வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-45

பகுதி பதினொன்றுமுழுமை

wild-west-clipart-rodeo-31நைமிஷாரண்யத்திற்கு வெளியே வந்த யமன் ஒவ்வொரு அடிக்கும் நின்று மூச்சிரைத்து மரங்களை பற்றிக்கொண்டு நடந்தார். தென்மேற்கு ஆலயமுகப்பை அடைந்ததும் நிலத்தில் அமர்ந்து கைகளை ஊன்றிக்கொண்டார். அவரை அணுகிய காலனாகிய ஓங்காரன் “அரசே, இனி ஆணை என்ன?” என்றான். சலிப்புடன் கையை வீசி யமன் “என் சொற்களனைத்தும் முடிந்துவிட்டன என்னும் நிலையை அறிகிறேன். இனி நான் அறியவோ, உணரவோ ஏதுமில்லை” என்றார்.

“அவ்வண்ணமென்றால் நாம் கிளம்பலாமே?” என்றான் ஓங்காரன். சீற்றத்துடன் தலைதூக்கி நோக்கி “அல்ல. சொல்லவிந்து என் அகம் ஒழிந்திருந்தால் என் உடல் ஏன் இத்தனை எடைகொண்டிருக்கிறது? ஏன் நான் களைத்துச் சரிகிறேன்?” என்றார் யமன். ஓங்காரன் “ஆம், அதையே நானும் எண்ணினேன். வினா ஒழிந்தவர்கள் விடுதலை பெறுகிறார்கள். விடையென்பது தளையறுத்தலே” என்றான்.

“நான் அறிந்தாகவேண்டிய ஒன்று எஞ்சியிருக்கிறது. இதுவரை அறிந்த அனைத்தையும் தன்னுள் அடக்கியது. அதை அறிந்தால் இவையெதையும் அறியவேண்டியதில்லை. இவையனைத்தையும் அறிந்தால் மட்டுமே அதை சென்றடைய முடியும்” என்றார் யமன். “அதை என்னிடமிருந்து மறைப்பது யார்? இளைய யாதவனா? அவனை நாடிவருபவர்களா? அல்லது நானேதானா?” ஓங்காரன் “அரசே, இதுவரை கலம்நோக்கியே இடப்பட்டது” என்றான்.

யமன் “ஆம், காலர்கள் அனைவரும் என்னருகே வருக!” என்றார். ஒன்றிலிருந்து ஒருகோடி நூறாயிரம்கோடி எனப் பெருகும் காலவடிவர்கள் அவரைச் சூழ்ந்து நிழல்களென பரவினர். “செல்க, இப்புவியில் வாழும் அனைத்து மானுடரையும் அகம்புகுந்து நோக்குக! இத்தருணத்தில் இளைய யாதவனை சந்தித்தேயாகவேண்டும் என்று வெம்பிக்கொண்டிருப்பவர் யார் என்று நோக்குக! சந்திக்கவில்லை என்றால் உயிர்துறக்கும் உச்சத்தில், பிறிதொன்று இப்புவியில் இல்லை என்னும் குவிதலுடன் இருப்பவர்கள். அவர்களாகி நான் செல்வேன். விரைக!”

“ஆனால் இதுவரை இங்கு வந்தவர்கள் கேட்காத வினாவை அவர்கள் கொண்டிருக்கவேண்டும். இதுவரை வந்தவர்கள் கேட்டவற்றுக்குமேல் அவர்கள் வினா கொண்டிருக்கவேண்டும்” என்று யமன் சொன்னார். விமுகை என்னும் காலகை “அதை காலத்தூதர் எவ்வண்ணம் அறியலாகும், அரசே?” என்றாள். “உள்ளத்திலுள்ளதை உடல் காட்டும். உச்சம்கொண்ட வினா என்பது நாண் வில்லை என அவ்வுடலை வளைத்திருக்கும்” என்றார் யமன். “இங்கு வந்த அனைவரும் அவர்கள் அடைந்த வலியாலேயே அடையாளம் காணப்பட்டனர். வலியைத் தேடிச் செல்க!”

