ஊட்டி சந்திப்பு -கார்த்திக் குமார்

இனிய ஆசிரியர் ஜெயமோகன் அவர்களுக்கு.,

 

மனதில் ஒரு தேடல் கடந்த குதூகலம் நிறைந்திருந்தாலும், இக்கடிதத்தை  ஒரு சமநோக்கு மனநிலையில் எழுத முற்படுகிறேன். ஊட்டி காவிய முகாம் எனும் வருடாந்திர பெருநிகழ்வு இனிதே நிறைவடைந்ததில் மகிழ்ச்சி. குறிப்பாக முதல்முறை கலந்துகொண்டதில் உள்ள உவகையை சொல்லவா வேண்டும் ?

 

மெட்ரோவின் கசகசப்பு நீங்கி ஊட்டி குளிர் இதமாக இருந்தது, நேர நேரத்திற்கு உணவு சூடாகவும் சுவையாகவும் இருந்தது , தேநீர் பிரமாதம் மாலை நடை உற்சாகம் என்று பலவாறு எழுத தோன்றி பிறகு கைவிட்டேன்.  நிகழ்வுக்கு நான்தான் இளையகுட்டி . வயதால் அல்ல. அனுபவத்தால். காவிய முகாமிற்கு சிலர் புதியவர் என்றாலும் , பலதருணங்களில் உங்களுடைய மற்ற கூடுகைகளில் கலந்துகொண்டுள்ளனர். நிகழ்வில் முதல் நாள் காலை இளையவாசகர்கள் தங்களை அறிமுகம் செய்து கொள்ள கிருஷ்ணன் அவர்கள் அழைத்த போதுதான் இதை அறிந்தேன். நான்தான் முதலில் அறிமுகப்படுத்திக்கொண்டேன். இல்லை, உளறினேன் என்றே சொல்ல வேண்டும்.

என் பார்வையில் இதோ நிகழ்வு குறித்து.,

 

இவ்வளவு தீவிரமான இடைவிடாத மூன்று நாள் விவாத அரங்கு பெரும் ஆச்சரியத்தை அளிக்கிறது. கலந்து கொண்ட அனைவரிடமும், ஒரு ஐந்து நிமிடம் கூட விவாதங்களை தவற விட்டுவிடக் கூடாதென்ற பெரும் இலக்கிய தாகம் இருந்தது. இரவு 10 மணி வரை விவாதங்கள் தொடர்ந்தாலும் , ஒருவிதமான ஒழுங்கு அனைவரிடமும் காணப்பெற்றது. தமிழ் இலக்கிய சூழலை ஒரு Aerial view shot வைத்துப் பார்த்தால் , இம்மாதிரி நிகழ்வு அனேகமாக இது ஒன்று மட்டும் தான் என்று தோன்றுகிறது. நிகழ்வு அரங்கேற்றுபவர்களை விட கலந்து கொள்ளும் வாசகர்களே பெருந்தூணாக இருக்கிறார்கள் என்பது தனி சிறப்பு.

11
பி ஏ கிருஷ்ணன்

 

விவாதப்  போக்கு 

 

மேலோட்டமான விமரிசனம் மட்டுமே நடைபெறும் என்று எண்ணிய எனக்கு, தலையில் ஒரு குட்டு வைத்ததுபோல் இருந்தது. கவிதையின் அழகியலில்  துவங்கி, சிறுகதையின் கட்டுமானம், நாவல்களில் நடைபெறும் தத்துவார்த்தமான விவாதம் என்று அனைத்து  தளங்களிலும் அடைப்படையில் இருந்து விவாதிக்கப்பட்டது. இதே விடயங்களை நீங்களே பலமுறை கட்டுரையாக எழுதி இருப்பினும் , அதை ஒரு படைப்பு கொண்டு விவாதிக்கும் பொழுது, சிந்தனை மேலும் விரிவுபெறுகிறது. விவாதங்களின் பேசுபொருளில் இருந்து ஒரு நூலிழை விலகிப்போனாலும், அதை அந்த தடத்திற்கு மீண்டும் அழைத்துவர நீங்கள் தவறவில்லை. அதற்கு நித்ய சைதன்ய யதி பற்றி நீங்கள் சொன்ன உதாரணம் திடுக்கிட வைத்தது. அருவி போல் கருத்துக்கள் பரிமாறிய இடத்தில், நான் ஒரு குடத்தை மட்டுமே பிடித்து வைத்திருக்கிறேன். இனி மெல்ல மெல்ல தான் அதிலிருந்து ஊற்று எடுக்க வேண்டும்.

கம்பராமாயண அரங்கு 

 

முகாமின் உச்சம் என இந்த அரங்கை தான் சொல்ல வேண்டும். கவிதையில் நான் படித்த வரையில், மொழி அதன் வீரியம் பெற்றுஇருப்பது கம்பனில் தான் கண்டிருக்கிறேன். காரணம் கோட்பாடு என்று எந்த வரையறையும் தெரியாது. படிக்கும்போதே மனதில் உற்சாகம் தொற்றிக்கொள்ளும். ஒரு சில பாட்டுகள் மட்டும் மனனம். இச்சூழலில் கம்பராமாயணத்தை ஒரு குழுவாக சேர்ந்து படித்து புரிந்து கொள்வதென்பது , கவிதா ரசநயத்தின் உச்சம் என்றே தோன்றுகிறது. நாஞ்சில் அவர்களின் விளக்கங்களும் அதை சார்ந்த விவாதங்களும், இந்நிகழ்வின் நோக்கத்தை பூர்த்தி செய்வதாகவே அமைந்தது. கம்பனின் வரிகளில் புலனாகாதவற்றை எப்படி வைப்புமுறை வைத்து ஆராய்வது , சொல்லின் நேர்த்தியான அர்த்தத்தை எப்படி இந்திய ஞான மரபை வைத்து அறிவது, சங்க இலக்கியங்களை வைத்து எப்படி சில சொற்களை அர்த்தம் காண்பது போன்று பல வழிகள் திறந்து காட்டப்பட்டன. இனி கம்பனை படிப்பதற்கு இது பேருதவியாக இருக்கும். மேலதிகமாக, நீங்கள் கம்பராமாயணத்தை தினமும் ஒரு வரியாவது படித்துவிடுவேன் என்று சொன்னது, உங்கள் எழுத்து நடையில் இருக்கும் கவிதை நடைக்கு சாட்சியாக அமைந்தது.

