ஊட்டி – சுபஸ்ரீ

IMG_1583

 

அன்புநிறை ஜெ,

 

ஊட்டி காவிய முகாமுக்குப் பெயர் கொடுத்ததிலிருந்தே உற்சாகமும், பதற்றமும் கலந்த எதிர்பாரப்பு மனதில் நிறைந்திருந்தது. பதற்றத்துக்கான காரணம் ஒரு பத்து நிமிடம் பேச வேண்டிய சிறுகதை உரையும் அதைத் தொடர்ந்து வரும் விவாத அரங்கும். அரைமணிநேரத்தை எண்ணி மூன்று நாளை இழந்துவிடக்கூடாது எனப் பலமுறை எனக்கு நானே நினைவூட்டிக் கொண்டேன்.

2016-ல் சிங்கப்பூரில் நடைபெற்ற காவிய முகாமில் கலந்து கொண்டிருக்கிறேன். அப்போது இலக்கிய விவாதங்களுக்கான எந்த முன்னனுபவமும் எதிர்பார்ப்பும் என்னிடம் இல்லை. அந்த முதல் இலக்கியக் கலந்துரையாடல் என் வாசிப்பை மட்டுமின்றி என்னையே முற்றிலும் மறு உருவாக்கம் செய்தது. ஆனால் இம்முறை ஊட்டியில் இளையவர்களின் பங்கேற்பும், விவாதத்தில் புது வாசகர்களின் வேகமும் கண்டபோது, அந்த சிங்கப்பூர் நிகழ்வு பெருமளவு முன்னனுபவமுள்ள வாசகர்கள் சிங்கப்பூர் வாசகர்களுக்கு நடத்திக்காட்டிய முன்மாதிரியாகவே எனக்கு இப்போது தோன்றுகிறது.

கடந்த ஒன்றரை ஆண்டுகளில் இலக்கியத்தை அணுகும் விதத்தையும், சிறந்த இலக்கியங்கள் நம்முள் நிகழ்த்தும் நுண்மாற்றங்களையும், தத்துவங்கள் பேரிலக்கியங்களின் வழி மலரும் போது தரும் பெரு உச்சங்களையும் அனுபவித்துக் கற்றுக் கொண்டிருக்கிறேன். இதற்கு இடையறாத வெண்முரசு வாசிப்பு மிகவும் உதவியிருக்கிறது.

IMG_1514

இந்த மனநிலையில் மே 3 மழை பெய்து கொண்டிருந்த முன்னிரவு வேளையில் கோவை வந்திறங்கியபோது மனம் உச்சகட்ட அதிர்வுகளோடு இருந்தது. 4ஆம் தேதி காலை நாஞ்சில் நாடன் அவர்களை அழைத்துக் கொண்டு கோவையிலிருந்து வந்த காரில் நரேன், செல்வேந்திரன் இவர்களோடு பயணம். அங்கிருந்தே சிரிப்பும் அரட்டையுமாக இலக்கியப் பயணம் தொடங்கியது. வில்லுப்பாட்டில் பாராம்பரியக் கதை சொல்லும் முறைமையும், அதன் பிண்ணனி தெரிந்திருக்க வேண்டியதன் அவசியமும், இன்ன பிற சிறுதெய்வ வழிபாடுகள் குறித்தும் நாஞ்சில் நாடனோடு பேசிக் கொண்டு வந்தது போக்குவரத்து நெரிசலை மறக்கச் செய்தது. எனில் ஊட்டி குருகுலத்துக்கு வந்து சேர்வதற்குள் அறிமுகத்தையும், முதல் அமர்வின் முதற்பாதியையும் தவற விட்டுவிட்டோம்.

