கண்ணகியும் மாதவியும்

main-qimg-073efd2f1c38813e373f888ff04bb61b

நண்பர் ஒருவர் அவரது தந்தையின் நாட்குறிப்புநூல் ஒன்று கிடைத்திருப்பதாகச் சொல்லி என்னிடம் காட்டினார். அவருடைய தந்தை நாற்பதாண்டுகாலத்துக்கு மேலாக ஒரு தமிழ்ச் சங்கத்தின் செயலாளர் பொறுப்பில் இருந்தார். அரசு ஊழியராக தொழிற்சங்கப் பணியும் ஆற்றினார். அந்தப் பணிகளைப் பற்றிய நடைமுறைக்குறிப்புகள் மட்டுமே அவரது டைரியில் இருந்தன. ஆங்காங்கே சில அரசியல் நிகழ்வுகளைப்பற்றிய செய்திகள். அபூர்வமாக சில அரசியல் கருத்துக்கள். திரைப்படங்கள் வெளியான தேதிகளும் அவற்றைப்பற்றி ஒற்றை வரிக்கருத்துக்களும் நிறையவே இருந்தன. புரட்டிச் செல்கையில் ஆர்வமூட்டும் எதுவுமே கண்ணுக்குப்படவில்லை,

ஆனால் ஒரு நாட்குறிப்புகள் அவ்வாறு ஆர்வமூட்டாத ஒன்றாக இருக்க வாய்ப்பே இல்லை. அது கடந்த காலத்தின் நேர்ப்பதிவு என்னும் போது நாமறியாக எதையோ அது சொல்லியே ஆகவேண்டும். பத்து நிமிடத்தில் அதைக் கண்டடைந்தேன். நண்பரின் தந்தை தனது தமிழ்ச்சங்க நிகழ்ச்சிகளில் நடந்த உரைகள், பட்டிமன்றங்கள் ஆகியவற்றின் தலைப்புகளைப் பதிவு செய்திருந்தார். மிகப்பெரும்பாலான தலைப்புகள் பெண்களின் கற்பு சம்மந்தமானவை. கற்பில் சிறந்தவள் கண்ணகியா மாதவியா என்ற தலைப்பில் மட்டும் முப்பதுக்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களும் உரைகளும் நிகழ்த்தப்பட்டிருந்தன.

நீண்ட இடைவேளைக்குப்பின் சி.என் அண்ணாத்துரை அவர்களின் பார்வதி பி.ஏ என்னும் நூலை வாசித்தேன். அதில் அவர் கதாநாயகியை இப்படி அறிமுகம் செய்கிறார்.

”பார்வதிபாய், பி.ஏ. ஓர் நாகரிக நங்கை! அனாதை ஆசிரமத்திலே வளர்ந்து, அறிவின் துணையால் படித்துப் பட்டம் பெற்று, பிரசாரம் புரிவதிலே ஆவல் கொண்டு, விவேகிகள் சங்கத்திலே சேர்ந்து,பார்த்திபனின் காதலுக்குப் பாத்திரமானவள். கல்யாணத்தை இரண்டோர் ஆண்டிலே முடித்து விடலாம் என்று பார்த்திபன் கூறினான். ஆனால் அவள் ஒன்றும் சகுந்தலையாகவில்லை! துஷ்யந்தனைச் சற்றுத் தூரத்திலேயே வைத்திருந்தாள்”

பார்வதி சாதாரணமாக ஆண்களுடன் கைகுலுக்குபவள். பெண் சபலம் கொண்ட பண்ணையாரை திருமணம் செய்துகொள்கிறேன் என்று பொய் சொல்லி பொதுச்சேவைக்கு பணம் கறக்க திட்டமிடுபவள். ஆனால் அவள் சகுந்தலை ஆகவில்லை. கண்ணகியாகவே இருக்கிறாள். அன்றைய பிரபல வணிக எழுத்துக்களின் பாணியில் அண்ணாத்துரை அவர்களின் நாவல் முழுக்க தாசிகள் வந்துகொண்டே இருக்கிறார்கள். பண்ணையாரை இப்படி அறிமுகம் செய்கிறார்

