வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-51

wild-west-clipart-rodeo-31அர்ஜுனன் சொன்னான். என்மீது அருள்பூண்டு எனக்கிரங்கி ஆத்மஞானம் என்னும் ஆழ்ந்த மந்தணத்தை நீ எனக்கு உரைத்தது கேட்டு என் மயக்கம் தீர்ந்தது. ஏனென்றால் உன்னிடமிருந்து உயிர்களின் தோற்றத்தையும் அழிவையும் விரிவாக கேட்டேன். அழிவற்ற பெருமையையும் கேட்டேன். உயர்ந்தவனே, இறைவனே, நீ உன்னைப்பற்றி கூறியவாறு உன் இறையுருவை காண விழைகிறேன். தலைவ, என்னால் அதை பார்க்கமுடியுமென நீ எண்ணுவாய் என்றால் அருள்புரிக! உன் அழிவிலா ஆத்மாவை எனக்கு காட்டுக!

இறைவன் சொன்னார். பலநூறாகவும் பல்லாயிரமாகவும் பலவகை நிறங்களும் அளவுகளும் கொண்ட என் பேருருக்களை பார், பார்த்தா. ஆதித்யர்களை பார்; வசுக்களை பார்; அசுவினி தேவரை பார்; மருத்துக்களை பார்; பாரதா, இதற்கு முன் கண்டிராத பல விந்தைகளை பார். இன்று இங்கே என் உடலில் ஒரே இடத்தில் உலகம் முழுமையும் அமைந்துள்ளது. எதை விரும்பினாலும் காண். ஆனால் இயற்கையான இவ்விழிகளால் என்னை முழுதுறக் காண்டல் இயலாது. உனக்கு அறிவிழி அளிக்கிறேன். என் இறைவடிவப் பெருந்தோற்றத்தை பார்.

என்று சொல்லி யோகதலைவனாகிய கிருஷ்ணன் பார்த்தனுக்கு அனைத்து அழகுகளும் கொண்ட தன் தெய்வவடிவை காட்டினான். அவ்வடிவம் பல வாய்களும் விழிகளும் கொண்டது. பல வியப்புறு காட்சிகள் உடையது. பல அரிய அணிகள் பூண்டது. பல தெய்வப்படைக்கலங்கள் ஏந்தியது. அரிய மாலைகளும் ஆடைகளும் புனைந்தது. தூய நறுமணங்கள் பூசியது. எல்லா வியப்புகளும் அமைந்தது. எல்லையற்றது. எங்கும் முகங்கள் கொண்ட இறைவடிவம் அது.

வானத்தில் ஆயிரம் கதிரவன்கள் ஒரே நேரத்தில் தோன்றிய ஒளி அவ்வொளிக்கு நிகரானதாக இருக்கலாம். பற்பல பகுதிகள் கொண்ட வையம் முழுக்க அந்த இறைப்பேருருவனின் உடலில் ஒன்றாகி நிற்பதை அர்ஜுனன் கண்டான். பெருவியப்படைந்து மயிர்ப்புகொண்டு அத்தெய்வத்தை தலைதாழ்த்தி வணங்கி கைகூப்பி சொன்னான்.

தேவர்க்கிறைவா, உன் உடலில் எல்லா தேவர்களையும் காண்கிறேன். அனைத்து விலங்குகளையும் தாமரைமலரில் அமர்ந்த பிரம்மனையும் அனைத்து முனிவர்களையும் மாபெரும் நாகங்களையும் காண்கிறேன். அனைத்துக்கும் இறைவனே, பல தோள்களும் பற்பல விழிகளும் கொண்ட எல்லையிலா வடிவாக உன்னை காண்கிறேன். அனைத்தையும் தன் வடிவாகக் கொண்டவனே, உன் முடிவை நான் காணவில்லை. நடுவையும் தொடக்கத்தையும் காணவில்லை.

மகுடமும் கதையும் ஆழியும் ஏந்தியவன். அனைத்தையும் சுடரச்செய்யும் பேரொளி. எரிந்தெழும் அனல் என, கதிரவன் என விழியழிய வெளிநிறைக்கும் அளவிலி நீ. அழிவிலாதவனே, அறியத்தக்கனவற்றில் முதன்மை நீ, நீயே புடவிப்பெருவெளியின் முழுமுதன்மையின் உறைவிடம். குறைவிலாதவனே, நீயே என்றுமுள அறத்தை நிலைநிறுத்துபவன். தொன்மையான புருஷன் நீயே என கண்டுகொண்டேன்.

