ஊட்டி -நவீன்

 

 

அன்புள்ள ஜெ,

 

மனிதன் இயந்திரமாக மாறுவதை தன்னில் உணர்ந்த நாட்களாக கருதுகிறேன். மூன்று தினங்கள் கண்ணுக்கு பசுமை, செவிக்கு சிந்தனை பேச்சுகள், சிரித்து களித்த பொழுது என கடந்து சென்ற பின்பு மீண்டும் பழைய சுழல் சக்கரமாய் அதே இயந்திர வாழ்க்கையில் அடுத்த மூன்று நாட்கள் கடத்தியது சிறிது ஏக்கத்தை தான் ஏற்படுத்தியது ஊட்டியிலேயே இருந்தால் எப்படி இருக்கும் என்று. தங்கள் காடு நாவலில் வருவது போல் காடு கண்டவன் நாட்டை வெறுப்பது இயல்பு தானே, இருந்தாலும் நிதர்சனத்தின் பிடியில் இருந்து தப்ப நான் மட்டும் என்ன விதிவிலக்கா? என்று சமாதானம் கொண்டு இயங்க தொடங்குகிறேன். இதனிடையில் என் இயல்பு மீறிலுக்கு தடமிட்டு தந்த தங்களுக்கும் தங்கள் நண்பர்களுக்கும் நன்றி கூற கடமை பட்டுள்ளேன். இந்த மூன்று தினங்களும் மீண்டும் மீண்டும் அசைப்போட்டுக் கொண்டிருந்தது நீங்கள் அளித்த வரமான தினங்களை தான்.

DSCN4127

ஈரோடு வந்து திரும்பிய போது நண்பர் விஷால் ஊட்டி முகாமை பற்றி சொன்ன போதே இம்முறை வந்துவிட வேண்டும் என தீர்மானித்துவிட்டேன். முகாமிற்கு வாய்ப்பு கிடைத்தது என்னுள் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. வியாழன் காலையே கிளம்பிவிட்டேன் ஊட்டி அழகை இரசிக்க மட்டுமல்ல வெள்ளி காலை பயண அழுப்பு என்னை ஆட்கொள்ளாமல் இருக்கவும்.

 

வெள்ளி காலை காளி பிரசாத் – காரணம் சிறுகதை அரங்கில் விவாதம் தொடங்கியது முதல் ஞாயிறு மதியம் சுபஸ்ரீ வீடு – பஷீர் சிறுகதையில் முடித்தது வரை என்னில் அடங்கா திறப்புகள், இந்த விவாதத்திற்கு பிறகே நான் இன்னும் வாசிக்கவே தொடங்கவில்லை இனிமேல் தான் ஆரம்பிக்க வேண்டும் என்பதை உணர்ந்துக் கொண்டேன். ஆனால் இனிமேல் வாசிக்கத் தொடங்கும் போது ஒரு தேர்ந்த வாசகனாக இருப்பேன் என்ற நம்பிக்கை என்னுள் பிறந்துள்ளது. ஒவ்வொரு அரங்கிலும் விவாதித்த கருத்துகளை சிறு சிறு குறிப்புகளாக்கிக் கொண்டேன் இவை நான் அசைபோடுவதற்கு மேலும் உதவிகரமாய் இருந்தன. என் நினைவிற்கு வருவனவற்றைத் தொகுக்கிறேன்.

 

கவிதை அரங்கு:

            

ஒரு அழகிய கவிதை உருவாக்கும் சூழல் அதன் பொருளை மிஞ்சி எப்படி செயல் பட வேண்டும். அது ஏற்படுத்தும் சூழலே முக்கியமானது பொருள் அல்ல என்பதற்கு நீங்கள் கூறி “The Black Swan” கவிதையை வாசித்தேன் மிக சிறந்த எடுத்துக் காட்டு. பழைய கவிதையில் இருந்த திட்டவட்டமான் சூழலில் இருந்து புது கவிதை எப்படி மாறுதல் பெருகிறது என்பதை நன்கு உணர்த்தினீர்கள். உருவகத்தை தாண்டி படிமங்களை படர விடுவதன் புதுமை நீங்கள் மீண்டும் மீண்டும் வழியுறுத்துவதில் ஒன்று.