“இரவு 9 மணிக்கெல்லாம் மிராசுதாரர், தாசி தமயந்தி வீட்டிலே வெள்ளித் தாம்பளத்திலே இருந்த வெற்றிலை பாக்கைப் போட்டுக் கொண்டு பொழுது போக்காக நண்பர்களுடன் சீட்டாடிக் கொண்டிருந்தார். வேடிக்கையாட்டத்திலே நாற்பது ரூபாய் வரை போய்விட்டது. ஜெயித்தது, தாசி தமயந்தியின் தங்கை ஜெயா! ஆகவே நஷ்டமல்ல அது! என்றைக்கேனும் ஒருநாள் உதவும்!! அட்வான்சு தொகை!!”

மொத்த நாவலையே ஒருபக்கம் பார்வதி இன்னொரு பக்கம் தாசிகள் என்று பிரித்துப்பார்க்கமுடியும். சி.என்.அண்ணாத்துரை ,மு.கருணாநிதி ஆகியோரின் இலக்கிய மரபு என்பது வடுவூர் துரைசாமி அய்யங்காருடையதுதான். அவர்கள் சார்ந்த கட்சிக்கொள்கைகளின் பிரச்சாரம் , அன்றைய மேடைப்பேச்சின் மொழி போன்றவை ஆங்காங்கே வந்தாலும் அவர்களின் படைப்புகளின் மையஓட்டம் அன்று ‘ஜனரஞ்சகமாக’ இருந்த துப்பறிதல், குடும்பவம்புகள், தாசிவிவரணைகள் கலந்த ஒரு கதைக்கட்டுமானம்.

சட்டென்று எனக்கு நண்பரின் தந்தையின் நாட்குறிப்பு நினைவுக்கு வந்தது. முப்பதாண்டுகளுக்கு முன் தமிழ்ச் சமூகம் மிக அதிகமாக விவாதித்த இலக்கியத் தலைப்பு பெண்களின் கற்புநிலைதான். அதில் மிக அதிகமாகப்பேசப்பட்ட உருவகம்  ‘கண்ணகி X மாதவி’ என்ற எதிரீடு

சி.என் அண்ணாத்துரையின் வழியொற்றி வந்த மு.கருணாநிதி, எஸ்.எஸ்,தென்னரசு போன்ற திராவிட இயக்கத்து எழுத்தாளர்கள் அனைவரின் எழுத்தையும் புரிந்துகொள்ள இந்த எதிரீடு உதவும். அவர்கள் அனைவருமே பெண்களை இரண்டு வகைமாதிரியாகப்பிரித்துக்கொள்வார்கள். கண்ணகியா மாதவியா?

திராவிட இயக்க எழுத்தாளர்களுக்கு முன்னரே தமிழியக்க அறிஞர்கள் சிலரும் நாவல்கள் எழுதியிருக்கிறார்கள். முக்கியமான உதாரணம் மறைமலை அடிகள் எழுதிய கோகிலாம்பாள் கடிதங்கள். கோகிலாம்பாள் கண்ணகியின் நவீன வடிவம். துணிச்சலானவள். ஒரு குடத்தை உடலில் கட்டிக்கொண்டு நதிப்பெருக்கில் பாய்ந்து சிறையிலிருந்து தப்பி ஓடுகிறாள். ஆனால் கணவனுக்கு அடங்கி அவன் சொல்லே தெய்வ ஆணை என நினைக்கிறாள். தமிழ் மறுமலர்ச்சி இயக்க மரபில் வந்தவரான மு.வரதராசனார் எழுதிய கள்ளோ காவியமோ, கரித்துண்டு போன்ற நாவல்களில் எல்லாமே கதாநாயகிகளை கண்ணகியின் சமகால வடிவங்கள் என்று சுருக்கமாகச் சொல்லிவிடமுடியும்.

