அர்ஜுனன் கேட்டான். அந்த பிரம்மம் எது? ஆத்மஞானம் எது? செயலென்பது என்ன? எது பொருள்மெய்மை? எது தெய்வமெய்மை? வேள்விமெய்மை என்பதென்ன? இவ்வுடலில் எப்படி அது உறைகிறது? தம்மை வென்றவர்களால் இறுதியில் நீர் எப்படி அறியப்படுகிறீர்?
இறைவன் சொன்னார். அழிவற்ற முதற்பொருளே பிரம்மம். அதன் இயல்பறிதல் ஆத்மஞானம். உயிரெனத் தோன்றுவது இயற்கை. அது பெருகுவதே செயல். அழிவுபடும் இயற்கையைக் குறித்தது பொருள்மெய்மை. முதலுருவனைப் பற்றியது தேவமெய்மை. உடலென என்னை அறிதல் வேள்விமெய்மை. இறுதியில் தன் உடலை முற்றிலும் துறந்து எனது நினைவுடன் கடப்போன் எனதியல்பை எய்துவான். இதில் ஐயமில்லை. முடிவில் எத்தன்மையை நினைப்பவனாக உடலை துறக்கிறானோ அத்தன்மையிலே கருத்துடையவனாக அதனையே எய்துவான்.
ஆதலால், எல்லா காலங்களிலும் என்னை உளம்கொள்க! போர் செய்க! என்னிடத்தே உளத்தையும், அறிவையும் அடிவைத்தால் என்னையே பெறுவாய். வேறிடஞ்செல்லா அகத்துடன் யோகம் பயிலும் சித்தத்துடன் எண்ணிக்கொண்டிருப்போன் உயர்ந்தவனாகிய பரம்பொருளை அடைகிறான்.
கவிஞனை, பழையோனை, அனைத்தையும் ஆள்வோனை, அணுவின் நுண்ணியனை, அனைத்தையும் சூடுவோனை, கதிரவனின் வண்ணங்கொண்டிருப்பானை, எண்ணுதற்கரிய வடிவுடையோனை, இருள் கடந்தவனை நினைப்பவன் செல்லும் காலத்தில் அசைவிலா உள்ளத்துடன் புருவநடுவே உயிரை ஏற்றி அடிபணிந்து யோகவல்லமையுடன் குவித்து தூய பரம்பொருளை சென்றடைகிறான்.
வேதமறிந்தோர் அழிவற்றதென்று கூறும், விழைவறுத்த முனிவர் சென்று புகும், காமஒறுப்பு நோன்புடையோர் விழையும் அந்த நிலையை உனக்கு சுருக்கமாக சொல்கிறேன். அனைத்து வாயில்களையும் மூடி, உள்ளத்தை இதயத்தில் நிறுத்தி, உயிரை உச்சியில் செறித்து, யோகத்தில் ஆத்மாவை நிலைக்கச்செய்து, ஓம் என்ற பிரம்ம எழுத்து ஒன்றையே சொல்லிக்கொண்டு, என்னையே எண்ணி உடல் துறப்போன் பெருநிலை பெறுகிறான்.
பிற நினைவிலாது என்னை எப்போதும் நினைப்பவன் நிலையான யோகத்தில் இயைந்திருக்கும் யோகி. அவனுக்கு நான் எளிதில் சிக்குவேன். என்னையடைந்து பெருநிலை பெற்ற படிவர் மீண்டும் நிலையற்றதும் துன்பத்தின் உறைவிடமும் ஆன மறுபிறப்பை அடையமாட்டார். பிரம்மஉலகுவரை எல்லா புடவிகளும் மறுபிறப்பு உடையன. என்னை அடைந்தவனுக்கு மறுபிறப்பு இல்லை.