 

மேலும் சுய எள்ளல், சமுதாய எள்ளல், காழ்ப்பு, துக்கம், சோகம் என்பதை மீறி அன்பின் வெளிப்பாடாய் தேவதேவன் கவி மொழி நிர்ப்பதை உணர்த்த “ஒசாமா” ஆக சிறந்த எடுத்துக்காட்டு.

 

மைய கரு ஒன்றை மட்டும் வைத்துக் கொண்டு இயற்றப்படும் கவிதைகளின் தேய் வழக்கு என்னால் புரிந்துக் கொள்ள முடிகிறது. கருத்து, அன்றாட வாழ்க்கை தாண்டி மீறலினால் இயற்றப்படும் மாயை தான் கவி மொழி அதன் தாகம் புதுமை புதுமை என்ற நீரைத் தேடி பருகுகிறது. இதனால் என்ன என்ற வினா மட்டுபடும் போது உதிக்கும் சந்திரன் தான் கவிதை என்ற உங்கள் பார்வை என் கவிதை வாசிப்பிற்கு ஆக சிறந்த அடித்தளங்கள்.

சிறுகதை அரங்கு:

            

என் செவி கேட்கும் படி நான் ஒரு 10 முறையேனும் தங்களிடம் இதை கேட்டிருப்பேன் (ஈரோடு உட்பட) என்றால் சிறு கதையின் வடிவத்தை தான் நீங்கள் திரும்ப திரும்ப ஆலோசனை சொல்லும் ஓர் எளிய விடுபடலாகவே இது இருந்து வருகிறது. ஊட்டியில் இதனை சொல்ல தோதுவாக “காரணம்” சிறுகதை அமைந்துவிட்டது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி தான். மீண்டும் ஒரு முறை எடுத்துக்காட்டோடு கேட்டு தெரிந்துக்கொள்ள உதவியது. மேலும் ஒவ்வொரு எழுத்தாசிரியரின் சிறுகதை விவாதிக்கும் போது அவர்களின் எழுத்து பின்புலம் சார்ந்து நீங்கள் அடுக்கி வைத்த சிறுகதை பட்டியல் என் வாசிப்பிற்கு உதவி கரங்களே.

 

சிறுகதையில் இறுதியிலுள்ள திருப்பம், ஒருமையான பயணம், செறிவான மைய கதாப்பாத்திரம் என்பன நீங்கள் எனக்கு அடிக்கடி போதிக்கும் ஒன்று.

 

நாவல் அரங்கு:

            

நாவல் அரங்கில் என்னை உட்பட அனைவரையும் கவர்ந்தது நண்பர் சிவமணியன் அவர்களின் வாசிப்பு முறை தான். ஒரு ஆக சிறந்த மேற்கத்திய நாவலை மதுரை மீனாட்சி அம்மன் கோயிலோடு ஒப்பிட்டு வாசித்த முறை அனைவரையும் பிரம்மிக்க வைத்தது.

 

கம்ப ராமாயண அரங்கு:

            

புதுமையிலும் புதுமை படித்து பழக்காத ராமாயணம் என்பதை நிருப்பிக்கும் அரங்காகவே இது இருந்தது. அதன் தூண்களாக ஐயா நாஞ்சில் நாடன் அவர்களும், நீங்களும் அதன் அழகியல் பன்புகளை உணரச் செய்த விதம் இன்று முதல் தினமும் ஒரு கம்ப ராமாயண பாட்டாவது வாசிக்க வேண்டுமென சங்கல்பம் செய்துள்ளேன்.  மரபிலக்கிய விவாத அரங்கில் நண்பர்கள் திருமூலநாதன், திருமாவளவன் அவர்களின் திருக்குறள் மற்றும் குறுந்தொகை முறையே விவாதங்களும் இதற்கு வலு சேர்த்தன. குறுந்தொகை பாட்டிற்கு தோழர் கூறிய உங்கள் இளமை காலத்து எடுத்துக்காட்டு தங்கள் நினைவலைகளை பறக்கவிட்டுவிட்டன என தங்கள் பொன் முறுவலின் மூலம் உகித்துக் கொண்டேன்.