அவர்கள் சென்று மீண்டனர். ஓசையின்றி வணங்கி நின்றனர். “என்ன?” என்று யமன் கேட்டார். “பொறுத்தருள்க அரசே, நீங்கள் குறிப்பிட்டவண்ணம் இப்புவியில் இக்கணத்தில் எவருமில்லை” என்றான் தலைமைக் காலனாகிய திரிகாலன். “இன்று பாரதவர்ஷத்தில் பல இலக்கம் மானுடர் அவனையே எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். பல்லாயிரம் விழிகள் துயிலாமல் அவன் நினைவில் நிலைகொண்டிருக்கின்றன. விழிநீர் வடிக்கின்றன சில. நெஞ்சுலைய மூச்செறிகின்றன சில. ஆனால் அவை வினவுவன அனைத்தும் சொல்லப்பட்டுவிட்டவற்றுள் அடங்கும். அப்பாலெழும் வினாவுடன் எவருமில்லை.”

“மீண்டும் செல்க… எளியோர், நோயுற்றோர், பித்தர், பேயர் என ஒருவர் எஞ்சாமல் அவனை எண்ணுவோர் அனைவரையும் தொட்டுவருக” என்று யமன் கூவினார். மீண்டு வந்த காலர்கள் தலைவணங்கி நிற்க திரிகாலன் “மீண்டும் அதுவே எங்கள் சொல், அரசே. அவ்வண்ணம் எவருமில்லை” என்றான். “செல்க, இளமைந்தர், முலைச்சுவை மாறாக் குழவியர் என அனைத்து மானுடரையும் தொட்டு மீள்க!” என்றார். அவர்கள் திரும்பி வந்து அதையே சொல்ல மலைத்து சிறிது நேரம் நோக்கியபின் அவர்களை செல்லும்படி கையசைத்துவிட்டு தசைகளனைத்தும் சோர்வுற்று தளர அங்கேயே படுத்தார்.

அகலே நின்று நோக்கிய திரிகாலன் அணைந்து வணங்கி “நாம் மீள்வதன்றி வேறுவழியில்லை, அரசே” என்றான். “நான் வந்த பணி முடிவடையாது மீள்வதில்லை. காலத்தின் உரிமையாளன் நான். ஆனால் கேள்விகளால் சுமைகொண்ட காலம் எனக்கு நஞ்சு. இல்லை, நான் இங்கிருந்து எழப்போவதில்லை…” என்று யமன் சொன்னார். அவர்கள் வணங்கி அப்பால் விலகினர். அங்கே நின்றபடி ஐயமும் துயரமும் கொண்டு நோக்கினர்.

திரிகாலன் சென்று சொல்ல சற்றுநேரத்தில் யமனின் உடன்பிறந்தாள் யமி அங்கே தோன்றினாள். யமனின் அருகே அமர்ந்து “மூத்தவரே, இங்கு இவ்வண்ணம் காத்திருப்பதில் பொருளில்லை. அங்கு போர் சூழ்ந்துகொண்டிருக்கிறது. அவன் நெடுநாட்கள் அங்கிருக்கமாட்டான்” என்றாள். “என் காலத்தை என்னால் விரும்பியபடி மாற்றிக்கொள்ளமுடியும் என நீ அறிவாய்” என்றார் யமன். “ஆமாம், ஆனால் முடிவிலியை இங்கே கணமெனச் சுருக்கி அமைந்திருப்பது அறிவுடைமை அல்ல” என்றாள்.

சினத்துடன் எழுந்த யமன் “செல்க, உன் சொற்களைக் கேட்க நான் சித்தமாக இல்லை!” என்று கூவினார். அவரை சினம்கொள்ளச் செய்யவே அதை அவள் கேட்டிருந்தாள். சினம் அசைவை உருவாக்குகிறது. அமைந்த பொருளைவிட அசையும் பொருளை நகர்த்துவதே எளிது. யமி புன்னகையுடன் “நீங்கள் செல்லும் இந்த வழி முற்றாக மூடிவிட்டிருக்கிறது என்றால் பிறிதொரு வழியை நாடுவதல்லவா நன்று?” என்றாள்.