பிரம்மனுக்கு ஒரு பகல் ஆயிரம் யுகங்களால் ஆனது, இரவும் ஆயிரம் யுகங்கள் கொண்டது என அறிபவர்களே இரவுபகலின் இயல்பறிந்தோர். பிரம்மனின் பகல் தொடங்கும்போது அறிவென எழுந்த அனைத்தும் அறியப்படாமையிலிருந்து எழுகின்றன. இரவில் அவை அறியப்படாமையில் மீண்டும் மறைகின்றன. இந்த உயிர்த்தொகுதி மீண்டும் மீண்டும் தன்னை மீறி இரவில் அழிகிறது, பகலில் எழுகிறது.
அந்த அறியப்படாததைவிட மேலும் உயர்ந்ததும் அழிவற்றதுமாக வெளிப்படாதிருப்பது எல்லா உயிர்களும் அழிகையிலும் அழிவதில்லை. அழிவற்ற அறியப்படாமை எனப்படும் அதையே பெருநிலை என்பர். எதை எய்திய பின் மீள்வதில்லையோ அதுவே எனது நிலை. அனைத்து உயிர்களும் அமைந்தவன், அனைத்திலும் நிறைந்தவன், முழுமுதலோன் வேறிடம் செல்லா அடிபணிதலால் அடையப்படுவான்.
எந்தக் காலத்தில் இறப்பதனால் யோகிகள் மீளா நிலையும் மீளும் நிலையும் பெறுவார்களோ அக்காலத்தை சொல்கிறேன். தீ, ஒளி, பகல், வளர்நிலவு, வடக்குமுகக் கதிரின் ஆறு மாதங்கள் ஆகியவற்றில் இறக்கும் அறிவர் பிரம்மத்தை அடைகிறார்கள். புகை, இரவு, தேய்நிலவு, தெற்குமுகக் கதிரின் ஆறு மாதங்கள் ஆகியவற்றில் இறக்கும் யோகியர் சந்திரனொளியைப் பெற்று இருந்து இங்கு மீள்கிறார்கள்.
ஏனென்றால் இப்புடவியில் வெண்மையும் கருமையும் என்றுமுள்ளது. ஒன்று மீளா நிலையும் பிறிதொன்று மீளும் நிலையும் அளிக்கிறது. இவ்வழிகளிரண்டையும் உணர்ந்தால் யோகி மயக்கமுறுவதில்லை. ஆதலால், எப்போதும் யோகத்தில் அமைக! இதை அறிபவன் வேதங்களிலும், வேள்விகளிலும், தவங்களிலும், கொடைகளிலும் சொல்லப்பட்ட நற்பயன்கள் அனைத்தையும் கடந்துசென்று மேலும் முதன்மையானதாகிய பெருநிலையை அடைகிறான்.
மறைவான இயைபறிவுடன் கூடிய, தீமையிலிருந்து விடுவிப்பதாகிய இந்த மெய்யறிவை எந்த விலக்கமும் இல்லாமல் உனக்கு சொல்கிறேன். இது அரசமெய்மை, அரசமந்தணம், தூயது, சிறந்தது, கண்கூடானது, அறத்துக்கியைந்தது, இயற்ற எளியது, அழிவற்றது. இவ்வறத்தில் நம்பிக்கையற்ற மனிதர் என்னை எய்தாமல் உலகியலின் உழல்பாதைகளுக்கே மீள்கின்றனர்.
வெளிப்படா வடிவாக நான் இவ்வுலகு முழுக்க சூழ்ந்துள்ளேன். பருப்பொருட்களனைத்தும் என்னிடத்தே நிலைபெற்றுள்ளன. நான் அவற்றில் நிலைபெறவில்லை. இந்த இறையியல்பு கொண்ட யோகவல்லமையை பார்! பருக்களைச் சூடி பருக்களை உருவாக்குபவன் என்றாலும் என் ஆத்மா பருக்களில் நிலைகொள்வதில்லை. எங்கும் இயலும் காற்று வானில் நிலைகொண்டிருப்பதுபோல பொருட்களனைத்தும் என்னில் நிலைகொள்கின்றன என்று அறிக!
