ஊட்டி முகாம் -கதிரேசன்

சந்துரு  மாஸ்டர்
சந்துரு மாஸ்டர்

அன்புள்ள ஜெ

 

சென்ற ஆண்டு அறிமுக வாசகர். இந்த ஆண்டு இளம் வாசகராக உயர்ந்துவிட்டேன் என நினைக்கிறேன். கோயம்புத்தூரிலிருந்து மேட்டுப்பாளையம் வந்து இறங்கியவுடன் பெய்த கனமழையோடு மனமும் உருகி  விழாவுக்காக தயாராகிவிட்டது.

 

காலையில் ஊட்டி வந்திறங்கியவுடன் .உடல் குளிர் நடனம் ஆடத்துவங்கியது. நல்ல வேளை அந்நேரமும் ஒருவர்  ஸ்வெட்டர் விற்றுக்கொண்டிருந்தார்.கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு குளிர் கூடுதல் என்றுதான் நினைக்கிறேன் ஆட்டோவில் குருகுலம் வந்து இறங்கியவுடன் .அதிகாலை இருட்டில் வானிலிருந்து நீர் கசிந்து கொண்டிருந்தது.ஆட்டோகாரருக்கு வழி அனுப்பி விட்டபின் மண்டையில் உறைத்தது.தொடர்பு கொள்ள எண்கள் யாருடையதும் இல்லை சாலையை ஒட்டி இருக்கும் அறைகளில் விளக்கு வைத்துப்பார்த்தேன்,லேசாக தட்டி பார்க்கலாமா என்று கூட நினைத்தேன் ஆனால் மனம் என்ன தட்டினாலும் யாரும் எழுந்து விட போவதில்லை என்றது .மெல்ல நூலகம் சென்றேன் கதவு உள்புறமாக பூட்டப்பட்டிருந்தது. ஜன்னல் வழி லைட் அடித்த போது மெல்ல ஒரு உருவம் அசைந்து  பின்னர் கதவு திறக்கப்பட்டது ஒரு வழியாக தப்பித்தேன் என்று நினைத்துகொண்டேன்.பின்  உள்ளே சென்ற போது ஏற்கனவே வந்திருந்த நண்பர்கள் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தார்கள்.பெட் கிடைக்கவில்லை இரண்டு கம்பளிகளை விரித்து ஒன்றை பொத்தி படுத்துக்கொண்டேன்

 

 

சிறிது நேரத்தில் தூக்கம் கலைந்து விட்டது. அதிகாலை வெளிச்சத்தில் குருகுலத்தின் ஜன்னல் வழியாக ஊட்டியை பார்த்ததேன். வீடுகளும் தேயிலைத்தோட்டங்களும் நீண்ட மரங்களுமாய்  அக்காட்சி சித்திரம் ஒன்று வரையப்பட்டு சுவற்றில் மாட்டப்பட்டது போல் அசையாமல் இருந்தது.அது ஜன்னலில் மாட்டப்பட்ட  மாறும் ஒவியம்  என கற்பனை செய்துகொன்டேன்  பின்   உறக்கம் வரவில்லை நண்பர்கள் வந்து கொண்டே இருந்தார்கள்.பாரி கொண்டுவந்திருந்த ஹிக்விட்டா கதையை வாசிக்கத்துவங்க்கினேன். பின் காலை உணவு …

 

சுசித்ரா தேவதேவன்

 

குரு முனி நாராயணப்பிராசாத் அவர்களின் துவக்கவுரையோடு நிகழ்வுகள் ஆரம்பம். குரு முனி நாரயணப்பிரசாத் அவர்கள் டால்ஸ்டாயோடு தொடங்கி நாராயண குருவின் பாடலோடு உறையை  நிறைவு படுத்தினார்.இலக்கியத்திலிருந்து ஆன்மீகத்திற்கு என்ற பதம் நினைவிற்கு வந்தது.பின் காளிபிரசாத் வழங்கிய காரணம் கதையோடு இலக்கிய  நிகழ்வுகள் ஆரம்பம் .இரண்டாவதாக பாரியின் ஹிக்விட்டா .மலையாளத்தில் N S  மாதவன் .எழுதியது.ஹிக்விட்டா எனும் கால்பந்துகாரரின் எல்லை மீறிய சாகசத்தால் தூண்டப்பட பாதிரியார் வில்லனை அடிக்கும் தருணம் என்ற அளவில்  அக்கதையை புரிந்து வைத்த போது கதைக்கு நீங்கள் கொடுத்த கிறித்துவ மதம் சார்ந்த நம்பிக்கையாளர், நம்பிக்கையற்றவர்    என்ற விளக்கம் கதைக்கு புதிய பார்வையை கொடுத்தது.

