ஒரு நிலை என்றால், இயக்கமோ, குழுமமோ சார்ந்து இயங்குபவர்கள் சிறிதும் வாசிப்பற்றவர்கள். ஆ..ஊ.. என்றால் ந.பா. குபரா, திஜா என்று இழுப்பவர்கள். தமிழ் இலக்கியம் எங்கு பயணிக்கிறது.. யாரார் எழுதுகிறார்கள் என்பது குறித்து குறைந்தபட்ச அறிதலும் அற்றவர்கள். காலியான நாற்காலிகளின் முன் சோபையாக பேசுவதே இலக்கியம் என்ற வறண்ட வாதத்தை காத்திரமாக நம்பி, அதையே முன் வைப்பார்கள். இம்மாதிரியான கூட்டங்களிலிருந்து பெறுவது என்ன என்பதை சத்தியமாக என்னால் உணர முடியவில்லை.

 

தாங்கள் குறிப்பிட்டது போல சில தனியார் கூடுகைகள் வாசிப்பையும் இலக்கியத்தையும் தங்களுக்கு தெரிந்தவரை முன்னெடுப்பதும் இங்கு நடந்து வருவது ஆரோக்கியம்தான்.

 

ஆனால் பல்கலைக்கழகங்களின், அரசின் கடமைகளாக இருக்க வேண்டிய ஒன்றை நீங்கள் உங்கள் பொறுப்பாக எடுத்துக் கொள்வது தமிழுக்கு கிடைத்த நன்கொடை. விஷ்ணுபுரம் விழாவிற்கு வருமளவிற்கே தற்போதைய சூழல் எனக்கு வாய்த்திருக்கும் நிலையில், கடந்த மூன்று வருட கூடுகைகளில் நான் கலந்துக் கொண்டிருக்கிறேன். இதிலிருந்து கற்றது என்ன.. பெற்றது என்ன.. என்றால் நான் இன்று இயங்கிக் கொண்டிருக்கும் இலக்கிய வெளியும், தணிந்துக் கொண்டிருக்கும் என் சிக்கலான மனதையும்தான் முன் வைக்கிறேன்.

 

உங்கள் தளத்தில் அறிவிப்பு வெளியான தினத்தன்று லோகமாதேவியோடும் சுசீலா அம்மாவோடும் பேசினேன். பிறகு விண்ணப்பத்தையும் நிரப்பி அனுப்பினேன். பிறகு கிருஷ்ணன் அவர்களோடு பேசி, நான் முதலில் விண்ணப்பத்தை நிரப்பிக் கொள்கிறேன். பிறகு வீட்டில் கலந்து பேசி விட்டு சொல்கிறேன்.. என்றேன். அவரும் இரண்டு நாட்கள் நேரம் எடுத்துக் கொண்டு உங்கள் முடிவை தெரிவியுங்கள் என்று மனப்பூர்வமாக அனுமதித்தார்.  வழக்கம்போல வருகை கட். என் மகளுக்கு செமஸ்டர் எக்ஸாம் நடந்துக் கொண்டிருக்கிறது. அலுவலகத்திலும் லீவு கேட்ட தயக்கம்.

 

ஆகஸ்ட் என்று கூடுகைக்கு நீங்கள் திட்டமிட்டுள்ளது பெரிய ஆறுதல்தான் என்னை பொறுத்தவரை. வருகிறேன் என்பதும் பிறகு சூழல்களால் மறுப்பதும் இரண்டு மூன்று முறைகளாகி விட்டது எனக்கு. தயவுசெய்து இதனை பெரிதாக கருதிக் கொள்ளாமல் இனிவரும் காலங்களில் எனக்கு வாய்ப்பும் சூழலும் பொருந்தி வர வேண்டும் என்ற மாறாத எண்ணங்களோடும், ஜெயமோகன் என்ற மாபெரும் எழுத்தாளுமையின் கீழ் தமிழ் எழுத்து நல்லுரு பெற வேண்டும் என்ற நம்பிக்கையோடும்

 

நன்றியோடும்

 

கலைச்செல்வி.

 

IMG_1551

அன்புள்ள கலைச்செல்வி

 

பரவாயில்லை அடுத்தமுறை வரமுயல்க

 

பொதுவாக இத்தகைய கூடுகைகள் சம்பந்தமில்லாதவர்களுக்கு ஒருவகை அச்சத்தை உருவாக்குகின்றன என நினைக்கிறேன். அவர்களுக்கு எதிராக ஏதோ நிகழ்வதுபோல கற்பனைசெய்துகொள்கிறார்கள். அதன் வெளிப்பாடுகளைக் காண்பது எப்போதும் நிகழ்வதே

 

நம் நோக்கம். அர்ப்பணிப்பு தொடர்ந்து வெளிப்படுமென்றால் அதற்கு ஒரு மதிப்பு உருவாகிறது

 

ஜெ

 

*

 

 

ஆசிரியர்  அவர்களுக்கு.

 

ஊட்டி முகாம் காணொளி ஏதும் வரும் என்று எதிர்பார்த்து ஏமாற்றம். அங்க வரும் அனைவரும் நிகழ்ச்சிக்கு வாரங்க தவிர வீடியோ எடுக்க வரவில்லை என்று தெரிகிறது. இருந்தாலும் யாராவது செய்வார்கள் என்று நப்பாசை.  அந்த அறையில் அனைவரும் தறையில் நெருக்கி அமர்ந்து  இருப்பது ஆச்சிரியமாக இருக்கிறது.

ஊட்டி விவாதம் என்றவுடன் இந்த ரூம்தான் முதலில் நினைவில் எழுகிறது. ஏதும் விசேஷ காரணம் இருக்கலாம் என்று நினைக்கிறேன். மிக தீவிரமாக விவாதம் நடந்திருக்கும் என்பது  அனைவர் கண்களில் தெரிகிறது. மற்றும் என்ன பேசிக்கொள்கிறர்கள் என்று அறிய மனம் விழைகிறது . ஆனால் அங்க வந்து கலந்து கொள்ள தகுதி இருக்கிறதா என்று தெரியவில்லை. இல்லை என்றே நினைக்கிறேன்.

 

 

-ஓம்பிரகாஷ்

அன்புள்ள ஓம்பிரகாஷ்

 

பொதுவாக எங்கள் உரையாடல்களை விரிவாக பதிவுசெய்வதில்லை. விவாதங்களிலுள்ள சுதந்திரம் இல்லாமலாகும். பொதுவெளியில் பகிர்ந்தால் அரைகுறைகளும் காழ்ப்புகொண்டவர்களும் அதைவைத்தே கும்மியடிக்க ஏதுவாகும். சுருக்கமாக விவாதக்குறிப்புகளைக் கொடுக்கலாம். ஆனால் அவற்றிலிருந்து விவாதங்களை பின்தொடர இயலாது . விவாதங்கள் பங்கெடுத்தவர்களின் உள்ளங்களில் வளர்வதே முறையானது

 

ஜெ

முந்தைய கட்டுரைகாந்தி -வரிகள்
அடுத்த கட்டுரைஇந்து ஞானமரபில் ஆறு தரிசனங்கள் -சுயாந்தன்