ஊழி முடிவில் பருவனைத்தும் என் இயல்பை அடைகின்றன. ஊழி தொடங்கும்போது மீண்டும் அவற்றை படைக்கிறேன். இயற்கையின் தன்னியல்பால் தன்னை இழந்த இந்தப் பருப்பொருட்களனைத்தையும் மீளமீள எனது இயல்பால் ஏற்று படைத்துக்கொண்டிருக்கிறேன். அச்செயல்களில் பற்றில்லாமல் அச்செயல்களில் இருந்து உயர்ந்து நிற்கும் என்னை அவை கட்டுப்படுத்துவதில்லை. தலைவனாகிய என் நோக்கில் முதலியற்கையில் அசைவன அசையாதன அனைத்தும் தோன்றுகின்றன. அதனால் உலகம் இயங்குகிறது.
எனது இச்செவ்வியல்பை அறியாத அறிவிலோர் மானுடத்தை தாங்குபவனும் பருப்பொருட்களின் தலைவனுமாகிய என்னை புறக்கணிக்கிறார்கள். மயங்கிய விழைவும் மயங்குசெயலும் மயங்கறிவும் கொண்ட மதியிலாதோர் அரக்கர், அவுணர், அணங்கு எனும் ஆற்றல்களை சார்ந்தமைகின்றனர். இறைத்தன்மைகொண்ட மாமனிதர் அனைத்துக்கும் முதல்வனும் அழிவற்றவனுமாகிய என்னை வேறுநாட்டமில்லா உள்ளத்துடன் வழிபடுகிறார்கள்.
நிலைநோன்புடன் இடையறாது வாழ்த்தி செயலியற்றி என்னை வணங்குவோர் மாறா யோகிகள். வேறு சிலர் அறிவுவேள்வியால் உளமொன்றி வழிபடுகிறார்கள். சிலர் பேருருக்கொண்ட பரம்பொருளாக என்னை தன்னிலிருந்து வேறென நிறுத்தி வணங்குகிறார்கள். நானே எரிசெயல். நானே வேள்வி. நானே ஸ்வாகா என்னும் ஊட்டுரை. நானே மருந்து. நானே நுண்சொல். நானே நெய். நானே அனல். நானே அவி. அனைத்தும் நானே.
இவ்வியனுலகை பேணுபவன், தந்தை தாய் மூதாதை, படைக்கத்தக்கவன், தூயவன், முதல் ஒலி, ரிக் சாமம் யஜுர் என்னும் வேதங்களும் நானே. வழியும் காப்பவனும் ஆள்பவனும் சான்றும் உறைவிடமும் புகலிடமும் நண்பனும் முதலும் இறுதியும் நிலையும் நிகழ்வும் அழியா விதையும் நானே. நான் வெம்மையளிப்பவன். மழையை கட்டுபவன், பெய்விப்பவன். நானே அமுதும் இறப்பும். நானே இருப்பும் இன்மையும்.
மூன்றுவேதம் அறிந்தோர், சோம மது உண்டோர், பழியகன்றோர் என்னை வேள்விகளால் வழுத்தி வானுலகை வேண்டுகின்றனர். அவர்கள் புனிதமான தேவருலகை அடைந்து விண்ணுலகில் அரிய இன்பங்களை அடைவர். விரிந்த வானுலகில் மகிழ்ந்து அப்பயன் முடிந்தவுடன் மீண்டும் அழிவுள்ள இவ்வுலகுக்கே மீள்வர். இவ்வாறு மூவேதங்களைச் சார்ந்து இன்பம் நாடுவோர் பிறந்திறக்கும் சுழலை அடைகிறார்கள்.
வேறு எதிலும் நாட்டமில்லாதவர்கள் என்னை உளம்சூழ்ந்து, எப்பயனும் நோக்காது வழுத்தி, இடையறாது என்னை நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களின் முழு நலன்களுக்கு நானே பொறுப்பு. நம்பிக்கை கொண்டு மற்ற தேவர்களை வழிபடுகிறார்கள் என்றால் அது நெறிப்படி அல்ல என்றாலும் அவர்களும் என்னையே வணங்குகிறார்கள்.
