தலையீடு

aji3

இன்று [12-5-2018] இமைக்கணம் எழுதி முடித்தேன். இதுவரை வெண்முரசு நாவல்கள் எழுதும்போது பலர் அணுக்கவாசகர்களாக உடனிருந்திருக்கிறார்கள். எல்லா நாவல்களுடனும் கிருஷ்ணன் உண்டு, நல்ல காரியங்களுக்கு உடன் குற்றவியல் வழக்கறிஞர்கள் கூடவே இருப்பது உதவிகரமானது. அரங்கசாமி, ஸ்ரீனிவாசன் உட்பட பலர் உதவியிருக்கிறார்கள். இந்தியாவின் புகழ்மிக்க மகாபாரத அறிஞர்கள் சிலரின் உதவிகளை நாடியதுமுண்டு.

பொதுவாக எழுதிய அத்தியாயங்களை உடனடியாக வாசித்துக் கருத்துச் சொல்வது ஒரு வழிகாட்டல். அணுக்கமாக உடன் வரும் உள்ளம் அதற்குரிய முதல்தேவை. எழுதப்போகும் அத்தியாயங்களை தோராயமாக விவரிக்க கேட்டு கருத்துச்சொல்வது மிக அரிதான தேவை. மிகமிகச் சரியான வாசகர் இல்லையேல் அது பெரிய ஆபத்தாக முடியும். இதுவரை இதை நான் செய்ததில்லை. இம்முறை இமைக்கணத்திற்காகச் செய்யவேண்டியிருந்தது. அஜிதன் பெரும்பாலான அத்தியாயங்களுக்கு தத்துவார்த்தமான விவாதமுனையாக இருந்தான். இரண்டு அத்தியாயங்களுக்கு சுசித்ரா.

aji4

பொதுவாக அஜியின் உள்ளம் தத்துவநாட்டம் கொண்டது. மேலை, கீழை தத்துவத்தை பல ஆண்டுகளாக தொடர்ந்து  முறையாகக் கற்றுவருகிறான் இந்நாவலின் அமைப்பு எதிர்வினாக்களைக் கேட்டுக்கொண்டு அதற்கு மறுமொழியென விரிவது. அவனுடைய தொடர் விவாதம் என்னை ஓர் ஊசிமுனையில் நிறுத்தியிருந்தது. தொடர்ந்து சீண்டும் ஆழ்ந்த வினாக்களும், தனக்கே உரிய தனி அவதானிப்புகளும் கொண்டவை அவனுடைய விவாதங்கள்.

இருநூல்களை குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். The concept of mukti in Advaita Vedanta.- A.G.Krishna warriar. இந்நூலை நான் 1988ல் திருவனந்தபுரத்தில் பழையவிலைக்கு வாங்கினேன். வாசித்துக்கிழிந்துபோன நூலை மீண்டும் அஜி வாசித்தான். கந்தலாக ஆனது. இன்னொரு நூல்  இங்கேவாங்க முடியவில்லை.அமெரிக்காவில் கிடைத்தது, பழனி ஜோதி வாங்கி அனுப்பியிருந்தார். இந்நூல் என்னைப்பொறுத்தவரை அத்வைத ஆய்வுகளில் ஒரு பெரும்படைப்பு. தனக்கென ஒரு வலுவான நிலைபாட்டுடன் அதை மட்டுமே முன்வைக்கும் நூல்கள் மத்தியில் ஆழ்ந்த ஈடுபாட்டுடன், சமநோக்குடன் கிருஷ்ண வாரியர் வேதாந்தம் முன்வைக்கும் முக்தி என்னும் கருத்தை ஆராய்கிறார். என்றாவது இதைத் தமிழாக்கம் செய்யவேண்டும் என்பது என் விருப்பங்களில் ஒன்று.

என்னை வழிப்படுத்திய நூல்களில் ஒன்று The Bhagavad Gita- A Biography. Richard H. Davis. 2015 ல் அமெரிக்கா சென்றபோது அரவிந்தன் கண்ணையன் எனக்கு The Yoga Sutra of Patanjali: A Biography -David Gordon White  என்ற நூலை பரிசளித்தார். அற்புதமான அந்நூலால் ஊக்கம் பெற்று நான் ரிச்சர்ட் டேவிஸின் நூலையும் வாங்கினேன். [இந்த அரிய நூலை எவருக்கோ வாசித்துவிட்டு உடனே திருப்பி அளிக்கக்கோரி கொடுத்தேன். எவரென்றே நினைவில் இல்லை] கீதை என்னும் நூலின் காலப்பரிணாமத்தை, பொருட்கோடல் வரலாற்றைச் சொல்லும் நூல் இது.

நடராஜ குருவின் கீதை உரை, விவேகசூடாமணி உரை, சௌந்தரிய லகரி உரை, Wisdom –The absolute is adorable, நித்ய சைதன்ய யதியின் பிருகதாரண்யக உபநிடத உரை, முனி நாராயணப்பிரசாதின் சாந்தோக்ய உபநிடத உரை போன்று இருபதுக்கும் மேற்பட்ட நூல்கள் உதவியிருக்கின்றன.

ஆயினும் அஜிதனுடன் விவாதித்ததே உற்சாகமானதாக இருந்தது. சிறுவயதிலிருந்தே அவனுக்கு நான் எழுதுவதன் மேல் ஆழ்ந்த நாட்டம் உண்டு. என்ன எழுதுகிறாய் என இரண்டுவயது முதல் கேட்பான். எழுதிக்கொண்டிருப்பது கதை என்றால் என்ன கதை என்று குடைவான். ஒருகதையைச் சொல்வேன். பின் தொடரும் நிழலின் குரல் போன்ற துயரமும் சிக்கலும் மிக்க கதையை எழுதியபடி அவனுக்கு உற்சாகமான சாகசக்கதைகளைச் சொல்லியிருக்கிறேன். எழுதும் தாளுக்குக்கு குறுக்காக நுழைந்து வாசிக்க முயல்வது அவன் வழக்கம். கிட்டத்தட்ட நூலுக்குள் தானும் புகுந்துவிட முயல்வதுபோல.  தலையீடு என்றால் உண்மையாகவே தலையை விடுதல்.

வழக்கமாக ஒவ்வொரு நாவலும் என்னை ஒரு பெரிய வெற்றிடம் நோக்கித் தள்ளுகின்றன. அடுத்த நாவல் வழியாக நான் அதை நிறைப்பேன். பார்ப்போம்.

முந்தைய கட்டுரைஇந்து ஞானமரபில் ஆறு தரிசனங்கள் -சுயாந்தன்
அடுத்த கட்டுரைவெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-52