அகிலன், நா.பார்த்தசாரதி போன்ற எழுத்தாளர்களை மு.வரதராசனாரின் வழிவந்தவர்கள் என்று சொல்லலாம். அவர்களின் கதாநாயகிகளும் கண்ணகிகள்தான். நா.பார்த்தசாரதியின் குறிஞ்சிமலர் நாவலின் கதாநாயகி பூரணி அப்படியே கண்ணகியின் வடிவம்தான். திருமணமாகாமலேயே காதலனுக்காக வெள்ளைச்சேலை கட்டி விதவையாகிறாள். அகிலனின் சித்திரப்பாவையின் கதாநாயகி ஆனந்தி ஒரு கண்ணகி. ஒருவன் தன்னை வலுக்கட்டாயமாக முத்தமிட்டான் என்பதனாலேயே கற்பை இழந்துவிட்டோம் என உணர்ந்து அவனையே திருமணம் செய்துகொள்கிறாள்

இந்தக்கோணத்தில் யோசித்தால் நாம் வாசித்த பெரும்பாலான கதைகளை கண்ணகி X மாதவி இருமையைக்கொண்டு மதிப்பிட்டுவிடலாம். அத்தனை சினிமாக்களையும் இப்படி பிரித்து ஆராயலாம். கண்ணகிக்கு சுசீலா பாடுவார். மாதவிக்கு எல்.ஆர்.ஈஸ்வரி பாடுவார். இந்த இருமை எப்படி உருவாகி வந்தது?

பதினெட்டாம் நூற்றாண்டில் சிலப்பதிகாரம் தமிழில் பிரபலமான நூலாக இருக்கவில்லை. கிபி நான்காம் நூற்றாண்டில் களப்பிரர் காலத்தின் தொடக்கத்தில் அது எழுதப்பட்டிருக்கலாம். அன்று தமிழகம் சமண பௌத்த மதங்களின் களமாக இருந்தது. ஐம்பெரும் காப்பியங்கள் ஐஞ்சிறுகாப்பியங்கள் என்ற பெயரில் தொகுக்கப்பட்ட பத்து காப்பியங்களுமே சமண பௌத்த மதங்களைச் சார்ந்தவை. சமண பௌத்த மதங்கள் கல்வியைப்பரப்புவதற்கும் அறவுரைகள் அளிப்பதற்குமான அமைப்புகளை தமிழகம் முழுக்க உருவாக்கியிருந்ததனால் இந்நூல்கள் அன்று விரிவாக பயிலப்பட்டிருக்கலாம்.

களப்பிரர் ஆட்சிக்குப்பிறகு சோழ பாண்டியர்களின் ஆட்சி உருவானபோது சமணமும் பௌத்தமும் வலுவிழக்கத் தொடங்கின. கூடவே இந்நூல்களின் முக்கியத்துவம் பெரிதும் குறைந்தது. அறிஞர்களின் சிறிய வட்டத்திற்கு வெளியே இந்நூல்களைப்பற்றிய பேச்சு இல்லாமல் இருந்தது. பின்னர் இவை அறிஞர்களிடம் இருந்தும் மறைந்தன.

தமிழ் நூல்களை ஏடுகளிலிருந்து அச்சுக்குக் கொண்டு வந்து நவீன காலகட்டத்தில் அவற்றை நிலை நிறுத்திய முன்னோடியான உ.வே.சாமிநாதய்யர் பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாகத் தன் ஆசிரியர் மீனாட்சி சுந்தரம்பிள்ளை அவர்களிடம் தமிழ் பயின்றார். ஆனால் சிலப்பதிகாரம் என்ற பெயரையே அவர் கேள்விப்பட்டிருக்கவில்லை. அச்சு ஊடகம் உருவான பிறகுதான் சிலப்பதிகாரம் பதிப்பிக்கப்பட்டது. [சௌரிப்பெருமாள் அரங்கன் பதிப்பாசிரியர்] அதன் பின்னர்தான் அது அறிஞர் மத்தியில் அறியப்படலாயிற்று

