ஊட்டி – ஜனார்த்தனன்

 

IMG_1438

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

ஊட்டி காவிய முகாமில் கலந்து கொள்வதற்கு அறிவிப்பு வெளியான முதல் நாளே விண்ணப்பித்திருந்த போதிலும், நான் கலந்துகொள்வது உறுதியாகும் வரை நம்பிக்கையில்லாமல் தான் இருந்தேன். என் வருகை உறுதி செய்யப்பட்டு ஊட்டி வந்த பின்னர் தான் ஏறக்குறைய 40 பேர் வரை இடமின்மையால் அழைக்கப்படாமல் விடப்பட்டிருந்ததது தெரிய வந்தது. அவ்வகையில் எனக்கு வாய்ப்பளித்து, ஊட்டி காவிய முகாமை நேர்த்தியுடன் ஒருங்கிணைத்து நடத்திய விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட அமைப்பாளர்களுக்கு என் அன்புகடந்த நன்றி.
IMG_1495
மூன்று நாட்களும் நடைபெற்ற அமர்வுகள் அனைத்தும் செறிவாகவும் இனிதாகவும் இருந்தது. குறிப்பாக சிறுகதை மற்றும் கவிதை  சார்ந்த எல்லா அமர்வுகளும் அதை ஒட்டிய விவாதங்களும் என்னைப்போன்ற புதிய வாசகர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. சிறுகதை மற்றும் கவிதையின் உள்ளடக்கம், கூறுமொழி, வடிவம் மற்றும் வாசிப்பு குறித்து  நான் கொண்டிருந்த ஆரம்பநிலை புரிதல்களைக் கடந்து ஆழமாக செல்வதற்கு பெரிதும் உதவியது. சுனில் கிருஷ்னனின் இலக்கிய விமர்சன அமர்வும் அதன் தொடர்ச்சியாக நிகழ்ந்த  ரசனை மற்றும் கோட்பாட்டு விமர்சனம் பற்றிய விவாதங்களும் எனக்கு பெரும் திறப்பாக அமைந்தது.
IMG_1449
ஈரோடு சந்திப்பில் முதன் முறை உங்களை சந்திக்கும் பதற்றத்தில் குறைவாகவே உங்களுடன் உரையாட நேர்ந்தது. என்றாலும் என்னுள் எழுந்த பெரும்பாலான அரைகுறை கேள்விகளுக்கு இடமின்றி முழுமையாக விளக்கமளிக்கும் வண்ணமே நீங்கள் இரண்டு நாட்களும் உரையாடினீர்கள். இம்முறையும் தெளிவின்மையின் தயக்கம் காரணமாக என்னால் முழுமையாக விவாதங்களில் பங்கெடுக்க இயலவில்லை. பெரும்பாலான நேரங்களில் எனக்கு பேசத்தோன்றியதெல்லாம் நீங்கள் குறிப்பிடுவது போல் விவாதப்பொருளை ஓட்டி நினைவில் தன்னிச்சையாக எழும் ஞாபகக் குறிப்புகளாகவே இருந்தது. இதைப் பெரும்பாலும் என்னால் உணர்ந்து தவிர்க்கமுடிந்தது. எனினும் நான் ஏதேனும் ஒன்றைப்பற்றி கேட்க விழையும் போது, கூடவே அதைப்பற்றி தாங்கள் விரிவாக எழுதியிருப்பதும், நான் அதை மேலோட்டமாக வாசித்து கடந்து சென்றதும் நினைவில் எழுந்தது என்னை தயக்கமடையச் செய்தபடியே இருந்தது. அப்போதெல்லாம் இன்னும் கூர்ந்து வாசிக்கவேண்டும் என்று மீண்டும் மீண்டும் எனக்குள் சொல்லிக்கொண்டேன்.

IMG_1394

அமர்வுகளில் மொத்தமாக நான் பேசிய நான்கு தருணங்களிலும் சொல்ல நினைத்ததை ஒழுங்காக, முழுமையாக சொல்லமுடியாமல் சொற்கள் உதிரியாக உடைந்து விழுந்த வண்ணம் இருந்ததது. இதுபோல் சொற்களை நினைவிலிருந்து பொறுக்க ஆரம்பித்ததும் பதற்றமும் சேர்ந்துகொண்டு நிலமையை இன்னும் மோசமாக்கியது. கருத்துகளை சரியான சொற்களில் சொல்வதற்கு இன்னும் சிந்தனைத் தெளிவும் நிறைய பயிற்சியும் தேவை என்று என்னுள் உரைத்தது.

கலந்து கொண்டவர்களில் பலரிடம் என்னை அறிமுகம் செய்து கொள்ளாமலேயே விட்டுவிட்டேன். எனினும் கணிசமானவர்களை உங்கள் தளத்தின் மூலம் முன்னரே தெரிந்திருந்ததால், பேசவில்லையென்றாலும் இயல்பாகவே அவர்களிடம் பழகிய உணர்வே ஏற்பட்டிருந்ததது. இத்துடன் கூடுதலாக இலக்கிய ஆர்வமுள்ள நிறைய புதிய நண்பர்கள் அறிமுகமும் கிடைக்கப் பெற்றது. முதல் நாள் மாலை நடையில் வழி தவறி ரயில் தண்டவாளங்கள் ஓரம் குளிரிலும் வியர்த்தொழுக ஓட்டமும் நடையுமாக குருகுலம் திரும்பியது மறக்கமுடியாத ஒரு அனுபவம்.

IMG_1459

நேரில் சந்தித்து உங்களிடமிருந்து கற்றுக் கொள்ளமுடிந்தது என் நல்லூழ். பயணம் முடிந்து திரும்பியதும் மூன்று நாட்களும் ஒரு புனைவுலகிற்குள் சென்று வந்ததாகவே எனக்குப் பட்டது. ஒட்டுமொத்தமாக இனி என்றென்றும் உளவெழுச்சியுடன் நினைத்துப் பார்க்கும் தருணங்களின் தொகுப்பாக இந்த மூன்று நாட்களும் என்னுள் மாறிவிட்டிருந்ததது.

“விளக்கினை யேற்றி வெளியை அறிமின்
விளக்கினின் முன்னே வேதனை மாறும்
விளக்கை விளக்கும் விளக்குடை யார்கள்
விளக்கில் விளங்கும் விளக்கவர் தாமே.”
– திருமந்திரம்

அன்புடன்,
ஜனார்த்தனன்.

 

முந்தைய கட்டுரைவெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-50
அடுத்த கட்டுரைமயில் நீலம்.