யமன் விழிசுருக்கி நோக்க அவள் நயக்கும் புன்னகையுடன் மென்குரலில் “இது முடிவுற்றதென்றால் நேர் எதிரான வழிகளை நாடுக! இத்தருணத்தில் எவர் இளைய யாதவனை முற்றாக வெறுக்கிறாரோ, எவர் சினமும் கசப்பும் உச்சம்கொள்ள எரிந்துகொண்டிருக்கிறாரோ அவராகிச் சென்று வினவுக!” என்றாள் யமி. யமன் கசப்புடன் புன்னகைத்து “நீ எதையும் புரிந்துகொள்ளவில்லை. இங்கு இதுவரை வந்தவர்களில் ஒருவர் தவிர பிற அனைவருமே விருப்பும் வெறுப்பும் இரு பக்கமும் இணைநிலையில் இருக்க அந்த முனையில் நின்றபடி அவனிடம் வினவியவர்கள்தான்” என்றார்.

யமி “ஆம், அவ்வாறுதான் இருக்கவியலும்” என்றாள். பின்னர் “இன்னொரு நேர்எதிர் கோணமும் உள்ளது” என்றாள். “சொல்” என்பதுபோல யமன் கையசைத்தார். “அவனைச் சந்திக்க விழைபவர்களை இதுவரை தேடினீர்கள். அவன் சந்திக்க விழைபவர்களை தேடலாமே?” என்றாள். யமன் எரிச்சலுடன் “என்ன சொல்கிறாய்? அவனிடம் வினவ விரும்புபவர்களையே தேடுகிறேன். அவை என் வினாக்களாக அமையவேண்டும் என்பதனால்” என்றார்.

“ஆனால் நீங்கள் பெறுவது அவனுடைய மறுமொழிகளை” என்றாள் யமி. “இன்னும் அவனிடம் மறுமொழிகள் எஞ்சியிருக்கலாம். அவற்றைச் சொல்ல அவன் ஒருவரை தேடிக்கொண்டிருக்கலாம் அல்லவா?” யமன் குழப்பத்துடன் நோக்க “கேட்கப்படாத வினாவுக்கான விடை என ஒன்று எஞ்சியிருக்கலாம்” என்று அவள் தொடர்ந்தாள். “அவற்றுக்கான கேள்விகளுடன் எவருமில்லை என்றாலும் அந்த விடைகள் அவனிடமிருக்கும்.”

யமன் “ஆம்” என்று தலையசைத்தார். பின்னர் திரும்பி திரிகாலனை அழைக்க கைதூக்கினார். யமி “அவர்கள் அவனை அணுகவியலாது” என்று தடுத்தாள். “அவனை அணுகுவது எனக்கே எளிது, மூத்தவரே” என்றாள். யமன் புருவம் சுருக்கி நோக்க அவள் புன்னகையுடன் “இடக்கால் நகத்தில் அம்புபட்டு உயிர் நெற்றிப்பொட்டில் குவிந்திருக்கையில் அணுகி அத்துளியைத் தொட்டு உதிரச்செய்பவள் நான். அவனை விண்ணுக்குக் கொண்டுசெல்ல பணிக்கப்பட்டவள்” என்றாள். யமன் சிரித்து “ஆம், பெண்குரல் கேட்டாலொழிய அவன் உடன்வரமாட்டான்” என்றார். “செல்க!” என அவள் தோளில் தட்டினார்.

யமி அக்கணமே மறைந்து மீண்டும் தோன்றினாள். “சொல்க!” என்று யமன் சொன்னார். “அவன் நிலையழிந்தவனாக குடில்முற்றத்தில் உலவிக்கொண்டிருந்தான். விண் நிறைத்திருந்த மீன்களை நோக்கியபடி சற்றுநேரம் நின்றான். பின்னர் கைகளை வீசி தனக்கே என சில சொல்லிக்கொண்டான். மீண்டும் விரைவழிந்த காலடிகளுடன் நடந்தான். சினமோ உளக்கொந்தளிப்போ என உடல் அசைவுகள் காட்டின” என்றாள் யமி. “அவன் தன் குடிலுக்குள் நுழைந்தபோது சுடர்விளக்கின் ஒளியில் அவனுடைய நிழலென நான் அவனுக்குப் பின்னால் தோன்றினேன்.”