அனைத்து வேள்விகளிலும் அவிகொள்பவனும் வேள்வித்தலைவனும் நானே. ஆனால் என்னை மெய்யாக அறியாதவர் என்பதனால் வீழ்ச்சியடையக்கூடும். தேவர்களை நோற்போர் தேவர்களை அடைவர். மூதாதையரை வணங்குவோர் மூதாதையரை அடைவார். பொருட்களை வணங்குவோர் பொருட்களை அடைவார். என்னை வேட்போர் என்னை எய்துவார்.
இலையோ, பூவோ, கனியோ, நீரோ அன்புடனே எனக்கு அளிப்பவர் நோன்புகொண்டவர் என்றால் அவர் அன்புடன் அளித்ததை நான் கொள்வேன். எது செய்யினும், எதனை உண்பினும், எதை அவியளித்தாலும், எதனை கொடுத்தாலும், எத்தவத்தை செய்தாலும், எனக்கு முழுதளிக்கிறாய் என எண்ணிச் செய்க!. மங்கலம் மங்கலமின்மை எனும் பயன்களைத் தருவனவாகிய செயற்தளைகளினின்றும் விடுபடுவாய். துறவெனும் யோகத்தில் இயைந்து விடுதலை பெறுவாய். என்னையும் பெறுவாய்.
நான் எல்லாவற்றிலும் நிகரானவன். எனக்கு பகை இல்லை. அன்புமில்லை. ஆனால் என்னை அன்புடன் தொழுவாருக்கு முன் தோன்றுகிறேன். தீய நடத்தை கொண்டவனாயினும் வேறெதையும் நாடாமல் எனக்கு அடிப்பட்டு என்னை வழிபடுபவன் நல்லோன் என்றே கருதுக! ஏனென்றால் அவன் முயல்கிறான். அவன் விரைவில் அறத்தோன் ஆகிறான். நிறையமைதி கொள்கிறான். என்னை வழுத்துவோன் அழிவதில்லை எனும் உண்மையை அறிக!
ஏனென்றால் பெண்களோ வைசியர்களோ சூத்திரர்களோ பாவிகளோ வேறெவருமோ என்னை தஞ்சமடைந்தால் முழுமைநிலையை அடைகிறார்கள். தூய்மையான அந்தணரும் அரசமுனிவரும் என்னை காண்பார் என்றால் சொல்லவும் வேண்டுமோ? நிலையற்றதும் இன்பமற்றதுமாகிய இப்புவிப்பிறப்பு அடைந்த நீ என்னை வழிபடுக! உள்ளத்தை எனக்கு அளி. என் மேல் பற்றுகொள். என்னை வணங்கு. உளமும் புலன்களும் கொண்ட உடலை என்னில் ஈடுபடுத்தி என்னை அடைக!
இறைவன் சொன்னார். என் மேல் அன்புகொண்ட உனக்கு உன் நலம் கருதி மீண்டும் சொல்கிறேன். எனது உயரிய சொல்லை கேள். வானவர் என் மகிமையை உணரார், பெருந்தகை முனிவருமுணரார். எவ்வகையிலும் வானோர்க்கும் முனிவருக்கும் முழுமுதல் நானே. பிறப்பற்றோன் முதலற்றோன் உலகங்களின் தலைவன் என்று என்னை அறிகின்றவர் மயக்கமற்ற அறிவுடையோர், மாசுகளிலிருந்து விடுபட்டோர்.