‘காரணம்’ – சிறுகதை விவாதிக்கப்பட்டு நிறைவடைந்து கொண்டிருந்தது. முந்தைய வாசிப்பில், கூறுமுறையில் ஓரளவு நல்ல சிறுகதை என்றே எண்ணியிருந்தேன், ஏதோ ஒருவிதத்தில் உச்சம் நிகழவில்லை என்று மட்டும் தோன்றியது. ஒரு சிறுகதையின் குவிமையம் நிகழாது படிமங்கள் சிதறும்போது கலை ஒருமையடையாத போவதை விவாத்தின் முடிவில்புரிந்து கொள்ள முடிந்தது. தொடர்ந்து பாரி ‘ஹிக்விட்டா’ கதை குறித்து மிக நன்றாகப் பல பார்வைகளைத் தொகுத்து உரையாடினார். அதைத் தொடர்ந்து ஜெ குறிப்பிட்ட ‘liberation theology’ ஒரு புதிய கோணத்தில் அக்கதையைத் திறந்தது. தேவவிசுவாசம், கடமையை தன் கையிலெடுத்தல்(விடுதலை இறையியல்) இரண்டின் வழி பயணிப்பவர்களில், இறை விசுவாசம் மட்டுமே வழியெனக் கொண்டு நடுவயதில் சில தடுமாற்றங்களில் சிக்குண்டாலும் அவர்களில் பெருமளவு  முதுமையில் நிறைவோடு இருப்பதும், விடுதலை இறையியல் வழி பயணித்தவர்கள் முதுமையின் போது பற்றுக்கோள் இன்றி வெறுமையை சென்று சேர்வதும் சற்று அதிர்சசியாகவே இருந்தது. முதுமையில் முன்னே எதிர்நோக்க காலம் குறைவாக இருக்கையில் நன்றி உரைப்பதற்கும், பெருமூச்சைப் பகிர்வதற்கும் திரையின் மறுபக்கம் செவிகளில்லாத வெறுமை அவ்விதம்தானே இருக்கும் எனப் பின்னர் தோன்றியது.

கம்பராமாயண அரங்கில் இம்முறை யுத்த காண்டத்தை தொடங்கி வைத்தார் நாஞ்சில் அவர்கள். தனது வயதின் காரணமாக சுந்தர காண்டத்தோடு சென்ற வருடத்தோடு நிறைவு கொண்டிருந்ததாகவும், இவ்வருடம் யுத்த காண்டத்தைத் தொடங்க நேர்ந்ததன் மூலம் இன்னும் ஐந்து வருடங்களுக்கு வாழ வேண்டிய ஊக்கம் கிடைத்திருப்பதாகவும் அவர் சொன்னது நெகிழ்ச்சியாக இருந்தது.

 

இராவணன் அவையில் ஒவ்வொருவராய் எழுப்பும் குரல்களும், இராவணன் மன நிலையும், விபீஷணன் மற்றும் கும்பகர்ணனின் அறக்குரல்களும் கம்பன் கவிதையில் அவையை நிறைத்தது. பி.ஏ.கிருஷ்ணன் அவர்களது கம்ப ராமாயணத் தொடர்பை ஜெ விளக்கினார். ஆழ்வார் திருநகரிப் பதிப்பு என ஒன்றிருப்பதை அப்போதுதான் அறிந்து கொண்டேன். எத்தனை மனிதர்களின் பெரும் உழைப்பின் மூலம் இம்மாபெரும் இலக்கியங்கள் நம்மை வந்து அடைகின்றன என்றெண்ணிய போது அந்த அவையில் அமரக் கிடைத்தமைக்கு அப்பெருநிரைக்கு நன்றி சொல்லிக் கொண்டேன்.

 

IMG_1622

கம்பராமாயணத்தில் பள்ளிப் பருவத்து மனப்பாடப் பகுதியிலிருந்து ஜெ ஒரு பாடலை நினைவுகூற, அருண்மொழி அக்கா நீர்க்கோல வாழ்வை நச்சி பாடலை நினைவிலிருந்து கூறியது இனிமையான நினைவுகூறல்.

‘எந்தை நீ; யாயும் நீ; எம்முன் நீ; தவ
வந்தனைத் தெய்வம் நீ’ பாடலில் வைப்பு முறையை வைத்து அதில் ‘எம்முன்’ என்பது அண்ணன் என்ற பொருள் அல்ல, முன்னோர் என ஜெ பொருள் விளக்கியது அருமை. பகழி நாகம் என முடியும் கவிதையின் இரட்டுற மொழிதலின் அழகு என்று ஒவ்வொரு பாடலும் மனதுள் விரிகிறது.

“தோரணத்த மணி வாயில் மிசை சூல்நீர்
அணைத்த முகில் ஆம் என நின்றான்
ஆரணத்தை அரியை மறை தேடும்
காரணத்தை நிமிர் கண்கொடு கண்டான்.”