“அவன் திரும்பியபோது என்னை கண்டான். அந்நிழலின் அழகைக் கண்டு அவன் வியந்து நின்றபோது நான் பெண்ணுருக்கொண்டேன். அவன் விழைவுகொண்டு புன்னகைத்தபோது அவன் விழிகளினூடாக உள்ளே நுழைந்தேன்” என்றாள் யமி. “தாமரை இதழ்களுக்குள் வண்டு என. அதன் மகரந்த மையத்தை அடைந்தேன். அம்மலரென அங்கிருந்தேன். கோடிக்கோடி ஊழிக்காலம் அங்கே இருந்தேன். பின்னர் இங்கே வரவேண்டுமென்று உணர்ந்து விழித்துக்கொண்டு என் சிறகைவிரித்து மீண்டேன்.”

யமன் “ஆம், அவன் வியக்கும் பெண்ணழகெல்லாம் அவனுடைய தோற்றங்களே” என்றார். “அரசே, அவன் எண்ணிக்கொண்டிருந்த மனிதரை அறிந்தேன். அவர் பெயர் சுகர். தொன்மையான சுககுலத்தவளான ஹ்ருதாசிக்கும் கிருஷ்ண துவைபாயன வியாசருக்கும் மைந்தராகப் பிறந்தவர். பிறப்பிலேயே விழைவறுத்து தன்னிலை நிறைந்த யோகியாக இருந்தார். கற்காமலேயே வேதம் அறிந்து வேதமுடிபு தெளிந்து மெய்மையில் கனிந்தமைந்தவர். பிள்ளைமுனிவர் என அனைவராலும் பாடப்பட்டவர்.”

“ஆம், அவரை அறிவேன்” என்று யமன் சொன்னார். யமி தொடர்ந்தாள் “விழைவே ஆடையாகிறது. மிகுவிழைவு அரிய, அழகிய, பெருமைக்குரிய ஆடை. விழைவு சுருங்குகையில் ஆடை சுருங்குகிறது. விழைவற்ற நிலையில் ஆடைகள் சுமை. ஆடைதுறந்து ஆகமெல்லாம் புழுதிபடிய, சடைத்திரிகள் தோளில் விரிய சுகசாரி மலையில் அமைந்த சுகவனத்தில் வாழ்ந்தார் பிள்ளைமுனிவர். அங்கிருந்து வடக்கே சென்று புலகமுனிவரின் மகள் பீவரியை மணந்தார். அளகநந்தையின் கரையில் குடிலமைத்து வாழ்ந்தார். அவருக்கு கிருஷ்ணன், கௌரப்பிரபன், ஃபூரி, தேவஸ்ருதன் என்னும் நான்கு மைந்தர்கள் பிறந்தனர்.”

“இக்கணத்தில் அவர் என்ன செய்கிறார்?” என்று யமன் கேட்டார். “மூத்தவரே, அவர் இப்போது அத்ரிமலையின்மேல் ஏறிக்கொண்டிருக்கிறார். அவர் மைந்தரையும் மனைவியையும் விட்டு குடிநீங்கி நில எல்லைகள் ஏழினைக் கடந்து அத்ரிமலைமேல் ஏறத்தொடங்கி ஏழாண்டுகளாகின்றன. நூற்றெட்டு மலைமுடிகளை அவர் கடந்துசென்றார். ஒவ்வொரு மலையிலும் அவரை புவிவாழும் நூற்றெட்டு மாயைகள் எதிர்கொண்டன. ஒவ்வொன்றையும் தன் நிலைகுலையா உள்ளத்தால் எதிர்கொண்டு கடந்துசென்றார்.”