முதலும் நடுவும் இறுதியும் இலாதவனாக, எல்லையற்ற வீரம் எழுந்த கணக்கிலா தோள்களுடன், ஞாயிறும் திங்களும் விழிகளாக, அனலென சுடரும் பற்கள் கொண்ட வாயுடன், தன் பேரொளியால் இப்புடவிகளை எரிப்பவனாக உன்னை காண்கிறேன். வானுக்கும் பூமிக்கும் இடையேயான வெளியையும், அனைத்துத் திசைகளையும் நீயே நிறைத்திருக்கிறாய். விந்தையான, அச்சுறுத்தும் உன் வியனுருவைக் கண்டு மூவுலகுகளும் தளர்கின்றன.

வானோர் திரளெல்லாம் உன்னுள் புகுந்து மறைகின்றன. அஞ்சி கைகூப்பி கூவுகின்றனர் சிலர். முனிவரும் சித்தர்களும் நன்று நிகழ்க என்று உன் அழகுகளைக் கூறி புகழ்கிறார்கள். ருத்திரர், ஆதித்யர், வசுக்கள், சாத்யர், விசுவேதேவர், அசுவினி தேவர், மருத்துக்கள், உஷ்மபர், கந்தர்வர், யக்ஷர், அசுரர், சித்தர் போன்ற அனைவரும் உன்னை வியப்புடன் நோக்குகின்றனர். பெருந்தோளாய், பல வாய்களும், பற்பல விழிகளும், ஏராளமான கைகளும், எண்ணற்ற கால்களும், பல வயிறுகளும், அச்சமூட்டும் பற்களுமுடைய உன் பெருவடிவைக் கண்டு, உலகங்கள் நடுங்குகின்றன, நானும் அவ்வண்ணமே.

ஏனென்றால் வானைத் தொடுவது, பல நிறங்கள் கொண்டது, திறந்த வாய்களும் எரிகின்ற விழிகளும் கொண்ட உன் வடிவுகளும் கண்டு அகஆழம் அஞ்சி நிலைமறந்து அமைதியழிந்துள்ளேன். கோரைப்பற்கள் எழுந்த, அச்சமூட்டும் ஊழித்தீ போன்ற உன் முகங்களைக் கண்ட எனக்கு திசை தெரியவில்லை. எங்கும் அமைதி தோன்றவில்லை. தேவர்களின் தலைவனே, உலகங்கள் சென்றமைபவனே, அருள்க!

இந்த திருதராஷ்டிரன் மைந்தர் மற்ற அரசர்நிரைகளுடன் உன்னுள்ளே செல்கின்றனர். பீஷ்மரும் துரோணரும் சூதன்மைந்தனாகிய கர்ணனும் நம்மைச் சார்ந்த முதன்மை வீரர்களுடன் கொடிய பற்களுடைய உன் கொடிய வாய்களுக்குள் விசையுடன் வீழ்கின்றனர். சிலர் உன் பல்லிடைகளில் அகப்பட்டு தலை சிதைந்துள்ளனர். பல ஆறுகளின் பெருக்குகள் கடலை நோக்கி பாய்வதைப்போல இந்த மண்ணுலக வீரர்கள் பற்கள் சுடரும் உன் வாய்களுக்குள் நுழைகிறார்கள். விட்டில்கள் துள்ளி எரிசுடரில் விழுந்து அழியச் செல்வதுபோல உலகங்கள் அழிவை நாடி விசைகொண்டு உன் வாய்களுக்குள் புகுகின்றன.

அனைத்து உலகங்களையும் அனலெழும் வாய்களால் விழுங்கிக்கொண்டு அனைத்து இடங்களையும் தழுவுகிறாய். உன் விசைகொண்ட கதிர்கள் வையங்கள் அனைத்தையும் எரித்து பொசுக்குகின்றன. தேவர்களின் இறைவனே, கொடும்பேருருக் கொண்ட நீ யார்? உன்னை வணங்குகிறேன். எனக்கு அருள்புரிக! தொடக்கமாகிய உன்னை அறிய விரும்புகிறேன். ஏனென்றால் நான் உன் செயலை அறிந்திலேன்.

