வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-49

wild-west-clipart-rodeo-31இறைவன் உரைத்தான். செயற்பயனில் சார்பின்றி தக்கதைச் செய்பவன் துறவியும் யோகியுமானவன். அவன் வேள்வியை துறப்பவனல்ல. செயல்களை ஒழிபவனுமல்ல. எதை துறவென்கிறார்களோ அதுவே யோகம் என்று அறிக! ஏனென்றால் கொள்கைகளை துறக்காதவன் யோகியாவதில்லை.

யோகத்தில் ஏற விழைவோர்க்கு செயலே கருவி என்று கூறப்படுகிறது. ஏறிய பின் அமைதியே கருவி. புலன்களுக்குரிய பொருட்களில் பற்றுகொள்ளாதவன் செயல்களில் மகிழாதவன் எல்லா கொள்கைகளையும் துறந்துவிடுகிறான். அவனே யோகத்திலமர்ந்தவன். ஆத்மாவாகுக! ஆத்மாவால் ஆத்மாவை உயர்த்துக! ஆத்மா நலிவுறாதமைக! ஏனென்றால் ஆத்மாவே ஆத்மாவுக்கு நண்பன். ஆத்மாவே ஆத்மாவுக்கு பகைவன். .

ஆத்மாவால் ஆத்மாவை வென்றவனே ஆத்மாவுக்கு நண்பன். வெல்லப்படாத ஆத்மாவுக்கு ஆத்மாவே எதிரி. உடலால் ஆத்மாவை வென்றவன் அமைதியானவன். பரம்பொருளால் விரும்பப்பட்டவன். தண்மைவெம்மையிலும் துயரின்பங்களிலும் சிறுமைபெருமைகளிலும் நிகர்நிலைகொண்டவனாகிய தன்னைவென்றவனிடம் முழுமுதன்மை நிலைகொள்கிறது. அறிவிலும் ஆதலறிவிலும் நிறைவடைந்து, எச்சூழலிலும் நிலைபிறழாது, புலன்களை வென்று, ஓடும் செம்பொன்னும் ஒப்பவே காணும் யோகி நிலையுற்றவன்.

அன்பர், நண்பர், அறியாதார், நடுவார், எதிரிகள், சுற்றத்தார், சான்றோர், பழியோர் அனைவரிடமும் நிகர்நோக்கு கொண்டோன் மேலானவன். தனியனாகி, சித்தத்தை கட்டி, ஏற்பது விலக்கி மறைவிடத்திலிருந்து யோகி எப்போதும் ஆத்மாவில் யோகமுறவேண்டும். தூய இடத்தில் துணி, மான்தோல், தர்ப்பை ஆகியவற்றின் மேல் உயரமில்லாமல் தாழ்விலாமல் உறுதியான இருக்கையை அமைத்துக்கொண்டு அதிலமர்ந்து சித்தத்தையும் புலன்செயல்களையும் ஒருங்கிணைத்து கூர்மையாக்கி ஆத்மா தூய்மை கொள்ளும்பொருட்டு யோகத்திலமையவேண்டும்.

உடலையும் தலையையும் கழுத்தையும் சீராக அசைவிலாது வைத்து திசைகளை நோக்காது மூக்குநுனியில் நோக்கு நிலைக்கச்செய்து அமைதி கொண்டவனாக அச்சத்தை அகற்றி காமஒறுப்பில் நிலைகொண்டு உள்ளத்தை கட்டுப்படுத்தி என்னிடத்தில் சித்தம் இயையவிட்டு என்னை மட்டுமே இலக்கெனக்கொண்டு யோகமியற்றவேண்டும். இவ்வாறு உள்ளத்தை கட்டுப்படுத்தி ஆத்மாவை இடையறாது இணைத்தபடி என்மேல் நிலைபெற்று வீடுபேறு கொண்டவன் அமைதியடைகிறான்.

