ஊட்டி -விஜயலட்சுமி

unnamed (1)

எனது வாழ்வின் மிகச் சிறந்ததும் மதிப்பிடமுடியாததுமான ஒரு தருணத்தை எனக்கு அளித்ததற்கு நன்றி.மிக சாதாரணமான தங்களுக்கு அநேகமுறை பழகிப்போன வார்த்தையாயினும் என்னளவில் இந்த காவிய முகாமின் முக்கியத்துவம் விவரிக்க இயலாதது.

எனது  சிறிய வயதில் எனது அண்ணன் வாங்கிவரும் காமிக்ஸில் ஆரம்பித்து பிறகு க்ரைம் நாவல் ஊடாக கல்லூரி காலங்களில் பாலகுமாரனை வந்தடைந்தபோது மற்ற ரமணிசந்திரன், புஷ்பா தங்கதுரை போன்றவர்களை படிக்கும் சக தோழிகளை “அற்ப பதர்களே” என்ற ரீதியில் ஒரு பார்வை.

ஆனால் சிறிது காலத்தில் அவருடைய கதைகள் ஒரே மாதிரியாக ஆனதுபோல் சலிப்பு.பிறகு  வாழ்க்கையின் ஓட்டத்தில் வாசிப்பைபற்றி யோசிக்கவே இல்லை.நிறைய நேரம் இருந்தது.ஆனால் நல்ல எழுத்தாளர்களை பற்றிய அறிதல்தான் இல்லை.அக்கம் பக்கங்களும் மங்கையர் மலர்களும் குமுத ஆனந்தவிகடன்களுமாக.போட்ட சமையல் குறிப்பையே உப்பும் காரமும் கூட்டி குறைத்து அவர்கள் ஆண்டாண்டு காலமாக எழுதிகொண்டுருக்க சக தாய்குலங்கள் அதீத மேதாவிதன விமர்சகர்களாய் மாறி அதைபற்றி மணிக்கணக்கில் நடத்தும் விவாதங்களில் நிற்கவும் முடியாமல் நகரவும் முடியாமல் போன காரணத்தால் சிறிது காலத்தில் அவர்களின் விவாத அரங்குகளிலிருந்து “நீ இதற்கு லாயக்கில்லை”என ஈவிரக்கமில்லாமல் வெளியேற்றப்பட்டேன்.மேலே பாவம்போல இருந்தாலும் ஒரு விதத்தில் உள்ளுக்குள் சிரித்து விடுதலையை கொணடாடிக்கொண்டேன்

 

பிறகு பாட்டும் அஷ்டபதியும் கற்றுக் கொள்ள சென்று நல்ல ஆசிரியர்கள் அமைந்தாலும் அவர்களின் இடமாற்றங்கள்  இசை ஞான பெருவெளியின் நுழைவாயிலைகூட தரிசனம்செய்ய முடியாத நிலையை ஏற்படுத்திவிட்டன.எப்படியாவது  நுழைந்தே தீருவது என முடிவெடுத்தபோது  எனது கணவர்”விருகம்பாக்கத்திலிருக்கும் அனைத்து பாட்டு டீச்சர்களுக்கும் ஓர் எச்சரிச்கை “என்ற ரீதியில் நடவடிக்கைகளை ஆரம்பிக்க “போனால் போகட்டும்விடு விஜி.இந்த சமுதாயம் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்”என்று ஜாகையை தையல் கலைக்கு மாற்றி மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றேன்.ஆம்.தையல் பள்ளியின் முதல் தகுதியே சொந்த இயந்திரம் என அறிந்து அதுவும் ஆறாயிரம் ரூபாய்க்குத்தான் அடிப்படை இயந்திரம் என்ற தகவலுடன் வீட்டிற்கு சென்றேன்.அவரின் முதலெழுத்துக்கள் தைக்கப்பட்ட கைக்குட்டையை பார்த்ததும் அதீத உணர்வெழுச்சியுடன் கடைக்கு சென்று பத்தாயிரம் ரூபாய் இயந்திரத்துடன் வந்திறங்கினார். எங்கள் வீட்டின் கிழிந்த பிரிந்த துணிகளை சேர்த்து தைப்பதில் வெற்றிபெற்று 5ரூபாய்களாக வீட்டின் அதிகபட்ச செலவுகளை குறைத்து வருகிறேன்.