இறைவன் சொன்னார். உலகை அழிக்க பெருகியெழுந்த காலம் நான். இதோ அனைத்தையும் அழித்துக்கொண்டிருக்கிறேன். எவர் என் எதிரில் இருக்கிறார்களோ அவர்கள் நீ போரிடாமலிருந்தாலும் எஞ்சப்போவதில்லை. ஆகவே நீ எழுந்து நில். போரிட்டு புகழ்சூடு. பகைவரை வென்று வளமான நாட்டை பெறுக! இவர்கள் முன்னரே என்னால் கொல்லப்பட்டுவிட்டனர். நீ புறநிமித்தம் மட்டுமே. துரோணனையும், பீஷ்மனையும், ஜயத்ரதனையும், கர்ணனையும் மற்ற வீரர்களையும் கொல். அஞ்சாமல் போர் செய். போர்க்களத்தில் பகைவரை வென்று எழு.

கேசவன் சொன்ன இச்சொற்களைக் கேட்டு பார்த்தன் மெய்நடுங்கி கைகூப்பி மீண்டும் மீண்டும் வணங்கி அச்சத்துடன் நாக்குழற சொன்னான். முனிவருக்கிறைவனே, உன் பெயர் சொல்லி உலகம் மகிழ்ந்து இன்புறுவது பொருந்துவதே. அரசர் அஞ்சி திசைகளில் மறைகிறார்கள். சித்தர்கள் வணங்குகிறார்கள். முன்பு பிரம்மனையே படைத்தவன், அனைத்துக்கும் மூத்தவன் நீ. முடிவிலாதோனே, தேவர்க்கிறைவனே, உலகங்களின் உறைவிடமே, உருக்கொண்டும் உருவிலாமலும் கடந்தும் திகழும் அழிவிலா பரம்பொருள் நீ.

நீயே முதல் தேவன். பழைமையான புருஷன். நீ இவ்வகிலத்தின் முதல்முழுமையின் நிலை. நீ அறிவு அறிபடுபொருள் அறிவோன். நீ மெய்நிலை. முடிவற்ற வடிவம்கொண்ட உன்னால் நிறைந்துள்ளது கடுவெளி. நீயே காற்று, யமன், அனலவன், வருணன், நிலவன். நீ பிரம்மன், பிரம்மனின் பாட்டன். உன்னை ஆயிரம் முறை வணங்குகிறேன். மீண்டும் உனக்கு வணக்கம். மீளமீள வணக்கம்.

உன்னை முன்னும் பின்னும் வணங்குகிறேன். அனைத்துமானவனே, உன்னை அனைத்துத் திசைகளிலும் வணங்குகிறேன். எல்லையற்ற விசையும் அளவிலா ஆற்றலும் கொண்டவனே, அனைத்திலும் உறைகிறாய். அனைத்துமாக திகழ்கிறாய். உன் பெருமையை அறியாமல் தோழன் என்று எண்ணி பிழையாலோ அன்பாலோ கிருஷ்ணா, யாதவா, நண்பா என்று முறையிலாது சொன்னதுண்டு. களியாட்டிலும் துயிலிலும் அமர்விலும் உண்கையிலும் தனியிடத்திலும் பிறர் முன்னாலும் வேடிக்கையாகவோ அன்றியோ சிறுமை செய்திருந்தால் அளவற்ற மாண்பு கொண்ட நீ அனைத்தையும் பொறுத்தருளவேண்டும்.

நீ அசைவதும் அசைவற்றதுமான இவ்வுலகின் தந்தை. இவ்வுலகின் வழிபாட்டுக்குரியவன். அனைத்துக்கும் ஆசிரியன். நிகரற்றவன். எனில் உனக்குமேல் எவருளர்? மூவுலகிலும் நிகரற்ற மாண்புகொண்டவன். ஆகவே உடல் வளைய வணங்கி அருள்கோருகிறேன். மகனை தந்தை என, தோழனை தோழன் என, காதலியை காதலன் என நீ என்னை பொறுத்தருள்க!.