அர்ஜுனா, மிகையாக உண்பவனுக்கு யோகமில்லை. உணவற்றவனுக்கு தன்னிலை கிடையாது. மிகுதியாக உறங்குபவனுக்கும் மிகுதியாக விழிப்போனுக்கும் அது இயல்வதில்லை. சரியான உணவுண்டு வாழ்பவன், வினைகளில் ஒழுங்குக்கு முயல்பவன், கனவிலும் ஆழ்நிலையிலும் முறைப்படி அமைபவன் துயரை அழிக்கும் யோகம் கைவரப்பெறுகிறான்.

பணிந்த சித்தம் தன்னுள் நிலைபெற்றிருக்கையில் விழைவுகளில் ஈடுபாடு அகன்றவன் யோகம் அடைந்தான் எனப்படுவான். காற்றிலாத இடத்தில் அகல்சுடர் அசையாமலிருக்கிறது. ஆத்மயோகத்தில் நின்றிருக்கும் யோகியின் வெற்றிகொள்ளப்பட்ட உள்ளத்திற்கு அந்த உவமை சொல்லப்படுகிறது.

எங்கு யோகப் பயிற்சியினால் கட்டுண்ட சித்தம் ஆறுதல் எய்துமோ, எங்கு ஆத்மாவினால் ஆத்மாவையறிந்து ஆத்மா மகிழ்ச்சிகொள்கிறதோ, எங்கு புலன்கடந்து நிற்பதும் அறிவுக்கு அப்பாற்பட்டதும் முதல்முடிவற்ற இன்பத்தை காண்கிறதோ, எங்கு நிலைகொள்வதனால் நாம் உண்மையிலிருந்து வழுவுவதில்லையோ, எதை அடைந்தபின் மேலும் பேறு வேறிருப்பதாகத் தோன்றுவதில்லையோ, எங்கு நிலைபெறுவதால் பெருந்துயரிலும் உழலமாட்டோமோ அந்நிலையே துயருடன் கலப்பது ஒழியும் யோகநிலை என்று உணர்க! அதை உள்ளத்தில் ஏக்கமிலாது உறுதியுடன் பற்றுக!

கொள்கைசூழ்வதிலிருந்து எழும் எல்லா விழைவுகளையும் எச்சமறத் துறந்து உள்ளத்தால் புலன்தொகையை கட்டுப்படுத்தி மெல்ல மெல்ல ஆறுதலடையச் செய்து துணிந்த சித்தத்துடன் உள்ளத்தை ஆத்மாவில் நிறுத்தி எதற்கும் கவலையுறாதிருக்கவேண்டும். எங்கெங்கே இந்நிலையிலாது அமைதியிழந்து உள்ளம் அலைக்கழிகிறதோ அங்கங்கே அதை கட்டுப்படுத்தி ஆத்மாவுக்கு ஆட்படச் செய்க!

ஏனென்றால் உள்ளம் அமைதியாகி மாசுநீங்கி வெல்லுமியல்பை விடுகையில் பிரம்மவடிவனாகிய யோகிக்கு மிகச் சிறந்த இன்பம் கிடைக்கிறது. குற்றங்களை அகற்றி இவ்வாறு ஆத்மாவில் ஒன்றியிருப்பானாயின் பிரம்மத்தைத் தொடும் உயர்ந்த இன்பத்தை எளிதில் அவன் அடைகிறான். யோகத்தில் கலந்தவன் எங்கும் நிகர்நோக்கு கொண்டவனாக எங்கும் தானிருப்பதையும் தன்னுள் எல்லாம் இருப்பதையும் காண்கிறான்.

எங்கும் என்னை காண்பவனுக்கு எல்லாவற்றையும் என்னிடத்தே காண்கிறவனுக்கு நான் காணப்படாது போவதில்லை. எனக்கும் அவன் காணப்படாதிருப்பதில்லை. ஒருமையில் நிலைகொண்டு எல்லா உயிர்களிலும் உள்ள என்னை தொழும் யோகி எங்கு சென்றபோதிலும் என்னுள் இருந்துகொண்டிருக்கிறான். இன்பமாயினும் துன்பமாயினும் எல்லாவற்றையும் தன்னைப்போலவே நிகரெனப் பார்ப்பவன் பெரும்யோகியாக கருதப்படுவான்.