மதியும், ஞானமும், மயக்கமின்மையும், பொறுத்தலும், வாய்மையும், அடக்கமும், அமைதியும், இன்பமும், துன்பமும், உண்மையும், இன்மையும், அச்சமும், அஞ்சாமையும், துன்புறுத்தாமையும், நடுமையும், மகிழ்ச்சியும், ஈகையும், தவமும், இகழும், புகழும், பருப்பொருள் இயல்புகள் அனைத்தும் என்னிடம் இருந்து எழுவன. இங்குள்ள மக்களை எல்லாம் ஈன்ற ஏழு முதற்றாதையருக்கும் முந்தைய சனகர் முதலிய முனிவர்களும் மனுக்களும் உள்ளத்தால் என்னியல்பு கொண்டவர்களே.
இத்தகைய எனது தூய நிலையையும் யோகத்தையும் உள்ளபடியே உணர்பவன் அசைவிலா யோகத்திலமர்கிறான். நானே அனைத்துக்கும் தொடக்கம், என்னிடமிருந்தே அனைத்தும் இயங்குகின்றன என்று புரிந்துகொண்டு நம்பிக்கையும் வணக்கமும் கொண்ட முனிவர் என்னை தொழுகிறார்கள். சித்தத்தை என்னிடம் வைத்து உயிரை என்னுள் புகுத்தி தங்களுக்குள் விளக்கிக்கொண்டு என் புகழ்பேசி எப்போதும் மகிழ்கிறார்கள்.
எப்போதும் எப்போதும் யோகத்தில் இருப்பார் என்றால் அன்புடன் என்னை வழிபடுபவர்களுக்கு என்னை அடையும் ஞானமாகிய யோகத்தை அளிக்கிறேன். அவர்களுக்கு இரங்கி அவர்கள் உள்ளத்தில் நிலைத்து நின்று அறியாமையின் இருளை ஒளிகொண்ட ஞானச்சுடரால் அழிக்கிறேன்.
அர்ஜுனன் கேட்டான். நீங்கள் பரம்பொருள் பெருநிலை முழுத்தூய்மை நிலைகொண்ட உயர்ந்த முதலோன் என்றும் முதன்மைத்தெய்வம் என்றும் பிறப்பற்றவர் எங்கும் நிறைந்தவர் என்றும் முனிவர்கள் சொல்கிறார்கள். நாரதரும் அசிதரும் தேவலரும் வியாசரும் சொன்னார்கள். நீங்களும் அதையே சொல்கிறீர்கள். என்னிடம் சொல்லப்பட்ட அனைத்தும் உண்மை என்று எண்ணுகிறேன்.
இறையோனே, உங்கள் உருவை அசுரர் அறியவில்லை. தேவர்களும் அறியவில்லை. முதலோனே, தன்னை தான் மட்டுமே அறியவல்லவனே, பருப்பொருட்களாக ஆன பருப்பொருட்களின் தலைவனே, தேவர்களின் தேவனே, புடவிகளின் இறைவனே, இவ்வுலகங்களில் பரவிநின்றிருக்கும் உம் தூயநிலையையும் மேன்மையான தன்னிலையையும் நீரேதான் முழுமையாக சொல்லமுடியும்.
யோகியே, எவ்வாறு எப்போதும் உளம்சூழ்ந்து நான் உம்மை உணர்வேன்? எவ்வடிவங்களிலெல்லாம் நீர் எண்ணும்படி திகழ்கிறீர்? உமது தூய நிலையையும் யோக நிலையையும் விரிவாக மீண்டும் சொல்க! ஏனென்றால் அமுதத்தைக் கேட்டு என் செவிகள் நிறைவடையவில்லை.
இறைவன் சொன்னான். என் தூய நிலை மேன்மையானது. இப்போது முதன்மையான சிலவற்றை சொல்கிறேன். ஏனென்றால் என் விரிவுக்கு எல்லை இல்லை. உயிர்கள் அனைத்துக்கும் உள்ளுறையும் ஆத்மா நான். அவற்றின் முதலும் நடுவும் இறுதியும் நானே. ஆதித்யர்களில் நான் விஷ்ணு. ஒளிகளில் கதிரவன். காற்றுகளில் நான் மரீசி. விண்மீன்களில் நான் சந்திரன். வேதங்களில் சாமம். தேவரில் இந்திரன். புலன்களில் உள்ளம். உயிர்களில் நானே உணர்வு.