 

IMG_1626
என்ற பாடலில் முகில் என நின்ற இராவணன் என்றே உரை விளக்கினும் ராஜகோபாலன்(ஜாஜா) அதை ராமனின் வடிவென எனப் பொருள் கொள்ளலாமா எனக் கேட்டு நாஞ்சில் நாடனும் அதை அவ்விதம் விளக்கிய போது இது போன்ற அரங்குகளில் காவியம் படிக்க வேண்டியதன் தேவை தெரிந்தது. பல மனங்கள் ஒன்றாய் சேர்ந்து ஒரு பெரிய புதிரைத் திறப்பது போல இருந்தது. திருமூலநாதனின் கணீர் குரலில் கம்பனும் வள்ளுவனும் நேரடியாக மனதில் இறங்கினர்.

இரண்டு நாளும் கவிதை அரங்குகள் மிகச் சிறப்பாக இருந்தன. காயசண்டிகை கவிதையில் நிலவு எனும் படிமம் நமது மரபில் கொள்ளும் பொருள் குறித்தும், பித்து எனும் நிலை மேலை மற்றும் கீழை மரபுகளில் பார்க்கப்படுவதன் வேறுபாடும் விவாதிக்கப்பட்டது. ‘இறைக்க இறைக்கக் கண்ணீர்போல்
சுரந்து கொண்டிருக்கிறது’ என்னும் வரிகளை நிறுத்த இயலாத பித்தின் செயலென சித்திரமெனக் கண்டதும் மனம் விதிர்த்து கவிதையைத் தொட்டெடுத்தது. கவிதையின் சித்திரத்தை அகத்துணர்ந்து Contextஐ புரிந்து கொள்ளும் தருணமே கவிதையை உணரும் தருணம் என்பது சிறந்த அறிதல். நல்ல கவிதையைத் தேர்ந்தெடுப்பதற்கு லக்ஷ்மி மணிவண்ணன் அவர்கள் கூறிய வழிமுறைகள் சிறப்பானவை – கவிதை முடிந்த பின்னர், அதனால் என்ன? என்ற கேள்விக்கு என்ன எஞ்சியிருக்கிறது என்று பார்க்கச் சொன்னது என்றும் நினைவிலிருக்கும். முன்பென ஒன்றில்லாததைத் தொடும் அல்லது இருப்பதை வேறு கண் கொண்டு காட்டும் கவிதைகளை அடையாளம் காண்பது குறித்து நடந்த விவாதங்கள் அருமை. இது போல எங்கும் அக்கறையோடும் நேர்மையோடும் பேரன்போடும் கற்றுக் கொடுக்கப்படும் எனத் தோன்றவில்லை. கவிஞர் தேவதேவன் உடனிருக்க அவரது மானுடம் தழுவிய பேரன்பின் கவிதையை விவாதிக்கக் கிடைத்தது கொடுப்பினை.90 வயதில் தான் காவிய முகாமில் கலந்து கொள்ள வரும்போது நடக்க முடியவில்லை எனில் ஜெ தன்னை சைக்கிளில் வைத்து அழைத்து வரவேண்டுமெனச் சொன்னது கவி மனதுக்கே உரிய நெகிழ்வு.

IMG_1654
“வனத்தின் மேலே மேற்குத் திக்கில் உயரக் கிளர்ந்தாய்”
ஆஸ்திரியக் கவிதை ஒரு காட்சியென்றே கவிதையாவதன் அழகும் விவாதிக்கப்பட்டது. எது நல்ல கவிதை அல்ல என்பதும், சிலகாலம் பரபரப்பாக இருந்து வழக்கொழிந்து போன rhetoric ஆக எழுதப்படும் முறையும், A4 தாளளவுக் கவிதைகளும் பேசப்பட்டன. இதற்கு முன்னர் கவிதையை அணுகிய வெற்றுப் பார்வை இனி நிச்சயம் இருக்காது. சில நல்ல கவிதைகளை வாசித்து இனம் கண்டு கொள்ளும் ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது.