அர்ஜுனன் கேட்டான். நிகர்நோக்கு கொண்டதென்று சொல்லப்பட்ட இந்த யோகத்தில் உறுதியை என் நிலையழிந்த உள்ளத்தால் ஏற்கவியலவில்லை? ஏனென்றால் உள்ளம் நிலையற்றது. பிழைபடும் இயல்புடையது. வலிமையான பெருக்குள்ளது. அதை கட்டுப்படுத்துதல் காற்றை அணைகட்டுதல்போல கடினமான செய்கை என்று நான் நினைக்கிறேன்.

கிருஷ்ணன் சொன்னார். ஐயமில்லை, உள்ளம் அலைவுகொண்டதே. கட்டுதற்கரியதும்கூட. உறுதியாலும் பழக்கத்தாலும் அதை கையகப்படுத்தலாம். தன்னை கட்டாதவன் யோகமெய்துதல் அரிது. தன்னை கட்டியவன் முயற்சியாலும் உளங்கூர்தலாலும் யோகத்தை அடைவது இயல்வதென்றே நான் கருதுகிறேன்.

அர்ஜுனன் சொன்னான். யோகத்தில் அகம்கூர்ந்தவனாக இருந்தும் தன்னை கட்டாமையால் உளம் வழுவியவன் தோல்வியடைந்து என்னவாகிறான்? பிரம்மத்தை அடையும் பாதையில் வழிமயங்கி நிலைபெயர்ந்து இருநிலையும் எய்தாதவனாகி சிதைந்த முகிலென அழிந்துபோகமாட்டானா? எனக்குள்ள இந்த ஐயத்தை எச்சமின்றி அகற்ற தகுதியானவர் நீரே. இதை நீக்க வேறெவராலும் இயலாது.

கிருஷ்ணன் சொன்னார். பார்த்தா, அவனுக்கு இவ்வுலகில் அழிவில்லை. மேலுலகிலும் இல்லை. ஏனென்றால் நற்செயலின்பொருட்டு எவரும் கீழ்நிலை அடைவதில்லை. யோகத்தில் பிறழ்ந்தவன் நற்செயல் இயற்றியவருக்குரிய உலகை அடைந்து அங்கே நெடுங்காலம் வாழ்ந்து தூய்மையும் செல்வங்களும் கொண்டவர் இல்லத்தில் பிறக்கிறான்.

அல்லது, அறிவர்களாகிய யோகிகளின் குலத்திலேயே பிறக்கிறான். இவ்வுலகில் அதுபோன்ற பிறவியெய்துதல் மிகவும் அரிது. அங்கே அவன் முந்தைய உடலுக்குரிய அறிவை பெறுகிறான். அவன் மறுபடியும் வெற்றிக்கு முயல்கிறான். அவன் தன்னை மீறியே பண்டைப்பழக்கத்தால் கவரப்படுகிறான். யோகத்தில் ஆர்வம்கொண்டவன்கூட ஒலிவடிவ பிரம்மத்தை கடந்தாகவேண்டும். பாவம் நீங்கியவனாய், உறுதியுடன் முயல்வானேயாயின் யோகி பல பிறவிகளின் வெற்றிப் பயனாகிய வீடுபேற்றை அடைகிறான்.