 

ஓவியக் கலை அரங்கு:

           

 மிக முக்கியமான அரங்குகளுள் முதன்மையான ஒன்றாக இதனை கருதுகிறேன். நீங்கள் ஈரோட்டில் கூறியது போல் சந்ரு மாஸ்டர் விவாதத்திற்கு பிறகு என் ஓவியம் மற்றும் சிற்பத்தின் பார்வை சிறிதளவேனும் மேம்படும் என்பதில் இந்த அரங்கிற்கு பின் எந்தவித மாற்றுகருத்தும் இல்லை. அதுவும் மாஸ்டர் கூறிய் ராமர் சிலை எடுத்துக்காட்டு மாஸ்டர் களாஸ். திருநெல்வேலி கோவில்களுக்கு பல முறை சென்றிருந்தும் இச்சிற்பத்தை ஒரு முறை கூட நான் கண்டதில்லை என்பது என் அறியாமையின் எடுத்துக்காட்டே. இனி இதனை கண்டிப்பாக திருத்திக் கொள்வேன் என நம்புகிறேன்.

 

தேவதேவன்:

            

 

ஜெயமோகனின் புனைவு எழுத்தில் மட்டும் தான் நிஜத்தில் இல்லை என்பதற்கு சிறந்த உதாரணம் தேவதேவன் ஐயா தான். தங்கள் தளத்தில் அவரை பற்றி படித்ததன் உயிரூட்டப்பட்ட வடிவாய் அங்கே என் கண்ணில் பட்டார். அவ்ரதன் பேச்சும், செய்கையும் தன் தளத்தில் வாசித்தவற்றையே நினைவுபடுத்தின. நீங்கள் கவிதையின் வழியில் உரைத்தன எல்லாம் நான் ஆளுமையின் வழியில் கண்டேன். சனிக் கிழமை காலை, மாலை இரண்டு முறையும் தேவதேவன் ஐயாவுடன் தனிமையில் ஒரு நடை அது ஜெ.மோ எனக்கு தந்த கொடை. இங்கே தேவதேவன் ஐயா என குறிப்பிடுதல் மிகுந்த தவறாக இருக்கும் என நினைக்கின்றேன். நான் அறிந்த வரையில் அவர் 10 வயதை கூட தாண்டவில்லை குழந்தையின் பேச்சு, குழந்தையின் அன்பு மட்டும் அவர் வார்த்தைகளிலிருந்து வெளிப்படுவதாக இருந்தது. “ஆர்டிபிசியல் இண்டலிஜன்சை” கூட அன்பின் மொழிகளிலே விவரிக்கிறார். அவர் வார்த்தைகளை போல் குழந்தை தன்மைக்கும், இண்டலெக்சுவலுக்குமான பாலம் தான் அவரது கவிதைகள். அன்பை மட்டும் ஆதாரமாக கொண்டு நிற்கும் ஒரு மனிதரை பார்த்து பார்த்து வியப்படைந்தேன் பேச மொழிகள் இல்லாமல்.

 

இவை அனைத்தையும் மீறி என் நண்பர்கள் வட்டத்தில் மேலும் சேர்ந்துக் கொண்டிருக்கும் நண்பர்கள் திருமலை, கமலகண்ணன், கார்திக், சுதர்சன், சதிஸ் என இம்முறை மேலும் விரிவடைந்தது. கடந்த முறை சொன்னது போல் இவை அனைத்திற்கும் நன்றி என்ற ஒரு வார்த்தையில் தீர்த்துவிட முடியாது. நான் மேலும் மேலும் தங்களுக்கு கடன்பட்டுக் கொண்டே இருக்கிறேன். அருண்மொழி அம்மாவையும், தங்கை சைதன்யாவையும் கேட்டதாக சொல்லுங்கள்.

 

பி.கு: இம்முறை ஒரே ஒரு ஆலோசனை மட்டும்இனி நடை செல்லும் போது ஒரு மைக் உங்களுக்கு கையோடு தேவைப்படுகிறது. இதனை கிருஷ்ணன் இம்முறையே யோசித்தார் ஆனால் நடைமுறை படுத்தவில்லை அடுத்த முறையிலிருந்து இதனை நடைமுறை படுத்துமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

நன்றியுடன்,

நவின்.

 

சீனிவாசன் எடுத்த படங்கள்

கணேஷ் பெரியசாமி எடுத்த படங்கள்

முந்தைய கட்டுரைநத்தையின் பாதை -கடிதம்
அடுத்த கட்டுரைஊட்டி- எண்ணங்கள், திட்டங்கள்.