தமிழகத்தில் ஒரு தமிழ் மறுமலர்ச்சி அலைஒன்று பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் உருவாகி வந்தது. அது மூன்று இயக்கங்களாக செயல்பட்டது. ஒன்று, தனித்தமிழியக்கம்.தமிழில் இருந்த வடமொழிச் சொற்களைக் கூடுமானவரைக்கும் களைந்து தூயதமிழ்ச் சொற்களைக் கையாள்வது அதன் நோக்கம். இன்று நாம் பேசிக் கொண்டிருக்கும் தமிழ் தனித்தமிழ் இயக்கத்தின் உருவாக்கம் . நமஸ்காரம் என்ற சொல்லை எப்படி நாம் கைவிட்டோம், வணக்கம் என்ற சொல்லுக்கு எப்படி வந்து சேர்ந்தோம் என்று பார்த்தாலே இந்த மாபெரும் மாற்றம் எப்படி நிகழ்ந்து என்று தெரியும்.

இரண்டு தமிழிசை இயக்கம். இங்கு பதினேழாம் நூற்றாண்டிலிருந்து இசையில் தெலுங்கு ஆதிக்கம் செலுத்திவந்தது. அதற்கு மாற்றாக தமிழ் பாடல்களை முன்வைத்து தமிழின் தொன்மையான பண்ணிசை மரபை மீட்டெடுப்பது அதன் நோக்கம். ஆனால் தனித்தமிழ் இயக்கம் போல இது வெற்றி பெறவில்லை. ஏனெனில் பெருவாரியான மக்கள் செவ்வியல் இசையில் எவ்வித ஆர்வமும் காட்டவில்லை.

மூன்று, தமிழ் பதிப்பியக்கம். சௌரிப்பெருமாள் அரங்கன், உ.வே.சாமிநாத ஐயர், சி.வை தாமோதரம் பிள்ளை, வ.உ.சிதம்பரம் பிள்ளை. எஸ்.வையாபுரிப்பிள்ளை போன்ற முன்னோடிகள் ஏட்டிலிருந்து தமிழ் நூல்களை மீட்டெடுத்து அச்சில் அளித்தனர். இவ்வியக்கம் தமிழ் நாடு முழுக்க மிகப்பெரிய பண்பாட்டுமாற்றத்தை உருவாக்கியது.

தமிழுக்கு இவ்வளவு பெரிய தொன்மையான மரபு இருப்பதை அறிஞர்கள் உணர்ந்தனர். அந்நூல்களைப்பற்றிய அறிதலை மக்களிடையே கொண்டு செல்ல அவர்கள் முயன்றார்கள். அவ்வாறுதான்  அக்காலகட்டத்தில் தமிழில் மேடைப்பேச்சு ஒரு பெரும்கலையாக உருவெடுத்தது. அதிகமும் வாசிக்கும் பழக்கம் இல்லாதவர்களுக்கு மரபின் அறிவார்ந்த விஷயங்களைக் கொண்டு சேர்ப்பதற்கு உரிய ஊடகமாக மேடைப்பேச்சு மாறியது.

அக்காலத்தில் தமிழில் முன்னோடியான பேச்சாளர்கள் உருவாகி வந்தனர். அவர்கள் முன்பிருந்த சைவ , வைணவ மதச்சொற்பொழிவு செய்யும் பண்டிதர்களின் தொடர்ச்சி.  மொழி கவிராயர்களுக்கு ஒரு அலங்காரப்பொருள். வித்தைகளை காட்டுவதற்கான களம். கவிராயர்களின் அந்த மொழிவித்தைகளை பேச்சாளர்கள் மேடைக்குக் கொண்டுவந்தார்கள்.அவர்களின் பாணியிலேயே இன்றைக்கும் பேசிவருகிறார்கள் நம் மேடைப்பேச்சாளர்கள்.