நாவல் அரங்கில், தஸ்தோவஸ்கியின் கரம்சோவ் சகோதரர்கள் எனும் பெரு நாவலை மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்துக்கு உருவகம் செய்ததோடு மிக நன்றாக சுருக்கமாக முக்கியமான பகுதிகளைச் சுட்டி மிகக் கோர்வையாகத் தொகுத்தளித்தார் சிவமணியன். சிலர் இந்த முகாமுக்காக முழுமையாக நாவலை வாசித்து வந்தது கண்டு, நேரமின்னையென வாசிக்காத என் சோம்பல் மேல் கோபம் வந்தது. அடுத்த ஓராண்டுக்குள் வாசிக்க வேண்டிய பட்டியல் மிகப் பெரிதாக வளர்ந்துவிட்டிருக்கிறது.

IMG_1690
மூன்றாம் நாள் காலை வரை எனது சிறுகதைக்கான தருணம் வராததால், அடுத்த நிகழ்ச்சி என்னவென்று தெரியாத இடைவேளைகளில் எல்லாம் பதற்றத்துக்கும் பெருமூச்சுக்கும் இடையில் ஊசலாடிக் கொண்டிருந்தது மனம். மூன்றாவது நாள் சந்திரசேகர் அவர்களின் இந்திய அறிதல் முறைகளில் தொடங்கியது. விளக்கப்படத்தின் உதவியோடு மிக நேர்த்தியான உரை. ஆறு அறிதல் முறைகள் குறித்து வாசித்திருப்பினும், அவற்றை சிறு சிறு உதானணங்களோடும், ஒவ்வொரு தத்துவ மரபும் இப்பிரமாணங்களை எவ்வளவு ஏற்றுக் கொள்கின்றன என்பது தெளிவான சித்திரமாக முன்வைக்கப்பட்டபோது மனதில் பதிந்தது. தனி விவாதங்களில் சைதன்யாவின் வாசிப்பு மற்றும் அறிதல் கண்டு வியந்திருக்கிறேன், எனில் இந்த அரங்கில் சப்த பிரமாணம் குறித்து சைதன்யா கேட்ட கேள்வியில் அவரது தேர்ந்த வாசிப்பும் அறிவின் நுட்பமும்  தெரிந்தது.

அடுத்ததாக திருமூலநாதன் அணி நலம் மிக்க குறள்களை வகைக்கொன்றென மிக அழகாகக் தெரிவு செய்திருந்தார். தெளிவாக இலக்கணத்தோடு கூடிய விளக்கமும் தந்தார். சுனீல் கிருஷ்ணனின் இலக்கிய விமர்சன அரங்கு செறிவாக இருந்தது. கோட்பாட்டு விமர்சனத்துக்கும் ரசனை விமர்சனத்துக்குமான வேறுபாடும் அவ்வவற்றின் தேவையும் நிறைவாக விவாதிக்கப்பட்டது.

IMG_1696

என்னை அழைத்த போது உள்ளே கலம் வெறுமையாக இருந்தது. ஒன்றும் நினைவில் எழாது, எங்கோ தொடங்கி பேசிய போது, அரங்கில் இருப்பவர்களின் முகங்களில் இருந்து கோர்வையாகத்தான் பேசுகிறேனா என்றறிய முயன்றேன்; தெரியவில்லை. ஜெ அவர்கள் கொடுத்திருந்த வடிவத்துக்குள்தான் வாசிப்பின் மீதான உரையைத் தொகுத்துக் கொண்டிருந்தேன். எனினும் வடிவமற்று (incoherent)ஆகப் பேசியது போல உணர்ந்தேன். கற்றோர் நிறைந்த அவையில் நிகழ்ந்த முதல் உரை.  எறும்பு ஏற முற்பட்ட இமயத்துச் சிறுகல். பேச்சை முடித்து விவாதம் தொடங்கிய போது நிலை மீண்டு விட்டேன். நண்பர் ஒருவர் கேட்ட கேள்வியும் எனது அறிதலை நானே தொகுத்துக்கொள்ள மிகவும் உதவியது. ஜெ நீண்ட ஆசிரியர் நிரையை குறித்துப் பேசிய போது மீண்டும் மனது அவர்கள் முன் பணிந்தெழுந்தது.

 

இறுதியாக சுந்தர ராமசாமியின் ஜன்னல் சிறுகதை குறித்த ஸ்ரீசங்கர் கிருஷ்ணாவின் அரங்கோடு காவிய முகாம் நிறைவுக்கு வந்தது. பி.ஏ.கிருஷ்ணன் அவர்கள் நிறைவுரையாற்றினார். மூன்று நாளும் குன்றாத ஆர்வத்தோடும், தனக்கேயுரிய நகைச்சுவையோடும் அவர் கலந்து கொண்டது சிறப்பாக இருந்தது.