உருத்திரர்களில் சங்கரன். இயக்கர்களிலும் அரக்கர்களிலும் நான் குபேரன். வசுக்களில் நான் பாவகன். மலைகளில் மேரு. வேதியரில் பிரஹஸ்பதி என என்னை அறிக! படைத்தலைவர்களில் நான் கந்தன். நீர்களில் நான் கடல். முனிவரில் நான் பிருகு. சொற்களில் நான் ஓங்காரம். வேள்விகளில் நான் சொல்சூழ்தல். மலைகளில் நான் இமையம். மரங்களில் நான் அரசு. தேவமுனிவரில் நான் நாரதன். கந்தர்வர்களில் சித்ரரதன். சித்தர்களில் நானே கபிலன்.
புரவிகளில் நான் அமுதில் பிறந்த உச்சைசிரவம். யானைகளில் ஐராவதம். மானுடரில் அரசன். படைக்கலங்களில் நான் மின். பசுக்களில் காமதேனு. பிறப்பிப்போரில் நான் மன்மதன். பாம்புகளில் நான் வாசுகி. நாகர்களில் நான் அனந்தன். நீர்வாழ்வோரில் வருணன். மூதாதையரில் அரியமான். வென்றாள்வோரில் நானே யமன்.
அசுரரில் பிரகலாதன். இயங்குவனவற்றில் காலம். விலங்குகளில் சிம்மம். பறவைகளில் பருந்து. தூய்மைசெய்வனவற்றில் நான் காற்று. படைக்கலம் தாங்கியவர்களில் நான் ராமன். மீன்களில் நான் சுறா. ஆறுகளில் நான் கங்கை. படைப்புகளின் முதலிறுதிநடு நானே. கல்விகளில் நான் மெய்மை. சொல்சூழ்வோரில் நான் சொல். எழுத்துக்களில் நான் அகரம். சொற்புணர்வுகளில் நான் இரட்டை. அழிவற்ற காலம் நான். எல்லா திசைகளிலும் முகம் கொண்ட பேருருவன். அனைத்தையும் தாங்கியிருப்பவன்.
அனைத்தையும் அழிக்கும் இறப்பு நான். எதிர்காலப் பொருட்களில் பிறப்பு. பெண்களிடம் நான் புகழ்சொல், நல்லெண்ணம், படைப்பூக்கம், நிலைபேறு, பொறுமை. சாமங்களில் நான் பிருஹத்சாமம். சந்தங்களில் நான் காயத்ரி. மாதங்களில் நான் மார்கழி. பருவங்களில் நான் இளவேனில்.
வஞ்சகரின் சூழ்ச்சி நான். ஒளியுடையோரில் ஒளி நான். நானே வெற்றி. நானே உண்மையுடையோரில் உண்மை. விருஷ்ணி குலத்தாரில் நான் வாசுதேவன். பாண்டவர்களில் தனஞ்ஜயன். முனிவரில் நான் வியாசன். கவிகளில் சுக்கிரன். ஆள்வோரிடம் செங்கோல். வெற்றியை விரும்புவோரிடம் அறம். மந்தணங்களில் நான் அமைதி. ஞானமுடையோரிடம் ஞானம் நானே.
எல்லா உயிர்களிலும் விதை நானே. நானன்றி திகழும் அசைவன அசையாதன ஏதுமில்லை. என் மேன்மைகளுக்கு அளவேயில்லை. அவற்றில் ஓரளவே சொல்லப்பட்டது. பெருமையும் உண்மையும் அழகும் ஆற்றலும் கொண்டன எல்லாமே எனது ஒளியில் எழுந்தவை என்று அறிக! ஆனால் இவ்வாறு பலவாக அறிதலால் உனக்கு என்ன பயன்? இவ்வியனுலகனைத்தையும் என் ஆற்றலின் ஒரு துளியால் தாங்கியிருக்கிறேன்.