தமிழ் மறுமலர்ச்சி அலை 1930 களில் உச்சத்தை அடைந்தது. அங்கிருந்துதான் திராவிட இயக்கம் ஆரம்பித்தது. தமிழியக்கங்களின் செயல்பாடுகளை இன்னும் எளிமையாக்கி மக்களிடம் கொண்டு சென்றது திராவிட இயக்கம்.  அவர்கள் மேடைப்பேச்சுடன் சினிமாவையும் முக்கியமான ஊடகமாகக் கொண்டார்கள்.

இந்த இலக்கியப் பரவலில் மிக முக்கியமான அம்சமாக இருந்த கேள்வி  எப்படி மரபிலக்கியத்தை நவீனச் சூழலில் வைத்து புரிந்து கொள்வது என்பது. மரபிலக்கியம் என்பது ஈராயிரம் ஆண்டுகள் பழமையானது. அன்றைய ஒழுக்க நெறிகள் இன்று செல்லுபடியாகக் கூடியவையாக இல்லை. ஆகவே அவ்விலக்கியத்தைப் பேசியவர்கள் அவற்றிலிருந்து நவீன காலத்திற்குரிய ஒர் ஒழுக்கமுறையை கண்டடைந்து நிறுவினார்கள். அதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டதே கண்ணகி-மாதவி என்ற இருமை.

கண்ணகி நல்ல குடியில் பிறந்தவள் உயர்ந்த பண்புகள் கொண்டவள். கற்பில் சிறந்தவள் கணவனுக்காக வாழ்ந்தவள். அறச்சீற்றத்துடன் அரசனை எதிர்த்தவள்.  இந்த பண்புகள் ஒரு நவீனப்பெண்ணுக்குத் தேவை என்று அன்றைய அறிஞர்கள் முடிவெடுத்தனர். அதற்கு நேர்எதிராக கலைகளில் ஈடுபடுபவளும் சொகுசுகளையும் ஆடம்பரங்களையும் விரும்புபவளும் ஒழுக்கம் குறைவானவளுமாக மாதவியை உருவகித்தனர்.

இந்த எதிரீடு அப்படியே சங்க இலக்கியம் வரை கொண்டு செல்லப்பட்டது. அங்கும் கற்பொழுக்கம் கொண்ட  தலைவியும்  பரத்தையும் இருக்கிறார்கள். இந்த எதிரீடைக் கொண்டு சங்க இலக்கியத்தையும் சிலப்பதிகாரத்தையும் மதிப்பிடுவதற்கு அன்றைய சமூகத்தை தமிழிலக்கிய முன்னோடிகள் பயிற்றுவித்தனர். அதை அப்படியே திராவிட இயக்கம் கையிலெடுத்துக் கொண்டு முன்னெடுத்தது.

இந்த இருமையில் என்ன சிக்கல் அப்படி? ஒழுக்கம் கற்பு போன்றவற்றை முன்வைத்தால் தப்பில்லையே என்று கேட்கலாம். ஆனால் இந்த இருமையில் நுட்பமான பல வரையறைகள் உள்ளன. என்னதான் செய்தாலும் பெண் ஆணுக்கு அடங்கி, அவன் விருப்பத்துக்குரியவளாக இருப்பதே சிறப்பு என்பதுதான் கண்ணகி என்னும் உருவகத்தின் உட்பொருள்.  நவநாகரீகம் என்பதை எதிர்மறையாகவே இந்த இருமை சித்தரிக்கிறது. அது மாதவிக்கு உரியது. கண்ணகி மரபு மீறாமல் கணவன் நிழலில் நின்றுதான் புதுமையை ஏற்றுக்கொள்வாள்.

மு.கருணாநிதி அவர்கள் ஆரம்பகாலத்தில் வசனமெழுதிய படங்களிலும் இந்த இருமையை அப்படியே கொண்டு வந்தார். சிலப்பதிகாரத்தையே இந்த இருமையை வலியுறுத்தும்விதமாக பூம்புகார் என்ற பெயரில் அவர் திரைப்படமாக எழுதினார்.  ‘வட்டமிடும் பாம்பு வசந்தசேனை’ மாதவியின் இன்னொரு வடிவம் தானே.