தவஞ்செய்வோரைக் காட்டிலும் யோகி சிறந்தவன்; ஞானிகளிலும் அவன் சிறந்தோனாக கருதப்படுகிறான்; செயலாற்றுவோரிலும் அவன் சிறந்தவன்; ஆதலால், அர்ஜுனா, யோகியாகுக! அனைத்து யோகிகளிலும் அகம்கூர்ந்து என்னிடம் உள்ளம் ஒன்றி என்னை போற்றும் யோகியே மேலானவன் என்பது என் கொள்கை.

wild-west-clipart-rodeo-31கிருஷ்ணன் சொன்னார். பார்த்தா, என்னிடம் விருப்புகொண்டு என்னைச் சார்ந்து யோகத்திலமர்ந்து எல்லாம் அமைந்த என்னை ஐயமின்றி உணருமாறு சொல்கிறேன், கேள். எதை அறிந்தால் இவ்வுலகில் மேலும் தெரிந்துகொள்ள வேண்டிய வேறு ஒன்றும் மீதம் இருக்காதோ அதை, அமைதலுடன் இணைந்த அறிவை முழுமையாக உனக்கு சொல்கிறேன்.

ஆயிரம் மானுடரில் ஒருவன் வீடுபேறடைய முயல்கிறான். முயல்கிறவர்களில் யாரோ ஒருவனே உண்மையில் என்னை அறிகிறான். மண், நீர், தீ, காற்று, வானம், உளம், அறிவு, ஆணவம் என இந்த இயற்கை எட்டுவகையாகப் பிரிந்து தோன்றுகிறது.

இது அபரா எனும் எனது பிறிதியற்கை. இதிலிருந்து மாறுபட்ட பரா எனும் முதலியற்கையால் இவ்வுலகம் தாங்கப்படுகிறது. எல்லா உயிர்களும் இவ்விரு இயற்கைகளிலிருந்து உருவானவை என்றும் நானே உலகம் உருவாகவும் விரியவும் அவ்வாறே அழிவதற்கும் அடிப்படை என்றும் அறிக! என்னைவிட உயர்ந்த பொருள் இல்லை. இவ்வையகமெல்லாம் நூலில் மணிகள்போல் என்னில் கோக்கப்பட்டது.

நான் நீரில் சுவை. ஞாயிறிலும் திங்களிலும் ஒளி. எல்லா வேதங்களிலும் ஓங்காரம். வானில் ஒலி. ஆண்களிடம் ஆண்மை. மண்ணில் நறுமணம். நெருப்பில் ஒளி. திகழ்வன அனைத்திலும் உயிர். படிவரில் தவம். அனைத்து உயிர்களுக்கும் முதல் விதை என என்னை அறிக! நான் அறிவுடையோரில் அறிவு. ஒளியுடையோரில் ஒளி. வலிமையுடையவரிடம் விழைவும் பற்றும் கடந்த வல்லமை. அறத்திற்கு முரணாகாத விருப்பமும் நானே.

மேலும் நன்னிலை, வெல்நிலை, உறைநிலை என்னும் மூன்றியல்புகளில் தோன்றிய உணர்வுகள் என்னிடத்தே பிறந்தன. என்னில் அவை உள்ளன, அவற்றில் நான் இல்லை. இம்மூவியல்புகளின் வண்ணங்களால் இவ்வுலகமெல்லாம் மயங்கி இவற்றினும் மேலான அழியா இயல்புகொண்ட என்னை உணராமலிருக்கின்றன. ஏனென்றால் எனது இந்த தேவமாயை என்னும் இயல்பு கடத்தற்கு அரியது. என்னை அடைக்கலம்கொள்பவரே இதை கடக்கிறார்கள்.

மாயையினால் ஞானம் அழிந்தோர், அசுரத்தன்மையை பற்றி நிற்போர், மனிதரில் இழிகுணம் கொண்டவர், கீழான செயல்களை புரிகின்றவர்களான அறிவிலிகள் என்னை சரண் புகார். பயனை வேண்டுவோர், துன்புற்றார், அறிவை விரும்புவோர், ஞானிகள் என நான்கு வகையான நற்செய்கையுடைய மக்கள் என்னை வழிபடுகின்றனர். அவர்களில் நிலையான யோகம் பூண்டு ஒரேமுகமாக அர்ப்பணிக்கும் ஞானி சிறந்தவன். ஞானிக்கு நான் மிகவும் இனியவன்; அவன் எனக்கு மிகவும் இனியன்.