IMG_1731
அடுத்த ஆண்டு சந்திப்பது வரைக்குமான நினைவுகளைத் தொகுப்பது போல பெருங்குழுமப் படங்கள் எடுத்துக் கொண்டோம்.சிரிப்பும் கேலியுமாக மனமும் மலர்ந்திருக்க அவ்வளவு பூரிப்பு முகங்களில். பூக்களின் தோழி லோகமாதேவி அவர்கள் எழுதியது போல இவ்வளவு மலர்வதற்கான தருணங்கள் அன்றாட வாழ்வில் அமைவதில்லை.

இவையனைத்தையும் தவிர மிக முக்கியமான தருணங்கள் காலையும் மாலையும் குழுவாகச் சென்ற மலைவெளி நடைபயணங்கள். இனக்குழுக்களில் இருந்து சிறு குடி அரசுகள் உருவாகி, சிற்றரசுகளென உருமாறி, நிலையான பேரரசுகளென எழுந்து வந்த சித்திரத்தை ஜெ சொல்லக் கேட்டது மறக்க முடியாத மனச்சித்திரம். டி.டி.கோசாம்பி அவர்களின் அணுகுமுறையையும், ஆய்வுக்கு இருக்க வேண்டிய உழைப்பையும், நேர்மையையும், முன்முடிவுகளற்ற மனநிலையையும் ஜெ விவரித்த பொழுதுகள் விலைமதிப்பற்றவை. டி.டி.கோசாம்பியின் இரு புத்தகங்களை இணையத்தில் பதிவு செய்து விட்டேன். அடுத்தநாள் பைன் மரக்காடுகளில் நடந்த போது விடுதலையடைந்த யோகிகளுக்கு அழகியலில் ஈடுபட முடியுமா என்ற கேள்விக்கு ராமகிருஷ்ண பரமஹம்சர் குறித்தும், ரமணர் குறித்தும் ஜெ கூறியவை அருமை. இவையே நடையில் எனக்குக் கேட்கக் கிடைத்தவை. இன்னும் பல விஷயங்கள் விவாதிக்கப்பட்டன, நமக்கென உள்ளது நம்மைச் சேருமென நிறைவடைந்து கொண்டேன்.

இருள் கவியும் மாலைப் பொழுதில் ரயில்பாதையில் அருண்மொழி அக்காவோடு நடந்து வந்தது என்றும் நினைவில் இருக்கும். மிக அணுக்கமாக உணரும் ஒரு உறவோடு பொழுதுகளைக் கழித்த பெருமகிழ்ச்சியும் நெகிழ்வும் உள்ளுக்குள் நிறைந்திருக்கிறது.

மேலும் நண்பர்கள் பலரையும் நெடுநாள் கழித்து சந்தித்ததும், சுசித்ரா, லோகமாதேவி போன்ற புதிய நட்புகளை சேகரித்துக் கொண்டதும் பெருவாய்ப்பு.

இந்தக் காவிய முகாமை நடத்தி முடிப்பதற்காக இலக்கியத்தின் மீதான தங்களது ஆர்வத்தை பின்னால் வைத்து, அனைவருக்கும் உணவும், கம்பளியும், தங்குமிடமும், நிதி மேலாண்மையும் என சுற்றிச் சுழன்ற நண்பர்களுக்கு (செந்தில் சார், விஜயசூரியன், நிர்மால்யா சார், சுதா-ஸ்ரீனிவாஸன் தம்பதியினர்) என் பேரன்பும் வணக்கங்களும்.

இருபத்தைந்து வருடங்களாக நிகழ்ந்து வரும் இவ்விலக்கிய அரங்குக்காகவும்,
நிகழ்ந்ததனைத்துக்குமாகவும் பேரன்புக்குரிய உங்களுக்கு என் நன்றிகளும் அன்பு கலந்த வணக்கங்களும்.

மிக்க அன்புடன்,
சுபா

 

முந்தைய கட்டுரைஊட்டி நாவல் அரங்கு -சிவ மணியன்
அடுத்த கட்டுரைஅதிகார மையமா?