 

மேற்சொன்னவை  வேடிக்கையாக இருக்கும்.ஆனால் எனது வயதில்  கணவருடைய வேலையின்  தன்மை காரணமாக வீட்டில் இருக்கும் அனைத்து பெண்களும்(குறிப்பாக தொலைக்காட்சி தொடர்களில்  தன்னை தொலைத்துக்கொள்ள முடியாத) அறியும் வெறுமை இப்படித்தான் இருக்கும்.சுந்தர ராமசாமியின் ” புளிய மரத்தின் கதை” கண்ணில் கண்ட நாள்தான் மகத்தானது.அடுத்து ‘கொட்டு மேளம்’ கதை தொகுப்பு இப்படியாக அடி 18வது அட்சரேகை,மானசரோவர்- அசோகமித்திரன். வழியாக அறம் சென்றதுதான்

அதன்பிறகுஇன்றுவரை கடந்த 3ஆண்டுகளில் எந்த நாட்களிலும் காலம் கடக்க எடுக்கும் பிரயத்தனம் இல்லை.ஆனால் இந்த மூன்று நாட்கள்…

 

 

காவிய முகாம் பற்றி:

 

 

ஒவ்வொரு அமர்வுகளும் மிகச் சீராக கொண்டுசெல்லப்பட்டன.என்ன புரிந்துகொண்டோம் என இப்போது யோசித்தால் எதுவும் நினைவில் இல்லை.உள்ளுக்குள் ஏதோ ஒன்று சென்றிருக்கும் ஆராயவேண்டாம்.கவிதைகளை வாசிக்க ஆரம்பித்தால் ஏதோ ஓரிடத்தில் அந்த பார்வை கிடைக்கும் என தோன்றியது.சிறுகதை அமர்வில் ”! காரணம்’ சிறுகதை பற்றி நீங்கள் கூறியதிலிருந்து மிகச்சிறந்த கதையாக தோன்றும் ஒன்று அதற்கான கூர்மையை தொலைத்து அதிக இடைவெளியுடன் எப்படி அமைந்திருக்கிறது என்கிற விளக்கம் சரியாக புரிந்தது.

கம்பராமாயண வாசிப்பில் நாஞ்சில்நாடன் ஐயாவின் வாசிப்பும் விளக்கமும் நன்றாக இருந்தது.           மிகப்பெரிய எழுத்தாளர்கள்,கவிஞர்கள் முன் முழுதாக மூன்று நாட்கள் சென்றது இனிய நினைவாக இருக்கும்.

 

சுசித்ரா அவர்களின் இலக்கிய வாசிப்பு மிக ஆச்சர்யமாக இருந்தது.ஒவ்வொரு கதை,கவிதை அரங்கின்போதும் மிக வேறுபட்ட கோணத்தில் அவற்றை அணுகினார்.கிட்டத்தட்ட தங்களின் பார்வைகளுக்கு மிக அருகில்  அவரின் புரிதல்கள் இருந்தது.ஒரு மணி நேரம் பேசினால் உலக இலக்கியம் அனைத்தையும் தொட்டு செல்வார் எ

ன நினைக்கிறேன். திருமாவளவனின் குறுந்தொகை அமர்வில் அவர் உங்களின் காதல் வாழ்விலிருந்து ஒரு பதிவை உதாரணமாக கூற திருமதி.அருண்மொழி ஜெமோவின் வெட்கம் …….கவிதை.

 

அமைப்பாளர்கள் திரு.நிர்மால்யா,திரு.செந்தில்குமார்,திரு மற்றும் திருமதி.ஸ்ரிநிவாசன் ஆகிய நால்வரும் நிச்சயம் ஒரு ஐந்து நாட்களாவது தூக்கத்தை தொலைத்திருப்பார்கள் என நினைக்கிறேன்.இந்த அர்ப்பணிப்பு விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தில் இயல்பாகவே உள்ளது.

 

இறுதியில் தங்களை பற்றி…

 

தங்களின் இந்த 25வருட முயற்சியை பற்றி நிர்மால்யா அவர்கள் கூறினார்.எந்த ஒரு தமிழ் எழுத்தாளரும் மிக ஆரம்பகட்ட இலக்கிய புரிதல்கள் உள்ள வாசகர்களை தனது அருகில் அமரவைத்து இவ்வளவு பொறுமையாக அதன் நுட்பங்களை புரியவைக்க முயற்சித்ததாக எனக்கு தெரியவில்லை.குட்ட வேண்டிய இடத்தில் குட்டி தோளோடு சேர்த்தணைக்கும் நேரத்தில் அதையும் செய்து தகப்பனாகவும் ஓர் ஆசிரியன் கிடைக்க இளம் வாசகர்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

 

 

           விஜயலஷ்மி

சென்னை.

 

சீனிவாசன் எடுத்த படங்கள்

கணேஷ் பெரியசாமி எடுத்த படங்கள்

முந்தைய கட்டுரைவெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-47
அடுத்த கட்டுரைஊட்டி முகாம் -கதிரேசன்