மரபிலக்கிய அரங்கு 

 

இந்த அரங்கில் குறுந்தொகையும் திருக்குறளும் விவாதிக்கப்பட்டன. ஏற்கனவே தங்களது குறலினிது உரை அறிமுகம் என்றாலும், இதில்  விவாதிக்கப்பட்ட குறள்கள் புது  பொழிவுடன்,பல்வேறு பரிமாணங்களில்  அமைந்தது. புத்திலக்கியங்களை புரிந்துகொள்ள ஒவ்வொருவருக்கும் ஒரு அமைப்பிருப்பின் , மரபிலயக்யங்களை அறிந்து கொள்வதற்கு அறிஞர்கள் உதவி தேவை என்பதை இந்த அரங்கு நிரூபித்தது. குறளுக்கு பல்வேறு கோணம் இருப்பினும் , வள்ளுவர் எதை கூற வந்திருக்கிறார் என்பதை தெளிவாக விளக்கப்பட்டது. தற்போது குறளுக்கு உரை எழுதும் தரத்தை பற்றியும் விவாதம் நீண்டது.  உரையாசிரியர்களிடமிருந்து குறளை காப்பாற்றுவதுதான் இந்த அரங்கின் நோக்கம் என நீங்கள் அடித்த நக்கல் ரசிக்க வைத்தது. ஒருவேளை வள்ளுவர் இந்தக்காலத்தில் இருந்திருந்தால் இப்படி சொல்லியிருப்பாரோ என்னவோ.,

 

பிழையின்றி எழுதுக உரையை முடியாவிடில்

மூடிவைத்து சென்று விடல்.

 

கி வ ஜெகந்நாதன் அவர்களின் உரை தரம் பற்றி நாஞ்சில் அவர்கள் சொன்னதும், மனம் அதை உடனே படிக்க தோன்றியது.

மற்ற அரங்குகள் 

 

கவிதை, நாவல், சிறுகதை என தனக்கு பிடித்தமானவற்றை எடுத்துக்கொண்டு அதை பற்றி தனது கருத்துக்களையும் விவாதங்களையும் முன்வைத்து பேசிய அனைத்து வாசகர்களும் சிறப்பான முறையில் வெளிப்படுத்தினர். இறுதி நாளன்று நடைபெற்ற இந்திய அறிதல் முறைகளும், தத்துவ விவாதங்கள் பற்றிய உறையும் வெகுவாக கவர்ந்தது. அதை விளக்கும் பொருட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அட்டவணை , மனதில் ஒரு பெரும் சித்திரத்தை உருவாக்கியது. மேலும் அதைப்பற்றி அறிந்துகொள்ள மனம் உந்துகிறது.

 

நிர்மால்யா

இப்படியாக மூன்று நாட்கள், வாழ்க்கையில் என்றென்றும் மறக்க முடியாத ஒரு பிம்பமாக மனதில் பதிவாகிவிட்டது. இதிலிருந்து, என்னுடைய பயணம் எவ்வுளவு தூரம்  செல்லும் என்பதை காலம் தீர்மானிக்கட்டும். இறுதி உரை ஆற்றிய பி ஏ கிருஷ்ணன் அவர்கள் ஒரு கருத்தை முன்வைத்தார், “இம்முகாமானது கடந்த 25 வருடங்களுக்கு மேலாக நடந்து வருகிறது. வருடத்திற்கு குறைந்தது மூன்று எழுத்தாளர்களையாவது உருவாக்கும் இந்நிகழ்வு, கிட்டத்தட்ட 75 எழுத்தாளர்களை இதுவரை  உருவாக்கி இருக்கும்” என்றார். என்னை பொறுத்தவரை, இதை வேறு மாதிரி  அணுகுகிறேன். சராசரியாக 50 பேர் கலந்துகொள்ளும் இம்முகமானது , கடந்த இருபத்தைந்து வருடங்களில் , 1000க்கும் மேற்பட்ட நல்ல வாசகர்களை தமிழ்நாட்டில் உருவாக்கி விட்டிருக்கிறது என்றே விழைகிறேன். தமிழுக்கு செய்யும் மிகப்பெரிய தொண்டே இது. தொடரட்டும் இப்பணி . நன்றி ஜெயமோகன்.

 

அடுத்த முகாமிற்கு ஆவலுடன் .,

 

கார்த்திக் குமார் 

 

படங்கள்:

சீனிவாசன் எடுத்த படங்கள்

கணேஷ் பெரியசாமி எடுத்த படங்கள்

 

முந்தைய கட்டுரைஊட்டி முகாம் -கதிரேசன்
அடுத்த கட்டுரைநதிக்கரை இலக்கியவட்டம்