முன்பு காணாததைக் கண்டு மகிழ்கிறேன். என் உளம் அச்சத்தால் சோர்கிறது. நான் கண்ட அந்த அழகிய வடிவையே எனக்கு காட்டுக! உம்பர்க்கிறையே, உலகங்களின் உறைவிடமே, என்மேல் அளிகொள்க! முன்புபோல மணிமுடியும் கதையும் கையில் படையாழியுமாக உன்னைக் காண விழைகிறேன். உலகங்களின் பரம்பொருளே, ஆயிரம் தோளனே, முன்பிருந்த நான்கு தோள் வடிவில் எழுந்தருள்க!

இறைவன் சொன்னார். அர்ஜுனா, உன்மேல் அருள்கொண்டு என்னுடைய யோகஆற்றலால் பேரொளிகொண்டதும் முதலும் முடிவுமான என் வியனுருவை உனக்கு காட்டினேன். இது உன்னையன்றி எவராலும் பார்க்கப்படவில்லை. வேள்விகளாலும், கல்விகளாலும், கொடைகளாலும், கொடுந்தவங்களாலும்கூட மானுட உலகில் இவ்வுருவில் காணப்பட இயலாதவன் நான். எனது இந்தக் கொடும்பேருரு கண்டு அஞ்சவேண்டாம். உளம் மயங்கவேண்டாம். அச்சம் நீங்கி மகிழ்வுற்ற உள்ளத்துடன் என் இவ்வடிவை மீண்டும் நோக்கு.

இவ்வாறு சொன்ன வாசுதேவன் மீண்டும் தன் உருவத்தை காட்டினார். இனிய வடிவமெய்தி அஞ்சி அமர்ந்திருந்த பார்த்தனை ஆறுதல்கொள்ளச் செய்தார். அர்ஜுனன் சொன்னான். ஜனார்த்தனா, உனது தண்மை பொருந்திய இம்மானிட வடிவத்தைக் கண்டு இப்போது அமைதியுற்றேன். என் உணர்வு மீண்டது; இயற்கை நிலை எய்தினேன்.

இறைவன் சொன்னார். நீ இப்போது கண்ட இவ்வடிவம் காண்பதற்கு அரியது. தேவர்கள்கூட இந்த உருவத்தைக் காண விழைவுகொண்டிருக்கிறார்கள். நீ என்னை பார்த்த இவ்வடிவில் வேதங்களாலும் என்னை காணமுடியாது. தவத்தாலோ கொடையாலோ வேள்வியாலோ அறியமுடியாது. வேறெதுவும் வேண்டா பணிதலால் இதை காணமுடியும். அறிந்து ஒன்றவும் இயலும்.

ஆற்றவேண்டிய கடமைகளை என்பொருட்டு செய்பவன், என்னையே அடையவேண்டுமென குறிக்கோள் கொண்டவன், என்னிடம் தன்னை படைப்பவன், பற்றற்றவன், எவ்வுயிரிடமும் பகையிலாதவன் என்னை அடைகிறான்.

wild-west-clipart-rodeo-31அர்ஜுனன் கேட்டான். இவ்வாறு யோகத்திலமர்ந்து உன்னை வழிபடும் அடியார், அல்லது அழிவிலாது மறைந்திருப்பதை வழிபடுபவர் இரண்டில் எவர் யோகத்தில் மேம்பட்டவர்?

இறைவன் சொன்னார். எவர் என்னிடத்தில் உளம்செலுத்தி, மாறா யோகிகளாக அகம்கூர்ந்து என்னை வழிபடுகிறார்களோ அவர்களே யோகிகளில் மேலானவர் என்று என்னால் கருதப்படுவர். அழிவற்றதும் அறிவிக்கப்படாததும் மறைந்திருப்பதும் எங்கும் நிறைந்ததும் உளத்துக்கும் அறிவுக்கும் அப்பாற்பட்டதும் மந்தணமானதும் அசைவற்றதும் மையம்கொண்டதுமானதை வழிபடுபவர்கள் புலன்தொகையை அடக்கி எங்கும் நிகர்நோக்கு கொண்டவர்களாக எல்லா உயிர்க்கும் நலம் நாடுபவர்களாக திகழ்பவர்கள் என்னையே அடைகிறார்கள்.