சி.என் அண்ணாத்துரை அவரது பார்வதி பி.ஏ நாவலில் எழுதிய அதே வரியைத்தானே எம்.ஜி.ஆர்  “இப்படித்தான் இருக்கவேண்டும் பொம்புளை, இங்கிலீஷு படிச்சாலும் இன்பத்தமிழ் நாட்டிலே’ என்ற பாட்டில் வரையறை செய்கிறார். தமிழ்ப்பெண் கண்ணகியாக இருந்தாகவேண்டும். இளமையில் கொஞ்சம் மாதவிமாதிரி நாகரீகமெல்லாம் இருக்கலாம். உடனே திரும்பி வந்துவிடவேண்டும்.

திராவிட இயக்க எழுத்தாளர்கள் இலக்கிய அளவில் பெரிய பங்களிப்பு எதையும் ஆற்றாதவர்கள்தான். அவர்கள் எழுதிய எல்லாமே கட்சிப்பிரச்சாரங்கள். சமூக சீர்திருத்தக் கருத்துக்கள். அந்தக் காலகட்டத்திற்கு பிறகு அவர்களுடைய படைப்புகள் எதுவும் பெரும்பாலும் படிக்கப்படுவதில்லை.  ஆனால் அவர்கள் உருவாக்கிய இந்த கண்ணகி X மாதவி என்னும் இருமை திரைப்படங்கள் வழியாகவும் பிரபல வணிக எழுத்துக்கள் வழியாகவும் நெடுங்காலம் தமிழ்ச் சிந்தனையை வடிவமைத்தது.

தமிழ்ச் சமூகத்தின் உள்ளத்தில் சீதை நளாயினி போன்ற கற்புக்கரசிகள் வைதிக மதத்தால் ஆழமாக நிறுவப்பட்டிருந்தார்கள்.  ‘காதலொருவனைக் கைப்பிடித்து அவன் காரியம் யாவிலும் கைகொடுத்து வாழ்வதே’ உயர்ந்த வாழ்க்கை என்பது அவர்கள் மூலம் நிறுவப்பட்டிருந்தது. பிற வைதிக கருத்துக்களை அழிக்க முனைந்த திராவிட இயக்கம் பெண்களின் கற்பு குறித்த கருத்தை மட்டும் அப்படியே ஏற்றுக்கொண்டது. நளாயினி சீதை போல அதே வடிவில் கண்ணகியை உருவாக்கி அங்கே கொண்டு நிறுவியது. “எங்கள் கோயில் வாழும் காவல் தெய்வம் கண்ணகியே வருக” என்றுஒரு திரைப்படப் பாடலில் ஒரு வரி வரும்போது தமிழ் சமூகம் சாதாரணமாக அதை ஏற்றுக்கொள்வதற்கான காரணம் ஐம்பதாண்டுக்காலம் நிகழ்ந்த இந்த மிகப்பெரிய அறிவியக்கம் தான்.

திராவிட இயக்கத்தின் மூலம் வடிவமைக்கப்பட்ட இந்த கண்ணகி உருவகம் கோட்பாடு மிகப்பிற்காலத்தில் நவீன வணிக எழுத்தில் உருவாகி வந்த பெண் எழுத்தாளர்களான வாசந்தி, இந்துமதி, சிவசங்கரி போன்றவர்களால் தான் மாற்றி அமைக்கப்பட்டது. அதுவரைக்கும் ஒரு பெண்ணின் கல்வி, சமூகப்பங்களிப்பு, தனி ஆளுமை ஆகிய அனைத்திற்கும் மேலாக அவளுடைய கற்பையே முதல் அளவீடாகக் கொள்ள வேண்டுமென்ற மனநிலையே தமிழகத்தில் நிலவியது.

1. இலட்சியக்காதலியின் வருகை
ஒரு சிறு வெளி
கல்வியும் காதலும்
இரண்டு கணவர்கள்
முந்தைய கட்டுரைகெடிலக்கரை நாகரீகம் -கடிதங்கள்
அடுத்த கட்டுரைஊட்டி- வி என் சூர்யா