“இப்போது அவர் அத்ரிமலை உச்சியில் கவிழ்ந்த தாமரைப்பீடம்போல் அமைந்த அத்ரிசிருங்கத்தை விழிகளால் நோக்கிவிட்டார். இன்னும் நூறு அடி எடுத்துவைத்தால் அவரை விண்நோக்கி ஏந்தும் பீடம் என அமைந்த அம்மலைமுடியை அடைந்துவிடுவார். அங்கு அவரை நோக்கி முழுமை விண்ணிலிருந்து ஒரு பொன்முகிலென இறங்கி வந்துகொண்டிருக்கிறது. அவர் விண்புகும் தருணத்தை எதிர்நோக்கி அந்த மலைமேல் அமைந்த அனைத்துப் பாறைகளும் புரவியுடல்போல அதிர்வு கொண்டிருக்கின்றன. பாறைச்சரிவுகளில் படிந்திருந்த மென்புழுதி நடுங்கி அலையலையென மெல்ல சரிகிறது. குழியானைக் குழிகளில் பூழி அதிர்ந்து உள்ளே சுழல்கிறது. காற்றில் எரிமணம் எழுந்துகொண்டிருக்கிறது.”

“விண்ணின் நூற்றெட்டு தேவர்கள் மாயையின் வடிவாக வந்து அவரை தடுத்தனர். விழைவின் தெய்வமாகிய காமன் முதலில் வந்தான். பின் விழைவன அனைத்துக்கும் தெய்வமாகிய இந்திரன். எட்டு வசுக்களும் தொடர்ந்து வந்தனர். எவரையும் அவர் விழிதவிர்க்கவில்லை. ஆனால் எவரையும் அவர் அறிந்திருக்கவுமில்லை. தந்தை வியாசரின் வடிவில் வந்த புகழை, அன்னை ஹ்ருதாசியின் வடிவில் வந்த அன்பை, மனையாட்டி பீவரியின் வடிவில் வந்த காதலை, மைந்தர் கிருஷ்ணன், கௌரப்பிரபன், ஃபூரி, தேவஸ்ருதன் என வந்த பற்றை. எவரையும் அவர் முன்பு கண்டிருப்பதான சாயலே வெளிப்படவில்லை. ஆகவே அவரால் தங்களை அவரிடம் காட்டமுடியவில்லை” என்று யமி சொன்னாள்.

“இனி அவரை எவரும் தடுக்கவியலாது என்று அறிந்ததும் இந்திரன் கையசைக்க விண்ணிலிருந்து தேவர்கள் இழுக்க உம்பருலகத் தேர் வந்து நின்றது. முக்கண்ணன் என பரம்பொருள் அப்போது தோன்றுமென அறிந்தமையால் தேவர்கள் கோடிகோடி ஒளித்துளிகளென வானில் நிறைய இரவும் பகலுமில்லாமல் வானம் சுடர்கொண்டிருந்தது. மண்ணுக்குள் எரிகடல் கொந்தளித்தது. அதன் அலைகள் வந்து அறைந்தமையால் ஆழ்ந்திறங்கிய பாறைகளின் வேர்கள் வெம்மைகொண்டு செங்கனல் என பழுத்தன. அரசே, இது தாங்கள் அங்கு தோன்றவேண்டிய தருணம்.”

wild-west-clipart-rodeo-31யமன் கரிய உருக்கொண்டெழுந்து இருளெருமை மேல் ஏறி அத்ரிசிருங்கத்தில் சுகர் முன் தோன்றினார். “மாமுனிவரே, உங்களை அழைத்துச்செல்ல வந்தவன் நான். கீழுலகுகளை ஆளும் தென்திசைத்தேவனாகிய யமன் நான்” என்றார். சுகர் அவரை நோக்கினாலும் நோக்கிக்கொள்ளவில்லை. இயல்பான அடி வைப்புடன் கடந்துசென்றார். ஒவ்வொரு அடியும் ஓர் ஊழ்கமென.

“நீங்கள் இக்கணம் முதல் என் வடத்தால் கட்டப்பட்டிருக்கிறீர்கள். உங்கள் காலத்தை முதலில் கட்டுகிறேன். உங்கள் விழிப்பறிவை கனவால் கட்டுவேன். கனவை ஆழ்நிலையால். ஆழ்நிலையை துரியத்தால். துரியத்தைச் சுருட்டி ஒரு துளியென்றாக்கி என் சுட்டுவிரலில் ஏந்திக்கொள்வேன். இருப்பு என் கையில் ஒரு திவலையென நின்று ஒளிநடுங்கும். அது உதிராமல் தென்னுலகு வரை வந்தாகவேண்டும்…” என்று யமன் சொன்னார். அவர் யமனை காணாமல் நோக்கிக்கொண்டிருந்தார். தான் அங்கு இல்லையோ என்னும் திகைப்பை யமன் அடைந்தார்.

