பழைய புகைப்படங்களைப் பார்க்கையில் எழும் பதற்றம் மிக்க ஆவல் நாம் எத்தனை கடந்து வந்திருக்கிறோம் என்பது மட்டும் அல்ல, பிள்ளைகள் எத்தனை கடந்துசென்றிருக்கிறார்கள் என்பதும்கூடத்தான். அவற்றில் தெரியும் அவர்களின் ஆளுமை உற்சாகமான இளமையால் ஏந்தப்பட்டிருக்கிறது.
நாம் எப்போதும் அந்த இளமையைத்தான் பார்க்கிறோம். பிள்ளைகள் மேல் நமக்கிருக்கும் தீராத ஆர்வம் என்பது உண்மையில் இளமை என்னும் உயிர்த்துடிப்பின்மீதுதான். வேறு எதையும் நாம் கவனிப்பதேயில்லை. அவர்களின் கொண்டாட்டம், துள்ளல், அறியாமையின் அழகு, அறிதலின் பேரழகு – திரும்பத்திரும்ப நாம் அவற்றையே நினைவுகூர்ந்து சொல்லிக்கொண்டிருப்போம். அவர்களின் துன்பங்களையும் தத்தளிப்புகளையும் மறந்துவிட்டிருப்ப்போம்.
ஆனால் பின்னர் புகைப்படங்களைப் பார்க்கையில் அவர்களின் ஆளுமையை அந்த சின்ன முகங்களில், குழந்தைத்தன்மையின் திரையைக் கடந்துசென்று காணமுடிகிறது. குற்றாலம் பதிவுகள் பட்டறையில் எடுக்கப்பட்ட படத்தில் கலாப்ரியாவின் மகள் வைத்திருப்பது சைதன்யாவை. அன்றும் இன்றும் அவள் கண்ணில்படும் அனைத்தின் மேலும் தீராத பேரார்வம் கொண்டவள். என்னது போட்டோவா என்று பாய்ந்தெழும் பாவனை.
இன்னொரு படம் பாவண்ணனின் மகன் கார்க்கி, தேவதேவனின் மகன் அரவிந்த் , கலாப்ரியாவின் மகள் தரணி ஆகியோருடன் அஜிதனும் உடனிருப்பது. அனைவருமே இளைஞர்களாகிவிட்டனர். அந்தப்புகைப்படத்திலேயே அஜிதனின் இயல்பான உற்சாகமான கேலியைப் பார்க்கிறேன். அடுத்தக் கணம் எதையோ செய்யப்போகிறான் என்று தோன்றுகிறது. அந்தப்படம் எடுத்த ஆண்டில்தான் குற்றாலத்தில் காணாமல்போய் இரண்டுமணிநேரம் கழித்து கிடைத்தான். ஒரு தேர் ஊர்வலத்தைப்பார்த்து பின்னால் சென்றுவிட்டிருந்தான்
லக்ஷ்மி மணிவண்ணனின் 36 ஏ பள்ளம் என்னும் முதல்சிறுகதைத் தொகுதி பொன்னாரமடை இசக்கியம்மன் கோயிலில் வெளியிடப்பட்டபோது எடுத்தபடத்தில் ஆர்.பிரேம்குமாரின் கையில் சைதன்யா இருக்கிறாள். வழக்கம்போல என்னடா டேய் என்னும் பாவனை. கையில் அமைந்து உட்கார்ந்திருக்கவேண்டுமென்றால் அவள் எதையாவது ஆழ்ந்து நோக்கிக் கொண்டிருக்கவேண்டும்.
அன்று அந்த இசக்கியம்மன் கோயிலும் அச்சூழலும் நினைவில் மீள்கின்றன. தான் எவ்வளவு ஒல்லியாக இருக்கிறோம் என எண்ணி அருண்மொழி பெருமூச்சுவிடக்கூடும்.
அண்ணா நான் ரவி அண்ணா
அப்படங்களினூடாக என் பழைய படங்கள் இரண்டுக்குச் சென்றேன். அண்ணாவுக்கு தலையில் நிறைய முடி இருக்கிறது. சிரிக்கவேறு செய்கிறார். குழந்தையை கையில் வைத்திருப்பவர் என் பெரியம்மா மகன் ரவி அண்ணா –நான்காண்டுகளுக்கு முன் மாரடைப்பால் இறந்துவிட்டார். நான் கையில் குழந்தையுடன் இருக்கும் இன்னொரு படத்தில் இருப்பவர் பிரசாத் அண்ணா. அவருடைய குழந்தைதான் கையிலிருப்பது. அதற்குச் சமீபத்தில் திருமணம் நடந்தது. தலையில் ஒரு முடி இல்லை, கல்யாணத்தன்று
அண்ணாவின் முகத்தில் இப்போது அவர் மகனுக்கு இருக்கும் அதே அரைக்கண்பார்வை, இந்த படம் எடுக்கும்போது எனக்கு 28 வயது. அவருக்கு 29. இருவருக்குமே திருமணமாகியிருக்கவில்லை. ஒரு திருமண நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட படம். எங்கள் முகங்களில் இருக்கும் சர்ர்ரியான மல்லுத்தன்மை ஆச்சரியமளிக்கிறது. அது எங்கே போயிற்று? அவர்கூட தமிழர் மாதிரித்தான் இன்று இருக்கிறார். பேச்சு முகத்தை மாற்றுமா என்ன?
இப்படங்களில் நான் உற்சாகமாக இருக்கிறேன். தலையில் முடி நிறைய இருக்கிறது. கண்ணாடி போட ஆரம்பிக்கவில்லை. இவ்வளவெல்லாம் எழுதி இவ்வளவெல்லாம் வசை வாங்குவேன் என்று அந்தப் பால்வடியும் முகத்தைப்பார்த்தால் எவரும் சொல்லமுடியாது.