மறைந்திருக்கும் பிரம்மத்தில் உள்ளம் வைத்து செய்யும் தவத்தில் முயற்சி மிகுதி. ஏனென்றால் உடலில் அமைந்தவர்களால் உருவற்ற பரம்பொருளை நாடும் பாதையில் மிகுந்த இடருடனே செல்லமுடியும். ஆனால் என்னையே அடைக்கலமாகக் கொண்ட அடியார் எல்லா செயல்களையும் என்னிடம் படைத்து என்னையே பிறழா யோகத்தால் இடையறாது நினைத்து வழிபடுகிறார்கள். என்பால் அறிவை வைத்த அவர்களை நான் இறப்பு நிறைந்த உலகியல் கடலில் இருந்து விரைவிலேயே தூக்கிவிடுகிறேன். மனதை என்பால் நிறுத்து; மதியை என்னுள் புகுத்து. இனி நீ என்னுள்ளே உறைவாய்; ஐயமில்லை.

ஒருவேளை சித்தத்தை என்னிடம் நிறுத்திவைப்பதற்கு முடியாவிட்டால் பயிற்சியினால் என்னை அடைய விரும்பு. பழகுவதிலும் நீ திறமையற்றவனாயின் என்பொருட்டு செயலாற்றுபவன் ஆகுக! என்பொருட்டு செயல்கள் செய்து கொண்டிருப்பதனாலும் வீடுபேறு அடைவாய். அதைக்கூட செய்யமுடியாதவன் என்றால் தன்னை தான் கட்டுப்படுத்தி என்னை அடைவதென்ற யோகத்தில் உறுதியாகி செயற்பயன்களையெல்லாம் துறந்து அமைக! பழக்கத்தைவிட ஞானம் சிறந்தது. ஞானத்தைவிட ஊழ்கம் சிறந்தது. ஊழ்கத்தைவிட செயற்பயனை துறந்துவிடுதல் மேம்பட்டது. அத்துறவுக்குப்பின்   அமைதி எழுகிறது.

எவ்வுயிரையும் பகைத்தலின்றி, அனைத்திடமும் நட்பும் அளியும் உடையவனாய், யானென்பதும் எனதென்பதும் நீங்கி இன்பத்தையும் துன்பத்தையும் நிகராகக் கொண்டு பொறுமையுடையவனாக எப்போதும் மகிழ்ச்சியுடையவனாக, தன்னை கட்டியவனாக, உறுதியுடையவனாக, என்னிடத்தே உள்ளத்தையும் சித்தத்தையும் அளித்து அமையும் என் தொண்டனாகிய யோகி எனக்கு இனியவன். உலகத்தோரால் வெறுக்கப்படாதவன், உலகத்தாரை வெறுக்காதவன், களியாலும் அச்சத்தாலும் சினத்தாலும் விளையும் கொதிப்புகளினின்றும் விடுபட்டவன், எனக்கு உகந்தவன்.

எதிர்பார்த்தலின்றி தூயோனாய், திறமுடையோனாய், பற்றுதலற்றவனாய், கவலை நீங்கியவனாய், எல்லா ஆடம்பரங்களையும் துறந்து என்னிடம் அடிபணிவோன் எனக்கு அன்பன். எதற்காகவும் மகிழாதவன், எதையும் வெறுக்காதவன், எதன்பொருட்டும் துயரப்படாதவன், எதற்காகவும் விழைவுகொள்ளாதவன், நன்மையும் தீமையும் துறந்தவனாகிய யோகி எனக்கு அணுக்கமானவன்.

பகைவனிடமும் நண்பனிடமும் மதிப்பிலும் இழிவிலும் நிகர்நிலையில் இருப்பவன், தண்மையிலும் வெம்மையிலும் இன்பத்திலும் துன்பத்திலும் மாறுபாடில்லாதவன், பற்றறுத்தவன், புகழையும் இகழையும் நிகராகக் கொண்டவன், அமைதியானவன், எது வரினும் அதில் மகிழ்ச்சியுறுபவன், எங்கும் அமையாதவன், நிலையான அறிவுடையவன், என் அன்புக்குரியவன்.

அறவடிவான இந்த அமுதை நான் சொன்னபடி வழிபடுவோர், நம்பிக்கையுடையோர், என்னை முழுமுதலெனக் கொண்டோர், அடியார் என் பேரன்பிற்குரியவர்.

முந்தைய கட்டுரைரகசியப்பேய்
அடுத்த கட்டுரைகாந்தி -வரிகள்