சினம் கொண்டு எழுந்து கருமுகிலென வானளாவிச் சூழ்ந்து இடியோசை எழுப்பினார். “நான் இறப்பு. நான் காலம். நான் உயிர்களை கொல்பவன். பொருட்களை தேய்வுறச் செய்பவன். மானுடனின் விழைவிலும் அன்பிலும் அச்சத்திலும் திகழ்பவன்.” நிலத்தை ஓங்கி அறைந்தபோது கற்கள் உருண்டு இடியொலித்தொடர் எழுந்தது. “அணுவெனத் திரள்கையிலேயே உயிர் என்னை அறிந்துகொள்கிறது. கருவறைக்குள்ளேயே மானுடன் என்னை பார்த்துவிடுகிறான். நீ என்னை அறிவாய்!”

யமனை நோக்காது சென்ற அவரைச் சூழ்ந்து பல்லாயிரம் கைகள் சுழன்று அலையடிக்க யமன் ஆர்ப்பரித்தார். “நீ என்னை அறிவாய். நீ என்னை ஏமாற்ற முடியாது. என்னை அறியாமலிருக்க முடியாது. நோக்குக என்னை! நோக்குக! நோக்குக! நோக்குக!” புழுதிப்புயலாக சுழித்து மெல்ல அடங்கினார். அவர் எதையும் அறியாமல் நடந்துகொண்டிருக்க மெல்லிய காற்றென ஆகி அவர் காதில் சொன்னார் “நான் பூசைகளுக்குள் காலவுணர்வாக நுழைகிறேன். வேள்வியினூடாக பசிவிடாய் என ஊடுருவுகிறேன். தவத்தினுள் தன்னுணர்வென வந்து நிற்பவன் நானே. என்னை அறியாதவர் எவருமில்லை.”

அவர் யமனை அறியவில்லை. செயலற்று கை தாழ நின்றார் யமன். பின்னர் மெல்லிய சருகசைவாக மாறினார். மீண்டு அருகே நின்றிருந்த யமியிடம் “அவர் என்னை அறியவில்லை. ஒரு கணமேனும் என்னை அறியாமல் அவர் உள்ளத்திற்குள் நான் நுழைய முடியாது” என்றார். “என் விழிகளை அவர் நோக்கவேண்டும். அன்றி ஒரு கணமேனும் என்னை எண்ணவேண்டும். எண்ணமற்ற சிலிர்ப்பாக நான் அவருள் நிகழ்ந்தால்கூடப் போதும்” என்றார். அவள் “நீங்கள் அவனாகச் சென்று நிற்கலாம்” என்றாள். “அவனாகவா?” என்றார் யமன். “ஆம், அவ்வுருவில்” என்றாள்.

யமன் “வேறெந்த உருவுக்கும் அவர் விழி அளிக்கவில்லை எனும்போது…” என தயங்க யமி “இக்கணம் அவன் அவரை எண்ணுகிறான். அதுவே அவனை அவர் எண்ணவேண்டும் என்பதற்கான அடிப்படை” என்றாள். “ஆம்” என தலையசைத்த யமன் சுகர் நடந்துசென்ற பாதையில் ஒரு மயிற்பீலியாக கிடந்தார். அவர் அதை அணுகியபோது காற்றில் பீலியுலைந்தார். சுகரின் விழிகள் அதை நோக்காமல், கால்கள் தயங்காமல் கடந்துசென்றன. ஆனால் அவர் மெல்லிய இனிமை ஒன்றை தன்னுள் அடைந்தார். அக்கணம் யமன் அவருள் குடியேறி மீண்டார்.

திகைத்து அமர்ந்திருந்த யமனிடம் யமி “மூத்தவரே, சென்றுமீண்டீர்களா?” என்றாள். அவர் அவள் குரலை அறியவில்லை. “மூத்தவரே…” என அவள் உலுக்கியபோது விழித்துக்கொண்டு “ஆம்” என்றார். “நீங்கள் அவர் உருவில் இளைய யாதவனை அணுகலாம்” என்றாள் யமி. “ஆனால் நான் எதையும் அடையவில்லை. செல்வதற்கு முன்பிருந்ததுபோலவே அப்படியே எஞ்சுகிறேன். அங்கே ஒன்றுமே இல்லை” என்றார் யமன். “ஒன்றுமே இல்லை. முற்றொழிந்த கலம். விந்தைதான். மானுட அகம் அவ்வண்ணம் ஆகக்கூடுமா என்ன?”