 

 

பின் வழக்கம் போல் நாஞ்சில் நாடனின் கம்பராமயண அரங்கு இந்த வருடம் யுத்த காண்டம். இந்த நிகழ்வில் பி எ கிருஸ்ணன் வந்திருந்தது நிகழ்வின் கூடுதல் சிறப்பு.இசை மும்மூர்த்திகளைப் போல மூன்று சான்றோர்களின் வார்த்தைகளால் கம்பராமயணம் பொன்னொளி பட்டு பூச்சொரிந்தது.  இதைப்போலவே திருமூலநாதனின் திருக்குறள் அரங்கு  அனைவரையும் கட்டி போட்டது. கவிதையரங்குகளில் சிறந்த கவிதையை அடையாளப்படுத்த மீண்டும் மீண்டும் கவிதையின் பிறிதொன்றில்லாதா தன்மை வலியுறுத்தப்பட்டது.

 

இதுவரை படித்த கதைகளில் விசால் ராஜாவின் முடிவின்மையில் நிகழ்பவை கதை வேறுபட்டு இருந்தது. கரமசோவ் சகோதரர்கள், நாவல் இன்னும் விரிவாக பேசப்பட்டிருக்க வேண்டும் எனத்தோன்றுகிறது. நாவலில் வரும் பெண் கதாபாத்திரங்களான குருசென்கா,கத்ரீனா மற்றும் சிறுவன் அல்யேஸா தொடர்பான விவாதங்கள் நடந்திருந்தால் விவாதம் இன்னும் சிறப்பு பெற்றிருக்கும் என நினைக்கிறேன். ஒரு படைப்பை பற்றிய செறிவான விவாத்தில் படைப்பாளியின் வாழ்க்கை வரலாறு எந்த அளவிற்கு முக்கியத்துவம்  வாய்ந்தது எனத்தெரியவில்லை மொத்த விவாதத்தில் மூன்றில் ஒரு பங்கு தாஸ்தாய்வொஸ்கியின் வாழ்க்கை பற்றி பேசப்பட்டுள்ளது….தந்தை கரமசோவின் முக்குணங்கள் தான் அவர்களின் மூன்று பிள்ளைகள் என்ற விளக்கம் நாவலை வாசிப்பதற்கு ஒரு புதிய திறப்பாக இருந்தது. தமிழில் இந்நாவலை படித்திருந்தாலும்  விரைவில் ஆங்க்கிலத்தில் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை இந்நாவல் குறித்த விவாதம் ஏற்படுத்தியிருக்கிறது.   சிறுகதை குறித்த விவாதங்களில் தொடர்ந்து  கதையை முழுமையாக விவரிப்பது  தவறு எனச்சொன்னாலும் திரும்ப திரும்ப அத்தவறை செய்து கொண்டே  இருந்தார்கள்,

 

சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு நிறைய இளம் நண்பர்கள் அறிமுகமானார்கள். ஏற்கனவே அறிமுகமான நண்பர்களிடம் கூடுதலாக உறையாட முடிந்தது. இந்நிகழ்வு அளித்த  மிகமுக்கிய கொடையாக இந்நட்புக்களை காண்கிறேன்  மூன்று நாட்கள் வேறொரு உலகில் வாழ்ந்திருக்கிறேன் ஒரு முறைதான் ஊட்டி குருகுலம் வந்திருக்கிறேன் என்றாலும் மிகப் பழகிய இடம்போல இருந்தது. காலை மாலை  நடைபயணம் புதிய நண்பர்களை உருவாக்கிக் கொள்ளவும் தனிப்பட்ட உரையாடலுக்குமான களம். அதனை முடிந்த அளவிற்கு சரியாக பயன்படுத்திக்கொன்டேன்  நிகழ்விற்கு வரும்முன் ஓராயிரம் பிரச்சனைகளை தலை சுமக்க முடியாமல் தள்ளாடியது. நிகழ்வு முடிந்து உங்களிடம் கட்டி பிடித்து விடைபெறும்போது எடையற்றவனாக காற்றில் பறந்தேன்.

 

கதிரேசன்

 

ஊட்டி இலக்கிய முகாம் 2018 படங்கள்

முந்தைய கட்டுரைஊட்டி -விஜயலட்சுமி
அடுத்த கட்டுரைஊட்டி சந்திப்பு -கார்த்திக் குமார்