மேற்சொல்லிய யாவரும் நல்லாரே. எனினும், ஞானியை நான் நானாகவே கொண்டுளேன். அவன் யோகத்தில் இசைந்து, உய்யும் வழியாகிய என்னை கடைபிடித்து நிற்கிறான். பல பிறவிகளின் இறுதியில் ஞானம் கொண்டவன் ‘எல்லாம் வாசுதேவனே’ என்று கருதி என்னை அடைக்கலமாக பற்றுகிறான். அவ்வித பேராத்மா அரிதானவன்.

வெவ்வேறு விருப்பங்களால் கவரப்பட்ட அறிவினையுடையோர், தத்தம் இயற்கையால் கட்டுண்டு, வெவ்வேறு நெறிகளில் நிற்பாராய் அயல் தேவதைகளை வழிபடுகின்றனர். எந்தெந்த அடியார் நம்பிக்கையுடன் எந்தெந்த வடிவத்தை வழிபட விரும்புகிறாரோ அவருடைய அசையாத நம்பிக்கைக்குத் தக்க வடிவத்தை நான் மேற்கொள்ளுகிறேன். அவர் அந்த நம்பிக்கையுடன் இயைந்து அவ்வடிவத்தை வணங்கி வேண்டுகிறார். அதனின்றும் தான் விரும்பியனவற்றை எய்துகிறார்; எனினும் அவற்றை வகுத்துக் கொடுப்போன் யானே. எனினும், அற்ப மதியுடைய அன்னோர் எய்தும் பயன் எல்லைக்குட்பட்டது. தேவர்களைத் தொழுவோர் தேவர்களை எய்துகின்றனர். என்னை தொழுவோர் என்னையே எய்துகிறார்கள்.

அறிவற்றவர்கள் என்னுடைய இணையற்றதும் அழிவற்றதும் சிறந்ததுமாகிய பெருநிலையை அறிந்துகொள்ளாமல் மறைந்திருப்பவனாகிய என்னை காணத்தக்க ஆளுமைகொண்டவன் என கருதுகின்றனர். எல்லாவற்றுக்கும் ஒளியாகிய என்னை, யோக மாயை சூழ்வதில்லை. பிறப்பும், கேடுமற்ற என்னை அறிவிலா உலகம் அறியவில்லை. சென்ற, நிகழ்வன, வருவன ஆகிய உயிர்களையெல்லாம் நானறிவேன். என்னை அறிந்தோர் எவருமிலர். விருப்பத்தாலும் பகைமையாலும் எழுந்த இருமைகளின் மயக்கத்தால், எல்லா உயிர்களும் மயங்கிவிடுகின்றன. பழி தீர்ந்து நற்செயல்கள் செய்கின்றவர் இருமைகளின் மயக்கம் அழிந்து உறுதியான நோன்புகொண்டவர்களாக என்னை வழிபடுகின்றனர்.

என்னை வழிபட்டு மூப்பிலிருந்தும் இறப்பிலிருந்தும் விடுபட முயற்சி செய்வோர் ‘அது’ என நிற்கும் பிரம்மத்தையும் அதுவான ஆத்மமெய்மை முழுமையையும் அது உலகாகும் செயலையும் உணர்வர். புடவிமெய்மை தெய்வமெய்மை வேள்விமெய்மை ஆகியவற்றுடன் என்னை இறுதிக் காலத்திலேனும் அறிந்து யோகத்தில் பொருந்திய சித்தமுடையவரே அறிஞர்.

முந்தைய கட்டுரைஊட்டி- எண்ணங்கள், திட்டங்கள்.
அடுத்த கட்டுரைஊட்டி நாவல் அரங்கு -சிவ மணியன்