யமி “நீங்கள் முற்றவிந்த முனிவரொருவரின் இறுதிக்கணத்தை சென்றுதொட்டு வந்திருக்கிறீர், மூத்தவரே” என்றாள். “ஆம். ஆனால் மானுட உள்ளம் தெய்வங்களும் அஞ்சித் திகைக்கும் சுழல்வழிப் பாதை. நுழைவன அனைத்தும் அங்குள்ள அனைத்துடனும் இணைந்துகொள்கின்றன. ஒவ்வொன்றும் பிறிதை முடிவிலாது வளர்க்கின்றன. ஒன்றை பிறிதால் மட்டுமே நோக்கமுடியும். நோக்குவதும் நோக்கப்படுவதும் நோக்கால் உருமாறிவிடுகின்றன. மாறுவது மாறுவதற்கு முந்தைய நிலை அனைத்தையும் அவ்வண்ணமே எஞ்சவிடுகிறது. மறைந்தது இருந்த தடம் மறைந்ததென்றே நின்றிருக்கிறது.”

“விழைவு அன்பென்று, அன்பு வஞ்சமென்று, வஞ்சம் நிமிர்வென்று, நிமிர்வு தனிமை என்று, தனிமை துயரென்று, துயர் சினமென்று, சினம் காழ்ப்பென்று, காழ்ப்பு களிப்பென்று, களிப்பு அழகென்று, அழகு இனிமை என்று, இனிமை அன்பென்று முடிவிலாது மாறும் அப்பெருவெளியில் எதற்கும் எப்பொருளும் இல்லை. அதன் அக்கணம் மட்டுமே அது” என்று யமன் சொன்னார். “அதற்குள் ஒன்றுமில்லை என்றால் இக்கடுவெளியே ஒழிந்துவிட்டதென்று பொருள். கோள்களும் மீன்களும் பால்வழிகளும் புடவிகளும் அழிந்துவிட்டன என்று பொருள்.”

“ஒரு மானுட உள்ளத்துள் அது இயல்வதே என்றால் இங்கே எண்திசைக் காவலர் எதற்கு? பாதாள நாகங்களும் விண்ணகத் தேவர்களும் பெருகியிருப்பது எதற்கு? மூன்று தெய்வங்களுக்கும் மூன்று அன்னையருக்கும் முழுமுதலுக்கும் என்ன பொருள்?” என்று யமன் கேட்டார். யமி “அதைத்தான் நீங்கள் அறியவேண்டுமோ இனி?” என்றாள். யமன் அவளை விழித்து நோக்க “மூத்தவரே, அவரெனச் சென்று நில்லுங்கள். அவராகும்போது நீங்கள் இதுவரை அறியாத ஒருவராவீர்கள்” என்றாள்.

“நான் அஞ்சுகிறேன், இளையவளே” என்று யமன் சொன்னார். “வெறுமையின் பெருவெளி. நான் அங்கிருந்து மீளமுடியாமலாகலாம்.” யமி “இல்லை மூத்தவரே, உங்களுக்காக அவருடைய சொல் கூறப்படும். அச்சொல் உங்களிடம் எஞ்சியிருக்கும். அதை பற்றிக்கொண்டு நீங்கள் வெளிவந்துவிடமுடியும்” என்றாள். யமன் ‘ஆம்” என்று பெருமூச்சுவிட்டார். “மூத்தவரே, அவர் சொல்லவிருக்கும் அச்சொல் அமைய ஒழிந்த கடுவெளியென அத்தனை பெரிய கலம் தேவைபோலும்” என்றாள்.

முந்தைய கட்டுரைசாம் ஹாரிஸ் -அறிவியலின் மொழிபு
அடுத்த கட்டுரைமெலட்டூர் அனுபவம் -ராஜகோபாலன்